வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 20 அக்டோபர், 2014

இத்தனை அழகா இளவேனில்!



கடைசி தலைமுறை என்ற தலைப்பில் முகநூலில் படித்ததில் பிடித்தது,
1.
ஒளியும் ஒலியும் பார்த்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான்
2.செல்போன்ல பட்டன பார்த்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
3.மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!
4.கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
5.மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
6.வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
7.தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
8.கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
9.காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
10.நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
11.மாமா பொண்ணு ,அத்தை பொண்ணு என ஏகப்பட்ட முறைப்பொண்ணுங்க புடை சூழ வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

இப்படி கணினியும், திறன்பேசியும் நம் உலகை நிறையவே மாற்றிவிட்டன. இன்றைய அறிவியலின் குழந்தைகளாக வாழும் நாம்,
இயற்கையின் குழந்தைகளாக வாழ்ந்த சங்ககால மக்களின் வாழ்வியலை சங்கஇலக்கியங்கள் வழியாகக் காணம்போது வியப்புதான் தோன்றுகிறது.

இதோ ஒரு கலித்தொகை பாடல்,

தலைமக்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றத்துக்கு பல தூதுப் பொருள்களையும் கேட்டிருப்போம் இளவேனிற் பருவமே தலைவனின் வரவைச் சொல்லும் தூதாக வந்ததாக இப்பாடல் மொழிகிறது,
தலைவன் பிரிந்து சென்றுள்ளான். அவன் குறித்த இளவேனிற் காலம் வந்தது. அவன் இன்னும் வரவில்லையே என்று அப்பருவம் கண்டு தலைவி  ஆற்றாது வருந்தினாள். தோழி காலத்தை நோக்கி,

இந்த இளவேனிற்காலம் தலைவர் வருகிறார் என நமக்கு உரைக்கும் தூதாக அழகின் வடிவாக வந்தது. இந்த இளவேனிற் பருவத்துக்கு விருந்து செய்வோம் வா. எனதோழி தலைவியிடம் சொல்வதாக இப்பாடல் அமைகிறது.
நீர் வடிந்துபோன பின்னர்த் தோன்றிய கருமணல், கத்திரிகையால் ஒழுங்கு செய்யப் பெற்ற, கார்மேகத்தின் அழகினைப் பெற்ற மகளிரின் கூந்தலைப் போலத் திகழ்ந்தது. கூந்தலை நொய்தாகப் பிடித்துவிட்டாற்போன்று முடித்து, ஒளிபடைத்த அணிகளை அணிவித்து, அவற்றிடையே பொன்னாற் செய்த அழகிய கண்ணியை இட்டுவைத்தாற் போல, அம்மணலாகிய ஐம்பாலின்மேல் பிணி நெகிழ்ந்த பல பூக்களும் வேங்கையினது விரிந்த பூக்களும் உதிர்ந்து நெறிகொளக் கிடந்தன.

தெளிந்த நீராலும், தூய மதியுடை நாளும் புதல்வனை ஈன்றவளுடைய துத்தி போல, நெய்ப்பினைக் கொண்ட பளபளவென்னும் தளிர்களை மரங்கள் துளிர்த்தன.

அறிவான் அமைந்த ஆன்றோர் தம் செயல் முடிதற்குரிய காலம் வரும்வரை அடங்கி இருப்பர், 

அதுபோலக் காலம் வரும்வரை மலராத அரும்புகளைக் கொம்புகள் கொண்டு நின்றன.

மீட்ட வல்லவரது யாழ் ஓசை போலப் புதர்களில் வண்டுகள் ஆரவாரித்தன.

கண்டார்க்கு விருப்பம் செய்யும் நல்ல மகளிர் தம் கூத்துப் போல மரக்கிளைகள் அசைந்தாடிக் கொண்டிருந்தன.

பொருளின் நிலையாமையை உணர்ந்தவரின் கொடை போல மரங்கள் பூந்தாதுகளை உதிர்த்துக்கொண்டிருந்தன.

அன்பால் கூடினவருடைய முயக்கம் போலக் கொடிகள் பின்னிப் பிணைந்து கிடந்தன.

இளவேனிலே யாங்கள் எம்மை விரும்பியார்க்கு நல்லேம் ஆயினாற்போல, நீயும் எப்பொழுது வருவை என்று விரும்பி இருந்தார்க்கு மிகவும் நல்லையோ?

என்று இளவேனிலை நோக்கிக் கூறிய தோழி, பின்னர்த் தலைவியை நோக்கி கூறினாள்,
தோழி, இளவேனிற் காலத்தே குளிர்ந்த அருவியின் கரைகளிலே மகளிர் எயிற்றை ஒக்கும் நறிய முல்லையினது பூக்கள் நும்முடைய மணங்கமழ்கின்ற கொத்தாகிய கூந்தலிலே எம்மைக் கொய்து சூடிக்கொள்ளுங்கள் என்று கூறுவனபோல மலர்ந்துள்ளன. அதுவல்லாமல் பசந்தவருடைய வருத்தம் தரும் காமநோயைத் தனக்குப் பகை என்று கருதிப் போக்கி வெற்றி கொள்பவர் நம் காதலர். நம் இனிய உயிரைவாழ்விக்கும் மருந்தைப் போல நின்துயர் தீர்க்கும் இனிய மொழிகளைக் கூறிக்கொண்டு முயங்கிய காதலருடைய தூதராய் இளவேனில் வந்தது. ஆதலின் அக்காலத்திற்கு விருந்தானவற்றைச் செய்வோம் வா என்றாள்.

பாடல் இதோ,

எஃகு இடை தொட்ட, கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல்
மை அற விளங்கிய, துவர் மணல் அது; அது
ஐதாக நெறித்தன்ன அறல் அவிர் நீள் ஐம்பால்
அணி நகை இடையிட்ட ஈகை அம் கண்ணி போல்,
பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ நெறி கொள
5
துணி நீரால், தூ மதி நாளால், அணி பெற
ஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடும்,
ஆன்றவர் அடக்கம் போல் அலர்ச் செல்லாச் சினையொடும்,
வல்லவர் யாழ் போல வண்டு ஆர்க்கும் புதலொடும்,
நல்லவர் நுடக்கம் போல் நயம் வந்த கொம்பொடும்,
10
உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும்,
புணர்ந்தவர் முயக்கம் போல் புரிவுற்ற கொடியொடும்
நயந்தார்க்கோ நல்லைமன், இளவேனில் எம் போல;
பசந்தவர் பைதல் நோய் பகை எனத் தணித்து, நம்
இன் உயிர் செய்யும் மருந்தாகி, பின்னிய
15
காதலர் எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லைப்
போது ஆரக் கொள்ளும் கமழ் குரற்கு என்னும்
தூது வந்தன்றே தோழி!
துயர் அறு கிளவியோடு அயர்ந்தீகம் விருந்தே.
கலித்தொகை -32

கால வரவு கண்டு ஆற்றாளாயின இடத்து, தோழி காலத்தை நோக்கி, ‘அழகிதாகச் செய்தாய், வந்துஎனச் சொல்லி, தலைவிக்கு, "நம் காதலர் வருகின்றார்" எனச் சொல்லி வந்த தூது காண் இது; நாம் விருந்து அயர்கம்எனச் சொல்லியது


இக்கலித்தொகைப் பாடல் வழியாக அறியலாகும் செய்திகள்.

·         இளவேனிலே தலைவின் தூதாக வந்தது என்ற பொருள் நயம்.
·         இளவேனிற் பருவத்துக்கு விருந்து செய்வோம் வா என்ற இயற்கைக்கு விருந்தோம்பல் செய்யும் தமிழர் மரபு.
·         கத்திரிகையால் ஒழுங்கு செய்யப் பெற்ற, கார்மேகத்தின் அழகினைப் பெற்ற மகளிரின் கூந்தலை என்ற செய்தியின் வழி சங்ககால மகளிர் தம் கூந்தலை அழகுபடுத்திக்கொள்ள அன்று கத்திரிகையைப் பயன்படுத்தினா் என்ற வழக்கம்.
·         அறிவான் அமைந்த ஆன்றோர் தம் செயல் முடிதற்குரிய காலம் வரும்வரை அடங்கி இருப்பர் என்ற அடக்கமுடைமை.
·          யாழ் ஓசை போலப் புதர்களில் வண்டுகள் ஆரவாரித்தன என்ற அழகியல் உவமை.
·         மகளிர் தம் கூத்துப் போல மரக்கிளைகள் அசைந்தாடிக் கொண்டிருந்தன என்ற ஒப்புமையாக்கம்.
·         பொருளின் நிலையாமையை உணர்ந்தவரின் கொடை போல மரங்கள் பூந்தாதுகளை உதிர்த்துக்கொண்டிருந்தன.
·         அன்பால் கூடினவருடைய முயக்கம் போலக் கொடிகள் பின்னிப் பிணைந்து கிடந்தன என்ற அழகியல்.
·         மகளிர் எயிற்றை (பல்) ஒக்கும் நறிய முல்லையினது பூக்கள்
·         நம் இனிய உயிரைவாழ்விக்கும் மருந்தைப் போல நின்துயர் தீர்க்கும் இனிய மொழிகளைக் கூறிக்கொண்டு முயங்கிய காதலருடைய தூதராய் இளவேனில் வந்தது. என்ற செய்தி வழி சங்ககால மக்களின் மருத்துவ அறிவு புலப்படுகிறது.


தொடர்புடைய இடுகை

16 கருத்துகள்:

  1. கடைசி தலைமுறை - ஒவ்வொரு விஷயமும் நானும் செய்திருக்கிறேன்.....

    அருமையான பாடலும் பகிர்ந்தமைக்கு நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே .
      தங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

      நீக்கு
  3. கருத்து சொல்ல வரவில்லை
    கற்கண்டு தரும் சுவைமிகு வாழ்த்து
    சொல்லவே யாம் வந்தோம் யாதவன் நம்பியாக!

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும்
    அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  4. கடைசி தலைமுறை என்று சொல்லியிருப்பது எல்லாம் ஆமாம் போட வைத்தது.
    ஒன்றை இழந்துதான் இன்னொன்றைப் பெற வேண்டும் என்பார்கள், அதுதானோ இது?

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  5. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. நண்பரே! நலம்தானே? ஆச்சர்யமாய் இருக்கிறது.. இப்போது கலித்தொகையை சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு பதிவையும் வெளியிடலாம் என்று இருக்கிறேன். இங்கே உங்கள் கைவண்ணத்தில் அதைக் காண மகிழ்ச்சி. வானவில்லுக்கும் வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  7. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே

    பதிலளிநீக்கு
  8. அருமையான பாடல், இதுபோன்ற சங்கப் பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி!

    அடிக்கு நான்கு சொற்களாகப் பிரிப்பதுதானே முறை?

    `எஃகிடை தொட்டகார்க் கவின்பெற்ற வைம்பால்போன்
    மையற விளங்கிய துவர்மண லதுவது`

    இப்படி பாடலின் வரிகளைப் பிரித்தமைக்கு காரணம் என்னவோ? எளிமையாக்கக் குறிப்பிட்டிருந்தால் மிக்க மகிழ்ச்சி.

    கருத்தில் பிழையிருந்தால் தெளிவுபடுத்துக!

    தங்களின் இப்பணி தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு