வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 27 மே, 2013

தமிழ்த்தாயின் கோரிக்கை

இன்று தமிழுக்கு எத்தனை எத்தனை  சோதனைகள்!
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி
அரசுக் கலைக்கல்லூரிகளில் தமிழுக்குத் தடை
என ஒவ்வொரு நாளும் புதுப்புது சோதனைகள்!

இருந்தாலும் என் மனம் சொல்கிறது இதனால் தமிழுக்கு எதுவும் தளர்வு ஏற்பட்டுவிடாது என்று..

காரணம்..
இத்தனை ஆண்டுகளாக தமிழ் மீது ஏற்பட்ட பண்பாட்டுத்தாக்கங்கள், மொழித்தாக்கங்கள்.. அத்தனையையும் கடந்து இன்றும் தமிழ் இணையத்துக்கு வந்திருக்கிறது. என்றால் அதுதான் தமிழின் தனிச்சிறப்பு. இன்றும் பிறமொழி கலவாமல் தமிழ்பேசுவோர் எழுதுவோர் நிறையவே இருக்கிறார்கள்.

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் வருவதற்கு முன்பிருந்தே தமிழ் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த கல்விநிறுவனங்கள் வருவதற்கு முன்பு தான் தமிழில் சிறந்த இலக்கிய, இலக்கணச் செல்வங்கள் தோன்றியிருக்கின்றன. அதனால் தமிழ்ப்பற்றாளர்கள் மனம் தளராமல் தாய்மொழியான தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வழிமுறைகளை ஆராயவேண்டும்.

பள்ளி சென்றுதான் ஒரு மொழியைக் கற்கவேண்டும் என்பதில்லை. கல்விநிறுவனங்கள் மொத்தமாகத் தமிழைப் புறக்கணித்தாலும் இணையவழியே தமிழ்மொழியைப் வளர்க்கமுடியும்.

கண் சரியாகத் தெரியாதவர்கள் மருத்துவரின் அறிவுறுத்தலில் கண்ணாடி அணியலாம். கண் நன்றாகத் தெரிபவர்கள் ஏன் கண்ணாடி அணியவேண்டும?

ஆங்கிலம் என்பது கண்ணாடி என்பதை நாம் உணரவேண்டும்.

ஆங்கிலம் வயிற்றுக்காக, தமிழ் வாழ்க்கைக்காக என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

தமிழ் நமது தாய்மொழியாக அமைந்தது ஒரு இயற்கையான நிகழ்வுதான். என்றாலும் அதற்காக நாம் பெருமிதம் கொள்ளலாம். இந்தச் சூழலில் பாரதியாரின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது..


 
தமிழ்த்தாய் தன் மக்களைப் புதிய சாத்திரம் வேண்டுதல்..

ஆதிசிவன் பெற்று விட்டான்-என்னை
      ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை
      மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

மூன்று குலத்தமிழ் மன்னர்-என்னை
      மூண்டநல் லன்பொடு நித்தம் வளர்த்தார்;
ஆன்ற மொழிகளி னுள்ளே-உயர்
      ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.

கள்ளையும் தீயையும் சேர்த்து-நல்ல
      காற்றையும் வான வெளியையும சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள்-பல
      தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.

சாத்திரங் கள்பல தந்தார்-இந்தத்
      தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரங் கெட்டவன் காலன்-தன்முன்
      நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.

நன்றென்றுந் தீதென்றும் பாரான்-முன்பு
      நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல்-வையச்
      சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.

கன்னிப் பருவத்தில் அந்நாள்-என்தன்
      காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
என்னென்ன வோபெய ருண்டு-பின்னர்
      யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்!

தந்தை அருள்வலி யாலும்-முன்பு
      சான்ற புலவர் தவவலி யாலும்
இந்தக் கணமட்டும் காலன்-என்னை
      ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி யிருந்தான்.

இன்றொரு சொல்லினைக் கேட்டேன்-இனி
      ஏதுசெய் வேன்?என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு
      கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

"புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
      பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே-அந்த
      மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை-அவை
      சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த
      மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ!
      இந்த வசையெனக் கெய்திட லாமோ?
சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச்
      செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள்வலி யாலும்-இன்று
      சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும்-புகழ்
      ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.

தொடர்புடைய இடுகைகள்

சனி, 25 மே, 2013

இந்த உலகம் இன்னும் இயங்கக் காரணம்? - UPSC EXAM TAMIL - புறநானூறு -182



நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் இயற்கைக்கூறுகள் இந்த உலகம் இயங்க அடிப்படையானவையாகும் என்று பாடம் படித்தோம். இருந்தாலும், மக்காத குப்பைகளாலும் வேதியியல் உரங்களாலும் மண்ணை மலடாக்கினோம், காடுகளை அழித்தோம், விவசாய நிலங்களைப் பட்டாப்போட்டு விற்றோம், தொழிற்சாலைக் கழிவுகளால் நீர்நிலைகளை விசமாக்கினோம், நச்சுப் புகையால் காற்றை மாசாக்கினோம் இப்படிப் பல வழிகளில் இயற்கையை அழித்தோம் அதனால், ஆறுகளிலும், குளங்களிலும் தண்ணீர் இல்லை! மழையில்லை, வெயில் வாட்டி வதைக்கிறது! எப்போது மழைவரும்? எப்போது புயல்வரும்? எப்போது கடல்சீற்றம் வரும்? என்பது யாருக்கும் தெரியாது வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இருந்தாலும் உலகம் இன்னும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது!

நம் சமுதாயத்தில் சுயநலம், ஊழல், பொய், ஏமாற்று, திருட்டு, கொள்ளை, கொலை எனக் குற்றங்களே நீக்கமற நிறைந்திருக்கின்றன. தவறுகளைச் சுட்டிக்காட்டித் தீர்வுகளைச்சொல்லவேண்டிய ஊடகங்களோ தேதியை மட்டும் தினமும் மாற்றி பழைய செய்திகளை வெளியிட்டுவருகின்றன.  

இருந்தாலும் உலகம் இன்னும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது!

தவறு செய்யாதவர்கள் எல்லோரும் தவறே செய்யத் தெரியாதவர்களல்ல! இது சரி! இது தவறு! என்று பகுத்து உணர்ந்து பின்பற்றுபவர்கள்.அதன் வழி வாழ முயல்பவர்கள். இவர்களால்தான் உலகம் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது.

இந்தக் காலத்திலும், நீதி, நேர்மை, உண்மை, நியாயம், தர்மம், பொதுநலம் என்று பேசுவதோடு மட்டுமின்றி தன் வாழ்வில் கடைபிடிக்க முயன்று தம் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு வாழும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

         சங்கஇலக்கியத்தில் ஒரு புறநானூற்றுப் பாடல் இந்த வாழ்வியல் உண்மையை அழகுபட மொழிகிறது.

இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும்அது இனிமையானது என்று தனித்து உண்ண மாட்டர்கள்!
யாரையும் வெறுக்க மாட்டார்கள்!
சோம்பலின்றிச் செயல்படுவார்கள்!
பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள்!
புகழ்வரும் என்றால் தம் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பர்கள்!
பழிவரும் என்றால் உலகம் முழுவதும் கிடைப்பதானாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்!
மனம் தளர மாட்டார்கள்!
இத்தகைய சிறப்புடையவர்களாகித் தமக்காக உழைக்காமல்,
பிறர்க்காக உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்கிறது ஒரு புறானூற்றுப் பாடல்.
பாடல் இதுதான்,

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும்இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரேமுனிவிலர்;
துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே. 
                       
                                                                                  -   புறநானூறு -182
பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி. (சங்க காலத்துத் தமிழ் மன்னர்கள்தங்கள் கடற்படையைக் கொண்டு கடாரம்சாவகம்ஈழம் போற நாடுகளுக்குச் சென்று போர்புரிந்து வெற்றி பெற்றவர்கள். அவர்களின் கடற்படை போருக்குச் செல்லும் பொழுது மன்னர்களும் தம் கடற்படையோடு செல்வது வழக்கம். அவ்வாறு கடற்படையோடு இளம்பெருவழுதி சென்ற பொழுதுஅவன் சென்ற கப்பல் கவிழ்ந்ததால் அவன் கடலில் மூழ்கி இறந்தான். ஆகவே, “கடலுள் மாய்ந்த” என்ற அடைமொழி அவன் பெயரோடு சேர்க்கப்பட்டுள்ளது.)

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.

துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

  
தமிழ்ச்சொல் அறிவோம்

தமியர் = தனித்தவர்;
முனிதல் = வெறுத்தல்.
துஞ்சல் = சோம்பல்.
அயர்வு = சோர்வு.
மாட்சி = பெருமை.
நோன்மை = வலிமை;
தாள் = முயற்சி.

ஒப்பிட்டு நோக்கத்தக்க திருக்குறள்

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (குறள் - 82)

விருந்தினராக வந்தவர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவா மருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.

தொடர்புடைய இடுகைகள்

வெள்ளி, 24 மே, 2013

தமிழ்மொழியின் தனிச்சிறப்புகள் ஐந்து.


உலகமொழிகளுள் தமிழ்மொழி தனிச்சிறப்புடையது.  உலகமொழிகள் பலவற்றிலும் எழுத்துக்கும், சொல்லுக்கும் இலக்கணம் உண்டு. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த மொழி தமிழ்.

அகத்திணையியல் புறத்திணையியல், களவியல், கற்பியல் என வாழ்க்கைக்கான இலக்கணத்தை அழகாக எடுத்துரைக்கிது தொல்காப்பியம்.

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவா்கள் தமிழ்மொழியின் சிறப்புகளை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.