வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 31 ஜூலை, 2013

இன்று செய்குத்தம்பி பாவலர் பிறந்தநாள்

  • இன்று சதாவதானி செய்குத்தம்பி பாவலர் அவர்களின் பிறந்தநாள் ஆகும். இவர் ஜூலை 311874 - பெப்ரவரி 131950) சீறாப்புராணத்திற்குச் சிறந்ததோர் உரையெழுதியவராவர்.
  • ஒரே சமயத்தில் நூறு வகையான செயல்கள் செய்யும் சதாவதானம் என்னு கலையில் சிறந்து விளங்கியவர்.
  • தமிழ் இலக்கண இலக்கியங்களில் சிறந்த ஞானம் பெற்ற செய்குத்தம்பி பாவலர் அவர்கள் 1907-ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதிசென்னையில் தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் சதாவதான நிகழ்ச்சிகள் செய்து பாராட்டுப் பெற்று சதாவதானி செய்குத்தம்பி பாவலர் என போற்றப் பெற்றவர். 
  •  சிறந்த தமிழறிஞராகிய பாவலர் அவர்கள் நபிகள் நாயக மான்மிய மஞ்சரி, திருக்கோப்பற்றுப் பதிஞ்சம், பத்தந்தாதி, திருமதினந்தந்தாதி, கோப்பந்துக் கலம்பகம், கோப்பந்துப் பிள்ளைத் தமிழ், கவ்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை, நீதி வெண்பா, ஷம்சுத்தாசின் சேவை போன்ற கவிதை நூல்களையும் எழுதினார்.
  • பாவலரின் அரிய தொண்டினை அரசும், மக்களும் மறக்க இயலாது. பாவலர் மற்றும் கவிமணி விழாக்களை அரசு ஆண்டுதோறும் நடத்துகிறது. பாவலர் பிறந்து வாழ்ந்த தெரு 'பாவலர் தெரு' என்றே அழைக்கப்படுகிறது. இடலாக்குடி அரசுமேல்நிலைப் பள்ளிக்கு ' சதாவதானி பாவலர் அரசுமேல்நிலைப்பள்ளி' என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது. அங்கு பாவலர் நினைவு மண்டபமும் எழுப்பப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு அரசு செய்குத்தம்பி பாவலர் நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் இடலாக்குடியில் சதாவதானி செய்குத்தம்பி பாவலர் நினைவு மண்டபம் அமைத்துள்ளது.
  • இந்திய அரசால் 31 திசம்பர் 2008 அன்று இவரது நினைவாகச் சிறப்புத் தபால் தலை வெளியிடப்பட்டது.

செவ்வாய், 30 ஜூலை, 2013

மூச்சுவிட மறந்துவிட்டார்…



இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு, யாராவது மூச்சுவிட மறப்பாங்களா? என்ற கேள்வி மனதில் தோன்றலாம். ஒருவர் இறந்துவிட்டார் என்பதை இப்படியும் சொல்வதுண்டு. இப்படிச் சொல்வதால் முதலில் கேட்பவருக்கு சிரிப்புதான் வரும். பிறகுதான் உண்மை சுடும்.

கருவுற்ற நிலையிலிருந்து இன்று வரைநாம் எத்தனை தோற்றங்களை இழந்து வந்திருக்கிறோம்..
நாம் நினைத்தாலும் மீண்டும் குழந்தைப் பருவத்துக்குச் செல்லமுடியுமா..?
சரி அதற்காக என்றாவது அழுதிருக்கிறோமா?
நாளும் நாளும் சாகும் நாம் என்றாவது நமக்காக அழுதிருக்கிறோமா?என்று நம்மைச் சிந்திக்கச் சொல்கிறது இந்தப்பாடல்..


பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் 
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும் 

மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி 
நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ

குண்டலகேசி -9

உறங்குவது போன்றது இறப்பு
உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு என்கிறார் வள்ளுவர்..
இதனை,
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
என்ற குறள் விளக்கும்.


பிறப்பும், இறப்பும் இயல்பானதுதான். ஆனால் பிறப்பைக் கொண்டாடும் நாம் இறப்பைக் கண்டு அஞ்சுகிறோம். ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைச் சொல்வதற்கும், கேட்பதற்கும் ஒரு பக்குவம் வேண்டும். சொல்லத்தெரியாதவர் சொன்னால் கேட்பவர் இதயம் பலவீனமாக இருந்தால் அவர் இறந்துவிடுவார்.

ஒரு சின்னக் கதை,

பணி நிறைவுபெற்ற குமார் என்பவர், தம் பணிநிறைவில் கிடைத்த பத்துஇலட்சம் ரூபாய் பணப்பெட்டியோடு பேருந்தில் சென்றார். அப்போது அருகே அமர்ந்த ஒருவர் திட்டமிட்டு அவரது பெட்டியை மாற்றிவிட்டார். வீட்டுக்குச் சென்றபிறகு, பெட்டியைப் பார்த்தால் பெட்டியில் பணம் இல்லை. அதிர்ச்சியில் குமாருக்கு மயக்கமே வந்துவிட்டது. பேச்சுமூச்சே இல்லாமல் இருந்த அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவரோ, இவர் இதயம் மிகவும் பலவீனமாக உள்ளது. அதிர்ச்சியளிக்கும் செய்திகளைச் சொன்னால் இவரால் தாங்கமுடியாது என்றார். குமாரது உறவினர்களோ மருத்துவரிடம்,
ஐயா காவல்துறையில் புகாரளித்திருந்தோம், அந்தத் திருடன் வேறொரு திருட்டில் மாட்டிக்கொண்டான். அப்போது இந்தப் பெட்டியையும் காவல்துறையினர் மீட்டுக்கொடுத்துவிட்டார்கள். பணம் முழுவதும் கிடைத்துவிட்டது. அதனால் குமாரிடம் இந்த செய்தியைப் பக்குவமாக நீங்களே எடுத்துச்சொல்லுங்கள் என்றனர்.

மருத்துவர்-  குமாரிடம் மெதுவாக ஆரம்பித்தார்,
குமார் தொலைந்த பெட்டியில் எவ்வளவு பணம் இருந்தது?
குமார் – பத்து இலட்சம் ரூபாய் இருந்தது. எல்லாம் மொத்தமா போச்சு..
மருத்துவர் – சரி இப்போ தொலைந்த பெட்டியை காவல்துறையினர் மீட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் ஐந்து இலட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்தது என்றால் நீங்க என்ன செய்வீங்க?
குமார் – ஐந்து இலட்சம் ரூபாய் கிடைத்தால் எனது கடனையெல்லாம் அடைத்துவிடுவேன். என் மகளுக்கு நகை வாங்கிவிடுவேன்.
மருத்துவர் – சரி தொலைந்த பணம் மொத்தமும் அப்படியே  கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
குமார் – அப்படி மட்டும் மொத்த பணமும் கிடைத்தால் அதில் பாதி ஐந்து இலட்சம் ரூபாயை உங்களுக்குத் தந்துவிடுவேன் என்றாராம்.

இதைச் சற்றும் எதிர்பாராத மருத்துவர் அதிர்ச்சியில் இறந்துவிட்டாராம். இந்த மருத்துவருக்கு அந்த அளவுக்கு இதயம் பலவீனமாக இருந்திருக்கிறது. என்று ஒரு கதை உண்டு.

அதனால் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை எப்போதும் பக்குவமாக சொல்வது தமிழர் மரபு. முன்பெல்லாம் ஒருவர் இறந்துவிட்டார் என்று தந்தி கொடுக்கவேண்டுமென்றால். இறந்துவிட்டார் என்று சொல்லாமல். கவலைக்கிடமாக இருக்கிறார் உடனே வாருங்கள் என்று தான் சொல்வது வழக்கம்.

மரணம் என்றவுடன் நம் மனதில் தோன்றும் அச்சம், ஆற்றாமை, நடுக்கம் ஆகிய உணர்வுகளைக் கருத்தில் கொண்டு நாம் மரணத்தை எவ்வாறெல்லாம் அழைக்கிறோம் என்று காண்போம்,


இறந்தார்
காலமானார்
மறைந்தார்
மரணமடைந்தார்.
அமரரானார்
தெய்வமானார்
சாமிகிட்ட போய்ட்டார்
இறைவனடி சேர்ந்தார்
இயற்கை எய்தினார்
மாய்ந்தார்
கைலாயப் பதவியடைந்தார்
கைலாசப் பதவியடைந்தார்
சிவலோகப் பதவியடைந்தார்
வைகுந்தப் பதவியடைந்தார்
செத்தார்
மாண்டார்
மண்டையைப் போட்டுட்டார்
ஊருக்குப் போயிட்டார்
மேலூருக்குப் போயிட்டார்
டிக்கெட் வாங்கிட்டார்
பெரிய காரியமாயிடுச்சு
போய்ச் சேர்ந்திட்டார்
நம்மைவிட்டு போயிட்டார்
நீத்தார்
மர்கயா
மௌத்தாயிட்டார்
கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்

 இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்

நம்மைவிட்டு நீங்கிவிட்டார்

சமாதியானார்


அன்பு நண்பர்களே எனக்குத் தெரிந்தவரை இறப்பை உணர்த்த நாம் பயன்படுத்தும் பல சொற்களைப் பதிவுசெய்திருக்கிறேன். இதற்கு இணையான தாங்கள் அறிந்த சொற்களையும் மறுமொழியில் சொல்வீர்கள் என நம்புகிறேன்.

மாணவர்கள் வரைந்த ஓவியங்கள்

1.நா. சண்முகப் பிரியா
கணினி அறிவியல் இரண்டாமாண்டு
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு
வி.நர்மதா
கணினி அறிவியல் இரண்டாமாண்டு
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு

 இர.புவனா
கணினி அறிவியல் இரண்டாமாண்டு
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு


திங்கள், 29 ஜூலை, 2013

தமிழ் உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்.

முன்னுரை

கருத்துக்களை எளிதில் சொல்வதற்கேற்ற எழுத்து வடிவமே உரைநடையாகும். எந்த இலக்கண மரபுகளுமின்றி பேசுவதுபோல எழுதுவது இந்நடையின் தனிச்சிறப்பாகும். படிப்பவர்கள் எளிதில் புரிந்துகொள்ள உரைநடை பெரிதும் உதவுகிறது. தமிழ் உரைநடையின் தோற்றம் வளர்ச்சி குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

இளங்கோவின் உரைநடை
சிலப்பதிகாரம் என்ற முத்தமிழ்க்காப்பியம் “உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுள்“ என்ற பெயர் பெறுகிறது. இதுவே பிற்கால உரைநடைக்கு முன்மாதிரியாக அமைந்தது.

நக்கீரர் உரைநடை
       உரைநூல் வரிசையில் முதலில் தோன்றியதாகக் கருதப்படுவது நக்கீரர் எழுதிய இறையனார் களவியல் உரையே ஆகும்.

தொல்காப்பிய உரைநடை
       தொல்காப்பியம் என்ற தமிழிலக்கண நூலுக்கு பல்வேறு உரைகள் வந்துள்ளன. அவற்றுள் தொல்காப்பியம் முழுவதுக்குமான உரை இளம்பூரனரின் உரையாகும். மேலும் தெய்வச்சிலையார், கல்லாடர், சேனாவரையர், நச்சினார்க்கினியர்  பேராசிரியர் போன்றோரும் தொல்காப்பியத்துக்கு உரை எழுதியுள்ளனர்.

நன்னூல் உரைநடை
       நன்னூல் என்ற இலக்கண நூலுக்கு ஆறுமுகநாவலரின் காண்டிகை உரை புகழ்பெற்றதாகும்.

இலக்கிய உரைநடைகள்
       பத்துப்பாட்டுக்கும், சீவகசிந்தாமணிக்கும் நச்சினார்க்கினியர் உரைஎழுதியுள்ளார். சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லாரின் உரை செல்வாக்குப் பெற்றதாகும். திருக்குறளுக்கு பரிமேலழகரின் உரை புகழ்பெற்றதாகும். திருக்குறளுக்கு நிறையபேர் உரையெழுதியிருந்தாலும் மு.வரதராசனார் அவர்களின் எளிய உரையே மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.
மணிப்பிரவாள நடை
தமிழும், வடமொழியும் கலந்து எழுதப்படும் மொழிநடையே மணிபிரவாள நடை என்று அழைக்கப்பட்டது. சமணர்களும், வைணவர்களும் இந்த உரைநடையைப்  பெரிதும் வளர்த்தனர். நாலாயிர திவ்ய பிரபந்த உரைகாரர்களுள் பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப்பிள்ளை ஆகியோர் உரைகள் குறிப்பிடத்தக்கன.
ஐரோப்பியர் உரைநடை
       தமிழ் இலக்கியங்கள் பெரிதும் கவிதைகளாகவே இருப்பதால் அவற்றை எளிதாகப் புரிந்துகொள்ளும்விதமாக இவர்கள் எளிய உரைநடையைக் கையாண்டனர். அவர்களுள் இராபர்ட் டி நொபிலி என்னும் தத்துவ போதகர் பத்துக்கும் மேற்பட்ட உரைநடை நூல்களை இயற்றினார் இதனால் இவரை உரைநடையின் தந்தை என அழைப்பர். இவரைத் தொடர்ந்து வீரமாமுனிவர் பரமார்த்தகுரு கதை உள்ளிட்ட பல உரைநூல்களைத் தந்தார். பிறகு ஜி.யு.போப் அவர்களும் நல்ல உரைநடை நூல்களைத் தந்தார்.
இருபதாம் நூற்றாண்டு உரைநடை
       ஐரோப்பியரைத் தொடர்ந்து தமிழ்ப்புலவர்கள் பலரும் தமிழ் உரைநடையை வளர்த்தனர். ஆறுமுக நாவலர், சிவஞானமுனிவர், மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், சோம.இளவரசு, தெ.பொ.மீ, உ.வே.சா, திரு.வி.க, வையாபுரிப்பிள்ளை, மு.வ, ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இராமலிங்க வள்ளலாரின் மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய உரைநூல்களும், திரு.வி.க அவர்களின் மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும் என்ற உரையும் புகழ்பெற்ற உரைகளாகும்.
முடிவுரை
       தமிழில் உரைநடை வளர்ச்சியின் காரணமாக அறிவியல், இலக்கியம், ஆன்மீகம், பொது அறிவு, வணிகம் எனப் பலதுறைகளிலும் பல அரிய நூல்கள் கிடைத்தன. தற்காலத் தமிழ் உரைநடையை அ.ச.ஞானசம்பந்தன், பொற்கோ, தமிழண்ணல் ஆகியோர் வளர்த்துவருகின்றனர். 


ஞாயிறு, 28 ஜூலை, 2013

தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.

தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.

கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது.  இவற்றுள் நாடகம் தொன்மையும், தனிச்சிறப்பும் வாய்ந்ததாகும். இயலும், இசையும் கலந்து கதையைத் தழுவி நடித்துக்காட்டப்படுவது நாடகமாகும். எட்டு வகையான உணர்ச்சிகளை ஒருவர் தம் மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நாடகத்தின் தனிச்சிறப்பாகும். தெருக்கூத்துகளாக இருந்து, மேடைநாடகங்களாக மாறி, இலக்கிய நாடகங்களாக மலர்ச்சி பெற்ற தமிழ்நாடகத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து காண்போம்.
தமிழ்நாடகத்தின் தொன்மை
     தொல்காப்பியர் ”நாடக வழக்கினும்” என்று நாடகத்தைக் குறிப்பிடுகிறார்.
    சிலப்பதிகாரம் நாடகக்கூறுகளுடன் நாடகக் காப்பியமாகவே திகழ்கிறது.
    அகத்தியம்,குணநூல், கூத்தநூல், சயந்தம், மதிவாணர் நாடகத் தமிழர்,  முறுவல் போன்ற  நாடக நூல்கள் பழந்தமிழர் வழக்கில் இருந்தன என்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுச் செல்கிறார்.

சங்ககால கூத்துகள் 

குறவைக் கூத்து, துணங்கைக் கூத்து, ஆடிப்பாவை போன்ற கூத்துவகைகளை சங்ககாலத்தில் காணமுடிகிறது.

இருவகை நாடகங்கள்

வேத்தியல், பொதுவியல் என நாடகங்களை இருவகையாகப் பகுக்கலாம். வேத்தியல் என்பது வேந்தனுக்காக நடித்துக்காட்டப்படுவதாகும், பொதுவியல் என்பது மக்களுக்காக நடித்துக்காட்டப்படுவதாகும்.

இருண்ட காலம்

சமண, புத்த சமயங்கள் கலைகளுக்கு எதிராக செயல்பட்டதால் இருண்ட காலத்தில் நாடகத்தமிழ் ஒளியிழந்தது.

பல்லவர் கால நாடகங்கள்

நாயன்மார்களும், ஆழ்வார்களும் இசைக் கலைக்கு உயிரூட்டினர். எனினும் நாடகத்துக்கு பெரிய செல்வாக்கு ஏற்படவில்லை. இக்காலத்தில் மகேந்திர வர்ம பல்லவனின் “மத்தவிலாச பிரகசனம்“ என்ற நாடகநூல் புகழ்பெற்றிருந்தது. இன்னிசைக்கூத்து, வரலாற்றுக் கூத்து என இருவகை நாடக மரபுகளும் இக்காலத்தில் இருந்தன.

சோழர் கால நாடகங்கள்

சோழர் காலத்தில் இராஜராஜனின் வெற்றிச்சிறப்பைப் பாராட்டும் “இராஜராஜவிஜயம்“ நிகழ்த்தப்பட்டது. இதில் நடித்தவர்களுக்கு “ராசராச நாடகப்பிரியன் என்று பட்டம் வழங்கினர் என்பதைக் கல்வெட்டுகள் வழி அறியமுடிகிறது.

தமிழ் நாடகத்தின் எழுச்சி

இசுலாமியர் படையெடுப்புக்குப் பிறகு கலைகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாடகங்கள் மீண்டும் புத்துயிர் பெற்று வளரஆரம்பித்தன. குற்றாலக்குறவஞ்சி, முக்கூடற்பள்ளு, இராமநாடகக் கீர்த்தனை, நந்தனார் சரிதக் கீர்த்தனை ஆகிய நாடகங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றன.

      காசி விசுவநாதமுதலியார் அவர்களின் டம்பாச்சாரி நாடகம் தான் முதன்முதலில் மேடையில் நடிக்கப்பட்ட சமூகநாடகமாகும்.

    மேடைநாடக அமைப்புக்கு முன்மாதிரியான, நவாப் கோவிந்தசாமி ராவ் அவர்களை தமிழ்நாடகத்தின் தாத்தா என்று அழைப்பர்.

தமிழ் நாடக மூவர்         
பம்மல் சம்பந்தம் முதலியார், சங்கரதாசு சுவாமிகள், பரிதிமாற் கலைஞர் ஆகிய மூவரையும் தமிழ்நாடக மூவர் என்று அழைப்பது வழக்கம்.
1.பம்மல் சம்பந்தம் – இவர் எழுதிய மொத்த நாடகங்கள் 93 ஆகும். இவரே தமிழ்நாடகத்தின் தந்தை என அழைகப்படுகிறார். மேலும் இவரைத் தமிழ் சேக்சுபியர் என்றும் அழைப்பர். இவர்தம் நாடகங்கள் இன்பியல், துன்பியல், கேளிக்கை, அங்கதம், நையாண்டி, புராணிகம், வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலதரப்பட்டவையாகும்.
2.பரிதிமாற் கலைஞர் – நாடகம் படித்தல், நடித்தல், இலக்கணம் வகுத்தல் என மூன்று பெரும் பணிகளை ஆற்றினார். நாடகவியல் என்ற தமிழ்நாடக இலக்கண நூலை இயற்றினார். இவர் படைத்த நாடகங்களுள் ரூபாவதி, கலாவதி, மானவிஜயம், சூர்ப்பனகை ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்.
3.சங்கரதாசு சுவாமிகள்- முறைப்படுத்தப்பட்ட தமிழ்நாடகவரலாறு இவரிலிருந்தே தொடங்குகிறது. இருபதாம் நூற்றாண்டு நாடகத்துறையை நசிவடையாமல்க் காத்ததால் இவரைத் தமிழ்நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றுவர்.  அபிமன்யு சுந்தரி, இலங்காதிலகம், கோவலன், நல்லதங்காள், பிரகலாதன்  உள்ளிட்ட 40 நாடகங்கள் இவர் படைத்தவையாகும்.

தமிழ் நாடகக் குழுக்கள்
          பம்மல் சம்பந்தம் முதலியார் – சுகுணவிலாச சபை
          சங்கரதாசு சுவாமிகள் - சமரசசன்மார்க்க சபை
          சதாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலர் – பாலமனோகரசபா
என்.எஸ்.கே, பாலாமணி அம்மையார், கே.பாலசந்தர், எஸ்வி.சேகர், விசு ஆகியோரும் நாடகக்குழுக்கள் வைத்து நாடகம் வளர்த்தனர்.

நாடகங்களின் வகை

நாவல்களைப் போலவே தமிழ்நாடகங்களையும் புராண நாடகம், இலக்கிய நாடகம்  துப்பறியும் நாடகம், வரலாற்றுநாடகம், நகைச்சுவை நாடகம், மொழிபெயர்ப்பு நாடகம், தழுவல் நாடகம், என வகைப்பாடு செய்ய இயலும் சான்றாக புராண நாடகங்கள், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறைய தோன்றின. பிரகலாதன், ஐயப்பன், தசாவதாரம், சிறுதொண்டர் ஆகிய நாடகங்கள் அவற்றுள் குறிப்பித்தக்கனவாகும். இலக்கிய நாடகங்களைப் படித்துமுடித்தவுடன் ஒரு நாடகம் பார்த்த நிறைவு கிடைக்கும். அவ்வகையில், சுந்தரம்பிள்ளையின் – மனோன்மணீயம், பாரதிதாசனின் – பிசிராந்தையார், மறைமலையடிகளின்- அம்பிகாபதிஅமாராவதி, அ.ச.ஞானசம்பந்தனின் தெள்ளாறு எறிந்த நந்தி முதலிய நாடகங்கள் இலக்கி்ய நாடகங்களுள் குறிப்பித்தக்கனவாகும்.


இன்றை சூழலில் கல்விச்சாலைகளில் ஓரங்கநாடகம், நாட்டிய நாடகங்கள் நடித்துக்காட்டப்படுகின்றன, வார, மாத இதழ்களிலும், வானொலி தொலைக்காட்சிகளிலும் நாடகங்கள் நடித்துக்காட்டப்படுகின்றன. இன்று அதிகமான தொழில்நுட்பங்களோடு நிறைய படங்கள் வருகின்றன. இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக அமைந்த மேற்கண்ட நாடகங்களையும் அக்கலையை வளர்த்த சான்றோர்களையும் தமிழுலகம் என்றும் மறவாது.

சனி, 27 ஜூலை, 2013

தமிழ்ப் புதினங்களின் தோற்றமும் வளர்ச்சியும்.


தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.
( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு)
முன்னுரை
                உரைநடையில் எழுதப்பட்ட நெடுங்கதையை ஆங்கிலேயர் நாவல் என்பர். நாவெல்லஸ் என்ற இலத்தின் சொல்லின் சிதைந்த வடிவமே நாவல் என்பதாகும்தமிழரும் முதலில் இதை நாவல் என்றே அழைத்தனர். பிறகு வடமொழிப்பெயரால் நவீனம் என்றும் அழைத்தனர். பிறகு புதினம் என்று தமிழ்ப்படுத்திக்கொண்டனர். தமிழ் இலக்கிய மரபில் புதினத்துக்கு என தனித்துவமான இடம் உண்டு அதை விரும்பிப் படித்த, படிக்கும் வாசகர்கள் உண்டு. தமிழ்ப்புதினத்தில் ஏற்பட்ட வளர்ச்சிகளை இக்கட்டுரையின் வழிக் காண்போம்.

நாவலின் கட்டமைப்பு
நாவலின் தாயகம் இத்தாலி ஆகும். கதை சூழ்ச்சி, பாத்திரங்கள், உரையாடல் என சிறந்த கட்டமைப்புடன் பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி சிறந்த அறக்கருத்தையும் உணர்த்துவதே சிறந்த புதினத்தின் கட்டமைப்பாகும்.

சிறுகதைக்கும் நாவலுக்குமான வேறுபாடு
சிறுகதையே நாவலின் முதல் வளர்ச்சி நிலை என்றும் அதிலிருந்தே நாவல் வளர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்றும் ஹட்சன் உரைக்கிறார். சிறுகதை ஒரு சிறிய வட்டத்துக்குள் சுழல்வது. ஆனால் நாவல் மிகப்பெரிய பரப்பளவைக் கொண்டு இயங்குவதாகும். புதினத்தில் நிறைய கதாபாத்திரங்கள், கற்பனைகள், வருணனைகள் வரலாம்

முதல் மூன்று நாவல்கள்

1.        வேதநாயகம் பிள்ளை எழுதிய “பிரதாப முதலியார் சரித்திரம்“
2.        இராஜம் ஐயர் எழுதிய “கமலாம்பாள் சரித்திரம்“
3.        மாதவையா எழுதிய “பத்மாவதி சரித்திரம்“
நாவல்களின் வகைப்பாடு
நாவல்களை, துப்பறியும் நாவல்சமூக நாவல்,வரலாற்று நாவல்,மொழிபெயர்ப்பு நாவல், தழுவல் நாவல்வட்டார நாவல் எனப்பல வகைப்படுத்தலாம்.
துப்பறியும் நாவல்
ஆவலைத் தூண்டுவதாகவும், எதிர்பார்ப்பை ஏற்படுத்ததுவதாகவும் இந்நாவல்கள் அமையும். ஆரணி குப்புசாமி முதலியார்,வடுவூர் துரைசாமி ஐயங்கார்தமிழ்வானன், பிடி.சாமி, சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா ஆகியோர் துப்பறியும் நாவல் எழுதிப் புகழ்பெற்றவர்களாவர். இவர்களுள் இராஜேஸ்குமார் அவர்களின் துப்பறியும் நாவல்களைத் தற்போது தொலைக்காட்சிகளில் குறும்படங்களாக எடுத்து ஒளிபரப்பி வருகிறார்கள்.
சமூக நாவல்
காலந்தோறும் மக்கள் எதிர்கொண்ட சிக்கல்களை எதிரொலிப்பன சமூகப் புதினங்களாகும்கொத்தமங்கலம் சுப்பு, ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, மு.வரதராசன்அகிலன் போன்றோர் சமூகப் புதினங்களால் மக்கள் மனதைக் கவர்ந்தவர்களாவர். கல்கியின் அலையோசை, தியாகபூமி, மகுடபதி ஆகிய நாவல்களும்மு.வரதராசன் அவர்களின் கயமை, அகல்விளக்கு, நெஞ்சில் ஒரு முள், கரித்துண்டு ஆகிய நாவல்களும் சமூக நாவல்களுக்குத் தக்க சான்றுகளாகும்.
வரலாற்று நாவல்
                நேற்றைய செய்தியே இன்றைய வரலாறு என்பர். தமிழக வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ்வரலாற்று நாவல்கள் தோன்றின. கல்கி, சாண்டில்யன், விக்கிரமன், ஜெகசிற்பியன், மு.மேத்தா ஆகியோர் வரலாற்று நாவல்களால் புகழ்பெற்றோராவர்வரலாற்றுப் புதினத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் கல்கி ஆவார். கல்கி எழுதிப் புகழ்பெற்ற வரலாற்றுப் புதினங்களுள் பார்த்திபன் கனவு, சிவகாமியின்  சபதம், பொன்னியின் செல்வன் ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்.
மொழிபெயர்ப்பு நாவல்
                சிறந்த பிறமொழி நாவல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதை மொழிபெயர்ப்பு நாவல் என அழைத்தனர். காண்டேகரின் மராட்டிய நாவலை கா.ஸ்ரீஸ்ரீ அவர்கள் மொழிபெயர்த்தார், ஒரிய மொழிக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக தமிழ்நாடன் சாகித்திய அகாதமி விருதுபெற்றுள்ளார்.

தழுவல் நாவல்
                இவ்வகைப் நாவல்கள் தமிழில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. டால்ஸ்டாயின் அன்னாகரினாவைத் தழுவி நாராயண துரைக்கண்ணன் சீமாட்டி கார்த்திகாயினி என்ற நாவலை எழுதினார். ரெயினால்சின் நாவலைத் தழுவி மறைமலையடிகள் குமுதவல்லி என்ற நாவலை எழுதினார்.
வட்டார நாவல்
                அந்தந்த வட்டாரப் பேச்சுவழக்குகளையும், பழக்கவழக்கங்களையும் கொண்டு எழுதப்படுவன வட்டார நாவல்களாகும்.சூரிய காந்தனின் “மானாவாரி மனிதர்கள்”, தோப்பில் முகமது மீரானின் “சாய்வு நாற்காலி” ஆகிய நாவல்கள் தக்க சான்றுகளாகும்.
பெண் நாவலாசிரியர்கள்
                பெண் நாவலாசிரியர்களுள் இராஜம் கிருஷ்ணன், சிவசங்கரி, இரமணி சந்திரன், இந்துமதி ஆகியோர் சிறந்த பெண் எழுத்தாளர்களாவர்.
முடிவுரை   
இன்றைய சூழலில் நிறையவே பொழுதுபோக்குக் கருவிகள் வந்துவிட்டன. ஆனால் கடந்த காலத்தில் நாவல் வாசித்தல் என்பது மிகப்பெரிய பொழுதுபோக்காக இருந்தது. அந்த வழக்கம் இந்தக் காலத்திலும் தொடர்ந்து வருவது நாவலின் ஆதிக்கத்தை எடுத்தியம்பும்.