பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

காகிதத் திருவோடுகள்!


அன்று..
கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு
இன்று...
கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் செருப்பு

அன்று....
நூல்கள் பல கண்டு
அதில் சிறந்ததைக் கற்றவனே பண்டிதனானான்!
இன்று...
கல்வி நிலையம் சென்றாலே போதும் பட்டம் கையில்!

சில நேரங்களில் குழப்பமாகத்தான் இருக்கிறது..
கையில் உள்ளது,
பட்டச் சான்றிதழா? காகிதத் திருவோடா?என்று..

பட்டம் பெற்ற பலரும்
வேலை தேடுபவர்களாகத்தானே இருக்கிறார்கள்?
பட்டம் பெற்ற துறைசார்ந்து
நாலு பேருக்கு வேலை தரமுடியும் என்ற
தன்னம்பிக்கை எத்தனைபேருக்கு வருகிறது..?

மாணவனுக்குள்ளே மறைந்திருக்கும்
தனித்திறனை அடையாளம் கண்டு
வெளிக்கொண்டுவரவேண்டிய கல்வி இன்று..

மதிப்பெண் எடுப்பது எப்படி
என்றுமட்டுமே சொல்லிக்கொடுக்கிறது!
அதனால் மாணவர்கள்
சொன்னதைச் செய்யும கணினிகளாகிப்போகிறார்கள்!

பாடம் நடத்தவேண்டிய ஆசிரியர்
சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கிறார்
கேள்விகேட்கவேண்டிய மாணவர்கள் தூங்கிப்போகிறார்கள்!

இப்போதெல்லாம் கல்விச்சாலைகள்..
மூளையில் உள்ள தகவல்களை அதற்குத் தெரியாமல்
வெள்ளைத்தாள்களுக்குத் திருடிக்கொடுக்கும்
பணியைத்தானே செய்துகொண்டிருக்கின்றன!

கல்வி, சந்தையாகிப்போனதால்
அங்கு சென்றவர்களெல்லாம் வியாபாரிகளாகிவிடுகிறார்கள்!

அன்று ஒரு பட்டம் பெற்றாலே வேலை கிடைத்தது
இன்று பல பட்டம் பெற்றவர்கள் பட்டியலில் காத்திருக்கின்றனர்.

அதனால் பட்டதாரிகளுக்கும் கூலித்தொழிளாளர்களுக்கும்
அதிகம் வேறுபாடு தெரிவதில்லை.

சில நேரங்களில் குழப்பமாகத்தான் இருக்கிறது..
கையில் உள்ளது,
பட்டச் சான்றிதழா?காகிதத் திருவோடா? என்று..

கல்லூரி மாணவர்கள் சிலரிடம் கேட்டேன்...

கான்வகேசன் என்றால் என்ன என்று..
கான்வர்சேசனா என்று கேட்டார்கள்..
கான்வகேசன் என்று தெளிவாகச் சொன்னேன்..

சிலர் நாளை டிக்ஸ்னரியைப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன் என்றார்கள்.
சிலர் கூட்டம் என்றார்கள்..
பலர் தெரியாது என்றார்கள்..

என்ன கொடுமை இது..
இப்போதெல்லாம் ஒன்றாம் வகுப்பு,இரண்டாம் வகுப்புகளிலேயே பட்டமளிப்புவிழா என்று நடத்துகிறார்களே..

இவர்கள் கல்லூரி வந்துவிட்டார்கள் இன்னுமா இவர்களுக்கு இதுகூடத் தெரியவில்லை என்று மனம் வருந்தினேன்..

அப்போதுதான் என் மனம் என்னிடம் கேட்டது..

இந்த மாணவர்கள் கையில் நாம் கொடுப்பது..
பட்டச் சான்றிதழா?காகிதத் திருவோடா? என்று..

தொடர்புடைய இடுகைகள்.

1. தாளில்லாக் கல்வி.


19 கருத்துகள்:

  1. பிள்ளைகளுக்கு நாம் வாழ்க்கைக் கல்வியை எங்கே கற்றுத்தருகிறோம்? பணத்தைத் துரத்திக் கொண்டு பெற்றோர் நாம் ஓடிக்கொண்டே, பட்டத்தைத் துரத்தி பிள்ளைகளை ஓடும்படி விரட்டிக்கொண்டே இருக்கிறோம். இந்த ஓட்டப்பந்தயத்திற்கு பெரும்பாலான ஆசிரியர்களும் விதிவிலக்கல்ல. உங்களைப் போன்ற ஒருசில ஆசிரியர்கள் நின்று சிந்திப்பதால்தான் மாணவ சமுதாயம் இன்னும் உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. மிகவும் அத்தியாவசியமான அலசல். நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிள்ளைகளுக்கு நாம் வாழ்க்கைக் கல்வியை எங்கே கற்றுத்தருகிறோம்? பணத்தைத் துரத்திக் கொண்டு பெற்றோர் நாம் ஓடிக்கொண்டே, பட்டத்தைத் துரத்தி பிள்ளைகளை ஓடும்படி விரட்டிக்கொண்டே இருக்கிறோம்.

      அழகாகச் சொன்னீர்கள் கீதா.

      உண்மை.

      நீக்கு
  2. அனைத்தும் உண்மை முனைவரே...

    இவைகள் எல்லாம் அனைவரும் உணர வேண்டும்...

    நன்றி… (TM 7)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. மாணவர்கள்
    சொன்னதைச் செய்யும கணினிகளாகிப்போகிறார்கள்

    மாணவ்ர்களோடு வாழ்ந்து தாங்கள் தந்த சிந்தனைகள் சிந்திக்கதூண்டுகின்றன..

    பதிலளிநீக்கு
  4. இன்றைய கல்வியை உணர்த்தும் சிறப்பானகவிதை! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில் சிறுவாபுரி முருகா சிறப்பெல்லாம் தருவாய்!
    http://thalirssb.blogspot.in

    பதிலளிநீக்கு
  5. இந்த மாணவர்கள் கையில் நாம் கொடுப்பது..
    பட்டச் சான்றிதழா?காகிதத் திருவோடா? என்று..//

    புதிய சொற்றோடர் யதார்த்த நிலையை
    இடியாய் உள்ளத்தில் இறக்கிப்போகிறது
    கல்வியின் அவல நிலையை
    மிக மிக நேர்த்தியாய் சொல்லிப்போகும் பதிவு
    அருமையிலும் அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. சரியாகச் சொன்னீர்கள். மனப்பாடம் செய்து பட்டம் வாங்கி ஏதும் தெரியாமல் யாருக்காவது வேலை செய்யக் கற்றுக்கொடுக்கிறதே தவிர, முதலாளியாய் விஞ்ஞானியாய் தனித்துவமாய் சிந்திக்கும் திறனை கற்றுக்கொடுப்பதில்லை இன்றைய கல்விமுறை. மதிப்பெண்ணை மற்றும் பாராமல் எல்லாத் துறைகளிலும் மாணவரை ஊக்குவிக்க வேண்டும். என்று வரும் அந்நிலை?

    பதிலளிநீக்கு