வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 2 ஜனவரி, 2013

அன்று இதே நாளில் (03-01-1760)

"வரி, வட்டி, திறை, கித்தி...
 எங்களோடு வயலுக்கு வந்தாயா? 
ஏற்றமிறைத்தாயா? 
நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? 
அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? 
மாமனா? அல்லது மச்சானா? யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி".


என்று சாக்சன் துரையோடு வீரபாண்டிய கட்டபொம்மன் நிகழ்த்திய உரையாடலை நாம் நன்கறிவோம். திறை கட்டாமை குறித்து வீரபாண்டியனைக் குற்றம் சுமத்திய சாக்சன் துரையை நோக்கி வீரபாண்டியன் கூறியது.
ஆங்கில மோகத்தால் தமிழர் மரபுகளையும், பண்பாட்டையும் மறந்துபோன இன்றைய குழந்தைகளுக்கு, இவரைத் தெரியுமா?

ஒரு சிறுவன் மாறுவேடப்போட்டிக்கு வழிமுறைகேட்டுவந்தான். நீ எந்த வேடம் ஏற்கிறாய்? என்று கேட்டேன்..

தாங்களே கூறுங்கள் என்றான்..

நானும்.
வீரபாண்டிய கட்டபொம்மன் வேடம் ஏற்கிறாயா? என்று கேட்டேன்.

கதை என்ன என்று கேட்டான். முழுவதும் கேட்டவன் சரி ஏற்கிறேன் என்றான். ஆனால் சாக்சன் துரை பாத்திரம்தான் ஏற்பேன் என்றான். ஏன் என்று கேட்டால்,அவன் சொல்கிறான்.

இதில் கட்டபொம்மன் கடைசியில் இறந்துவிடுகிறான். மேலும் இவரது உடையைவிட சாக்சன் துரையின் உடை அழகாக இருக்கிறது என்கிறான்.

இந்தச் சிறுவனுக்கு என்னசொல்லிப் புரியவைப்பது.. ??

அதனால் இன்று வீரபாண்டியகட்டபொம்மன் பிறந்தநாள் என்பதை நாம் நினைவில் கொண்டு அவரது பெருமைகளை நம் குழந்தைகளுக்கு எடுத்துரைப்போம்.


(03-01-1760) அன்று இதே நாளில் நம் மண்ணுக்காகப் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தார். இந்த நாளில் அம்மாமனிதரை நினைவுபடுத்தவே இவ்விடுகை..

எனக்குப் பிடித்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின்
கவிதை ஒன்றை இன்று பதிவுசெய்கிறேன்..

வீரபாண்டியக் கட்டபொம்மன்

மீசை முறுக்கிநின்று வெள்ளையரே உங்களுக்கோர்
காசும் தாரோமென்று கர்ஜித்த - கேசரியாம்
பாஞ்சைப் பதிவீர பாண்டியனை நெஞ்சமே
வாஞ்சையொடு பாடுவோம் வா.
செந்தில் முருகன் சேவடியைத்
     
தினமும் போற்றித் தொழுதிடுவோன்;
சந்தக் கவிகேட் டுளமகிழ்ந்து
     
தரளம் வாரி அளித்திடுவோன்
வந்த பொல்லா வெள்ளையரை
மதியா வீர பாண்டியனைச்
சிந்தை மறவா தோவியத்தில்
சிலையில் கண்டு போற்றுவமே.
தஞ்சம் என்று வந்தவரைத்
     
தாங்கும் இனிய குணசீலன்;
பஞ்சம் அறியாப் பழம்பதியாம்
     
பாஞ்சைப் பதியில் அரசாண்ட
விஞ்சு புகழ்சேர் வீராதி
     
வீரன் கட்ட பொம்மன்பேர்
நெஞ்சில் எழுதி வைத்தன்பால்
     
நித்தம் நித்தம் போற்றுவமே.
'தானம் வேண்டில் தருகின்றேன்;
     
தருமம் வேண்டில் தருகின்றேன்;
வானம் இடிந்து விழுந்திடினும்
     
வரிதந் தும்மை வணங்கேன்என்று
ஏனை வெள்ளைக் கம்பெனியர்க்கு
     
எடுத்துக் கூறித் தென்னாட்டின்
மானம் காத்த பாண்டியனை
     
மறவா தென்றும் போற்றுவமே.
'தானம் வேண்டில் தருகின்றேன்;
     
தருமம் வேண்டில் தருகின்றேன்;
வானம் மழையைப் பொழியுதையா!
     
மண்ணில் பயிரும் வளருதையா!
யான்இங் குமக்கு வரியிறுப்ப
     
தேனோ?' என்று வெள்ளையர்முன்
மானம் காத்த பாண்டியனை
     
மறவா தென்றும் போற்றுவமே.
சீமை வெள்ளைக் காரர்படை
     
சிதறி ஓட முறியடித்தோன்
ஊமைத் துரையென் றுலகுபுகழ்
     
ஒப்பில் விஜயன் முன்வந்த
வீமன் வீர பாண்டியனின்
வெற்றி முரசு முழக்கியிந்தப்
பூமி மீதெந் நாளுமவன்
புகழைப் பாடிப் போற்றுவமே.
காய்ந்து போரில் வெள்ளையரைக்
     
கறங்கச் செய்த ஆண்சிங்கம்;
ஆய்ந்து வினைகள் செய்துநிதம்
     
அறங்கள் காத்த அறிவுடையோன்;
பாய்ந்து நாயை முயல்விரட்டும்
     
பாஞ்சை ஆண்ட பாண்டியனுக்கு
ஏய்ந்த புகழை இனியதமிழ்
     
இசையிற் பாடிப் போற்றுவமே.
மான முற்றும் விலைகொடுத்து
     
மண்ணை வாங்கி அரசாளும்
ஈன வாழ்வை உள்ளத்தில்
     
எள்ளத் தனையும் எண்ணாதோன்;
ஊன உடலை வெறுத்துதறி
     
உலகி லழியாய்ப் புகழ்நாட்டி
வானம் சென்ற வீரனைநாம்
     
மறவா தென்றும் போற்றுவமே.
கட்ட மொம்மன் சீமையிலே
     
காகம் பறவா தெனுமாறு
சட்ட திட்டம் செய்துகுடி
     
தாங்கி நின்ற ஜகவீரன்;
துட்டர் அஞ்சும் துரைராஜன்
     
துணிந்த வீரன் என்றுலகில்
எட்டுத் திசையும் புகழ் பெற்றோன்
     
எங்கள் வீர பாண்டியனே.
கட்டமொம்மன் சீமையிலே
     
காகம் பறவா தெனுமாறு
சட்ட திட்டம் செய்துகுடி
     
தாங்கி நின்ற ஜகவீரன்;
துட்டர் கண்டன் சூராதி
     
சூரன் என்றிவ் வுலகெங்கும்
பட்டம் பெற்ற பாண்டியனைப்
     
பாடிப் பாடிப் போற்றுவமே.
அன்ன சாலை அமைத்திடுவோம்;
     
ஆல யங்கள் கட்டிடுவோம்;
பன்னற் கரிய கலைகளெல்லாம்
     
பயிலக் கழகம் கண்டிடுவோம்;
தென்னர் போற்றும் பாஞ்சையினைத்
     
திருத்தி அளகை யாக்கிடுவோம்;
மன்னர் வீர பாண்டியன்பேர்
     
வையத் தென்றும் வழங்கிடவே.
கெஞ்சி வாழும் வாழ்க்கையினைக்
     
கிஞ்சித் தேனும் விரும்பாத
செஞ்சி யாண்ட தேசிங்கத்
     
திறலோன் அனைய போர்வீரன்;
வஞ்சர் இழைத்த தீவினையால்
     
மாண்ட கட்டபொம்மான்பேர்
விஞ்சும் ஆண்மை பெறுவதற்கு
     
வீரர் போற்றும் மந்திரமே.


வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்த தமிழ்விக்கிப்பீடியா பதிவு

18 கருத்துகள்:

  1. ஒரு மாபெரும் வரலாற்று நாயகனின்
    பிறப்பை நினைவுபடுத்தும் நாள்....
    இன்றைய இளைய தலைமுறையினர் மட்டுமல்ல...
    அனைத்து தமிழரும் தெரிந்துகொள்ள வேண்டிய
    கவிமணியின் கவிதையை இங்கே பகிர்ந்தமைக்கு
    நன்றிகள் பல முனைவரே...

    பதிலளிநீக்கு
  2. நினைவுகூர்ந்தமைக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  3. பொக்கிஷமான வீர வரலாற்றை வரும் சந்ததிகளுக்கு அடிக்கடி நாம் தான் நினைவு படுத்த வேண்டும் இவ்விதமாக நன்றிங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் அறிவுறுத்தலுக்கும் நன்றி சசிகலா.

      நீக்கு
  4. மாவீரன் பிறந்த நாளை நினைவுகூர்ந்து நினைக்க வைத்தமைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  5. வீரபாண்டிய கட்டபொம்மனை நினைவூட்டியமைக்கு நன்றி சிறிது நேரம் அவரைப் பற்றி என் மகனுடன் பேச வாய்ப்பு கிடைத்தது

    பதிலளிநீக்கு
  6. கட்டபொம்மனையும், கப்பலோட்டியத்தமிழனையும் இன்னும் இன்னும் பலரையும் நாம் மறந்து தான் வருகிறோம். வருந்ததக்க உண்மை. 9/11 என்றால் பாரதியையா நினைவு கூருகிறோம்? வெக்கம். பாடட்டத்தக்க இடுக்கை. பாரட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு முனைவரே! இன்றைய இளைய தலைமுறை இப்படித்தான் உள்ளது

    பதிலளிநீக்கு
  8. கட்டபொம்மன் ஆங்கிலேயரை எதிர்த்துச் சுதந்தரப் புரட்சியைத் தோற்றுவித்தான் என்றோ,நாட்டின் சுதந்தரத்தையும் குடிமக்கள் நலனையும் தன் குறிக்கோளாகக் கொண்டிருந்தான் என்றோ கொள்ளுவதற்கில்லை (ப.476.தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும் -டாக்டர் கே.கே. பிள்ளை.....
    முனைவர் குணசீலன் இதையும் படித்துப் பாருங்கள்... கார்த்திக்

    பதிலளிநீக்கு