வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

இந்தக்குழந்தைகள் சொல்வது கேட்கிறதா?



  • சுவர்  பெரிதாக இருப்பதால் கல்வி தன்னைவிட்டு மிகத்தொலைவில் இருப்பதாக இந்தக் குழந்தை எண்ணி்க்கொள்ளவில்லை. தான் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற உறுதியுடைய மனம் இந்தக் குழந்தையிடம் உள்ளது அதனால் வெளியே இருந்துகூட இந்தக் குழந்தையால் கற்றுக்கொள்ளமுடிகிறது..



சில குழந்தைகள் பள்ளியின் உள்ளே இருந்தும் கற்றுக்கொள்ளாமல் இருப்பதையும் நம்மால் காணமுடிகிறது.

கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் 
இருந்தால் போதும் எதுவும் தடையல்ல 
என்ற உயர்ந்த சிந்தனையை இந்தக் காட்சி நமக்குப் புலப்படுத்துகிறது.



  •  அந்தக் காலத்தில் குழந்தைகள் தான் புத்தகங்களைக் கிழிப்பார்கள். இன்றெல்லாம் வன்முறை உணர்வைத் தூண்டித் தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் புத்தகங்கள் குழந்தைகளைக் கிழித்துவிடுகின்றன. இந்த உண்மையை அழுத்தமாகச் சொல்லும் நிழற்படம் இது.



  • கல்வி - பணம் இரண்டில் எது மதிப்பு மிகுந்தது?
   பணத்தைக் கொடுத்து கல்வியை வாங்குகிறோம்
  கல்வியை விற்றுப் பணமாக்குகிறோம்
இலவசமாகக் கிடைக்கும் எதற்கும் மதிப்பிருக்காது என்பது உண்மைதான்
அதற்காக அதிகவிலைகொடுத்து இந்தக்கல்வியை வாங்கும்போது
அதைப் பெறும் மாணவர்களுக்கு மனிதாபிமானம் இருக்காது என்ற கருத்தையும் நாம் சிந்திக்கவேண்டும்.


கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
திருக்குறள் -391
தொடர்புடைய இடுகை


வெள்ளி, 28 செப்டம்பர், 2012

இணையத்தில் உங்கள் மொழிநடை?


கருத்துச் சுதந்திரம் நிறைந்தது இன்றைய இணைய உலகம்.
யார் வேண்டுமானாலும் தம் கருத்தை முழுமையாக தெரிவிக்கும் வாய்ப்பு இன்று யாவருக்கும் உள்ளது. அதற்கான ஊடகங்களும் இன்று நிறையவே வந்துவிட்டன.

மொழியுரிமை என்றால் என்ன?என்றுதான் இன்று பலருக்குத் தெரிவதில்லை.

மொழியுரிமை என்பது ஏதோ நம் தன்விவரக்குறிப்பிலோ, விண்ணப்பங்களிலோ தாய்மொழி எது என்ற கேள்விக்குமட்டும் பயன்படக்கூடியது என்ற சிந்தனை இன்று இளம் தலைமுறையினரிடம் உள்ளது.

நம் கருத்துக்களை நம் தாய்மொழியில் வெளியிடவேண்டும்
என்ற உணர்வு இன்று பலருக்கு இல்லை.

நம் ஆங்கில அறிவைக் காட்டுவதற்கான வாய்ப்புகள் இங்கு நிறைய உள்ளன. இருந்தாலும் நாம் யார் என்று காட்ட நமக்கு நம் தாய்மொழிதானே அடையாளம். அந்த அடையாளத்தை நாம் தொலைத்துவிட்டால் எதிர்காலத்தில் நாம் தாய்மொழி என்று சொல்லிக்கொள்ள தமிழ் இருக்குமா..?

தமிழர்கள் இன்று உலகுபரவி வாழ்கின்றனர்.. சாதாரணமாக பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றி எழுதும் எனது வலைப்பதிவுக்கே 134 நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் வந்திருக்கிறார்கள் என்றால் தமிழின், தமிழரின் பரவல் என்ன என்பதை நாம் உணர்ந்துகொள்ளமுடியும்.

பல்வேறு நாடுகளில், பல்வேறு துறைகளில் பணிபுரியும் தமிழர்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடும் இடம் இணையம்.

சிலர் சொந்தமாக இணையதளம் வைத்திருக்கிறார்கள்
சிலர் வலைப்பதிவுகள் வைத்திருக்கிறார்கள்
குறைந்தபட்டசம் ஏதாவது சமூக தளங்களிலாவது தமது கருத்துக்களை வெளியிடுபவர்களாகவே இன்றைய தமிழர்கள் இருக்கிறார்கள்.

இருந்தாலும் இவர்கள் தம் கருத்துக்களை வெளியிட எந்த மொழியைப் பயன்படுத்துகிறார்கள்..?

என் பார்வையில்...

தமிழ் பயன்படுத்துவோர்
ஆங்கிலம் பயன்படுத்துவோர்
தமிங்கிலம் பயன்படுத்துவோர்
பிற மொழிகளைப் பயன்படுத்துவோர்

என பாகுபாடு செய்துகொள்கிறேன். இந்தத் தமிழர்கள் எல்லோரும் தம் கருத்துக்களைத் தமிழிலேயே வெளியிட்டால்..

எதிர்காலத்தில் இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளின் வரிசையில் நம் தமிழ்மொழியும் இடம்பெறும் இல்லையா..


தமிழ் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள்

இன்னும் பலர் இணையத்தில தமிழ் எவ்வாறு எழுதுவது என்றே தெரியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்காக நான் பரிந்துரைக்கும் இணைய பக்கங்கள்..



அன்பான தமிழ் உறவுகளே............. 
நம் தாய்மொழியான தமிழ்மொழி எதிர்காலத்தில் இணையத்தில் அதிகமாகப் பயன்படவேண்டும் என்ற எனது வேட்கையாக இவ்விடுகையை வெளியிடுகிறேன்..
தமிழுக்காக சில மணித்துளிகளை நீங்கள் ஒதுக்குவீர்கள் என்ற நம்பிக்கையில்...

இவ்விடுகையின் மேல்பக்கத்தில தமிழின் பரவலும், பயன்பாடும் குறித்த வாக்கெடுப்புவைத்திருக்கிறேன்.
உங்கள் கருத்துக்களை நீங்கள் வெளியிடும் ஊடகம் எது?
அதற்காக நீங்கள் பயன்படுத்தும் மொழிநடை எது?
என்பதை வாக்களித்துத் தெரியப்படுத்துங்கள் என்று
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..

நன்றி.

தொடர்புடைய இடுகைகள்




புதன், 26 செப்டம்பர், 2012

உலகாளும் முறை - UPSC EXAM TAMIL - புறநானூறு -185


    உலகில் ஆட்சி செய்யும் ஒவ்வொரு அரசனுக்கும் இருக்கவேண்டிய அடிப்படைத் தகுதியை உரைப்பதாக இப்பாடல் அமைகிறது.

    அரசனின் ஆட்சித்திறனை ஒரு வண்டியாக உவமித்துத் தொண்டைமான் இளந்திரையன் பாடுவதாக இப்பாடல் அமைகிறது
    .

    ஆளுவோன் திறமையுடையவனாக இருந்தால் வண்டி எந்த இடையூறும் இன்றி இனிதாகச் செல்லும்.

    அவனுக்கு சரியாக வண்டியை ஓட்டத்தெரியாவிட்டால் நாடு பகையென்னும் சேற்றில் அழுந்தி மிகப்பல துன்பங்களை அடையும். என உரைப்பதாக இப்பாடல் அமைகிறது.

            
    கால்பார் கோத்து, ஞாலத்து இயக்கும்
    காவற் சாகாடு உகைப்போன் மாணின்,
    ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே;
    உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும்,
    பகைக்கூழ் அள்ளற் பட்டு,

    மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.

    புறநானூறு -185
    பாடியவர்தொண்டைமான் இளந்திரையன் 
    திணை - பொதுவியல்
    துறை - பொருண்மொழிக் காஞ்சி



    அரசனின் ஆட்சித்திறத்தை ஒரு வண்டியாக உவமித்துத் தொண்டைமான் இளந்திரையன் பாடிய இப்பாடலில்,
    இந்தப் புறநானூற்றுப் பாடல் அக்கால மன்னராட்சி முறையின் நெறிமுறைகளைக் காட்சிப்படுத்துகிறது..

    இந்தப்பாடலில், வண்டியைச் செலுத்துவோன் திறமையுடையவனாக இருந்தால் வண்டி எவ்வித இடையூறுகளும் இன்றி செல்லும். அதுபோல ஆட்சிசெய்யும் அரசன் அரசியல் முறையை நன்கு அறிந்தவனாக இருந்தால் நாடு நலம் பெறும். மக்கள் வளம் பெறுவார்கள். அதனால் அரசனும் சிறப்புப் பெறுவான்.

    வண்டியைச் செலுத்தும் திறமை இல்லாதவனாக இருந்தால் வண்டி வழிதவறிச் சென்று சேற்றில் அழுந்தி துன்பத்திற்கு  உள்ளாகும். அதுபோல அரசாளும் முறை அறியாதவானக அரசன் இருந்தால் நாடு உட்பகை, புறப்பகை என்னும் சேற்றில் அழுந்தி அரசன் துன்பமடைவான். நாடும் சீர்கேடு அடையும். 

    கால் என்றால் உருளை என்றும் பார் என்றால் வண்டியின் உறுப்புகளில் ஒன்று என்றும் பொருள் கொள்வோம். 

    மன்னன் என்பதற்குப் பதிலாக அரசியல்வாதிகளையும்
    வண்டி என்பதற்குப் பதிலாக நம் நாட்டையும், 
    பகை என்பதற்குப் பதிலாக நம் நாடு சந்திக்கும் சவால்களையும் கருத்தில் கொள்வோம்..

    தமிழ்ச்சொல் அறிவோம்
    கால் - உருளை (சக்கரம்)
    பார் - வண்டியின் உறுப்புகளுள் ஒன்று
    ஞாலம் - உலகம்
    சாகாடு - வண்டி
    கைப்போன் - செலுத்துவோன்
    ஊறு - துன்பம்
    ஆறு - வழி
    தேற்றான்
    - தெளியான்
    அள்ளல் - சேறு
    தலைத்தலை - மேலும்மேலும்



தொடர்புடைய இடுகை

                             1  அந்த மகராசன் மிக நல்லவன்

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

இணையத்தில் ஆதிக்கம்செலுத்தும் மொழிகள் (தமிழ்)


இணையத்தில் தமிழ் ஆதிக்கம் செலுத்த நாம் என்ன செய்யவேண்டும்...?


கணினி, இணையம் இரண்டிலும் தமிழ் முழுமையாக இல்லை என்பதை உணர்ந்து 01 என்னும் கணினி மொழியை ஆங்கிலத்துக்குப் பயன்படுத்தியது போல தமிழ் மொழிக்கு முழுவதும் பயன்படுத்தவேண்டும். ஒருங்குறி (யுனிகோடு) என்னும் எழுத்துருச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்


கணினி - இயங்குதளங்களின் பல்வேறு பதிப்புகளிலும் தமிழ் எந்த அளவுக்கு ஏற்புடைத்தாக இருக்கிறது. எந்த அளவுக்கு முரண்பட்டிருக்கிறது என்பதை அறிந்து சீர் செய்யவேண்டும்.

வன்பொருள் - தட்டச்சுப் பலகை முதல் கணினி சார்ந்த பல்வேறு கருவிகளும் ஆங்கிலமொழி வடிவத்தையே ஆதரிக்கின்றன. வன்பொருள்களும் தமிழ்பேசும் நிலையை உருவாக்கவேண்டும்.

இணையம் உலவிகள் தமிழுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் முழுவதும் தமிழ் கட்டளைகளைக் கொண்ட உலவிகள் உருவாக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும்.

மென்பொருள்கள் - கணினியோடு பல்வேறு பணிகளைமேற்கொள்ள நாள்தோறும் உருவாக்கப்பட்டுவரும் மென்பொருள்கள் ஆங்கிலமொழியைக் கருத்தில் கொண்டே இன்றளவும் உருவாக்கப்பட்டுவருகின்றன. மென்பொருள் உருவாக்கத்தில் தமிழ்மொழிக்கு தனித்துவமான இடம்கொடுத்து மென்பொருள்கள் உருவாக்கப்படவேண்டும்.

மேகக்கணினி - வளர்ந்துவரும் தொழில்நுட்பமான மேகக்கணினி நுட்பத்தை தமிழுக்கு ஏற்ப எவ்வாறு பயன்படு்த்திக்கொள்வது என்பதுதொடர்பாக சிந்திக்கவேண்டும்.

மின்நூல்கள் - இணையத்தில் பெருகிவரும் மின்னூல்கள் இன்னும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சராசரி தமிழர்களுக்கும் சென்றுசேரச் செய்தல்வேண்டும்.

அலைபேசி (டேப்லட் பிசி, ஸ்மார்ட் போன்) - பெரிய பெரிய கணினி தயாரிப்பாளர்களும் இப்போது இந்த அலைபேசிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து தயாரித்து வருகிறார்கள். அதனைக் கவனத்தில் கொண்டு, அலைபேசிகளின் இயங்குதளம் தொடங்கி, உலவிகள் வரை தமிழ் மொழியைப் பயன்படச் செய்தல்வேண்டும்.

மொத்தத்தில் நாம் இயல்பாக சுவாசிப்பதுபோல கணினியில் நம்தமிழ்மொழியும் இயல்பாகப் பயன்படுத்தப்படவேண்டும்.

தற்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கேற்ப தமிழ் வளர்ந்துள்ளது எல்லா நிலைகளிலும் தமிழர்கள் பங்காற்றிவருகிறார்கள்,பயன்படுத்தி வருகிறார்கள்.
இருந்தாலும் பல்வேறு தேவைகளுக்கும் ஆங்கில மொழியின் உதவியையே நாடியிருக்கிறோம். (நம்மில் எத்தனைபேர் சமூகத்தளங்களில் தமிழைப்பயன்படுத்தி வருகிறோம்? 
இன்னும் தமிங்கிலத்தில்தானே பலரும் பயன்படு்த்தி வருகிறோம்)
அதனால் நம் அனுபவங்களையும், கண்டுபிடிப்புகளையும் முடிந்தவரை தமிழ்மொழியிலேயே பதிவு செய்வோம். 

வலைப்பதிவுகள்,முகநூல், டிவைடர், கூகுள் + என்னும் சமூகத் தளங்களில் தமிழ்மொழியின் ஆதிக்கத்தை நம் ஆளுமை வாயிலாக வெளிப்படுத்துவோம்.

தமிழ் இணையப்பல்கலைக்கழகம்
விக்கிப்பீடியா
நூலகம் 

போன்ற பல தமிழ் இணையதளங்களை உருவாக்குவோம் பயன்படுத்துவோம்.

இவ்வாறெல்லாம் நாம் ஒவ்வொருவரும் செய்தால் இணையத்தில் தமிழ் எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்பது என் கருத்து.


எனக்குத் தெரிந்தவரை சில எதிர்காலத்தமிழ் இணையம் குறித்த எதிர்பார்ப்புகளை முன்வைத்திருக்கிறேன்.

அன்பு நண்பர்களே... தொழில்நுட்பப் பதிவர்களே எதிர்காலத் தமிழின் தேவைகுறித்த தங்களின் பார்வைகளை, கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.


என்ற கருத்தை ஆழமாக சிந்தித்து நம்மால் ஆனவரை தமிழ் மொழியை இணையத்துக்கு ஏற்ப வடிவமைப்போம் வாருங்கள்....


தொடர்புடைய இடுகைகள்







திங்கள், 24 செப்டம்பர், 2012

சில நூல்களும் ஒரு குப்பைத்தொட்டியும்

ஒரு நூலகத்தில் இருந்த குப்பைத்தொட்டி தனியே புலம்ப ஆரம்பித்தது...

இந்த நூலகத்தில் நிறையபேர் பயன்படுத்துவது என்னைத்தான். இங்கு நிறைய சுமப்பவனும் நான்தான். இருந்தாலும் என்னை யாருமே மதிப்பதில்லை. ஆனால் இங்கு யாருமே பயன்படுத்தாத நூல்கள் நிறைய உள்ளன. இருந்தாலும் அவை எதையும் சுமப்பது கூட இல்லை. இருந்தாலும் அந்த நூல்களையே எல்லோரும் மதிக்கிறார்கள். 
என்ன உலகம்டா இது..” என்று தன்னைத்தானே நொந்துகொண்டது குப்பைத்தொட்டி.

சிலநூல்கள் குப்பைத்தொட்டியின் அறியாமை குறித்து வருத்தமடைந்தன. அந்த நூல்களுள் ஒருநூல் மட்டும் குப்பைத்தொட்டிக்கு அறிவுரை சொன்னது...

நாம் எத்தனை முறை பயன்படுத்தப்படுகிறோம்?  என்பதைவிட
எதற்குப் பயன்படுகிறோம் என்பதல்லவா சிந்திக்கத்தக்கது!

நாம் எவ்வளவு சுமக்கிறோம் என்பதைவிட
எதைச் சுமக்கிறோம் என்பதுதானே விரும்பத்தக்கது!

என்று குப்பைத்தொட்டிக்கு அதன் அறியாமையைச்சுட்டிக்காட்டியது ஒரு நூல்.

இருந்தாலும் குப்பைத்தொட்டி புலம்பிக்கொண்டே இருந்தது. எல்லாம் என் தலைவிதி என்று..


(விதியை எண்ணிப் புலம்பும் மனிதர்களைக் காணும் போது என்மனதில் தோன்றிய சிந்தனையே இக்கதை)
தொடர்புடைய இடுகை



ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவும்!



ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

உலகத்தரம்வாய்ந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல்(2011-2012)

உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களின் 2011-2012 ஆம் ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனை இந்த இணைப்பில் காணலாம்.



என்ன இந்தியாவின் பெயரைக் காணோமே என்று தேடறீங்களா?
உங்க நாட்டுப் பற்றுக்கு அளவே இல்லையா?

உங்களுக்குப் பேராசைதான்...


இந்த இடமாவது கிடைத்ததே....


கனவு காணுங்கள்...

என்று சொன்னதை நாம் சரியாத்தானே புரிந்து கொண்டிருக்கிறோமா?

உணவு
உடை
உறைவிடம்
கல்வி
ஒலிம்பிக் பதக்கப்பட்டியல்
தொழில்நுட்பம்

என பல்வேறு நிலைகளில் நாம் பின் தங்கியிருந்தாலும்

மக்கள் தொகை
இலஞ்சம்
ஊழல்
மது

என இந்த இடங்களில் யாராலும் நம்மை நெருங்கவே முடியாது என்பதை எண்ணி, வாக்களிக்கும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பெருமிதம் கொள்வோமாக..


தொடர்புடைய இடுகைகள்

கல்விச்சாலை = சிறைச்சாலை


  1. "கல்விச் சாலைகள் திறக்கப்படும்போது சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன' என்பது பொன்மொழி.

  2. இந்தியாவில் இப்போது இருக்கும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், நூலகங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையைக் கூட்டிப் பார்த்தால் நம் நாட்டில் சிறைச்சாலைகளே இருக்கக்கூடாது!

  3. நாளுக்கு நாள் சிறைச்சாலைகள் நிரம்பிவழிகின்றன. அரசியல்வாதிகளும் ஆன்மீகவாதிகளும், தொழிலதிபர்களும் போட்டிபோட்டுக்கொண்டு சிறைச்சாலைகளை நிரப்பிவருகின்றனர்.

பிரேசில் நாட்டில் அரசாங்கத்திற்கு சிறைக் கைதிகள் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளனர், இதை தடுக்க புதுவிதமான வழியை பின்பற்ற உள்ளனர்பிரேசிலில் உள்ள நான்கு சிறைகளிலும் மிக கடும் குற்றம் புரிந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர், எனவே புதிதாக வரும் கைதிகளை அடைக்க இடவசதி இல்லை.எனவே இப்பிரச்சினைக்கு முடிவு கட்ட அரசாங்கம் புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது.இதன் படி, கைதிகளுக்கு 12 விதமான புத்தகம் படிக்கும் பணிகள் கொடுக்கப்படும். அதனை திறமையாக செய்து முடித்தால் தண்டனை காலம் குறைக்கப்படும். இலக்கியம், தத்துவயியல், அறிவியல் தொடர்பான புத்தகங்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு புத்தகத்தையும் 4 நாட்களுக்குள் படித்து முடிக்க வேண்டும்.
    இதனை சரியாக செய்தால் 1 ஆண்டு தண்டனை காலத்தில் அதிகபட்சமாக 48 நாட்கள் குறைக்கப்படும். இதன் மூலம் கைதிகள் அறிவு, திறமையை வளர்த்துக் கொள்வதோடு விரைவில் விடுதலையும் செய்யப்படுவார்கள்.

  1.  இந்தியாவில் மொத்தம் 1,356 சிறைச்சாலைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள 3 லட்சம் கைதிகளில் 70 விழுக்காட்டினர் விசாரணைக் கைதிகள். காவல்துறையின் அலட்சியப் போக்காலும், நீதிமன்றங்களின் தாமதங்களாலும் இது ஒரு முடிவுக்கு வராமல் வளர்ந்து கொண்டிருக்கிறது.


  2. சரி போனது போகட்டும் நாளைய தலைமுறையினராவது சிறைச்சாலைகளை ஒழிப்பார்கள் என்று நாம் கனவு கண்டு கொண்டிருக்கிறோம். ஆனால் இன்றைய மாணவர்களைக் கேட்டால் அவர்கள்...


    நாங்க இப்பவே சிறையில் தானே வாழ்கிறோம் என்கிறார்கள்..

    மாணவர்களின் பார்வையில் கல்விச்சாலை= சிறைச்சாலை

    சிறைச்சாலை
    கல்விச்சாலை
    நான்கு சுவர்
    நான்கு சுவர்
    மணியடிச்சா சோறு
    இங்கும் மணியடிச்சாதான் சாப்பிடமுடியும்
    கைதிகளுக்கு எண்கள்
    மாணவர்களுக்கும் பதிவெண் உண்டு
    இங்கே கதவுகளின் கம்பிகளை கைதிகள் எண்ணுவார்கள்
    இங்கு வகுப்பறை காலதர்(சன்னல்) கம்பிகளை மாணவர்கள் எண்ணுவார்கள்
    இங்கு கதவுகள் பூட்டியிருக்கும். அதனால் யாரும் வெளியே செல்லமுடியாது
    கதவுகள் திறந்திருந்தாலும் வகுப்பு நேரத்தில் வெளியே செல்லமுடியாது
    இங்கே வருபவர்கள் பணத்தை எடுத்துவிட்டு சிறைக்கு வருகிறார்கள்
    இங்கு வருபவர்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு உள்ளே வருகிறார்கள்
    இங்கே பல தண்டனைகள் உண்டு
    இங்கும் தான் புதிய புதிய தண்டனைகள் நாள் தோறும் உண்டு.
    தனியறையில் அடைக்கப்பட்டதால் யாருடனும் பேசமுடியாது
    கூட்டமாக இருந்தாலும் பக்கத்திலிருக்கும் நண்பர்களிடம் கூட பேசமுடியாது.

  3. இப்படி மாணவர்களின் மனதில் கல்விச்சாலை என்றாலே சிறைச்சாலை என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்துள்ளது.

  4. இன்றைய மாணவர்களில் எத்தனைபேர் கல்விச்சாலைகளுக்கு விரும்பிச்செல்கிறார்கள்?

  5. செய்தித்தாள்களை எடுத்தால் கல்விச்சாலைகளில் நடைபெறும் குற்றச்செயல்கள் நாள்தோறும் தொடர்கின்றன.
  6. ஆசிரியர் மாணவர் உறவுமுறை கெட்டுவிட்டது.

  7. மாணவர்கள் பலர் ஆசிரியர்களை காவலரைப் பார்ப்பதுபோலவே பார்க்கிறார்கள்
  8. ஆசிரியர்கள் பலர் மாணவர்களைக் குற்றவாளிகளைப் போலவே பார்க்கிறார்கள்.

    இந்தநிலை மாற என்ன செய்யலாம்....?

  9. அரசு மதுபானங்களுக் கடைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கல்விநிலையங்களுக்கும் கொடுக்கலாம்.

  10. கல்விநிறுவனங்கள் பாடத்திட்டங்களை வடிவமைக்கும்போது கூடுதல் கவனம் செலுத்தி வாழ்க்கைக்குப் பயன்படக்கூடியதாக, மாணவர்கள் விரும்பும் வகையில் வடிவமைக்கவேண்டும்

  11. ஆசிரியர்கள் அந்தக்காலத்தில் சொற்பொழிவாற்றியதுபோலப் பேசிக்கொண்டே இருக்காமல் காலத்திற்கு ஏற்றவாறு புதியபுதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பாடம் நடத்தலாம்.

  12. மாணவர்களும் ஆசிரியர்களை எதிரிகளாக எண்ணாமல் தம் மன உணர்வுகளை அவர்களுக்குப் புரியுமாறு நாகரீகமாக எடுத்துரைக்கவேண்டும்.

  13. பெற்றோரும் தம் பள்ளியில் சேர்த்தால் தம் கடமை முடிந்துவிட்டது என்று எண்ணாமல் தம் பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்கி அவர்களிடம் பேசவேண்டும்.

  14. அன்றைய காலத்தில் உன் பொழுதுபோக்கு என்ன? என்று கேட்டால் பல மாணவர்கள் நாவல்(புதினம்) படிப்பது என்பார்கள். பெரிய பெரிய வரலாற்று நாவல்களைக் கூட மிகவிரைவில் படித்துமுடித்துவிடுவார்கள்.. ஆனால் இன்றைய மாணவர்களுக்கோ நிறைய பொழுதுபோக்கு ஊடகங்கள் வந்துவிட்டன..     அலைபேசி, தொலைக்காட்சி, திரைப்படம், கிரிக்கெட்,
  15. இணையதளத்தில் சமூகதளங்கள்ன நிறைய உள்ளன

  16. அதனால் இந்த ஆற்றல்வாய்ந்த ஊடகங்கள் மாணவர்களின் கவனத்தை ஈர்த்து அவர்களைச் சிந்திக்க, சீர்கேடு அடையத் துணைநிற்கின்றன என்பதை நாம் உணர்ந்து அவற்றை ஆக்கபூர்வமாக எவ்வாறு கையாளவேண்டும் என்பதை மாணவர்களுக்குப் புரியவைக்கவேண்டிய காலச்சூழலில் நாம் இருக்கிறோம்.

  17. கல்விச் சாலைகளால் சிறைச்சாலைகளின் எண்ணிக்கையைக் குறைக்கமுடியாமல் போனாலும் பரவாயில்லை கல்விச்சாலைகளைச் சிறைச்சாலைகளாக ஆக்கமால் இருக்க என்ன செய்யலாம் என்று சிந்திக்கும் சூழலில் இன்று நாம் உள்ளோம்.


    1. கூடு என்றால் விரும்பி குடியிருக்கும் இடம்!
      கூண்டு என்றால் வேறு வழியின்றி இருக்கும் இடம்!








        இன்றைய கல்விச்சாலைகள் மாணவர்களின் கூடாகூண்டா?



    தொடர்புடைய இடுகைகள்









    2. தாளில்லாக் கல்வி................................

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

நட்பின் அடையாளம்

நண்பனுக்காக உயிரையும் கொடுக்கலாம்
ஆனால்..

உயிரைக் கொடுக்கும் அளவுக்கு 
உண்மையான நண்பன் கிடைப்பது தான் அரிது

என்றொரு பொன்மொழி உண்டு.



சங்க இலக்கியம் சுட்டும் நட்பின் அடையாளம்..
கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார்