பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

புத்தகசாலை - பாரதிதாசன்.

இன்றைய இணையம் உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது. மின்னூல்கள் எளிதில் கிடைக்கின்றன. இருந்தாலும் புத்தகங்களைக் கையில் வைத்துப் படிப்பது என்பது குழந்தையைக் கையில் வைத்துக்கொஞ்சுவதுபோல சுகமான அனுபவமாகும். கவிஞர் பாரதிதாசன் அவர்களின் புத்தகசாலை என்ற கவிதை, நூல்களின் தேவையையும், நூலகங்களின் பயன்பாட்டையும் தம் கவிதையில் அழகாக எடுத்துரைத்துள்ளார்.


தனித்தமைந்த வீட்டிற்புத் தகமும் நானும்
சையோகம் புரிந்ததொரு வேளை தன்னில்,
இனித்தபுவி இயற்கையெழில் எல்லாம் கண்டேன்;
இசைகேட்டேன்! மணம்மோந்தேன்! சுவைகள் உண்டேன்!
மனித்தரிலே மிக்குயர்ந்த கவிஞர் நெஞ்சின்
மாகாசோதி யிற்கலந்த தெனது நெஞ்சும்!
சனித்ததங்கே புத்துணர்வு! புத்த கங்கள்
தருமுதவி பெரிது! மிகப்பெரிது கண்டீர்!

மனிதரெலாம் அன்புநெறி காண்ப தற்கும்
மனோபாவம் வானைப்போல் விரிவ டைந்து
தனிமனிதத் தத்துவமாம் இருளைப் போக்கிச்
சகமக்கள் ஒன்றென்ப துணர்வ தற்கும்,
இனிதினிதாய் எழுந்தஉயர் எண்ண மெல்லாம்
இலகுவது புலவர்தரு சுவடிச் சாலை;
புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்
புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்.

தமிழர்க்குத் தமிழ்மொழியிற் சுவடிச் சாலை
சர்வகலா சாலையைப்போல் எங்கும் வேண்டும்.
தமிழிலிலாப் பிறமொழிநூல் அனைத்தும் நல்ல
தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்,
அமுதம்போல் செந்தமிழிற் கவிதை நூற்கள்,
அழகியவாம் உரைநடையில் அமைந்த நூற்கள்,
சுமைசுமையாய்ச் சேகரித்துப் பல்கலை சேர்
துறைதுறையாய்ப் பிரித்தடுக்கி வைத்தல் வேண்டும்.

நாலைந்து வீதிகளுக் கொன்று வீதம்
நல்லதுவாய் வசதியதாய் இல்லம் வேண்டும்.
நூலெல்லாம் முறையாக ஆங்க மைத்து
நொடிக்குநொடி ஆசிரியர் உதவு கின்ற
கோலமுறும் செய்தித்தாள் அனைத்தும் ஆங்கே
குவிந்திருக்க வகைசெய்து தருதல் வேண்டும்.
மூலையிலோர் சிறுநூலும் புதுநூ லாயின்
முடிதனிலே சுமந்துவந்து தருதல் வேண்டும்.

வாசிக்க வருபவரின் வருகை ஏற்றும்
மரியாதை காட்டிஅவர்க் கிருக்கை தந்தும்,
ஆசித்த நூல்தந்தும் புதிய நூல்கள்
அழைத்திருந்தால் அதையுரைத்தும், நாளும் நூலை
நேசித்து வருவோர்கள் பெருகும் வண்ணம்
நினைப்பாலும் வாக்காலும் தேகத் தாலும்
மாசற்ற தொண்டிழைப்பீர்! சமுதா யச்சீர்
மறுமலர்ச்சி கண்டதென முழக்கஞ் செய்வீர்!





                                                                              கவிஞர் பாரதிதாசன்.


8 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் முனைவரே... நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
  2. நாலைந்து வீதிகளுக்கொன்றாகவும் அதில் நல்லிருக்கைகளுடனுமாய் ஒரு நூலகம் எப்படி அமைந்திருக்கவேண்டுமென்றும் அதில் எத்தகைய தரமான நூற்கள் இருக்கவேண்டுமென்றும் பாவேந்தர் பாடியப் பாடலை இங்குப் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி தங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  3. தமிழிலிலாப் பிறமொழிநூல் அனைத்தும் நல்ல
    தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்,-- :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நிரஞ்சன் தம்பி.

      நீக்கு
  4. மூலையிலோர் சிறுநூலும் புதுநூ லாயின்
    முடிதனிலே சுமந்துவந்து தருதல் வேண்டும்.

    அருமை
    இங்கு கருத்துள்ள நூல்களுக்கு கிடைக்கும் மதிப்பை விட, மலிந்த தரமற்ற நூல்கள் பெறும் மதிப்பு மனத்தினை வருத்துகிறது.

    மந்தம் தனிமை வாட்டம் போக்கும் - புத்தகமே
    எந்திர உலகின் இயக்கும் ஆற்றல் - புத்தகமே
    அந்தம் இல்லா அறிவைத் தருவது - புத்தகமே
    சிந்தைத் தெளிய தெரிவோம் நல்ல புத்தகமே!

    பதிலளிநீக்கு
  5. உலகப் புத்தக தின நல்வாழ்த்துகள் ஐயா. நூல்களை வாசிப்போம் நம்மை நாமே நேசிப்போம். நன்றி பா.

    பதிலளிநீக்கு