வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 23 ஜூலை, 2014

நன்றி சொல்ல வார்த்தைகள் தேவையா?


நன்றி நவில்தல் தமிழரின் சிறப்புடைய பண்பாடுகளுள் ஒன்றாகும். இப்போதெல்லாம் தேங்ஸ் என்று ஒரே வார்த்தையில் தன் நன்றி உணர்வை யாவரும் தெரிவித்துவிடுகின்றனர். நன்றியை வார்த்தைகளால் பலவழிகளில் நாம் வெளிப்படுத்தமுடியும். சிலர் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என்றும், சொல்வதுண்டு. 


வேர்களை அறுத்தோடும் 

நதியின் மீதும் 

கலகலவென்று பூச்சொரியும் 

கரையோரத்துக் கிளைகள்... 

அறுத்ததற்குக் கோபமில்லையாம் 

நனைத்ததற்கு நன்றியாம் 

மரம் சொன்னது : 

''இன்னா செய்தார்க்கும் 
இனியவை செய்'' 

என்பார் கவிஞர் வைரமுத்து.




லித்தொகையில் ஒருபாடல் நன்றியைச் சொல்ல வார்த்தைகள் தேவையா? என்று கேட்கிறது.


அகன்ற ஆறுகள், பரந்த உலகிடத்து, உயிர்களெல்லாம் வாழும்படி எங்கும் நீரைப் பரந்து ஊட்டிப் பாதுகாத்தன. அந்நீர் வற்றியபின் சிலவாகிய நீரோடு, வாய்கால்களில் அறல் உண்டாகும்படி அழகுபெற்றுச் சென்றன.

முன்னர் தனக்கு உதவி செய்து முயன்றவர்  பின்னொரு நாள் வாடி வருந்தும்போது, உதவியை மீண்டும் செய்வார்கள் பெருமையுடையவர்கள். அவர்களைப்போல, ஆற்றில் வெள்ளம் பெருகியபோது நீரை உண்ட மரங்கள் நீர் வற்றிய இளவேனிற் காலத்தில் சுரும்புகள் ஒலிக்க வண்டுகள் ஆராவரிக்க, கொம்புகளினின்றும் பல மலர்கள் ஆற்றிலே உகும்படி இனிமை பொருந்தின இளனேில் வந்துவிட்டது


மன் உயிர் ஏமுறமலர் ஞாலம் புரவு ஈன்று
பல் நீரால் பாய்புனல் பரந்து ஊட்டிஇறந்த பின்,
சில் நீரால் அறல்வாரஅகல் யாறு கவின்பெற
முன்ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதிக்கண்
பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடுடையாளா் போல்
பல்மலர் சினை உகசுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப
இன்அமா் இளவேனில் இறுத்தந்த பொழுதினான்

கலித்தொகை -34 -1-7

இந்தக் கலித்தொகைப் பாடல் நமக்கு உணர்த்தும் நீதி..


நன்றி சொல்ல வார்தைகள் தேவையில்லை!
நன்றியை நம் நன்றியுடைய செயல்களில் காட்டவேண்டும்!

7 கருத்துகள்:

  1. நன்றி சொல்வதை விட அதை நாம் நம் செயல்களில் காட்டுதல்தான் உண்மையான நன்றி. வார்த்தையால் நன்றி சொல்லிவிட்டு பின்னர் அதை மறப்பது மிகவும் அநாகரீகமான செயல்! அருமையான பதிவு! பாடல்களையும் விளக்கங்களையும் கூட குறித்துக் கொண்டோம்! ஐயா!

    பதிலளிநீக்கு
  2. "நன்றி சொல்ல வார்தைகள் தேவையில்லை!
    நன்றியை
    நம் நன்றியுடைய செயல்களில் காட்டவேண்டும்!" என்ற
    உண்மையை ஏற்றுக்கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
  3. உண்மைதான் நண்பரே
    நன்றியைச் செயலில்தான் காட்டவேண்டும்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  4. அருமை... அருமை...

    சிறிய புன்னகையும் போதும்...

    பதிலளிநீக்கு
  5. நன்றி சொல்ல உனக்கு ,வார்த்தை இல்லை எனக்கு என்ற பாடலை எப்போதும் நினைவு படுத்தும் உங்கள் பதிவு !

    பதிலளிநீக்கு