கண்ணின்
கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் என்பார் கவிஞர் பாரதிதாசன்.
மாமலைகூட ஓர் கடுகாகத் தெரியும்
இந்தக் காதலர்களுக்கு, பெற்றோரிடம் அனுமதி பெறுவது என்பது மாமலையைத் தூக்குவது போல கடினமாகத்
தெரிவதுதான் காதலின் விந்தை!
தன் காதலைப் பெற்றோருக்குப் புரியவைத்து அவர்களின் அனுமதியோடு திருமணம் செய்துகொள்பவர்களுக்கு தம் வாழ்வில் எதிர்கொள்ளும் மலையளவு துன்பங்கள் கூட கடுகளவாகத் தெரியும்!
வாழ்க்கையிலிருந்து வந்ததுதான் இலக்கியம் என்றாலும்
இலக்கியத்துக்கும் வாழ்க்கைக்குமான இடைவெளி
மிகவும் பெரிது.
இலக்கியத்தையும் - வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த உண்மை புலப்படும்.
ஒரு
காதலர் புலம்புகிறார்..
கைபேசியில் துவங்கிய
நம் காதல் - உன் அண்ணன்
கை பேசியதால்
முறிந்தது .
# என்னா அடி ???? என்று...
நம் காதல் - உன் அண்ணன்
கை பேசியதால்
முறிந்தது .
# என்னா அடி ???? என்று...
இன்னொரு காதலர் புலம்புகிறார்..
அருகம்புல்
போல நாம் வளர்த்த காதலை
உங்க அப்பன் ஆடு மாடு போல மேய்த்து விட்டான் என்று...
உங்க அப்பன் ஆடு மாடு போல மேய்த்து விட்டான் என்று...
காலங்கள் மாறினாலும்
காதல் மாறுவதில்லை. அதனால் காதலர்களுக்கும் பெற்றோருக்குமான போராட்டங்களும்
மாறுவதில்லை..
தம் பிள்ளைகளைப் பெற்றெடுத்துப் பார்த்துப் பார்த்து வளர்த்து ஆளாக்குவது
மட்டும் பெற்றோரின் கடமையல்ல, இன்றைய பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு விலைமதிப்பு
மிக்க அரிய பல பொருள்களைக் கூட எளிதாக வாங்கித் தந்துவிடுகிறார்கள். பெற்றோர்களால் காலந்தோறும் தம்பிள்ளைகளுக்குத் தரமுடியாத அரியது ஒன்று
உள்ளது...
ஆம் நேரம் தான் அது. சிறிது நேரம் ஒதுக்கி அவர்களுக்குக் காதுகொடுத்தால் அவர்கள் நம்மிடம் வழிமுறை
கேட்பார்கள். அவர்களிடம் நாம் நேரம் ஒதுக்கிக் காதுகொடுக்காவிட்டால்..
அவர்களுக்கு 20 வருடம் அன்பை ஊட்டி வளர்த்த பெற்றோரைவிட 20 நாட்கள் பார்த்துப்
பழகிய காதலர் பெரிதாகத் தெரிவார் இதுதான் மனித மனங்களின் இயற்கை.
இதோ ஒரு சங்ககால காதல் இணையரைப் பாருங்கள்..
தலைமக்கள் பெற்றோருக்குத் தெரியாமல் உடன்போக்கில்
சென்றனர். நீண்டதூரம் சென்றதால் தலைவி வருத்தமடைந்தாள் என்பதை உணர்ந்த தலைவன்,
“அன்பே மேகம் முதல் மழையைப் பொழிந்ததால் இந்த அழகிய
காட்டில் தம்பலப் பூச்சிகள் (பட்டுப் பூச்சிகள்) எங்கும்
பரவின. அவற்றைப் பார்த்தும், பிடித்தும் நீ சிறிது நேரம் விளையாடிக்கொண்டிரு. நான்
இளைய யானைகள் தம் உடலைத் தேய்த்துக்கொள்ளும் பருத்த அடியுடைய வேங்கை மரத்தின்
பின்புறத்தில் அமர்ந்திருக்கிறேன். அப்போது வழிப்பறி
செய்வோர் வந்தால் அவர்களுடன் அஞ்சாது போரிட்டு அவர்களை ஓடச் செய்து உன்னைக்
காப்பேன். ஒருவேளை உன்னைத் தேடி உன் உறவினர் வந்தால் நீ வருந்தாமலிருக்க அவருடன்
போரிடாது மறைந்துகொள்வேன்“
என்கிறான் தலைவன். பாடல் இதோ..
வினையமை பாவையின் இயலி நுந்தை
மனைவரை இறந்து வந்தனை யாயின்
தலைநாட் கெதிரிய தண்பெயல் எழிலி
அணிமிகு கானத்து அகன்புறம் பரந்த
கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும்
நீவிளை யாடுக சிறிதே யானே
மழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி
அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென்
நுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே.
இப்படி பெற்றோருக்கு அஞ்சி வாழ்வதால் தான் இந்தக் காதலை நம் தமிழர்கள் களவு
என்றார்கள். இந்தப் பாடலைப் படிக்கும்போது காட்சிகள் கண்முன் விரிகின்றன.
கொடிய கள்வர்களுக்குக் கூட அஞ்சாத காதலன், தலைவியின் உறவினர்களுக்கு அஞ்சுவேன்
என்று கூறும் பாங்கு நடைமுறை வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
கள்வர்களைவிட வலிமையுடையவர்களா காதலியின் பெற்றோர்?
இல்லை..
இந்தக் காதலி பிறக்கும்போதே இப்படிப் பிறந்துவிடவில்லை. இவளும்
குழந்தையாகத்தான் பிறந்தாள். இவளைப் பார்த்துப் பார்த்து வளர்த்த பெற்றோருக்குத்
தெரியாமல் இவளை கூட்டிவந்தது எவ்வளவு பெரிய தவறு?
அவர்களின் மனது என்ன பாடுபடும்!
இவளை எப்படியெல்லாம் வளர்த்திருப்பார்கள்?
எப்படியெல்லாம் திருமணம் செய்து பார்க்கவேண்டும் என்று கனவுகண்டிருப்பார்கள்?
என்று பெற்றோரின் மனநிலையை எண்ணிப் பார்க்கும் போது தலைவனால் காதலியின் பெற்றோருக்குமுன் நிற்கமுடியவில்லை.
இந்த நிலை நாளை நமக்கும் வரலாம்..
நம் குழந்தை இப்படி நம்மை மதிக்காமல் ஓடிச் சென்றால் நாம் என்ன பாடுபடுவோம்
என்று காதலன் எண்ணிப் பார்ப்பதால் காதலியின் பெற்றோருக்கு முன் அவனால்
நிற்கமுடியவில்லை.
என்ன செய்வது......
எது சரி? எது தவறு?
எப்படி வாழவேண்டும்? எப்படி வாழக்கூடாது?
என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும்.
ஆனால்
அப்படி வாழ்வதுதான் எல்லோராலும்
முடியாது!
அதனால் பிள்ளைகளைப் பாதுகாப்பாது பெற்றோரின் கடமை!
அதற்குமேல் அதை மதிக்காமல் ஓடிப்போவது பிள்ளைகளின் திறமை!
ஒன்றை மட்டும் காலம் இவர்களுக்கு
உணர்த்தும்..
முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்பதுதான் அது.
தொடர்புடைய இடுகைகள்