காலங்கள்
மாறினாலும் சில மனிதர்கள் மாறுவதில்லை. அந்த அடிப்படையில் மாறாத மனிதர்களை,
கொடுப்பவர்கள்
வாங்குபவர்கள்
என இருவகைப்படுத்தலாம்.
கொடுப்பவர்களை,
புண்ணியத்துக்காகக் கொடுப்பவர்கள்
மனிதாபிமானம் கருதிக் கொடுப்பவர்கள்.
என
இருவகைப்படுத்தலாம்.
வாங்குபவர்களையும்,
வேறு
வழியில்லாமல் வாங்குபவர்கள்
வாங்குவதையே வழியாக எண்ணி வாழ்பவர்கள்
என இருவகைப்படுத்தலாம்.
வாங்குவோரில் சிலர் நினைத்துக்கொள்ளலாம்..
இப்படி அள்ளி அள்ளிக்கொடுத்தால் கடைசியாக நம்மைப்போலத்தான் இரவலராக
போவார்.
இவர் ஒரு ஏமாளி,
இவர் ஒரு கோமாளி என்று கூட எண்ணிக்கொள்ளலாம்.
இருந்தாலும் இவர்களுக்கெல்லாம் காலம் தான் பதில் சொல்லவேண்டும்.
பேகன்
என்றொரு வள்ளல். ஆம் மயிலுக்காகப் போர்வை கொடுத்தானே அதே வள்ளல்தான்..
சிலர் நினைக்கலாம் மயிலுக்கு ஏன் இவர் போர்வைகொடுத்தார்?. அது பேகனின்
அறியாமையல்லவா? என்று.
உயிர்கள் மீது பேகன் கொண்ட அன்பின் அடையாளமது.
அதற்குப் பெயர் கொடை மடம்.
அந்த பேகனிடம் பரிசில் பெற்று வந்த பாணன் ஒருவன் பரிசில்
பெறக்காத்திருக்கும் பாணனிடம் பேகனின் கொடைத்திறனை எடுத்துரைப்பதாக இப்பாடல்
அமைகிறது.
பரிசில் பெற்ற பாணன் சொல்கிறான்,
கொடுத்தால் புண்ணியம் என்று மறுமையை
எண்ணியெல்லாம் பேகன் இரவலர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கவில்லை அவர்களின் வறுமையை
எண்ணித்தான் வழங்குகிறான் என்கிறான்.
கோமாளியாகக் கூட நடிக்கலாம்
ஏமாளியாக மட்டும் இருக்கக் கூடாது
என்றொரு பொன்மொழி உண்டு. இந்த பேகன்
ஏமாளியா?
கோமாளியா?என்றால் இவன் மனிதன் என்றே அறிவுடையோர் கூறுவோர்.
பாடல்
இதுதான்...
|
பாணன் சூடிய பசும்பொற் றாமரை
மாணிழை விறலி மாலையொடு விளங்கக்
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட் டசைஇ
ஊரீர் போலச் சுரத்திடை யிருந்தனிர்
|
5
|
யாரீ ரோவென வினவ லானாக்
|
|
காரெ னொக்கற் கடும்பசி யிரலவ
வென்வே லண்ணற் காணா வூங்கே
நின்னினும் புல்லியே மன்னே யினியே
இன்னே மாயினே மன்னே யென்றும்
|
10
|
உடாஅ போரா வாகுத லறிந்தும்
|
|
படாஅ மஞ்ஞைக் கீத்த வெங்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்துணை யாயினு மீத்த னன்றென
மறுமை நோக்கின்றோ வன்றே
|
15
|
பிறர், வறுமை நோக்கின்றவன் கைவண்மையே.
புறநானூறு (141)
|
பாணாற்றுப்படை; புலவராற்றுப்படையுமாம்.
வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடியது.
பேகனிடத்தில் பரிசு பெற்ற
பாணன் ஒருவன், வழியில் எதிர்ப்பட்ட மற்றொரு பாணனிடம் பேகனின் கொடைச் சிறப்பைக்
கூறி, அவனிடம் பரிசில் பெற்றுவர வழிப்படுத்தினான்.
பேகனின்
புகழைப் பாராட்டுகின்றவன், தம்மையும் பாணனாகக் காட்டிக்கொள்வதோடு, பாணன் சூடிய
தாமரைப் மலரையும், விறலி அணிந்த பொன்னரி மாலையையும் சுட்டிக்காட்டி இந்த
சுரத்திலும் ஊரிலிருப்பதுபோல மகிழ்வோடு இளைப்பாறி இருக்கும் நீங்கள் யார்?
எங்களைப் பார்த்துக் கேட்ட வறுமையுடைய சுற்றத்தையும், மிகுந்த பசியையும் உடைய
இரவலனே!
வென்றிவேலுடைய
பேகனைக் காண்பதற்குமுன் நாங்களும் உங்களைவிட வறுமையுடையவர்களாகவே இருந்தோம்.
இப்போது
அந்த வறுமையெல்லாம் நீங்கி வளமாயினோம். மதமிக்க யானையும், மனம் செருக்கிய
குதிரையும் உடையவன் பேகன்.
உதவாது
என்று தெரிந்தும் உயிர்கள் மீது தான் கொண்ட இரகத்தால் மயிலுக்குப் போர்வையைக்
கொடுத்தவனான பேகன் தன்னை நாடிவருவோருக்கெல்லாம் அளவில்லாது கொடை வழங்குவது,
மறுமைப் பயன்
(புண்ணியம்) நோக்கியல்ல - பிறரது
வறுமைத்
துன்பத்தைப் போக்குவதை மட்டும் நோக்கியது.
பாடல் வழியே..
- சங்ககாலத்தில்
வள்ளல்கள் தம்மை நாடிவரும் கலைஞர்களுக்கு வழங்கும் பரிசில்களுள், பாணனுக்குத்
தாமரை மலர் தருவதும், விறலிக்குப் பொன்னரி மாலை தருவதும் மரபாக இருந்தது என்ற
கருத்தைப் புரிந்துகொள்ளமுடிகிறது.
- பேகன்
மயிலுக்குப் போர்வை தந்தவன் என்ற செய்தி சுட்டிக்காட்டப்படுகிறது.
- மயில்போன்ற உயிரினங்களிடம் பேகன் கொண்ட சீவகாருண்யம்
(உயிரிரக்கம்), மனிதர்கள் மீதுகொண்ட மனிதாபிமானம் ஆகிய பண்புகள்
இன்றைய தலைமுறையினரும் கற்றுக்கொள்ளவேண்டிய சிறந்த பண்புகளாக அமைகின்றன.