வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

நூல்களைக் கடந்து சிந்திப்போம்…



ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் என்பது நம் முன்னோர் வாக்கு.
     
     சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
     வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.  (645)  
     
      என்பார் வள்ளுவப்  பெருந்தகை

எழுத்து, சொல், தொடர் என நாம் வடிவமைத்துக்கொண்ட மொழியானது, நாம் தகவல் தொடர்பு செய்துகொள்ளவும், நம் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லவும் துணைநிற்கிறது. ஓலைச்சுவடி, கல்வெட்டு, செப்புப் பட்டையங்கள் என்று பல வடிவங்களாக நாம் அறிவுச் செல்வங்களைக் காலமாகவே சேமித்து வைத்திருக்கிறோம்.

நாம் எவ்வளவு அறிவுச் செல்வங்களை சேமித்து வைத்திருக்கிறோம்? என்பது எவ்வளவு மதிப்புமிக்கதோ அதுபோலவே நாம் அதனை எந்த அளவுக்குப் படிக்கிறோம், புரிந்துகொள்கிறோம் வாழ்க்கையில் பின்பற்றுகிறோம் என்பதும் நோக்கத்தக்கது.

நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு என்பார் ஔவையார்.

நூல்கள் நம்மை அடுத்த படிநிலைக்கு உயர்த்தின என்பது உண்மைதான் என்றாலும். எழுத்துக்களில் மட்டும் அறிவு என்பது இல்லை. நம் வாழ்நாளோ மிகவும் குறைவு. இந்த விரிந்த உலகமே பல்கலைக்கழகம் அதில் கற்பதற்கு நிறையவே உள்ளது. நூல்களையும் கடந்து சிந்திப்பவர்களின் வார்தைகள் நூல்களைவிட மதிப்புமிக்கன என்பதை நாம் உணரவேண்டும்.

இன்னொருவர் செய்யும் தவறுகளில் இருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்வோம்!
எல்லாத் தவறுகளையும் நாமே செய்வதற்கு 
நமக்கு வாழ்நாள் போதாது!

என்றொரு பொன்மொழி உண்டு.

ஒரு கதை,

ஒரு துறவி தமது கடமைகளை முடித்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தார்.

தலைமை குரு அவரை அழைப்பதாகத் தகவல் வந்தது.
எழுந்து உள்ளே போனார். உள்ளே தலைமைக் குரு குளிரால் நடுங்கியபடி அமர்ந்திருந்தார். எதிரே ஒரு பாத்திரத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.

“உட்கார்!“ என்றார் வயதான குரு.
இவரும் அமர்ந்தார்.

“எனக்கு முதுமை வந்துவிட்டது. உடலில் தள்ளாமை ஏற்பட்டுவிட்டது. என்னுடைய சீடர்களிலேயே நீதான் முதன்மையானவன். ஆகவே நீதான் தலைமைப் பொறுப்பு ஏற்கவேண்டும் என்றார் தலைமை குரு.

துறவி அமைதியாகத் தலையாட்டினார். வயதான குரு தமது நடுங்கும் கைகளால் ஒரு புத்தகக் கட்டை எடுத்து அவரிடம் நீட்டினார்.

“இந்தா. இதைப் பெற்றுக்கொள். இது அரிய பொக்கிசம்.உனக்கு இது நல்வழி காட்டும்!“ என்றார் அந்த வயோதிக குரு.

“வேண்டாம், குருவே“ என்றார் துறவி.
தலைமை குரு மீண்டும் வற்புறுத்தினார்.

எனக்கு வேண்டியதையெல்லாம் தாங்கள் எப்போதோ கற்பித்துவிட்டீர்கள். இது எதற்கு?“என்று மீண்டும் மறுத்தார் அந்த இளம் துறவி.

“அப்படிச் சொல்லாதே. இது வேதநூல். ஏழுதலைமுறைகளாக இந்த மடத்தில் காக்கப்பட்டு வருகிறது.“

துறவி அப்போதும் அவர் சொன்னதை ஏற்கவில்லை.
தலைமை குரு கேட்டார்.

“சரி, பசி வந்தால் உணவுக்கு என்ன செய்வாய்?“
“பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பிச்சைக்குப் புறப்படுவேன்.“

“பிச்சையிடும்போது என்னவேண்டும் என்று கேட்பாய்?“
“ஏதும் கேட்கமாட்டேன். அவர்கள் இட்டதைப் பெற்றுக்கொள்வேன்.“

“அப்படியே உன் பாத்திரத்தில் இடப்பட்ட பிச்சையாக இதை வைத்துக்கொள்!“ என்று கூறிப் புத்தகக் கட்டை நீட்டினார் தலைமை குரு.

மவுனமாக அதைப் பெற்றுக்கொண்ட துறவி அதை அப்படியே எரியும் நெருப்பில் போட்டுவிட்டார்.

“என்ன காரியம் செய்துவிட்டாய் நீ? அடப்பாவி?“ என்று அலறினார் தலைமை குரு.

“பிச்சையிட்டவர்கள் யாருமே தாங்கள் போட்ட பிச்சை என்ன ஆனது என்று பார்ப்பதில்லை குருவே,” என்றார் இளம் துறவி.
தொடர்ந்து…

“ஞானம் என்பதே நெருப்புதானே. நெருப்பு நெருப்புடன்  சேர்ந்துவிட்டது. வேதம் என்பது வெறும் எழுத்துக்கள் இவற்றிலா இருக்கிறது ஞானம்? என்றார்.


தொடர்புடைய கதைகள்





15 கருத்துகள்:

  1. உதாரணக் கதை வெகு அருமை முனைவரையா... நூல்களை நிறையப் படிப்பதில் பெருமை ஏதும் கிடையாது. அவற்றினால் நாம் சற்றேனும் மேம்பட்டோமானால் அதுவே நமக்கும் புத்தகத்திற்கும் பெருமை என்பதை அழகுற உரைத்தீர்க்ள் உங்கள் நற்றமிழால்.

    பதிலளிநீக்கு
  2. குட்டிக்கதை அருமை! புத்தகங்கள் நம்மை செப்பனிடத்தும் நற்கலங்கள்! அதை அருமையாக சொன்னமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள திறனாய்வு
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. கற்க கசடற கற்பவை கற்ற பின்

    நிற்க அதற்கு தக என்பதை அழகாக சொல்லியிருக்கிறிர்கள் . நல்ல பதிவு . நிறைய எழுதுங்கள் -Ganesan.

    பதிலளிநீக்கு
  5. கற்க கசடற கற்பவை கற்ற பின்

    நிற்க அதற்கு தக என்பதை அழகாக சொல்லியிருக்கிறிர்கள் . நல்ல பதிவு . நிறைய எழுதுங்கள் - Ganesan.

    பதிலளிநீக்கு
  6. துறவியின் கதை நல்ல கருத்தாழம் மிக்கது! அருமை! முனைவரே!

    பதிலளிநீக்கு
  7. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி புலவரே

    பதிலளிநீக்கு