முல்லா என்பவரை அனைவரும் அறிவாளி என்று கூறுவர். ஆனால் அவரது இரு நண்பர்களும்,
முல்லா ஒரு முட்டாள், ஆனால் அனைவரும் அவரை அறிவாளி என்று கூறுகிறார்கள். அவரை ஒரு
சிக்கலில் மாட்டிவிடவேண்டும் என்று முயற்சி எடுத்து முல்லாவை மேடையில் பேச அழைத்தார்கள்.
முதலாவதாக முல்லா மேடையேறி
“நான் என்ன பேசப்போகிறேன் என்பது உங்களுக்குத்
தெரியுமா? என்று கேட்டார். அனைவரும் தெரியாது என்று கூறினார்கள். நான் என்ன
பேசப்போகிறேன் என்றே உங்களுக்குத் தெரியவில்லை. நான் எதற்காக உங்களிடம்
பேசவேண்டும்? என்று கூறிவிட்டு மேடையைவிட்டு இறங்கிவிட்டார்.
இரண்டாவதாக, முல்லாவின் இரு நண்பர்களும் இப்படி முல்லா இறங்கிவிட்டாரே என
நினைத்துவிட்டு மறுபடியும் முயற்சியெடுத்து முல்லாவை மேடைக்கு அனுப்பினர்.
மேடையேறியவுடன் முல்லா,
“நான் என்ன பேசப்போகிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?“ என்று கேட்டார்.
அனைவரும், போனதடவை தெரியாது என்று சொன்னதால் முல்லா மேடையைவிட்டு இறங்கிவிட்டார்.
அதனால் இந்தமுறை அவரைப் பேசவைக்கவேண்டும் என்று சிந்தித்து அனைவரும் “தெரியும்“
என்று சொன்னார்கள். அதற்கு முல்லா, நான் என்ன பேசப்போகிறேன் என்பது உங்களுக்கே
தெரியும் மறுபடியும் நான் ஏன் பேசவேண்டும் என்று மேடையைவிட்டு இறங்கிவிட்டார்.
மறுபடியும் இவரைப் பேசவைக்கவேண்டும் என்று முயற்சித்து இரு நண்பர்களும்,
முல்லாவை மேடைக்கு அனுப்பினர். முல்லா முன்பு போலவே “நான் என்ன பேசப்போகிறேன்
என்பது உங்களுக்குத் தெரியுமா?“ என்று கேட்டார். தெரியாது என்று சொன்னாலும்
தெரியும் என்று சொன்னாலும் இவர் மேடையைவிட்டு இறங்கிவிடுகிறார் என்று மக்களெல்லாம்
மிகவும் யோசித்துக்கொண்டிருந்தனர். அதனால் பாதிபேர் தெரியும் என்றும் பாதி பேர்
தெரியாது என்றும் கூறினார்கள்.
முல்லா சொன்னார்.
தெரியாதவர்களெல்லாம், தெரிந்தவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு
மேடையைவிட்டு இறங்கிவிட்டார்.
முல்லா அறிவாளி என்று ஏன் எல்லோரும் சொல்கிறார்கள் என்பதை இரண்டு நண்பர்களும்
இப்போது உணர்ந்தார்கள்.
பிடித்த கதையை எடுத்துச் சொன்னவர்.
பா. முத்துலெட்சுமி
இரண்டாமாண்டு வணிகவியல் (கணினிப் பயன்பாடு)
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு.