வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 3 ஏப்ரல், 2014

மட்டின்றி மகிழ்ச்சியில்லை!



அளவற்ற மகிழ்ச்சியைக் குறிப்பிட “மட்டற்ற மகிழ்ச்சி“ என்றே இன்றும் நாம் வழங்கிவருகிறோம். மட்டு என்றால் எல்லை என்றும் கள் என்றும் பொருள் உண்டு.
சங்ககாலத்தில் உணவின் ஒரு கூறாக கள் இருந்தது. கள் இன்றி மகிழ்ச்சி இல்லை என்று சங்ககால மக்கள் வாழ்ந்தனர்.

புறநானூற்றுப் பாடல் ஒன்றைக் காண்போம்..


போர்க்களத்துக்குப் புறப்படும் வீரனைப் பார்த்துநேற்று நீ கொன்றவனுடைய தம்பி இன்று உன்னைக் கொல்வதற்காகப் பெரும் சினம் (கோபம்) கொண்டு உன்னைத் தேடித் திரிகிறான் என அறிவுறுத்துவதாக இப்பாடல் அமைகிறது.

தோல்தா தோல்தா என்றி தோலொடு
துறுகல் மறையினும் உய்குவை போலாய்
நெருநல் எல்லை நீ எறிந்தோன் தம்பி
அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்
பேரூர் அட்ட கள்ளிற்கு
ஓர்இற்கு ஒரில் தேருமால் நின்னே
புறநானூறு -300
பாடியவர் -அரிசில் கிழார்

கேடயத்தைக் கொண்டு வா! கேடயத்தைக் கொண்டு வா! என்று ஆரவாரம் செய்துகொண்டிருக்கிறாயேகேடயம் இருந்தால் மட்டும் நீ பிழைத்துவிடுவாயோ…?

நேற்றைய போரிலே நீ கொன்றாயே அவனுடைய தம்பி சிவந்த கண்களுடன் பெரிய ஊரிலே காய்ச்சிய கள் ஒரு வீட்டிலே இருப்பதை அறிந்த விருப்பமுடையவன் அங்கு சென்று கள் இருக்கும் கலயங்களைத் தேடுவது போன்ற வெறியோடு உன்னை வீடுவீடாகத் தேடியலைகிறான்

அதனால் போர்க்களம் செல்ல எண்ணாமல் தப்பிப் பிழைத்துக்கொள்வாயாக என அறிவுறுத்துவதாக இப்பாடல் அமைகிறது.


பாடலின் வழியே..

சங்ககால மக்களின் போர் சார்ந்த வாழ்வியலை அறியமுடிகிறது.
கள் மீது விருப்பம் கொண்டவன் கள் உள்ள கலயங்களை வெறியோடு தேடுவது போல தன் எதிரியுடன் போரிட விரும்பினான் என்ற உவமை நயமிக்கதாக உள்ளது.

அன்றும் இன்றும்

அன்றுபெரிய ஊரிலே காய்ச்சிய கள் ஒரு வீட்டிலே இருப்பதை அறிந்த வீரனொருவன் அதன் மீதுகொண்ட விருப்பத்தால் அங்கு சென்று கள் இருக்கும் கலயங்களைத் வெறியோடு தேடினான்.
இன்று –

குடிமக்கள் இவ்வாறு கள் இருக்கும் இடத்தைத் தேடி அழையக்கூடாது என்று அவர்களுக்கு அந்தத் துன்பத்தைத் தரக்கூடாது என்று தமிழக அரசு சிந்தித்து தெருவெங்கும் அரசு மதுபானக் கடைகளைத் திறந்துவிட்டது. 

குடிமக்களும் மட்டோடு மகிழ்ச்சியோடு உள்ளனர் அரசும் மட்டின்றி மகிழ்ச்சி இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறது.


4 கருத்துகள்:

  1. நான்கு வழிச்சாலையைக் கடந்து குடித்து விட்டு வரும் கணவன்மார்கள் அடி பட்டு செத்து விடக் கூடாது என்பதற்காக சொந்த ஊரிலும் டாஸ்மாக் கடையை திறக்கச் சொல்லும் புண்ணியவதிகள் வாழும் காலத்தில் நாமும் வாழ்வது பெரும் பேறு!
    த ம 8

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான பாடல்.

    டாஸ்மாக் - இல்லா ஊர் வேண்டும் என்று கேட்கும் காலம் வந்துவிட்டது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி .

      நீக்கு