பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

FB ஆசிரியர்களுக்கான முகநூல் FB

குழந்தைகளின் நுண்ணறிவு என்ற கடந்த இடுகையின் தொடர்ச்சியாக இந்த இடுகை அமைகிறது.
முகநூலிலேதான்(பேஸ்புக்) இன்றைய தலைமுறையினர் முகம் தொலைக்கின்றனர். காலை எழுந்தவுடன் கண்ணாடியில் தன் முகம் பார்க்கிறார்களோ இல்லையோ முகநூலில் என்ன நிலவரம் என்ன? என்பதைத்தான் முதலில் பார்க்கிறார்கள். இதில் லைக், கமென்ட்,ஷேர் என மூன்று கூறுகள் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன.
ஒருவர் பகிரும் கருத்து இன்னொருவருக்குப் பிடித்திருந்தால் லைக் என்றும்,அதில் எதுவும் குறை, நிறை இருந்தால் கமென்ட் பகுதியில் கருத்துரையளிக்கின்றனர். அந்தச் செய்தி நாலுபேருக்குத் தெரியவேண்டியதாக இருந்தால் அதனை ஷேர் செய்கின்றனர். இந்த முறை மக்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைப் பார்க்கும்போதெல்லாம் ஆசிரியர்களின் கடமை ஒன்று என் நினைவுக்கு வரும்..
நன்னூல் என்னும் இலக்கண நூல் மாணவர்களை மூன்று வகையாகப் பாகுபாடு செய்கிறது.

அன்ன மாவே மண்ணொடு கிளியே

இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.

நன்னூல் பொதுப்பாயிரம்
மாணாக்கனது வரலாறு


அன்னம் – அன்னம் பாலோடு தண்ணீர் கலந்திருந்தாலும் தண்ணீரிலிருந்து பாலை மட்டும் பிரித்து குடித்துவிடுமாம் அதுபோல ஆசிரியர் சொல்லும் கருத்துக்களில்,
நல்லது எது?
கெட்டது எது?
எடுத்துக்காட்டுக்காகச் சொல்வது எது?
மதிப்பெண்ணுக்காகச் சொல்வது எது?
நம் மதிப்பை உயர்த்தச் சொல்வது எது? என்ற பாகுபாடு தெரிந்து பகுத்து உணர்ந்து கொள்வதால் அன்னம் போல்வர் முதல்மாணாக்கர் என்பார் பவணந்தியார். அதேபோல...

பசு பசு மிகுந்த புல்லை உடைய இடத்தைக் கண்டால் அப்புல்லை வயிறு நிறைய மேய்ந்த பின்பு ஓரிடத்திற்கு போய் இருந்து சிறிது சிறிதாக வாயில் வருவித்துக்கொண்டு மென்று தின்றல் போல , முதன் மாணாக்கர், ஆசிரியரைக் கண்டால் அவர்தம் கல்வியறிவை தன்னுள்ளம் நிறையக் கேட்டுக்கொண்டு பின்பு ஓர் இடத்துப் போயிருந்து சிறிது சிறிதாக நினைவில் கொண்டு வந்து சிந்தித்தலாலும் தலைமாணாக்கரை பசுவோடும் ஒப்பிட்டு உரைப்பர்.






மண் – நிலத்தை நன்றாக உழுது, நீர்பாய்ச்சி, களைபறித்து உழவர் உழைத்தால் அதற்கேற்ப விளைச்சல் தரும் மண். அதுபோல இடைமாணாக்கர்கள் ஆசியரியரின் உழைப்புக்கேற்ப மதிப்பெண் எடுப்பார்கள்.

கிளி - தனக்குக் கற்பித்த சொல்லையன்றி வேறு ஒன்றையும் சொல்லாது அதுபோல, இடைமாணாக்கர் தமக்குக் கற்பித்த நூல் பொருளை அன்றி வேறொரு நூல் பொருளையும் சொல்லமாட்டார்கள் அதனால் இவர்களை இடைமாணாக்கர்கள் என்றனர்



ஓட்டைக் குடம் – எவ்வளவுதான் நீரை ஊற்றினால் குடம் ஓட்டையாக இருந்தால் அதில் நீர் தங்காது. அதுபோல இவ்வகை மாணவர்களுக்கு எவ்வளவு கற்பித்தாலும் அதனை இவர்கள் மறந்துவிடுவார்கள்.

ஆடு - ஒரு செடியிலே தழை நிறைந்திருந்தாலும் வயிறு நிறைய மேயாது செடிதோறும் போய் மேயும். அதுபோலக் கடைமாணாக்கர் ஓராசிரியரிடத்து மிகுந்த கல்வி இருந்தாலும் அவரிடம் நிறையக் கற்றுக்கொள்ளாது பலரிடத்தும் போய்ப் பாடங்கேட்பார்கள். அவ்வாறு கேட்டாலும் அவர்கள் மனதில் எதுவும் தங்குவதில்லை.

எருமை - குளத்து நீரைக் கலக்கிக் குடிக்கும் எருமை. அதுபோலக் கடைமாணாக்கர் ஆசிரியனை வருத்திப் பாடங்கேட்பார்கள் இருந்தாலும் அவர்கள் நினைவில் எதுவும் நிலைத்திருப்பதில்லை.

பன்னாடை - தேன் முதலியவற்றைக் கீழே விட்டு அவற்றில் உள்ள குப்பைகளைப் பற்றிக் கொள்ளுதல் போலக் கடைமாணாக்கர் நல்ல பொருளை மறந்து விட்டுத் , தீய பொருளைச் சிந்தித்துப் பற்றிக் கொள்வார்கள்.
மாணவர்கள் இவ்வாறு மூவகைப்பட்டவர்களாக இருந்தாலும் ஒரு ஆசிரியர் அவர்களை உற்றுநோக்கி...


  •       அவர்களின் தனித்திறனை உணர்ந்து அதனை அவர்களுக்கு அடையாளப்படுத்தி இது உன்னிடம் பிறர் விரும்பும் பண்பு (லைக்) என்று உணர்த்தவேண்டும்.


  •      அவர்கள் திருத்திக்கொள்ளவேண்டிய பண்புகளிருந்தால் அதனை அவர்களைத் தனியாக அழைத்து அவர்களுக்குப் புரியவைக்கலாம்.நல்ல பண்புகளாக இருந்தால் எல்லோர் முன்னிலையில் பாராட்டலாம் (கமென்ட்)        
  •      மாணவர்களின் சில பண்புகள் பலருக்கு முன்மாதிரியாக பெரிதும் பாராட்டப்படவேண்டியவையாக இருந்தால் அதனை பலர் முன்னிலையில் தெரியப்படுத்தலாம் (ஷேர்)

இன்றைய ஆசிரியர்களுக்கு முகநூலில் (பேஸ்புக்) கணக்கு இருந்தாலும், இல்லாவிட்டாலும் மாணவர்களின் முகம் என்னும் நூலை வாசிக்கத் தெரிந்திருக்கவேண்டும்.
வாசித்தால் மட்டும்போதாது மேற்சொன்னதுபோல லைக், கமென்ட், ஷேர் செய்தல் வேண்டும்.

இவ்வாறு செய்தால்,
     கடை மாணாக்கராக – இடைமாணாக்கராகவும்
     இடை மாணாக்கர் – தலைமாணாக்கராகவும்
தலை மாணாக்கர் – தலைசிறந்த மாணாக்கராகவும் உயர்வடைவார்கள் என்பது என் கருத்து.

தொடர்புடைய இடுகை

(IQ) குழந்தைகளின் நுண்ணறிவு (IQ)



11 கருத்துகள்:

  1. மிகவும் அருமை முனைவர் அவர்களே! இன்றைய நாட்டமான முகநூலையும் அன்றைய நன்னூலையும் இணைத்து மிக அழகாக செய்தி சொல்லியிருக்கிறீர்கள். நன்றி!

    பதிலளிநீக்கு
  2. இப்படி ஒன்னு இறக்கிறத இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்.பழையதை புதியதோடு இணைத்து சுவாராசியமாக சொல்லும் உங்கள் உத்தி அருமை.

    பதிலளிநீக்கு
  3. நல்ல ஒப்பீடு... பாராட்டுக்கள்... நன்றி...(TM 6)

    பதிலளிநீக்கு