சிவகங்கைக்கு அருகில்ஒரு கிராமம். ஒரு நாள் விடியற்காலை நேரம். ஒரு குதிரையில்
அவர் வந்துகொண்டிருக்கிறார். முதல்நாள் எதிரிகளுடன் போராடி அவர்கள் கையில் சிக்காமல்
அவர் தப்பி வந்திருக்கிறார். யார் அவர்? மருதுபாண்டியர்.
பரோபகாரச் சிந்தை – சிவபக்தி- புலவர்களை ஆதரிக்கும் இயல்பு – குடிமக்களைத் தாய்போல்
காப்பாற்றும் தகைமை –இப்படியெல்லாம் இருந்தும்கூட கடைசிகாலத்தில் அவருக்கும் எதிரிகள்.
பலமுறை பகைவர்கள் அவரைப் பிடிக்க முயற்சி செய்தும் முடியவில்லை. ஒருமுறை மருதுபாண்டியர்,
திருக்கோட்டியூர் பெருமாள் கோயிலுக்கு எதிரிலுள்ள ஒரு மண்டபத்தில் தங்கியிருந்தார்.
அது எதிரிகளுக்குத் தெரிந்துவிட்டது. ஊர் எல்லைக்குத் தன்னைப் பிடிப்பதற்குப் பகைவர்கள்
வந்துவிட்டாரகள். என்ற செய்தி அவருக்கு எட்டியது.
உடனே மருதுபாண்டியர் ஒரு குதிரைக்காரனைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு அவசர அவசரமாகப்
புறப்பட்டார். அப்போது அவரது வலது கையில் சிலந்தி உண்டாகி வேதனை கொடுத்தது. அதில் ஒரு
கட்டுப்போட்டுக்கொண்டு அங்கிருந்து அவர் புறப்பட்டுவிட்டார். அவ்விதம் புறப்பட்டவர்
தான் மறுநாள் காலையில் அந்தக் கிராமத்துக்கு வந்துசேர்ந்தார்.
ஒரு கூரை வீடு.. அதன் எதிரில் வயது முதிர்ந்து மூதாட்டி ஒருவர் கோலம் போட்டுக்கொண்டிருந்தார்.
அங்கே போய்க் குதிரை நின்றது. அந்த மூதாட்டி நிமிர்ந்து பார்த்தார். மருதுபாண்டியரின்
கம்பீரமான தோற்றம் அம்மூதாட்டியின் மனதில் அன்பை ஏற்படுத்தியது.
எனவே அவர், “யாரப்பா நீ… என்ன வேண்டும் உனக்கு?“ என்று கேட்டாள். “அம்மா எனக்குப் பசியாக இருக்கிறது…. தாகமாகவும்
இருக்கிறது ஏதாவது இருந்தால் கொடுங்கள்!“ என்றார் மருதுபாண்டியர்.
“ராத்திரி தண்ணீரில் போட்டு வைத்த பழையசோறு உள்ளது… வா… போடுகிறேன்..“ என்று சொல்லிக்கொண்டே
மூதாட்டி, மருதுபாண்டியரைத் தன் குடிசைக்குள் அழைத்துச் சென்றாள். சொன்னதுபோலவு அன்பாக
உபசரித்தார்.
“அம்மா இரவுமுழுவதும் நான் தூங்கவில்லை… இங்கே மறைவாக ஓர் இடம் கிடைத்தால்… குதிரையைக்
கட்டிப்போட்டுவிட்டு தூங்கலாம் என்று பார்க்கிறேன்“ என்றார்.
“வீட்டுக்குப் பின்னால் கொட்டகை உள்ளது. அங்கே குதிரையைக் கட்டிப்போட்டுவிட்டுப்
படுத்துக்கொள்… யாரும் உன்னைத் தொந்தரவு செய்யமாட்டார்கள். குதிரைக்கம் தீனிபோடுகிறேன்..!
என்றார் மூதாட்டி.
மருதுபாண்டியருக்கு ராஜபோஜனத்தைவிட அந்தப் பழையசோறும், பண்பாடும் மிகவும் உயர்ந்ததாகத்
தெரிந்தது. அந்த மூதாட்டிகொடுத்த ஓலைப்பாயை வாங்கிக்கொண்டு பின்பக்கதில் குதிரையைக்
கட்டினார். அயர்ந்து தூங்கினார். கண் விழித்தபோது சூரியன் உச்சத்தில் இருந்தான்.
அந்தக் கூரைவீட்டில் சாப்பிட்ட சாப்பாடும் ,தூங்கின தூக்கமும் மருதுபாண்டியருக்கு
உடலிலும் மனதிலும் உற்சாகத்தைக் கொடுத்தது. நன்றியுணர்வுடன் மூதாட்டியைப் பார்த்து “இவர்கள்
காட்டிய அன்புக்கு உலகத்தையே கொடுத்தாலும் ஈடாகாது“ என நினைத்துக்கொண்டார். “அம்மா..
உங்கள் வீட்டில் ஒரு எழுத்தாணி இருந்தால் கொண்டு வாருங்கள்“ என்று கேட்டார்.
“என் பிள்ளைகள் ஒரு விசேசத்துக்கு வெளியூர் சென்றுள்ளனர். அதெல்லாம் அவர்கள் எங்கு
வைத்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது“ என்றார் மூதாட்டி.
“சரி.. பரவாயில்லை“ என்று கூறிய மருதுபாண்டியர், குதிரைக்காரனைக் கூப்பிட்டு அந்த வீட்டுக் கூரையிலிருந்து ஒரு பனை ஓலையும்,
பக்கத்து வேலியிலிருந்து ஒரு முள்ளையும் எடுத்துக்கொண்டு
வா! என்றார்.
குதிரைக்காரன் அவர் சொன்னதுபோல செய்தான்.“இந்தக் கிராமத்தை இந்த மூதாட்டிக்கே கொடுக்கிறேன்.
இனி இந்தக் கிராமம் முழுவதும் மூதாட்டிக்கு சொந்தமானது.“ என்று எழுதிக் கையெழுத்திட்டார்.
முள்ளால் எழுதிய அந்த தர்ம சாசனத்தை மருதுபாண்டியர் மூதாட்டியிடம் கொடுத்தார்.
பிறகு, “அம்மா! சிவகங்கை சமஸ்தான அதிகாரிகளிடம் இதை நீங்கள் கொண்டுபோய்க் கொடுத்தால்
உங்களுக்கு ஏதாவது அனுகூலம் கிடைக்கும்!“ என்று சொல்லிவிட்டுக் குதிரைமீது ஏறிச் சென்றுவிட்டார்.
“வெளியூர் சென்ற பிள்ளைகள் திரும்பிவந்ததும் இதை எடுத்துக்கொண்போய் சமஸ்தானத்தில்
காட்டலாம்“ என்று மூதாட்டி நினைத்தார். ஆனால் அதற்குள், பகைவர்கள் பிடித்து சிறையில்
அடைத்துவிட்டார்கள். நீண்டகாலம் கழித்து அவருடைய கடைசிக் காலத்தில் “உங்களுடைய கடைசிவிருப்பம்
என்ன என்று சொல்லுங்கள்!“ என்று கேட்டார்கள்.
அப்போது மருதுபாண்டியர் என்னசொன்னார் தெரியுமா?
“நான் யார்யாருக்கு எந்தெந்த கிராமத்தை எழுதிக்கொடுத்திருக்கிறேனா, அதெல்லாம் அவர்களுக்குச்
சொந்தமாக்கவேண்டும். இதுதான் என் பிரார்த்தனை. இதைத்தவிர வேறு விருப்பம் எதுவும் இல்லை“
என்று தெரிவித்தார்.
இதைக் கேட்டதும் அவரது விரோதிகளுக்கே ஒருமாதிரியாகிவிட்டது. அவரது நன்றியுணர்வுக்கு
மரியாதையளித்து அவரது இறுதி விருப்பத்தை நிறைவேற்றினர்.
“மருதுபாண்டியர் கொடுத்த பொருட்களையெல்லாம் உரியவர்களுக்கு வழங்கப்படுகிறது!“ என்று
கேள்விப்பட்ட அந்த மூதாட்டி தன்னிடமிருந்த ஓலையைக் கொடுத்தனுப்பிப்பார்த்தாள். அந்தக்
கிராமம் அவளுக்குக் கிடைத்தது. அப்படிக் கிடைத்த கிராமம் தான் பிறகு ” பழஞ்சோற்றுக்
குருநாதனேந்தல்“ என்ற பெயரைப் பெற்றது.
தன்வீட்டில் பழைய சோறு சாப்பிட்டது மருதுபாண்டியர் என்ற விசயமே அந்த மூதாட்டிக்கு
அதன்பிறகுதான் தெரியவந்ததாம். கையில் கட்டுப்போட்டிருந்த நிலையிலும் கூரையிலிருந்து
எடுத்த ஓலையில் முள்ளினாள் முகமலர்ச்சியோடு மருதுபாண்டியர் எழுதிய காட்சி மூதாட்டியின் நினைவில் நிழலாடிது.
அன்று இதே நாளில்....