கல்வியின்மையும், வறுமையும், வேலைவாய்ப்பின்மையும், அறியாமையும், மக்கள் தொகைப் பெருக்கமும் மிகுந்து காணப்படுகின்ற நமது நாட்டில், துறைதோறும் வெளியிடப்படுகின்ற புள்ளிவிவரங்கள் அனைத்தும், ஒவ்வொரு துறையிலும் நாம் அடைந்திருக்கும் வீழ்ச்சியை முன்வைக்கின்றன.
இன்றைய நமது வாழ்க்கை முறையின் அனைத்துக் கூறுகளும் மருத்துவமனைகளையும், மருந்துகளையும் நோக்கியே நம்மை நகர்த்திக் கொண்டிருக்கின்றன. அதிலும் தமிழ்நாடு, நோய் மயம், சிகிச்சை மயம், மருந்து மயம், மருத்துவர் மயம், மருத்துவமனைகளின் மயமாக மாறிக்கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை.
தமிழ்நாட்டில் இருசக்கர வாகனங்கள் உட்பட மொத்தம் 1,86,69,500 வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் வெளிவரும் புதிய வாகனங்களின் எண்ணிக்கை தலைசுற்ற வைக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 16 லட்சம் புதிய வாகனங்கள் சாலைகளுக்கு வந்துள்ளன.
இதே பாய்ச்சலில், விபத்துகளின் எண்ணிக்கையும், உயிரிழப்புகள் மற்றும் உடலுறுப்பு இழப்புகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் உயர்ந்துகொண்டேயிருக்கிறது. இந்திய அளவில் கடந்த 2003 முதல் 2012 வரையிலான பத்து ஆண்டுகளில் மட்டும் 12 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறந்திருக்கின்றனர். 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் மற்றும் படுகாயங்களுக்கு உள்ளாகி முடங்கியுள்ளனர்.
அதாவது, சராசரியாக ஓர் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களை சாலை விபத்துகளில் இந்தியா பறிகொடுத்துக் கொண்டிருக்கிறது. காயம், படுகாயம் மற்றும் உடலுறுப்புகள் இழப்புக் கணக்குத் தனிக் கணக்கு.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இன்றைய நிலையில் ஓர் ஆண்டுக்கு 16,000-க்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். காயம், படுகாயம், உடலுறுப்புகள் இழப்பு, வாகனங்களின் காயம் என்பது தனிக் கணக்கு.
அதாவது, ஒரு மாதத்திற்குச் சராசரியாக 1,350 பேர். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு நாளைக்குச் சராசரியாக 56 பேர் எனும் கணக்கில், இன்றைய தமிழ்நாடு தனது மனித உயிர்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறது.
1993-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த 34,925 சாலை விபத்துகளில் 7,300-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். 32,336 பேர் காயம் மற்றும் படுகாயமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை எகிறிக்கொண்டே வந்து 2013-ஆம் ஆண்டில் 66,238 விபத்துகளாகவும், 15,563 உயிரிழப்புகளாகவும், 76,000 காயம் மற்றும் படுகாயம் அடைந்தோராகவும் உயர்ந்து இருக்கிறது.
தமிழ்நாட்டின் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் விபத்து காரணமாக மட்டும் ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சம் பேர் அனுமதிக்கப்படுகின்றனர். இந்தப் புள்ளிவிவரங்களெல்லாம் காவல்துறையில் பதிவான விபத்துகளின் அடிப்படையில் மட்டுமே. காவல்துறைவரை செல்லாத விபத்துகளின் எண்ணிக்கை கணக்கிலடங்கா.
அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் தற்போது 6,800-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள், ஆண்டில் ஒரு சில நாள்களைத் தவிர, மற்ற அனைத்து நாள்களிலும் 22,000 கோடிக்கு மேல் மது வகைகளை விற்பனை செய்கின்றன. மதுவை உறிஞ்சிப் பழகிவிட்ட ஒருவர், காலப்போக்கில் மதுவினால் உறிஞ்சப்பட்டு மரணமடைவார் என்பது உறுதி.
அரசு "டாஸ்மாக்' மதுபானக் கடைகளின் சுகாதாரமற்ற குடிப்பகங்களில் தொடங்கி, தனியார் விடுதிகள் மற்றும் நட்சத்திர விடுதிகளின் ஆடம்பரமான குடிப்பகங்கள் வரை மதுப் பழக்கம் என்பது நமது மக்களின் பொதுப் பழக்கமாக மாறிவிட்டது.
மதுவை இயல்பாகக் கையாளுவதைப் போன்று ஏராளமான கதாபாத்திரக் காட்சிகளை தமிழ்த் திரைப்படங்கள் முன்வைக்கின்றன. அண்மைக் காலப் படங்களில் அதிகரித்திருக்கும் இந்தப் போக்கு, இளைஞர்களின் மதுப் பழக்கத்திற்கு மறைமுகமாக வலிமை சேர்த்து அப்பழக்கத்தை அங்கீகரிக்கின்றன.
பதின்ம வயதுகளில் தொடங்கி தனது இளமை முழுவதும் மது குடிப்பவர்கள், அதன்பிறகு தன் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் எவ்வகையிலும் பயன்படாத உயிர்ச்சுமைகளாக உளைச்சல் அடைந்து, அவ்வுளைச்சல்களையே மற்றவர்களுக்கும் கொடுப்பவர்களாக மாறுகின்றனர்.
இப்படியான குடி நோயாளிகள் மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தினர் அடையும் மன அழுத்தங்கள் தொடர்பான நோய்களுக்கும் நமது மருத்துவமனைகளின் வாயிலாகவே தீர்வு கண்டாக வேண்டும். எனவே, இவ்வகையிலும் மருத்துவமனைகள் கூடுதல் சுமைகளைப் பெறுகின்றன.
அடுத்து பரவி வரும் புதிய சிக்கலாக உணவுக் கலாசாரம் மாறியிருக்கிறது. நடைபாதை உணவுக் கடைகள் முதல் நட்சத்திர விடுதி உணவுக் கூடம்வரை மக்கள் கூட்டம் கூட்டமாக உண்கின்றனர்.
பசிக்காகவோ, சத்துக்காகவோ அல்லாமல், புதிய புதிய ருசிக்காகவும், மேலைநாட்டு நாகரிகமாகவும் இந்தக் கலாசாரம் பரவிக் கொண்டிருக்கிறது. பொருந்தாத உணவுகள் பெருந்தீனியாக உட்கொள்ளப்படுவதால் ஏற்படுகிற புதிய புதிய நோய்கள் பெருகிக் கொண்டேயிருக்கின்றன.
துரித உணவு என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதால், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படுகின்றன. உணவுகளே நோய்களாக மாறி மக்களைக் கொல்லுகின்ற அவலம் பெருகி வருகிறது.
இதுபோன்ற உணவுகளின் விளைவால் 29 பேர் இறந்ததாக 1990-ஆம் ஆண்டு ஆய்வு சொல்கிறது. 2008-ஆம் ஆண்டின் ஆய்வோ அவ்வகை மரணங்கள் 53 நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கிறது.
எதிர்வரும் 2020-ஆம் ஆண்டு இவ்வகையிலான (அதாவது, புது புது வகையான பெருந்தீனிகளை வயிற்றில் அடைத்துக் கொள்வதால்) மரணங்கள் 57 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துரித உணவு வகைகள் பெரியவர்களை மட்டுமல்ல, இளம் குழந்தைகளையும் சீரழித்துச் சிதைக்கிற உண்மைகளை "அறிவியல் - சுற்றுச்சூழல் மையம்' (Centre for Science and Environment) மிக விரிவாகத் தெளிவுபடுத்தி எச்சரித்திருக்கிறது.
துரித உணவுகளைத் தடை செய்தும், துரித உணவு விளம்பரங்களுக்குக்கூட தடைவிதித்தும், துரித உணவுகளுக்கு அதிகமாக வரி விதித்தும் பல வல்லரசு நாடுகள் உள்ளிட்ட உலகின் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் தங்களது மக்களை துரித உணவுக் கலாசாரத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு அதிரடியாகக் களமிறங்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
துரித உணவு வணிகத்திற்கு பல மேலை நாடுகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கிற கடுமையான நெருக்கடிகள் நமது இந்தியாவுக்கான பெருஞ்சந்தை வாய்ப்புகளாக மாற்றப்பட்டுவிட்டன.
இதன் விளைவாக கோடிக்கணக்கான நமது குழந்தைகள் தங்களது வளரும் பருவத்திலேயே நோய்களில் வீழ்கிறார்கள். இந்த அவலநிலையை மாற்றுங்கள் என்று நமது மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது சி.எஸ்.இ. என்ற அமைப்பு.
இதுமட்டுமின்றி உலகளாவிய நீரிழிவு நோய் கழகம் (International Diabetes Federation), உலகளாவிய மருத்துவ ஆய்வு இதழான Epidemiologyபோன்ற ஆய்வு அமைப்புகள் இந்தியாவில் பெருகிப் பரவிவரும் நோய்களின் அளவு அபாயகரமான கோடுகளைத் தொடுவதாக ஆய்வுபூர்வமாகவே தெரிவிக்கின்றன.
மனித வளம் என்கிற நமது வலிமையின் மீதும் பெருமையின் மீதும் மிகப்பெரிய அளவில் நோய்களின் வடிவில் இடிகள் இறங்கிக் கொண்டிருக்கின்றன.
அவ்வகையில் துரித உணவு, பொட்டல உணவு, சத்தில்லாத உணவு போன்ற காரணங்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கும் பல்வேறு நோய்களுக்குத் தீர்வு காணவேண்டிய இடமும் மருத்துவமனைகள்தான்.
இவையெல்லாம் போதாதென்று இயற்கைப் பேரிடர்கள், வகுப்புக் கலவரங்கள், புகையிலை நோய்கள், குடும்ப வன்முறைகள், குடும்ப விபத்துகள், தாய்சேய் நலன் மற்றும் பொது நோய்கள் போன்றவற்றுக்கும் மருத்துவமனைகள்தான் உதவிக்கரங்களை நீட்டியாக வேண்டும்.
அதேபோல, எத்தகைய நோய்க் கொடுமைகளுக்கும் ஆளாகாமல் தங்களது எழுபத்தைந்து வயதைக் கடந்துவிட்ட நமது மூத்த குடிமக்களுக்கு நேருகின்ற இயற்கையான வயோதிக நோய்களையும்கூட மருத்துவமனைகள்தான் இயன்றவரை சரிசெய்தாக வேண்டும்.
தமிழ்நாட்டில் சிறியவையும், பெரியவையும், மிகப் பெரியவையுமாக 12,350-க்கும் மேற்பட்ட அரசுச் சார்பான பல்வகை மருத்துவச் சேவை அமைப்புகள் இரவு பகலாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவை போதாதென்று தனியார் மருத்துவமனைகளும், மருந்து விற்பனையகங்களும் நாடு தழுவிய அளவில் லட்சக் கணக்கில் இருக்கின்றன.
ஏழைகள், அரசு மருத்துவமனைகளிலும், பணக்காரர்கள் தனியார் மருத்துவ மனைகளிலும் தஞ்சமடைகின்றனர். வாகன விபத்துகள், மதுப்பழக்க நோய்கள், உணவு முறை நோய்கள், மனநலச் சிதைவு நோய்கள், இயற்கைப் பேரிடர்கள் என்று எண்ணிலடங்கா வழிகளில் நமது மக்கள் வலுக்கட்டாயமாக மருத்துவமனைகளை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.
அப்படித் தள்ளப்படுவோரில் வசதிபடைத்தவர்களை தனியார் மருத்துவமனைகள் தன்பக்கம் வரவழைத்துக் கொள்கின்றன. வசதியற்றவர்கள் அரசு மருத்துவமனைகளில் கிடத்தப்படுகிறார்கள்.
விபத்தில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்தவர்கள், தங்களது உயிரைக் கொடுத்து, தங்களது உடல் உறுப்புகளையும் தேவைப்படுவோருக்குக் கொடுக்கிறார்கள். ஆனால், இத்தகையப் பரிமாற்றம் தொடர்பான சிகிச்சைகள் மட்டும் லட்சங்களை மேசைமேல் வைத்தால்தான் நடக்கும் என்ற நிலை ஒரு கசப்பான உண்மை.
அதற்கும் ஆயிரம் காரணங்களும் கணக்குகளும் இருக்கலாம். அத்தகைய வணிகக் கணக்குகளின் முன்பாக மனிதநேயக் கணக்குகள் எதுவும் செல்லுபடியாவதில்லை.
நோய்களுக்கான காரணங்களைக் கண்டறிந்து களைவது, நோய்களை சேவை நோக்கில் தீர்ப்பது எனும் இரண்டு நிலைகளில் நமது அரசுகள் செயல்பட்டாக வேண்டிய நேரம் இது.
புதிய கொள்கைகளையும் சட்டங்களையும் வகுத்து நடைமுறைப்படுத்தினால்தான் ஏழை எளியவர்கள் நட்சத்திர மருத்துவமனைகளைப் பார்த்து ஏங்காமல் உயிர்பிழைப்பார்கள்.
உயிர்களை மையப் பொருளாக வைத்து, மருத்துவ வணிகமுறை கோரதாண்டவமாடிக் கொள்ளையடிக்கும் போக்கினை, அரசுகள் நினைத்தால் மட்டுமே மாற்றியமைக்க முடியும்.
உயிர் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். வாழ்வுரிமை என்பதும் எல்லோருக்கும் சமமானது. பணம் படைத்தவர்களை மட்டுமே பாதுகாப்போம் எனும் போக்கு மனிதத் தன்மைக்கும் மருத்துவ நாகரிகத்திற்கும் எதிரானது.
By ஜெயபாஸ்கரன்
First Published : 20 August 2014 02:49 AM IST