பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வியாழன், 10 ஜூலை, 2014

கலித்தொகை சொல்லித்தரும் வாழ்க்கைப்பாடம்.


நாம் எந்தப் பொருள் வாங்கினாலும் அதை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்ற செய்முறைக் குறிப்பேடு கிடைக்கிறது. ஆனால் நாம் பிறந்தபோது இந்த வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று அனுபக் குறிப்பேடுகளோடு பிறக்கவில்லை. இன்று பணம் ஈட்டுவதற்கான வழிமுறைகளைச் சொல்லித்தர திரும்பிய பக்கமெல்லாம் பயிற்சி நிலையங்கள் உள்ளன. ஆனால் வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித்தர பயிற்சி நிலையங்கள் பெரிதும் இல்லை. கற்றவர்கள் அறிவார்கள் நல்ல தமிழ் இலக்கியங்கள் நமக்கு வாழ்க்கைப் பாடத்தைப் போதிக்கின்றன என்று..
கலித்தொகை சொல்லும் பாடம் நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ளவேண்டியதாக உள்ளது.

தலைவியைத் தலைவன் திருமணம் செய்துகொள்ளக் காலம் தாழ்த்தி வருகிறான். அப்போது தோழி அவனிடம் தலைவியின் ஆற்றாமையைக் கூறி “நீ தலைவியைத் திருமணம் செய்துகொள்” எனச் சொல்வதாக அமையும் அகப்பாடல் இது.
இப்பாடல் தரும் கருத்துக்களை உணர்ந்த யாரும் செய்நன்றி மறக்கக்கூடாது!, சொன்ன சொல்லைக் காப்பாற்றவேண்டும் என எண்ணுவர். இதுவே இப்பாடலின் தனிச்சிறப்பாகும்.
பாடலுக்குச் செல்வோம்.
கடலா? போர்க்களமா?
வரிசையாக உள்ள தோணிகள் களிறுகளாகவும், அவைகளின் ஒலி பறையாகவும், கரையைச் சேர்ந்த அழகிய சிறகுகளை உடைய பறவைகள் படையாகவும் கொண்டு அரசன் பகைவர் மேல் படையெடுத்துச் செல்லுவதைப்போல வலிமையான கடலைச் சேர்ந்த நிலத்தை உடையவனே! நான் சொல்வதைக் கேள்..
வாழ்க்கைப் பாடம்
தனக்குப் பாடம் கற்பித்த ஆசான், தன்னிடமிருந்து ஒன்றும் பெறாமல் மனம் வருந்தியபோது, தன்கைப் பொருளைப் பகுத்து கைமாறாகக் கொடுத்து உண்ணாதவனுடைய செல்வம்,
தான் கற்ற வித்தையைத் தவறான வழியில் பயன்படுத்துபவனுடைய செல்வம்,
தனக்கு ஒரு வருத்தம் ஏற்பட்டபோது உதவியவர்களுக்கு ஒரு வருத்தம் ஏற்பட்டபோது உதவாதவனுடைய செல்வம் ஆகிய இவையெல்லாம் தாமாகவே தேய்ந்து அழிந்துபோகும். அதுமட்டுமன்றி, அவனுடைய செய்நன்றிக்கேடு, உடம்பினை ஒழித்து உயிர்போன போதும் அதை அனுபவிக்கமால் போகாது.
உறவினர்கள் மனம் வருந்தும் படியாகத் தேடிக்குவித்த செல்வங்கள், முயற்சி இல்லாத மன்னவனின் குடிகள்போலத் தாமாகவே தேய்ந்து அழியும்,
பிறர் நம்புமாறு சூளுரைத்தவன் தான் சொன்ன சொல்லைக் காக்காமல் பொய்த்துப் போனால் தானாகவே தேய்ந்து போவான். சூளுறவினைப் பொய்த்த தீவினை, மறுமைக்கண் வாளின்வாய்க் கூரிதாகவென்று சொர்க்கம் பெற்றானாயினும், அது அவனை அழிக்காமல் விடாது.
தலைவ!
செய்நன்றிக் கேடும், சூளுறவு பொய்த்தலும் ஆகியவற்றின் கேடுகள் யாம் முற்கூறிய அத்தன்மையின. நீ அத்தன்மைத்தாதலை நினைத்துப்பார்!
தன் பகைவனோடு சினந்த அரசன், பகை வேந்தன் கோட்டையின் புறத்தே வந்து முற்றுகை வினையான், தான் அடையும் வருத்தம் போல் இவள் வரைவு கடிதின் முடித்தற்கு, விரைந்து வரும் நெஞ்சமோடு பெரிதும் வருந்தினள். அவ்வருத்தம் நீங்க விரைந்து தலைவியை நீ திருமணம் செய்துகொள்வாய் எனத் தோழி தலைவனை வேண்டிக்கொள்கிறாள்!
பாடல் இதோ,
நிரை திமில் களிறு ஆகத் திரை ஒலி பறை ஆகக்

கரை சேர் புள் இனத்து அம் சிறை படை ஆக
அரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர்ச் சேர்ப்ப கேள்
கற்பித்தான் நெஞ்சு அழுங்க பகர்ந்து உண்ணான் விச்சைக்கண்
தப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால்

ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்று அவன்

எச்சத்துள் ஆயினும் அஃது எறியாது விடாதே காண்
கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாள் இலான் குடியே போல் தமியவே தேயுமால்

சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின் மற்று அவன்

வாள் வாய் நன்று ஆயினும் அஃது எறியாது விடாதே காண்
ஆங்கு
அனைத்து இனி பெரும அதன் நிலை நினைத்துக் காண்
சினைஇய வேந்தன் எயில் புறத்து இறுத்த
வினை வரு பருவரல் போல
துனை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே

தோழி தலைவனிடம் சொன்னது

கலித்தொகை -149
பாடலின் வழியே…
1.   செய்நன்றி மறத்தல் கூடாது, சொன்ன சொல்லைக் காக்கவேண்டும் என இருபெரும் வாழ்வியற் கடமைகளை இக்கலித்தொகைப் பாடல்  அழகுபட எடுத்துமொழிகிறது.




23 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.

      நீக்கு
  2. சிறப்பான பாடல்... அருமையான விளக்கம்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.

      நீக்கு
  3. பாடல் சொல்லும் வாழ்க்கைப் பாடம் மிக அருமை..பகிர்விற்கு நன்றி முனைவரே
    த.ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.

      நீக்கு
  4. ஆஹா எத்தனை அருமையான பாடம் அதற்கு தாங்கள் அளித்துள்ள விளக்கம் மிக அருமை! தமிழ் பாடத் திட்டத்தில், பள்ளியில் பயின்ற பிறகு தமிழ் இலக்கியங்களைத் திரும்பிப் பார்க்காமல் போனதற்கு...தற்போது இது போன்ற பாடல்களும், விளக்கங்களும் அழகாகக் கிடைக்கின்றன, வலைத்தளத்தில் தங்களைப் போன்ற பல தமிழ் விற்பன்னர்கள் இருப்பதால்...இணையமும், தமிழ் வலைப்பூக்களும் வாழ்க! தமிழ் மணம் பரப்பட்டும்!

    பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  5. இலக்கியம் கூறும்
    வாழ்க்கை வழிகாட்டல்
    இனிய பொழிப்புரையுடன்
    என்றும்
    பயனுள்ள பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.

      நீக்கு
  6. வணக்கம்
    ஐயா.

    சிறப்பாக உள்ளது பாடலும் விளக்கமும் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.

      நீக்கு
  7. மிக அருமையான பாடலுக்கு அதையும் விட அருமையாக அழகுத்தமிழில் விளக்கம் கூறியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  8. அருமை அருமையான பகிர்வு. நன்றி

    பதிலளிநீக்கு
  9. தமிழின் இனிமையே இதுதான். வாழ்க்கைப் பாடத்தை அழகாக விளக்கும். அதை இவ்வளவு உயிர்ப்போடு எடுத்துரைத்தமை பாராட்டுக்குரியது. தங்கள் மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. பலாப்பழத்தை உரித்து
    தேனில் நனைத்துக் கொடுத்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மேலான் மறுமொழிகளுக்கும் நன்றிகள் அன்பரே

      நீக்கு
  11. நல்ல பகிர்வு முனைவரே....
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மேலான் மறுமொழிகளுக்கும் நன்றிகள் அன்பரே

      நீக்கு
  12. வாழ்க்கைப் பாடம் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மேலான் மறுமொழிகளுக்கும் நன்றிகள் அம்மா

      நீக்கு
  13. பதிவின் முன்னுரை அருமை.

    `பணம் ஈட்டுவதற்கான வழிமுறைகளைச் சொல்லித்தர திரும்பிய பக்கமெல்லாம் பயிற்சி நிலையங்கள் உள்ளன. ஆனால் வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித்தர பயிற்சி நிலையங்கள் பெரிதும் இல்லை. கற்றவர்கள் அறிவார்கள் நல்ல தமிழ் இலக்கியங்கள் நமக்கு வாழ்க்கைப் பாடத்தைப் போதிக்கின்றன என்று`

    பாடலின் பொருள் அதனினும் சிறப்பு.

    தாங்கள் குறிப்பிட்ட ~உண்ணாதவனுடைய செல்வம்~ என்பதற்கு பதிலாக ~உதவாதவனுடைய செல்வம்~ என்ற சொல் சரியாக இருக்குமோ?

    வளர்க நின் தமிழ்ப்பணி!

    தங்கள் வலைப்பூவில் நண்பராக (உறுப்பினராக) இணைய விருப்பம்.

    பதிலளிநீக்கு