காலந்தோறும் ஒவ்வொரு வீடுகளிலும்,
செல்வத்தின் அடையாளமாகவும், தொழில்நுட்ப அறிவின் அடையாளமாகவும் இருந்த கருவிகள் சிலவற்றைக் காண்போம்..
வானொலி
கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சி
தொலைபேசி
வண்ணத் தொலைக்காட்சி
டெக்
டேப்ரிக்கார்டர்
சிடி பிளேயர்
டிவிடி பிளேயர்
கணினி
அலைபேசி
இணையத்துடன் கூடிய கணினி
மடிகணினி
டேப்ளட் பிசி
சுமார்ட் போன்
என காலந்தோறும் பல கருவிகள் வந்திருக்கின்றன.வந்துகொண்டிருக்கின்றன.
இவற்றுள் கணினியும், அலைபேசியும் மக்களைச் சென்றடைந்த அளவுக்கு வேறு எந்தக் கருவியும் அதிகம் சென்றடைந்த்தில்லை.
ஒரு காலத்தில் ஊருக்கு ஒரு தொலைக்காட்சிதான்
இருக்கும் அதுவும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருக்கும்..
ஆனால் இன்று..!!
2சி, 3சி, 4சி என தொழில்நுட்ப மாற்றங்களை
இரண்டாவது தலைமுறை, மூன்றாவது தலைமுறை, நான்காவது தலைமுறை எனப் பாகுபாடு செய்துள்ளனர்.
நாம் இன்னும் மூன்றாவது தலைமுறைக்கே முழுவதும் சென்று சேரவில்லை அதற்குள்ளாக 4வது
தலைமுறை தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதாம்.
120 கோடிக்கு மேல் மக்கள் கொண்ட இந்தியாவில்
அலைபேசி இணைப்பாளர்களின் எண்ணிக்கை 90கோடி இருக்கிறது.
ஒருகாலத்தில் வீட்டுக்கு ஒரு தொலைத்தொடர்பு
இணைப்பு இருப்பதே வியப்புக்குரியதாக இருந்தது. இன்று, பலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட
அலைபேசிகள் உள்ளன.
கணினி தயாரிப்பாளர்களெல்லாம் அலைபேசிக்கான
தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
v ஒரு காலத்தில் நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும்
உறவினர்களிடம் சென்று சொல்லிவருவது முதன்மையான பணியாக இருக்கும்.
v அடுத்து கடிதவழி தொடர்பு.
ஆனால் இன்று அலைபேசி, இணையத்தின் வளர்ச்சியால்
இந்த மரபுகள் எல்லாம் தொலைந்துபோய்விட்டன.
இன்று உலகின் எந்த இடத்தில இருப்பவரிடமும்
நேருக்கு நேராக அலைபேசி வழியே முகம் பார்த்துப் பேசமுடியும் என்பது எவ்வளவு பெரிய
மாற்றம்!!
புறா,
ஒற்றன், தூதுவன், கடிதம், தொலைபேசி, அலைபேசி, இணையம் என்ற வளர்ச்சி..
யாகூ
மெசஞ்சர் (எழுத்து உரையாடல்)
ஜிடாக்
(பேச்சு உரையாடல்)
முகநூல்
(பேச்சும், எழுத்தும் கலந்த உரையாடல்)
ஸ்கைப்
(முகம் பார்த்துப் பேசும் உரையாடல்)
என்ற வளர்ச்சிப் படிநிலையை அடைந்துள்ளது.
இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சியில் வாழும் நாம்
கொஞ்சம் திரும்பிப்பார்க்கலாம் வாங்க.
சங்கப் பாடல் ஒன்று...
தலைவன் வெளியூர் சென்றிருக்கிறான்.
மழைக்காலத்தில் திரும்பிவந்துவிடுவேன் என்றுசொல்லிச்சென்றான்.
அந்தக்காலமும் வந்துவிட்டது. ஆனால் தலைவனைக்
காணோமே எனத் தலைவியின் மனது பதற்றம் அடைகிறது.
அப்போது தோழி தலைவியை ஆற்றுப்படுத்துகிறாள்.
கவலைப்படாதே...
தலைவன் வரப்போகிறான் என்பதை முன்பே அறிந்த
மேகங்கள் கடலில் சென்று நீரை முகந்துவந்து பெருமழையாகப் பொழிகின்றன. அறிவல்லாத மேகங்களோ உனது துன்பத்தைக்
குறைக்கும்விதமாக..
மழைக்காலம் வந்துவிட்டது
தலைவன் வந்துகொண்டிருக்கிறான் என்பதன் அடையாளமாகத்தான் மழைபொழிகிறேன்..
என்று சொல்லாமல்
சொல்லிச்செல்கின்றன.
நீ ஏன் குழப்பமடைகிறாய் என்கிறாள்.
விருந்து எவன்செய்கோ- தோழி!- சாரல்
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச் சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு, உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும் பெருங் கல் நாடன் வரவு அறிந்து, விரும்பி, |
மாக் கடல் முகந்து, மணி நிறத்து அருவித்
தாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய், மலை இமைப்பது போல் மின்னி, சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே? |
நற்றிணை -112, பெருங்குன்றூர் கிழார்.
பருவ வரவின்கண்ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.
தோழீ !
மலைச்சாரலில் அரும்பு
முழுதும் ஒருசேர மலர்ந்த கரிய கிளைகளையுடைய வேங்கைமரத்தில்,
சுரும்பு முரலுகின்ற
பக்கமலையிலுள்ளவெல்லாம் அஞ்சும்படியாக; களிற்றைக் கொன்று அச்சமற்ற
உள்ளத்தையுடைய சிங்கம் நிற்கும் பெரிய மலைநாடன்,
கார்ப்பருவத்தின்கண் வருவேன்
என்று கூறிச் சென்றபடி மீண்டு வருகின்றான் என்பதை அறிந்து விருப்பமுற்று,
கரிய கடலின்கண்ணே சென்று நீரையுண்டு
மணிபோலும் நிறத்தினையுடைய அருவியினிழிகின்ற நீரையுடைய அகன்ற இடமெல்லாம் மறைபடுமாறு
பரவி; மலையானது கண்விழித்து இமைத்தாற் போல மின்னி ஒலிக்கின்ற வலிய
இடியேற்றுடனே கலந்து வந்த இந்த மழைக்கு; நான் யாது கைம்மாறு செய்வேன்? என்று தலைவியை ஆற்றுப்படுத்துகிறாள் தோழி.
தலைவன், தலைவி இருவரும் ஒருவரை ஒருவர்
தொடர்புகொள்ள எந்த தொழில்நுட்பமும் இல்லாத சங்ககாலத்தில் அவர்கள் இயற்கையோடு
எவ்வாறெல்லாம் இயைபுபட வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள இதுபோன்ற
பாடல்கள் பெரிதும் துணைபுரிகின்றன.
இவ்வளவு தொழில்நுட்பங்களோடு வாழும் நமது
மகிழ்ச்சி
எந்தத் தொழில்நுட்பமும் இன்றி வாழ்ந்த சங்ககால
மக்களின் மகிழ்ச்சி
இரண்டையும் சீர்தூக்கிப்பார்த்தால்..
சங்ககாலத்தைவிட
இன்று நாம் தொழில்நுட்ப அளவில் முன்னேற்றமடைந்திருக்கிறோம்!
ஆனால்
உறவுகளிடையே உள்ள அன்புநிலையின் பின்னேற்றம்
அடைந்திருக்கிறோம் என்றே தோன்றுகிறது.
இன்று வெளியே சென்ற உறவுகளை இவ்வளவு ஆவலோடு
யாரவது எதிர்பார்த்துக் காத்திருக்கிறோமா..
வரவில்லையென்றால் உடனே அலைபேசியில் அழைத்து என்ன? ஏது? எனக் கேட்டுத்
தெரிந்துகொண்டு அடுத்த வேலையைப் பார்க்கப்போய்விடுகிறோம்.
இந்தப் பாடலில் தலைவி தலைவனை ஆவலோடு
எதிர்பார்த்துக்காத்திருக்கிறாள்.
அவன் வருவதாகச் சொல்லிய பருவம் வந்துவிட்டது.
அவனைக் காணோமே என்று..
மேகம் மழைபொழிவது இயற்கை.
இங்கு அதனைத் தனக்கு சார்பாகத் தோழி
பயன்படுத்திக்கொள்ளும் பாங்கு எண்ணி இன்புறத்தக்கதாக உள்ளது.
இன்று
தொலைத்தொடர்பு அடர்த்தி அதிகரித்திருக்கலாம்
ஆனால்
மனித
மனங்களுக்கிடையிலான அன்பின் அடர்த்தியும் அதிகரித்திருக்கிறதா?
என்று
தன்மதிப்பீடு செய்துகொள்ள இவ்விடுகை பயன்படும் எனக் கருதுகிறேன்.
விஞ்ஞானம் வசதிகளைத் தந்தாலும் உறவுகளில் பெரிய இடைவெளியை உண்டாக்குகிறது.
பதிலளிநீக்குதற்குறிப்பேற்ற அணியுடன் விளங்கும் சங்கப் பாடல் அருமை.நன்றி.
ஆழ்ந்த புரிதலுக்கு நன்றி முரளிதரன்.
நீக்குசிந்திக்க வேண்டிய பதிவு! இன்றைக்கு மிகத் தேவையான பதிவும்கூட. தங்கள் பதிவை சுட்டிக்காட்டி என் பதிவில் பயன்படுத்தி இருக்கிறேன்.
பதிலளிநீக்குhttp://thaenmaduratamil.blogspot.com/2012/11/tholaithodarbumuravugalinthodarbum.html
தங்களுக்கு சம்மதம் என்று நினைக்கிறேன், தெரியப்படுத்தவும். நன்றி!
கண்டேன் மகிழ்ந்தேன் நன்றி கிரேஸ்
நீக்கு//சங்ககாலத்தைவிட இன்று நாம் தொழில்நுட்ப அளவில் முன்னேற்றமடைந்திருக்கிறோம்!
பதிலளிநீக்குஆனால்
உறவுகளிடையே உள்ள அன்புநிலையின் பின்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்றே தோன்றுகிறது.// மிகவும் உண்மையான வரிகள்.
அருமையான பதிவு நண்பரே !!
நன்றி ஸ்ரீனி
நீக்குசங்க கால நிகழ்ச்சிகள் படிக்கவும் கேட்கவும்
பதிலளிநீக்குமட்டும் தான் இனிமை என்பது என் கருத்து முனைவர் ஐயா.
ஒரு இலக்கியத்தின் அடிப்படை நோக்கமே அதுதானே..
நீக்குகற்பவை கற்றபின் நிற்க என்னும் வள்ளுவர் கூற்றை நினைவுபடுத்திக்கொண்டால்..
ஏட்டுச் சுரைக்காயும் வாழ்க்கைக்கு உதவும் என்பது என் கருத்து.
நல்ல தகவல்கள். கார்ட்டூனும் ரசிக்க வைத்தது.
பதிலளிநீக்குநன்றி விச்சு
நீக்குகாலவேறுபட்டை எடுத்துக்காட்டி, சங்கப்பாடலை சுட்டி, தாங்கள் கூறியுள்ள முடிவுரை மிகவும் பாராட்டத்தக்கது!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி புலவரே
நீக்குஇனிய பழைய நினைவுகளை மீட்டிச் சென்றது-சங்க கால பாடலைப் போல...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்... நன்றி முனைவரே...
tm8
நன்றி முயற்சிக்கிறேன்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி அன்பரே
பதிலளிநீக்கு