வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 27 டிசம்பர், 2012

மாலைப் பொழுதின் மயக்கத்திலே..



மாலைப் பொழுதில் வானில் ஏற்படும் அழகான மாற்றங்களைக் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன்.

எத்தனை எத்தனை வண்ணங்கள்!
எத்தனை எத்தனை வடிவங்கள்!

கொஞ்சம் தலைநிமிர்ந்து பார்க்கக்கூட இந்த மனிதர்களுக்கு நேரமில்லையே என்று மனம் நொந்திருக்கிறேன்.

இலக்கியங்களில் இந்த மாலைப் பொழுதைப் பலகவிஞர்கள் பாடியிருக்கிறார்கள்.
        
  இளங்கோவடிகள் அந்திமாலைசிறப்புசெய்காதை என்றொரு காதையில் மாலைப் பொழுது பற்றி அழகாகப் பாடியிருப்பார்.

         மாலைப் பொழுதின் மயக்கத்திலேநான் கனவு கண்டேன் தோழி.....

        மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ......

   என்ற திரைப்படப் பாடல்கள் மறக்கமுடியாதவை..

மருத்துவர் ஊசிபோடுவதால் ஏற்படும் வலியைவிட அவர் ஊசிபோடப்போகிறார் என்ற நினைவு அதிகமான வலிதருவதாகும். அதுபோல நாம் நம் வாழ்வில் எதிர்கொள்ளும் துன்பங்களைவிட எதிர்பார்க்கும் துன்பங்களால் ஏற்படும் வலி பெரிது..

வள்ளுவரின் பொழுது கண்டு இரங்கல் என்னும் குறள்பாக்களை படித்தபோது என்ன நயம் என்று வியந்திருக்கிறேன்.

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.
1221

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.
1222

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்.
1223

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.
1224

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.
1225

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.
1226

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்.
1227

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.
1228

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.
1229

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.
1230
             
             பைங்கால் கொக்கின் புன்புறத் தன்ன
             குண்டு நீர் ஆம்பலும் கூம்பின இனியே
             வந்தன்று வாழியோ மாலை
             ஒருதான் அன்றே கங்குலும் உடைத்தே.
                                          
குறுந்தொகை-122,  ஓரம் போகியார், நெய்தல் திணை தலைவி கூற்று




கொக்கின் சிறகுப்புறத்தைப் போன்ற ஆம்பல் மலர்களும் குவிந்தன.

இதோ மாலைக்காலமும் வந்துவிட்டது...

மாலையே நீ வாழ்வாயாக!

இந்த மாலைப்பொழுது, தான் மட்டும் தனியாக வந்தாலும் பரவாயில்லை 

கங்குல் (இரவு) என்னும் கொடுமையையும் உடன் 

அழைத்துவந்திருக்கிறதே நான் என்ன செய்வேன்..

என்று புலம்புகிறாள் தலைவி.
  •  இரவில் மலர்ந்து பகலில் கூம்பும் மலர் ஆம்பல் ஆகும். இந்த ஆம்பல், மலர்வதற்குரிய மாலைப்பொழுது இன்னும் வரவில்லை. அதற்குள் இந்த மாலைக்காலம் வந்துவிட்டது. என்ற தலைவியின் புலம்பலால் “மலர் மலர்வதையும் கூம்புவதையும் வைத்து சங்ககால மக்கள் காலத்தை அறிந்தார்கள்” என்ற வழக்கத்தை அறிந்துகொள்ளமுடிகிறது.
  • சிறிது காலம் நிற்கும் மாலைப் பொழுது நீண்டநேரம் நிற்கும் இரவைத் துணைக்கு அழைத்து வந்தது தலைவிக்குப் பெரிதும் கவலையளிப்பதாக உள்ளது.
  • பகலும் இரவும் இயல்பாக வந்துசெல்வது. ஆனால் இந்தத் தலைவியைப் போலத் தன் துணையைப் பிரிந்து வாடுவோருக்கோ, காலமும் நேரமும் வரும் போகாது.
  • இன்று தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்த எதிர்பார்ப்பு, பரிதவிப்பு நம்மிடம் இருக்கிறதா? யாரையும் எதிர்பார்த்து வழிமீதுவிழி வைத்து நாம் காத்திருக்கிறோமா? அலைபேசியில் அழைத்து உடனுக்குடன் விவரத்தைத் தெரிந்துகொண்டு அடுத்தவேலையைப் பார்க்கப் போய்விடுகிறோமே..


அதனால் இந்த உணர்வுப்போராட்டங்களைப் படிக்கும்போதெல்லாம் மனம் இலக்கியநயம் பாராட்டுகிறது.


தொடர்புடைய இடுகைகள்..





          1. அந்தியிளங்கீரனார்











   2. தூங்காத விழிகள் இரண்டு 

11 கருத்துகள்:

  1. தூய தமிழில் நல்ல சங்கதி அருமை

    பதிலளிநீக்கு
  2. இலக்கியத்தை தொட்டுச்செல்ல உங்களால்தான் முடியும் முனைவரே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைப் போன்ற இலக்கியம் வாசிப்போர் நேசிப்போர் இருக்கும்வரை என்னைப் போன்ற பதிவர்கள் தொடர்ந்து இலக்கியம் எழுதிக்கொண்டே இருப்பார்கள் கவிஞரே..

      நீக்கு
  3. மாலைப் பொழுதில் வானில் ஏற்படும் அழகான மாற்றங்களைக் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன்.

    எத்தனை எத்தனை வண்ணங்கள்!
    எத்தனை எத்தனை வடிவங்கள்!

    இலக்கிய நயமிக்க் இனிய பகிர்வுகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கம் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி

      நீக்கு
  4. தங்கள் வருகைக்கம் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பா.

    பதிலளிநீக்கு
  5. குறுந்தொகைப் பாடலுக்குப் பொருத்தமான படம் கலக்கலாய்ப் பதிவு செய்திருக்கிறீர்கள். இப்பாடலை நான் பதிவு செய்யும்பொழுது இப்படத்தினைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வேண்டுகிறேன்.
    நன்றி

    பதிலளிநீக்கு