பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

தொழில்நுட்பத்தின் கையில் மனிதன்!

காலந்தோறும் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியை அரிமா நோக்கில் பார்த்தால், புறா தூது, முரசறைந்து செய்து சொல்லுதல், தூதுவர் இதன் வரிசையில், தந்தி, வானொலி,  தொலைபேசி. அலைபேசி, திறன்பேசி, தொலைக்காட்சி, கணினி, மின்னஞ்சல், இணையம் என காலந்தோறும் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள் இந்த உலகைச் சுருக்கிவிட்டன என்பதை உணரமுடியும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகுபரவிய உயிர்களை இணைக்கும் ஆற்றலாக இன்று தொழில்நுட்பங்கள் மாறிட்டன. இச்சூழலில் மனதில் ஒரு கேள்வி எழுகிறது.

மனிதன் கையில் தொழில்நுட்மா? தொழில்நுட்பத்தின் கையில் மனிதனா? என்பதே அது..

சில புள்ளிவிவரங்களைப் பாருங்கள்..






செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

கணக்கில்லாக் கடவுள்கள் (கலீல் சிப்ரான்)


 கிலாபிசு  மாநகரின் கோயில் கோபுரத்தின் முன் நின்று ஒரு மதவாதி – குதர்க்கவாதி – உலகில் உள்ள பல கடவுள்கள் பற்றி விக்கமாகப் பிரச்சாரம் செய்தார். அதைப் பல ஆயிரம் மக்கள் நின்று கேட்டுக்கொண்டிருந்தனர்.

பேருரை முடிந்தது. மக்கள், “எங்களுக்குத் தெரியாதா? இந்தக் கடவுள்களெல்லாம் எங்களுடன் வாழ்கின்றனர். நாங்கள் போகுமிடமெல்லாம் எங்களுடன் இக்கடவுள்கள் வருகின்றனர். என்று பேசிக்கொண்டே சென்றர்.

சில நாட்கள் கழிந்தபின் கடைத்தெருவின் சதுக்கத்திலே ஒரு நாத்திகன் மக்களிடையே சொற்பொழிவாற்றினான். “ கடவுள் ஓர் கற்பனை. மனிதன் இல்லாத கடவுளைக் கற்பனை செய்து அதற்கு இன்று அடிமையாகி அல்லல்படுகின்றான்.“ என்று கூறினான். மக்களுக்கு ஒரே மகிழ்ச்சி. ஆரவாரம்! ஏன் தெரியுமா? கடவுளுக்காகப் பயந்து நடுங்கவேண்டாமே!

சில மாதங்கள் ஓடின. மிகவும் திறமையான, சொல்நயம் மிளிரப் பேச்சாற்றல் மிக்க ஞானி பேசினார். “இந்த உலகில் இருப்பவர் ஒரே ஒரு கடவுள்தான். கடவுளின் தீர்ப்பு நாளில் நீங்களெல்லாம் உங்கள் செயலுக்கு விளக்கம் கூறவேண்டும். தீர்ப்பு நாளிலிருந்து தப்பமுடியாது.“ என்றார். இதைக் கேட்ட மக்களுக்கெல்லாம் ஒரே பயம். ஏற்பட்டது. அஞ்சி அஞ்சி செத்தனர். பல கடவுள்கள் என்றபோது பயப்படாதவர்கள் கூட “ஒரே கடவுள்“ என்று கேட்டபோது அஞ்சி நடுங்கினர்.

சில ஆண்டுகளில் வேறோர் அறிவாளி தோன்றினார். அவர் “உலகில் மூன்று கடவுள்கள் இருக்கின்றர். படைத்த, காத்தல், அழித்தல் இவர்கள் தொழில். இந்தக் கடவுள்கள் வானவெளியிலே வாழ்கின்றர்.” என்றார்.
அதுமட்டுமல்ல, அவர் மேலும் கூறினார். “இந்தக் கடவுள்களுக்கு கருணைக் கடலான தாய் இருக்கின்றாள். இவர்களுக்கு அண்ணன், தம்பி, அக்கா, தங்ககை, கணவன், மனைவி எல்லாம் குடும்பமாய் இருக்கிறார்கள்“ என்று புகன்றார்.
இந்த விளக்கவுரையைக் கேட்டவுடன் மக்களுக்கு மனதிலே ஒரு திருப்தி ஏற்பட்டது.

மூன்று கடவுள்கள் இருப்பதால் அவர்களுக்குள்ளே கருத்து வேற்றுமை ஏற்படும். குற்றம் குறைகள் இருக்கும். கடவுளின் தாய் கருணை மிக்கவர். அவருக்குக் கட்டாயம் நம் ஏழ்மையும் பலவீனமும் நன்றாகப் புரியும் இல்லையா? என்று திருப்தி அடைந்தனர்.

இந்நாள் வரை கிலாபிசு நகரில் மட்டுமல்ல, இந்த நாடு முழுமையும் மக்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் வாதாடுகின்றர். சொற்போர் நடத்துகின்றனர். “கடவுள்கள் பலப்பல“ என்போர் சிலர். கடவுளே இல்லை என்போர் கொஞ்சம் பேர். உலகில் ஒரே ஒரு கடவுள் தான் உண்டு என்கிறார்கள் சிலர். நம்மை மூன்று கடவுள்கள் வாழ்விக்கின்றார்கள் என்பார்கள் சிலர். தாய் தந்தையுடன் பிள்ளை குட்டியுடன் பெரிய குடும்பமே “கடவுள் குடும்பம்“ என்று கூறுகின்றவர்களோ மிகப் பலர்.

புதன், 20 ஆகஸ்ட், 2014

எல்லா சாலைகளும் மருத்துவமனையை நோக்கி...


கல்வியின்மையும், வறுமையும், வேலைவாய்ப்பின்மையும், அறியாமையும், மக்கள் தொகைப் பெருக்கமும் மிகுந்து காணப்படுகின்ற நமது நாட்டில், துறைதோறும் வெளியிடப்படுகின்ற புள்ளிவிவரங்கள் அனைத்தும், ஒவ்வொரு துறையிலும் நாம் அடைந்திருக்கும் வீழ்ச்சியை முன்வைக்கின்றன.
இன்றைய நமது வாழ்க்கை முறையின் அனைத்துக் கூறுகளும் மருத்துவமனைகளையும், மருந்துகளையும் நோக்கியே நம்மை நகர்த்திக் கொண்டிருக்கின்றன. அதிலும் தமிழ்நாடு, நோய் மயம், சிகிச்சை மயம், மருந்து மயம், மருத்துவர் மயம், மருத்துவமனைகளின் மயமாக மாறிக்கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை.
தமிழ்நாட்டில் இருசக்கர வாகனங்கள் உட்பட மொத்தம் 1,86,69,500 வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் வெளிவரும் புதிய வாகனங்களின் எண்ணிக்கை தலைசுற்ற வைக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 16 லட்சம் புதிய வாகனங்கள் சாலைகளுக்கு வந்துள்ளன.
இதே பாய்ச்சலில், விபத்துகளின் எண்ணிக்கையும், உயிரிழப்புகள் மற்றும் உடலுறுப்பு இழப்புகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் உயர்ந்துகொண்டேயிருக்கிறது. இந்திய அளவில் கடந்த 2003 முதல் 2012 வரையிலான பத்து ஆண்டுகளில் மட்டும் 12 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறந்திருக்கின்றனர். 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் மற்றும் படுகாயங்களுக்கு உள்ளாகி முடங்கியுள்ளனர்.
அதாவது, சராசரியாக ஓர் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களை சாலை விபத்துகளில் இந்தியா பறிகொடுத்துக் கொண்டிருக்கிறது. காயம், படுகாயம் மற்றும் உடலுறுப்புகள் இழப்புக் கணக்குத் தனிக் கணக்கு.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இன்றைய நிலையில் ஓர் ஆண்டுக்கு 16,000-க்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். காயம், படுகாயம், உடலுறுப்புகள் இழப்பு, வாகனங்களின் காயம் என்பது தனிக் கணக்கு.
அதாவது, ஒரு மாதத்திற்குச் சராசரியாக 1,350 பேர். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு நாளைக்குச் சராசரியாக 56 பேர் எனும் கணக்கில், இன்றைய தமிழ்நாடு தனது மனித உயிர்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறது.
1993-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த 34,925 சாலை விபத்துகளில் 7,300-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். 32,336 பேர் காயம் மற்றும் படுகாயமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை எகிறிக்கொண்டே வந்து 2013-ஆம் ஆண்டில் 66,238 விபத்துகளாகவும், 15,563 உயிரிழப்புகளாகவும், 76,000 காயம் மற்றும் படுகாயம் அடைந்தோராகவும் உயர்ந்து இருக்கிறது.
தமிழ்நாட்டின் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் விபத்து காரணமாக மட்டும் ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சம் பேர் அனுமதிக்கப்படுகின்றனர். இந்தப் புள்ளிவிவரங்களெல்லாம் காவல்துறையில் பதிவான விபத்துகளின் அடிப்படையில் மட்டுமே. காவல்துறைவரை செல்லாத விபத்துகளின் எண்ணிக்கை கணக்கிலடங்கா.
அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் தற்போது 6,800-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள், ஆண்டில் ஒரு சில நாள்களைத் தவிர, மற்ற அனைத்து நாள்களிலும் 22,000 கோடிக்கு மேல் மது வகைகளை விற்பனை செய்கின்றன. மதுவை உறிஞ்சிப் பழகிவிட்ட ஒருவர், காலப்போக்கில் மதுவினால் உறிஞ்சப்பட்டு மரணமடைவார் என்பது உறுதி.
அரசு "டாஸ்மாக்' மதுபானக் கடைகளின் சுகாதாரமற்ற குடிப்பகங்களில் தொடங்கி, தனியார் விடுதிகள் மற்றும் நட்சத்திர விடுதிகளின் ஆடம்பரமான குடிப்பகங்கள் வரை மதுப் பழக்கம் என்பது நமது மக்களின் பொதுப் பழக்கமாக மாறிவிட்டது.
மதுவை இயல்பாகக் கையாளுவதைப் போன்று ஏராளமான கதாபாத்திரக் காட்சிகளை தமிழ்த் திரைப்படங்கள் முன்வைக்கின்றன. அண்மைக் காலப் படங்களில் அதிகரித்திருக்கும் இந்தப் போக்கு, இளைஞர்களின் மதுப் பழக்கத்திற்கு மறைமுகமாக வலிமை சேர்த்து அப்பழக்கத்தை அங்கீகரிக்கின்றன.
பதின்ம வயதுகளில் தொடங்கி தனது இளமை முழுவதும் மது குடிப்பவர்கள், அதன்பிறகு தன் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் எவ்வகையிலும் பயன்படாத உயிர்ச்சுமைகளாக உளைச்சல் அடைந்து, அவ்வுளைச்சல்களையே மற்றவர்களுக்கும் கொடுப்பவர்களாக மாறுகின்றனர்.
இப்படியான குடி நோயாளிகள் மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தினர் அடையும் மன அழுத்தங்கள் தொடர்பான நோய்களுக்கும் நமது மருத்துவமனைகளின் வாயிலாகவே தீர்வு கண்டாக வேண்டும். எனவே, இவ்வகையிலும் மருத்துவமனைகள் கூடுதல் சுமைகளைப் பெறுகின்றன.
அடுத்து பரவி வரும் புதிய சிக்கலாக உணவுக் கலாசாரம் மாறியிருக்கிறது. நடைபாதை உணவுக் கடைகள் முதல் நட்சத்திர விடுதி உணவுக் கூடம்வரை மக்கள் கூட்டம் கூட்டமாக உண்கின்றனர்.
பசிக்காகவோ, சத்துக்காகவோ அல்லாமல், புதிய புதிய ருசிக்காகவும், மேலைநாட்டு நாகரிகமாகவும் இந்தக் கலாசாரம் பரவிக் கொண்டிருக்கிறது. பொருந்தாத உணவுகள் பெருந்தீனியாக உட்கொள்ளப்படுவதால் ஏற்படுகிற புதிய புதிய நோய்கள் பெருகிக் கொண்டேயிருக்கின்றன.
துரித உணவு என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதால், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படுகின்றன. உணவுகளே நோய்களாக மாறி மக்களைக் கொல்லுகின்ற அவலம் பெருகி வருகிறது.
இதுபோன்ற உணவுகளின் விளைவால் 29 பேர் இறந்ததாக 1990-ஆம் ஆண்டு ஆய்வு சொல்கிறது. 2008-ஆம் ஆண்டின் ஆய்வோ அவ்வகை மரணங்கள் 53 நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கிறது.
எதிர்வரும் 2020-ஆம் ஆண்டு இவ்வகையிலான (அதாவது, புது புது வகையான பெருந்தீனிகளை வயிற்றில் அடைத்துக் கொள்வதால்) மரணங்கள் 57 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துரித உணவு வகைகள் பெரியவர்களை மட்டுமல்ல, இளம் குழந்தைகளையும் சீரழித்துச் சிதைக்கிற உண்மைகளை "அறிவியல் - சுற்றுச்சூழல் மையம்' (Centre for Science and Environment) மிக விரிவாகத் தெளிவுபடுத்தி எச்சரித்திருக்கிறது.
துரித உணவுகளைத் தடை செய்தும், துரித உணவு விளம்பரங்களுக்குக்கூட தடைவிதித்தும், துரித உணவுகளுக்கு அதிகமாக வரி விதித்தும் பல வல்லரசு நாடுகள் உள்ளிட்ட உலகின் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் தங்களது மக்களை துரித உணவுக் கலாசாரத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு அதிரடியாகக் களமிறங்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
துரித உணவு வணிகத்திற்கு பல மேலை நாடுகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கிற கடுமையான நெருக்கடிகள் நமது இந்தியாவுக்கான பெருஞ்சந்தை வாய்ப்புகளாக மாற்றப்பட்டுவிட்டன.
இதன் விளைவாக கோடிக்கணக்கான நமது குழந்தைகள் தங்களது வளரும் பருவத்திலேயே நோய்களில் வீழ்கிறார்கள். இந்த அவலநிலையை மாற்றுங்கள் என்று நமது மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது சி.எஸ்.இ. என்ற அமைப்பு.
இதுமட்டுமின்றி உலகளாவிய நீரிழிவு நோய் கழகம் (International Diabetes Federation), உலகளாவிய மருத்துவ ஆய்வு இதழான Epidemiologyபோன்ற ஆய்வு அமைப்புகள் இந்தியாவில் பெருகிப் பரவிவரும் நோய்களின் அளவு அபாயகரமான கோடுகளைத் தொடுவதாக ஆய்வுபூர்வமாகவே தெரிவிக்கின்றன.
மனித வளம் என்கிற நமது வலிமையின் மீதும் பெருமையின் மீதும் மிகப்பெரிய அளவில் நோய்களின் வடிவில் இடிகள் இறங்கிக் கொண்டிருக்கின்றன.
அவ்வகையில் துரித உணவு, பொட்டல உணவு, சத்தில்லாத உணவு போன்ற காரணங்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கும் பல்வேறு நோய்களுக்குத் தீர்வு காணவேண்டிய இடமும் மருத்துவமனைகள்தான்.
இவையெல்லாம் போதாதென்று இயற்கைப் பேரிடர்கள், வகுப்புக் கலவரங்கள், புகையிலை நோய்கள், குடும்ப வன்முறைகள், குடும்ப விபத்துகள், தாய்சேய் நலன் மற்றும் பொது நோய்கள் போன்றவற்றுக்கும் மருத்துவமனைகள்தான் உதவிக்கரங்களை நீட்டியாக வேண்டும்.
அதேபோல, எத்தகைய நோய்க் கொடுமைகளுக்கும் ஆளாகாமல் தங்களது எழுபத்தைந்து வயதைக் கடந்துவிட்ட நமது மூத்த குடிமக்களுக்கு நேருகின்ற இயற்கையான வயோதிக நோய்களையும்கூட மருத்துவமனைகள்தான் இயன்றவரை சரிசெய்தாக வேண்டும்.
தமிழ்நாட்டில் சிறியவையும், பெரியவையும், மிகப் பெரியவையுமாக 12,350-க்கும் மேற்பட்ட அரசுச் சார்பான பல்வகை மருத்துவச் சேவை அமைப்புகள் இரவு பகலாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவை போதாதென்று தனியார் மருத்துவமனைகளும், மருந்து விற்பனையகங்களும் நாடு தழுவிய அளவில் லட்சக் கணக்கில் இருக்கின்றன.
ஏழைகள், அரசு மருத்துவமனைகளிலும், பணக்காரர்கள் தனியார் மருத்துவ மனைகளிலும் தஞ்சமடைகின்றனர். வாகன விபத்துகள், மதுப்பழக்க நோய்கள், உணவு முறை நோய்கள், மனநலச் சிதைவு நோய்கள், இயற்கைப் பேரிடர்கள் என்று எண்ணிலடங்கா வழிகளில் நமது மக்கள் வலுக்கட்டாயமாக மருத்துவமனைகளை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.
அப்படித் தள்ளப்படுவோரில் வசதிபடைத்தவர்களை தனியார் மருத்துவமனைகள் தன்பக்கம் வரவழைத்துக் கொள்கின்றன. வசதியற்றவர்கள் அரசு மருத்துவமனைகளில் கிடத்தப்படுகிறார்கள்.
விபத்தில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்தவர்கள், தங்களது உயிரைக் கொடுத்து, தங்களது உடல் உறுப்புகளையும் தேவைப்படுவோருக்குக் கொடுக்கிறார்கள். ஆனால், இத்தகையப் பரிமாற்றம் தொடர்பான சிகிச்சைகள் மட்டும் லட்சங்களை மேசைமேல் வைத்தால்தான் நடக்கும் என்ற நிலை ஒரு கசப்பான உண்மை.
அதற்கும் ஆயிரம் காரணங்களும் கணக்குகளும் இருக்கலாம். அத்தகைய வணிகக் கணக்குகளின் முன்பாக மனிதநேயக் கணக்குகள் எதுவும் செல்லுபடியாவதில்லை.
நோய்களுக்கான காரணங்களைக் கண்டறிந்து களைவது, நோய்களை சேவை நோக்கில் தீர்ப்பது எனும் இரண்டு நிலைகளில் நமது அரசுகள் செயல்பட்டாக வேண்டிய நேரம் இது.
புதிய கொள்கைகளையும் சட்டங்களையும் வகுத்து நடைமுறைப்படுத்தினால்தான் ஏழை எளியவர்கள் நட்சத்திர மருத்துவமனைகளைப் பார்த்து ஏங்காமல் உயிர்பிழைப்பார்கள்.
உயிர்களை மையப் பொருளாக வைத்து, மருத்துவ வணிகமுறை கோரதாண்டவமாடிக் கொள்ளையடிக்கும் போக்கினை, அரசுகள் நினைத்தால் மட்டுமே மாற்றியமைக்க முடியும்.
உயிர் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். வாழ்வுரிமை என்பதும் எல்லோருக்கும் சமமானது. பணம் படைத்தவர்களை மட்டுமே பாதுகாப்போம் எனும் போக்கு மனிதத் தன்மைக்கும் மருத்துவ நாகரிகத்திற்கும் எதிரானது.


First Published : 20 August 2014 02:49 AM IST

நன்றி தினமணி.

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

கனவுகள் மெய்ப்பட...



பாரத மாதா!
உன் முகத்தில் அரிதாரம் பூசப்படலாம் – இல்லை
அமிலமும் வீசப்படலாம்..
அச்சம் கொள்ளாதிரு!

உன்னுள்
போர்கள் தொடுக்கப்படலாம் – இல்லை
பூக்களால் புன்னகைக்கப்படலாம்
பொறுமை கொண்டிரு!

முன்பொரு நாள்
முன்னோர்கள் இழைத்த முயற்சியால்
இன்றுவரை முயலாது இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்!

முடங்கிய சிங்கங்களாய்....
எங்கள் கனவுகள் என்றுமே
கசக்கி எறியப்பட்ட காகிதங்களாய்
கண்டுகொள்ளப்படுவதில்லை யாராலும்........

உயிரைக் கிழிக்கும் ஓசைகளும்
எங்கள் உணா்வை அழிக்கும் பாசைகளும்
ஒன்றா.... இரண்டா....
என் கனவுகளில்,

பாரத மாதா..
நீா் கொணா்ந்த சுதந்திர மாலை
எங்கள் கண்ணீரின் வெப்பத்தாலே கருகிவிட்டது!

நீர் அளித்த எம் உயிர்த்துளி
எங்கள் உணா்வுகளின்
வலியாலே உலர்ந்துவிட்டது...

முதல்முறையாய் நானழுதேன்
சில முகமற்ற மனிதர்களின்
முறையற்ற செயலுக்காக...
அன்று மட்டும்
என் கண்களுக்குள் ஏனோ வியர்வை!

அம்மானுடா்கள்
அதிசயப் பிறவிகள்!
தங்கத்திலே தாரூற்றினார்கள்!

செல்வாக்குப் பெற்ற இவ்வுலகிலே
நாங்கள் ஏனோ செல்லாக் காசுகள்!

வறுமை எம்முள் வாழ்ந்து வயதாகிவிட்டது!
எங்கள் திறமையும் தீர்ந்துவிட்டது!

சுதந்திர வீணையை வாசிக்கமுடியாத
தொழுநோயாளிகள் நாங்கள்!

திலகரே!
சுதந்திரம் எனது பிறப்புரிமை
என்பது சும்மா!

படைப்பாக்கம்
சு.லாவண்யா
இளங்கலை வேதியியல் இரண்டாமாண்டு.
கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரி,
திருச்செங்கோடு


வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

அறிவு கெட நின்ற வறுமை!


மக்கள்தொகைப் பெருக்கம், விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், தனியார்மயமான கல்வி என எல்லாவற்றுக்கும் காரணமான அரசின் திறமையற்ற ஆட்சிமுறை யாவும் சேர்ந்து நம் இந்தியாவை வீழ்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறது. அதனால் படித்த குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

வறுமை ஒரு மனிதனை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.

நெருப்பில்கூட ஒருவனால் தூங்கமுடியும் ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது என்பார் வள்ளுவர். இதனை,

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதுஒன்றும் கண்பாடு அரிது

திருக்குறள் – 1049
என்ற குறள் சுட்டும்.

வறுமையைப் போலத் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும் எனவும் உரைக்கிறார். இதனை,

இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.

திருக்குறள் – 1041
என்ற குறள் வழி உணரலாம்.

வறுமை மனிதனின் அறிவைக் கெடுத்துவிடும் என்ற உண்மையை உணர்த்தும் புறநானூற்றுப் பாடலைக் காண்போம்.

பயம் கெழு மா மழை பெய்யாது மாறி
கயம் களி முளியும் கோடை ஆயினும்
பழற்கால் ஆம்பல் அகல் அடை நீழல்
கதிர்க் கோட்டு நந்தின் சுரி முக ஏற்றை
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம்
நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல்?
வான் தோய் நீள் குடை, வய மான் சென்னி!
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்
ஆசு  ஆகு என்னும் பூசல் போல
வல்லே களைமதி அத்தை – உள்ளிய
விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை
பொறிப் புணர் உடம்பில் தோன்றி என்
அறிவு கெட நின்ற நல்கூா்மையே!
புறநானூறு 266

சோழன் உருவப் பல்தேர் இளஞ்சேட் சென்னியைப் பெருங்குன்றூா்க் கிழார் பாடியது.

பயன்மிக்க வான்மேகம் மழையைப் பொழியாது நீங்குதலால் நீர்நிலைகள் வற்றிப்போகும் கோடைக்காலமாயினும் துளைபொருந்திய நீண்ட காம்பைக் கொண்ட ஆம்பலின் அகன்ற இலையின் நிழலில் கதிர்போன்ற கோட்டினைக் கொண்ட சுழித்த முகத்தை உடைய நத்தையின் ஏற்றை செருக்கினால் பெண்ணாகிய இளைய சங்குடன் பகற்காலத்தே கூடி மகிழும். இத்தகைய நீா்வளமிக்க வயல்களைக் கொண்ட நாட்டையும் வெற்றிச்சிறப்பையும் உடையோய்!

வானளாவ உயா்ந்த குடையையும், வலிமைமிக்க குதிரையினையும், உடைய சென்னி!

அறிவுமிக்க சான்றோர் ஒருங்கிருந்த அவையில் சென்று ஒருவன் யானுற்ற துன்பத்துக்குத் துணையாய் நீவிர் எனக்குப் பற்றாக வேண்டும். என்னும் முறையீட்டை அவா்கள் விரைந்து தீர்பார்கள். அதுபோல என்னை நினைந்து வந்த விருந்தினரைக் கண்டு அவர்க்கு விருந்தளிக்க இயலாமல் ஒளியச் செய்யும் நன்மை இல்லாத இல்வாழ்க்கையை உடையவன் நான். ஐம்புலன்களும் குறைவின்றிப் பொருந்திய என் உடம்பில் அவற்றால் ஆகிய பயனை அடையமுடியாதபடி எனது அறிவு கெட நிலைபெற்ற வறுமையை விரைவாகதத் தீர்பாயாக. 

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

நம் குழந்தைகள் நம்பமாட்டார்கள்!







இத்தனை நீர்நிலைகள் நம்மிடம் இருந்தன என்று சொன்னால் எதிர்காலத்தில் 

நம் குழந்தைகள் நம்பமாட்டார்கள்!

தொடர்புடைய இடுகை





புதன், 6 ஆகஸ்ட், 2014

வீட்டுக்கொரு பிச்சைப் பாத்திரம்!

உலகமயமாக்கல் என்ற புயலில் சிக்கி நம் நாடு சிதைவுக்குள்ளாகியுள்ளது.
மக்கள் தாய்மொழி உணர்வை இழந்துவிட்டனர்!
ஆங்கிலம் மட்டுமே மொழி என்று பலரும் நம்புகின்றனர்!
ஆட்டு மந்தைகளாகத்தான் வாழ்கின்றனர்!
குழந்தைகளின் பெயரில் தாய்மொழி அடையாளமே இல்லை!
மண் உயிரற்றதாகிவிட்டது!
தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்கும் நிலைவந்துவிட்டது!
நம் ஆடை மரபுகளை மறந்துவிட்டோம்!
பழந்தமிழர் விளையாட்டுகளை, கலைகளை யாரும் மதிப்பதில்லை! 
தமிழர் இசை என்னவென்றே தெரியவில்லை!
இந்தக் கல்வி முறை,
 வேலை வாங்குவதே பெரிய இலக்கு என்று மூளைச் சலவை செய்கிறது!
நாட்டைப் பற்றி இவ்வாறு எண்ணிக்கொண்டே ஈரோடு புத்தகத் திருவிழாவுக்குச் சென்றேன். அங்கு சுகிசிவம் அவர்கள் பேசும்போது தான் படித்த, ஒரு சிந்தனையை முன்வைத்தார்.
“இன்று நம் எல்லோர் வீடுகளிலும் ஒரு அலுமினியப் பிச்சைப் பாத்திரம் உள்ளது! அது வேறெங்கும் இல்லை நம் வீட்டின் மாடியில் உள்ள டிடிஎச் ஆண்டனா தான்! அதில் தான் நாம் உலகெங்கிலுமிருந்து கலாச்சாரக் குப்பைகளை இரவல் பெறுகிறோம் என்றார்.
எனக்கும் உண்மை என்றுதான் தோன்றியது. வசதியானவர்கள் தனியாக வைத்திருக்கிறார்கள். இயலாதவர்கள் கேபிள் டிவி என அதையும் இரவல் வாங்குகிறார்கள்.

அவர் சொன்தும் என் நினைவுக்கு வந்தது 
கவிஞர் மு.மேத்தா அவர்களின் கவிதைதான். 

தேசப்பிதாவிற்கு தெருப்பாடகனின் அஞ்சலி
உன்னுடைய படங்கள்
ஊர்வலம் போகின்றன
நீயேன்
தலைகுனிந்தபடி
நடுத்தெருவில்
நிற்கிறாய்?
வெளுத்துப் போய்விட்ட
தேசப்படத்துக்குப்
புதுச்சாயம் பூசும்
புண்ணிய தினத்தில்
புத்திர தேசத்துக்காக நீ
புலம்புவது
என் காதில் விழுகிறது!

எங்கள் தேசசப் பிதாவே!
அமைதி கொலுவிருக்கும்
உன் சிலைகளைப்
பார்க்கும் போதெல்லாம்
நான்
அழுதுவிடுகிறேன்!

கண்ணீரின்
வெப்பத்தால்
என் கவிதை
முழுமை பெறாமலே
முடிந்து விடுகிறது...

தேசப் படத்திலுள்ள
கோடுகள்
விடுதலைக்குப் போராடிய
வீரத் தியாகிகளின்
விலா எலும்புக் கூடுகள்!

அழிக்கமுடியாத
கல்லெறிபடாத
அந்த நினைவுச்சின்னத்தின்
மூலமே
அவர்களுக்கு நாங்கள்
அஞ்சலி செலுத்திவிடுகிறோம்!

கண்ணீர்க் கடலில்
கலங்கள் மூழ்கியபிறகு
அடைக்கலம் தேடிய 
ஆபுத்திரனே!

அமுதசுரபியைத்தான்
நீ தந்து சென்றாய்
இப்போது
எங்கள் கைகளில் இருப்பதோ
பிச்சைப் பாத்திரம் !
இந்த மாற்றத்தை
நிகழ்த்திய
மந்திரவாதிகள் யார்?
நிழலுக்குள் மறைந்திருக்கும்
நிழலை
யார் அம்பலப்படுத்துவது?

சரித்திர மாளிகையில்
அகிம்சைப் பேரொளியில்
பகத்சிங்குகள்
மறைக்கப்பட்டதால் தானா
சுதந்திர மாளிகையை
எலிகள்
சுரண்டுகின்றன?

மயிலுக்கு போர்வை தந்தவனின்
மரபிலே வந்தவர்கள்
எங்கள் மேனியில் கிடக்கும்
கந்தல் சட்டைகளையும்
கழற்றிக் கொண்டு போகிறார்கள்
ஆடுகளை
உனக்காக வளர்த்தோம்
நாளடைவில் நாங்களே
மந்தை ஆடுகளாய்
மாறிப் போனோம் !
எங்கள்
வயிற்றைப் புறக்கணித்துவிட்டு
காம்புகளை நேசிக்கிறார்கள் !
எங்களுக்குத்
தீவனம் கிடைக்காவிட்டாலும்
மேய்ப்பவர்களுக்கு மட்டும்
எப்படியோ
இனாம் கிடைத்து விடுகிறது !

கண்ணீரின் வெப்பத்தால்
 என் கவிதை
முழுமைபெறாமலேயே
முடிந்துவிடுகிறது!

சட்டக்கட்டிடங்களில்
ஓட்டைகள் விழுந்துவிட்டன
வயதாகிப் போனதால்
தர்ம தூபிகள்
தள்ளாடுகின்றன

எங்கள் வாழ்க்கை
இருட்டோடு
இல்லறம் நடத்துகிறது!
பாவத்தைத்
தனித்தனியே செய்துவிட்டு
மொத்தமாகத் தீ்ர்த்துக்கொள்ளப்
போதுமான அளவு
புண்ணிய தலங்கள் இருப்பதால்
எங்கள்
பாரத புத்திரர்கள்
தூசுபடாமல்
தூய்மையாகவே இருக்கிறார்கள்!

இராசதானியில்
மலர்கிரீடங்கள்
சூட்டப்படுகின்றபோது
சேரிக் குழந்தைகளின்
சின்ன விழிச்செடியில்
உப்பு மலர்கள்
உதிர்ந்து விழுகின்றன...

நீ கண்டுபிடித்த
சுதேசி ஆயுதமாம்
கைராட்டையை சுற்றிய சிலர்
தங்கநூல் நூற்கிறார்களாம் !
எங்களுக்கோ
வெள்ளியும் தங்கமும்
விழாக்களின் பெயர்களில்தான்
வருகின்றன
ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்
இந்த நாட்டுமக்கள்
உன்னை
அப்படியே பின்பற்றுகிறார்கள்
அரைகுறையாகத்தான்
உடுத்துகிறார்கள்.

தேசம் போகிற
போக்கைப் பார்த்தால்
பிறந்தநாள் உடையே
எங்கள்
தேசிய உடையாகிவிடும் போல்
இருக்கிறது.

எங்கள் தலைவர்கள்
வறுமையை எப்படியாவது
வெளியேற்றிவிட வேண்டுமென்று தான்
மேடையில் மைக்கின் முன்னால்
பேச்சுத்தவம் செய்கிறார்கள்!

இருபத்தைந் தாண்டுகளில்
தேசத்தில் 
மாற்றமே  நிகழவில்லையென்று
யார் சொன்னது?

கண்ணீர்க்கடலில்
கலங்கள் மூழ்கிய பிறகு
அடைக்கலம் தேடிய
ஆபுத்திரனே!

அமுதசுரபியைத்தான்
நீ தந்து சென்றாய்
இப்போது
எங்கள் கைகளில் இருப்பதோ
பிச்சைப் பாத்திரம் !

அணைக்கட்டுகளில்
திறக்கப்படும் தண்ணீர்
பள்ளங்களை ஏமாற்றிவிட்டு
மேட்டை நோக்கியே
பாய்கிறது.

சேரிகளில் மட்டுமே நீ
யாத்திரை செய்வாய்
என்பதைத்
தெரிந்துகொண்டதால்
உன்னை நேசித்தவர்கள்
தேசத்தையே
சேரியாக மாற்றிவிட்டார்கள்!

இந்த மாற்றங்களை நிகழ்த்திய
மந்திரவாதிகளின் கழுத்துக்கு
நாங்கள்
மாலை சூட்டுகிறோம்!

உன்னுடை படங்கள்
ஊர்வலம் போகின்றன...
நீயேன்
தலைகுனிந்தபடி
நடுத்தெருவில் நிற்கிறாய்?

புத்திர தேசத்துக்காக நீ 
புலம்புவது
என் காதில் விழுகிறது.

அமைதி கொலுவிருக்கும்
உன் சிலைகளைப்
பார்க்கும்போதெல்லாம்
நான் அழுதுவிடுகிறேன்!

கண்ணீரின் வெப்பத்தால்
என் கவிதை
முழுமைபெறாமலே
முடிந்துவிடுகிறது..... 
- மு. மேத்தா