வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 21 அக்டோபர், 2014

புலிதுஞ்சு வியன்புலம்!

வலிமைவாய்ந்த புலிதங்கியிருக்கும் அகன்ற இடத்துக்குள் சராசரியான மனிதர்கள் சென்றால் அவர்கள் நிலை என்ன ஆகும்?

(சமகால விபத்துடன் சங்ககாலக் காட்சியை ஒப்பீடுசெய்வதாக இக்கட்டுரை அமைகிறது.)

விலங்குக் காட்சிசாலைக்குச் சென்ற பாரதி சிங்கத்தை அருகில் சென்று பார்க்கவேண்டும் என்று சொன்னதாகவும். பணியாளர் அருகில் இருக்க, அச்சமின்றி சென்ற பாரதி சிங்கத்தைப் பார்த்து நீ காட்டுக்கு ராஜா, நான் பாட்டுக்கு ராஜா என்று சொல்லியதாகவும். அதை ஏற்றுக்கொள்வதுபோல சிங்கமும் கர்சனை செய்ததாகவும் பாரதி பற்றி வாழ்க்கைக் குறிப்புகள் சொல்வதுண்டு.

எல்லோரும் பாரதியாகமுடியுமா? 



இந்தக் காட்சியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமுடியாது.

அந்த மனிதனின் நிலையில் நம்மை வைத்து எண்ணிப்பார்க்கும்போதே மனதெல்லாம் பதைபதைக்கிறது.

நாம் வாழ எத்தனையோ உயிர்களை அழித்திருக்கிறோம்.
ஆனால்
    இந்த மனிதரை ஒரு புலி கொன்றதை எண்ணி எண்ணி வருந்துகிறோம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 
செய்தொழில் வேற்றுமை யான் 

என்ற வள்ளுவரின் வாக்கை நாம் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.


கற்றலினால் ஆன பயன் என்ன? என்ற தலைப்பில் இணையத்தில் காணக்கிடைத்த இந்தக் கட்டுரை இன்றைய கல்வி குறித்த சிந்தனையை முன்வைப்பதாக அமைகிறது.
..
எதை எதையெல்லாமோ படிக்கிறோம்..பட்டங்கள் வாங்குகிறோம்..கல்வியாளர் என்று அழைக்கப்படுகிறோம்..அறிவாளிகள் என்று போற்றப்படுகிறோம்..விஞ்ஞானிகள் என்று மதிக்கப்படுகிறோம்..டாக்டர்கள் என்று கெளரவிக்கப்படுகிறோம்.
எல்லாம் சரிதான்.
..
ஆனால்..கற்றலினால் ஆன பயன் தான் என்ன?
ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..

ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள் யாருக்கும் நம் கல்வி கற்றுக்கொடுக்கவேயில்லையே..
..
அலெக்ஸாண்டரின் குதிரையின் பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
ஆப்பிரிக்காவில் தங்கம் எந்த இடத்தில் கிடைக்கிறது? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
கெளதம புத்தரின் இயற்பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.”
..
என்ற பாடலை காரணமேயில்லாமல், வக்கனையாய் மனப்பாடமாய் அறிந்து வைத்திருக்கிறோம்.
..
ஆனால் ஆபத்து நேரத்தில் எப்படி செயல்படுவது என்பதை அறிந்து வைத்திருக்கிறோமா?
..
அந்த வாலிபன், அந்த இடத்தில் அமைதியாய் எழும்பி நின்றிருந்தால் அந்தப் புலி ஒருவேளை தன் உயரத்தை விட வளர்த்தியாய் இருக்கிறானே..இவனை எப்படி எதிர் கொள்வது என்று அமைதியாகத் திரும்பிப் போயிருந்திருக்கும்.
ஏனென்றால் அது பசியினால் அவனைத் தாக்கவில்லை. அப்படித் தாக்கியிருந்தால் அவன் சரீரத்தை அங்கு விட்டு விட்டுப் போயிருக்காது. அதுமாத்திரமல்ல..10 நிமிடங்கள் அவனை அப்படியே பார்த்துக்கொண்டேயிருக்கிறது. தாக்க முனையவேயில்லை.
..
ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது. பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள். கூச்சலிடுகிறார்கள்.
..
அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது.
இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
..
காரணம்..அறிவின்மை.. என்ன செய்வது என்கிற அறிவின்மை.
மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.
கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.
..
இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல் (a+b)2 =a2 + 2ab + b2 என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்?
..
ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்.. அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன்?
..
அந்த விலங்குகளின் கண்களை நம் கை முட்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும்.
..
இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன?
..
தென்னாப்பிரிக்காவிலும், ஆத்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.
..
மற்றவர்களை மதிப்பது எப்படி.. மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி? சாலை விதிகள் என்ன? ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்? அடிப்படைச் சட்டங்கள் என்ன? நமக்கான உரிமைகள் என்ன? காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?
..
விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது? விசக்கடிகளில் எப்படித் தப்பிப்பது? மாரடைப்பு வந்தால் என்ன செய்வது? நோய்களை எவ்வாறு கண்டறிவது? எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை?
..
மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது? கணவனிடம் எப்படி நடந்து கொள்வது? மற்றவர்களை நேசிப்பது எப்படி? நேர்மையாய் இருப்பது எப்படி?
..
இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன?
இந்தக் கட்டுரையை எழுதியவர் யார் என்று தெரியவில்லை சமூகத்தளங்களில் பரவலாக பகிரப்படுகிறது. இக்கட்டுரையை எழுதியவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு. இந்த நிகழ்வோடு தொடர்புடைய சங்கப்பாடல் ஒன்றைக் காண்போம்..
அந்தப் புலியிடம் நான் மாட்டிக்கொண்டிருந்தால் என்ன செய்திருப்பேன் என்ற எண்ணமே இந்த செய்தியைப் பார்த்தபோதெல்லாம் தோன்றியது. நான் என்ன செய்திருப்பேன் என்ற சிந்தித்தபோது, 
புறநானூற்றில் இடம்பெற்ற 54 வது பாடல்தான் நினைவுக்கு வந்தது,

குட்டுவன் கோதையின் கொடைச் சிறப்பையும்ஆட்சிச் சிறப்பையும்
அவன் காட்சிக்கு எளியவனாக இருந்ததையும் இப்பாடலில் புலவர் 
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் புகழ்ந்து பாடுகிறார்.
இப்பாடலில் இடம்பெற்ற உவமை மேற்கண்ட புலியிடம் மாட்டியவனின் மனநிலையைப் புலப்படுத்துவதாக அமைகிறது.

பாடலுக்குச் செல்வோம்...

எமது அரசன் இருந்த ஆரவாரமான பழைய ஊரில்அவ்வூருக்கு  
உரியவர்கள் போலகாலம் பாராது நெருங்கிஎந்த நேரமும், அரசன் வீற்றிருக்கும் அரசவைக்குள் தலைநிமிர்ந்து செல்லுதல்
எம் போன்ற இரவலர்க்கு எளிது.
அது இரவலர்க்குத்தான் எளிதே அல்லாமல்அவனுடைய 
பகைவர்களுக்கு எளிதல்ல.
கோதை தன் நாட்டின் பாதுகாவலை ஏற்றுக் கொண்டு,
மழை பொழியும் வானம் நாணும் வகையில் தன்னிடம் வந்தோர்க்குக்
குறைவில்லாது கொடுக்கும் கவிந்த கைகளையுடைய வள்ளல்.
வலிமை மிகுந்த பெரிய கைகளையுடைய அவன் வலிமையை எதிர்த்துஅவன் நாட்டுக்குள் வந்த வஞ்சின வேந்தரை எண்ணும் பொழுது
அவர்களின் நிலைபசிய இலைகளால் தொடுக்கப்பட்ட மாலையையும் அழுக்குப் படிந்த உடையையும்
சீழ்க்கை அடிக்கும் வாயையும் உடைய 
இடையன் ஒருவன் சிறிய ஆட்டுக்குட்டிகளுடன்,
 நெருங்க முடியாத ஒருபுலி இருக்கும் பெரிய அகன்ற 
இடத்துக்குள் நுழைவதைப் போன்றது என உரைக்கிறார் புலவர்.
“எங்கோன் இருந்த கம்பலை மூதூர்
உடையோர் போல இடையின்று குறுகிச்
செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல்
எம்அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே;
இரவலர்க்கு எண்மை அல்லதுபுரவுஎதிர்ந்து
வானம் நாண வரையாது சென்றோர்க்கு
ஆனாது ஈயும் கவிகை வண்மைக்
கடுமான் கோதை துப்பெதிர்ந்து எழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்
பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி
மாசுண் உடுக்கை மடிவாய் இடையன்
சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப்
புலிதுஞ்சு வியன்புலத்து அற்றே
வலிதுஞ்சு தடக்கை அவனுடை நாடே”

புறநானூறு, 54.
பாடியவர் : கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன் : சேரமான் குட்டுவன் கோதை.
அருஞ்சொற்பொருள்:-
கம்பலை = ஆரவாரம்
இடை = காலம் (சமயம்)
நாளவை = அரசன் வீற்றிருக்கும் அவை (அரசவை
எண்மை = எளிமை
புரவு = கொடைபாதுகாப்பு
எதிர்ந்து = ஏற்றுக்கொண்டு
ஆனாது = குறையாது
கடு = விரைவு
மான் = குதிரை
துப்பு = வலிமை
பாசிலை = பச்சிலை
உவலை = தழை
கண்ணி = மாலை
மடிவாய் = சீழ்க்கை ஒலி செய்வதற்கு மடக்கிய வாய்
ஆயம் = ஆடுகளின் கூட்டம்
துஞ்சுதல் = தங்குதல்


7 கருத்துகள்:

  1. தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு

  2. "மற்றவர்களை மதிப்பது எப்படி.
    மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி?
    சாலை விதிகள் என்ன?
    ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்?
    அடிப்படைச் சட்டங்கள் என்ன?
    நமக்கான உரிமைகள் என்ன?
    காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?
    விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது?
    விசக்கடிகளில் எப்படித் தப்பிப்பது?
    மாரடைப்பு வந்தால் என்ன செய்வது?
    நோய்களை எவ்வாறு கண்டறிவது?
    எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை?

    மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது?
    கணவனிடம் எப்படி நடந்து கொள்வது?
    மற்றவர்களை நேசிப்பது எப்படி?
    நேர்மையாய் இருப்பது எப்படி?

    இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன?
    உண்மையில் வருத்தம்தான் வருகிறது முனைவர் அவர்களே!

    இதுகுறித்த விழிப்புணர்வு கருத்துக்களை குழலின்னிசை பகிர்ந்தளிக்க முன்வரும் நன்றி!
    புதுவை வேலு
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    பதிலளிநீக்கு
  3. கை கொடுங்கள் முனைவரே! என்ன ஒரு அருமையான ஒரு பதிவு! கற்றதனால் ஆய பயன் என்ன என்று தற்போதைய கல்வி முறை நமக்கு வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டிய பாடங்களைக் கற்றுக் கொடுக்காமல் பணம் ஈட்டுவதற்கானதை மட்டுமெ கற்றுக் கொடுக்கின்றது! அதுதான் உண்மை!

    மேலை நாடுகளில், ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் சிறு வகுப்பிலேயே அவர்களுக்கு விருந்தோம்பல், மற்றவர்களிடம் நட்னது கொல்ளும் முறை, நிலநடுக்கம் வந்தால் என்ன செய்ய வேண்டும், சுனாமி வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும், இயற்கை அழிவுகள் நடக்கும் போது ஒரு இடத்திலிருந்து இடம் பெயரும் முன் எவற்றை மட்டும் எடுத்துச் செல்ல வேண்டும், ரோட்டில் நடப்பது, ரோடைக் கடப்பது என்ற சிவிக் சென்ஸ், என்ற ரீதியிலான கல்வி கற்றுக் கொடுக்கப்படுகின்றது!. நாமும் அதைச் செய்யலாம்தான்.....

    மிக மிக நல்ல ஒரு இடுகை! தாங்கள் சொல்லி இருக்கும் அனைத்தும் உண்மையே அந்த புலி சம்பவத்தில். பார்வையாளர்களின் மேலும், மிருகக்காட்சிச் சாலையில் உள்ள கண்காணிப்பாளர்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டுமே அல்லாது புலியோ இல்லை அந்த மன நிலை பாதிக்கப்பட்ட நபரோ அல்ல....

    நல்ல பதிவு! நாங்கள் இதனை முக நூல் பக்கத்தில் பகிர்ந்து கொள்கின்றோம் நண்பரே! உங்கள் சம்மதத்துடன்...

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் நண்பா..

    தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
    அலுவலகம் சென்றதால் காலையில் தெரிவிக்க இயலவில்லை.
    நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

    வலைச்சர இணைப்பு
    http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_26.html

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைச்சரத்தில் எனது பதிவை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் நண்பா.

      நீக்கு