பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

செவ்வாய், 30 ஜூலை, 2013

மூச்சுவிட மறந்துவிட்டார்…



இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு, யாராவது மூச்சுவிட மறப்பாங்களா? என்ற கேள்வி மனதில் தோன்றலாம். ஒருவர் இறந்துவிட்டார் என்பதை இப்படியும் சொல்வதுண்டு. இப்படிச் சொல்வதால் முதலில் கேட்பவருக்கு சிரிப்புதான் வரும். பிறகுதான் உண்மை சுடும்.

கருவுற்ற நிலையிலிருந்து இன்று வரைநாம் எத்தனை தோற்றங்களை இழந்து வந்திருக்கிறோம்..
நாம் நினைத்தாலும் மீண்டும் குழந்தைப் பருவத்துக்குச் செல்லமுடியுமா..?
சரி அதற்காக என்றாவது அழுதிருக்கிறோமா?
நாளும் நாளும் சாகும் நாம் என்றாவது நமக்காக அழுதிருக்கிறோமா?என்று நம்மைச் சிந்திக்கச் சொல்கிறது இந்தப்பாடல்..


பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் 
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும் 

மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி 
நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ

குண்டலகேசி -9

உறங்குவது போன்றது இறப்பு
உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு என்கிறார் வள்ளுவர்..
இதனை,
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
என்ற குறள் விளக்கும்.


பிறப்பும், இறப்பும் இயல்பானதுதான். ஆனால் பிறப்பைக் கொண்டாடும் நாம் இறப்பைக் கண்டு அஞ்சுகிறோம். ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைச் சொல்வதற்கும், கேட்பதற்கும் ஒரு பக்குவம் வேண்டும். சொல்லத்தெரியாதவர் சொன்னால் கேட்பவர் இதயம் பலவீனமாக இருந்தால் அவர் இறந்துவிடுவார்.

ஒரு சின்னக் கதை,

பணி நிறைவுபெற்ற குமார் என்பவர், தம் பணிநிறைவில் கிடைத்த பத்துஇலட்சம் ரூபாய் பணப்பெட்டியோடு பேருந்தில் சென்றார். அப்போது அருகே அமர்ந்த ஒருவர் திட்டமிட்டு அவரது பெட்டியை மாற்றிவிட்டார். வீட்டுக்குச் சென்றபிறகு, பெட்டியைப் பார்த்தால் பெட்டியில் பணம் இல்லை. அதிர்ச்சியில் குமாருக்கு மயக்கமே வந்துவிட்டது. பேச்சுமூச்சே இல்லாமல் இருந்த அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவரோ, இவர் இதயம் மிகவும் பலவீனமாக உள்ளது. அதிர்ச்சியளிக்கும் செய்திகளைச் சொன்னால் இவரால் தாங்கமுடியாது என்றார். குமாரது உறவினர்களோ மருத்துவரிடம்,
ஐயா காவல்துறையில் புகாரளித்திருந்தோம், அந்தத் திருடன் வேறொரு திருட்டில் மாட்டிக்கொண்டான். அப்போது இந்தப் பெட்டியையும் காவல்துறையினர் மீட்டுக்கொடுத்துவிட்டார்கள். பணம் முழுவதும் கிடைத்துவிட்டது. அதனால் குமாரிடம் இந்த செய்தியைப் பக்குவமாக நீங்களே எடுத்துச்சொல்லுங்கள் என்றனர்.

மருத்துவர்-  குமாரிடம் மெதுவாக ஆரம்பித்தார்,
குமார் தொலைந்த பெட்டியில் எவ்வளவு பணம் இருந்தது?
குமார் – பத்து இலட்சம் ரூபாய் இருந்தது. எல்லாம் மொத்தமா போச்சு..
மருத்துவர் – சரி இப்போ தொலைந்த பெட்டியை காவல்துறையினர் மீட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் ஐந்து இலட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்தது என்றால் நீங்க என்ன செய்வீங்க?
குமார் – ஐந்து இலட்சம் ரூபாய் கிடைத்தால் எனது கடனையெல்லாம் அடைத்துவிடுவேன். என் மகளுக்கு நகை வாங்கிவிடுவேன்.
மருத்துவர் – சரி தொலைந்த பணம் மொத்தமும் அப்படியே  கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
குமார் – அப்படி மட்டும் மொத்த பணமும் கிடைத்தால் அதில் பாதி ஐந்து இலட்சம் ரூபாயை உங்களுக்குத் தந்துவிடுவேன் என்றாராம்.

இதைச் சற்றும் எதிர்பாராத மருத்துவர் அதிர்ச்சியில் இறந்துவிட்டாராம். இந்த மருத்துவருக்கு அந்த அளவுக்கு இதயம் பலவீனமாக இருந்திருக்கிறது. என்று ஒரு கதை உண்டு.

அதனால் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை எப்போதும் பக்குவமாக சொல்வது தமிழர் மரபு. முன்பெல்லாம் ஒருவர் இறந்துவிட்டார் என்று தந்தி கொடுக்கவேண்டுமென்றால். இறந்துவிட்டார் என்று சொல்லாமல். கவலைக்கிடமாக இருக்கிறார் உடனே வாருங்கள் என்று தான் சொல்வது வழக்கம்.

மரணம் என்றவுடன் நம் மனதில் தோன்றும் அச்சம், ஆற்றாமை, நடுக்கம் ஆகிய உணர்வுகளைக் கருத்தில் கொண்டு நாம் மரணத்தை எவ்வாறெல்லாம் அழைக்கிறோம் என்று காண்போம்,


இறந்தார்
காலமானார்
மறைந்தார்
மரணமடைந்தார்.
அமரரானார்
தெய்வமானார்
சாமிகிட்ட போய்ட்டார்
இறைவனடி சேர்ந்தார்
இயற்கை எய்தினார்
மாய்ந்தார்
கைலாயப் பதவியடைந்தார்
கைலாசப் பதவியடைந்தார்
சிவலோகப் பதவியடைந்தார்
வைகுந்தப் பதவியடைந்தார்
செத்தார்
மாண்டார்
மண்டையைப் போட்டுட்டார்
ஊருக்குப் போயிட்டார்
மேலூருக்குப் போயிட்டார்
டிக்கெட் வாங்கிட்டார்
பெரிய காரியமாயிடுச்சு
போய்ச் சேர்ந்திட்டார்
நம்மைவிட்டு போயிட்டார்
நீத்தார்
மர்கயா
மௌத்தாயிட்டார்
கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்

 இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்

நம்மைவிட்டு நீங்கிவிட்டார்

சமாதியானார்


அன்பு நண்பர்களே எனக்குத் தெரிந்தவரை இறப்பை உணர்த்த நாம் பயன்படுத்தும் பல சொற்களைப் பதிவுசெய்திருக்கிறேன். இதற்கு இணையான தாங்கள் அறிந்த சொற்களையும் மறுமொழியில் சொல்வீர்கள் என நம்புகிறேன்.

11 கருத்துகள்:

  1. மரணம் குறித்த அருமையான பதிவு! விளக்க்ங்கள் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்

    இறப்பு பற்றிய விளக்கம் மிக அருமையாக உள்ளது அதற்கான சிறு குட்டிக் கதையும் நன்றாக இருந்தது ஒருவர் இறந்து விட்டார் என்று எப்படி மற்றவர் இடம் சொல்ல வேண்டும் என்ற பண்புகளையும் அழகாக சொல்லியமைக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. ஒரு சின்னக் கதை மூலம் நல்ல விளக்கம்... நன்றி...

    பதிலளிநீக்கு

  4. குட்டிக்கதை அருமை..
    //மண்டையைப் போட்டுட்டார்// ஹா...ஹா...

    புட்டுகிட்டார்.. இதையும் சேத்துக்குங்க.. :-))

    பதிலளிநீக்கு
  5. மரணம் என்பது நமக்கு அருகில் வந்தால் தான் அதன் வலியை உணர முடிகிறது அப்பா..
    ஜனனம் முதல் மரணம் வரை தான் வாழ்க்கை ஆனால் அதற்கு இடைப்பட்ட காலத்தில் எத்தனை வன்மம் தலைகனம் கோபம் பிரிவு சண்டை எல்லா ஆட்டங்களும் ஆடிவிட்டு மரணத்தை தழுவுகிறோம் பா..

    பதிலளிநீக்கு