வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 25 ஆகஸ்ட், 2012

மலரினும் மெல்லியது காமம்



    சிறிய கூதளச்செடிகள் காற்றில் ஆடும் பெரிய மலை!
    அங்கு ஒரு பெரிய தேனடை!
    அதைக் கண்ட காலில்லாத முடவன், தன் உள்ளங்கையை சிறுகுடைபோல குவித்து தேனடையை நோக்கி சுட்டி கையினை நக்குவது போல...

    என் காதலர் என்னை நினைக்கவோ, விரும்பவோ இல்லை, எனினும் அவரை பலமுறை காண்பது கூட என் உள்ளத்துக்கு இனியதே!

    அவரைக் இப்போது காணாததால் அந்த இன்பமும் இப்போது எனக்கு இல்லாமல் போனது என்று தன் ஆற்றாமையைத் தோழியிடம் புலப்படுத்துகிறாள் தலைவி.

                         
    குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப் 
    பெருந்தேன் கண்ட விருக்கை முடவன் 
    உட்கைச் சிறுகுடைஐ கோலிக் கீழிருந்து 
    சுட்டுபு நக்கி யாங்குக் காதலர் 
    நல்கார் நயவா ராயினும்
    பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே

    குறுந்தொகை 60
    பரணர்

    (பிரிவிடை ற்றாமையால் லைவி தோழிக்குரைத்தது)

    பாடல் வழியே..

  1. முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டதுபோல என்று இன்றுவரை வழங்கப்பட்டுவரும் உவமை குறுந்தொகையிலேயே இடம்பெற்றுள்ளமை அறிந்துகொள்ளமுடிகிறது.
  2. தலைவன் தன்மீது பற்றில்லாமல் பரத்தையை நாடிச் செல்கிறான் என்பதைக் குறிப்பால் உணர்ந்த தலைவி, “பரத்தையர் என் காதலரைக் கூடினால் கூடக் கிடைக்காத இன்பம் நான் அவரைக் காண்பதாலேயே கிடைக்கிறது“ என்கிறாள். இது தலைவியின் இயலாமை தந்த வலியின் புலம்பல் என்று மட்டும் காணாது. மலரினும் மெல்லிது காதல் அது உடலைவிட, உள்ளத்தையே அதிகம் விரும்பக்கூடியது என்ற கருத்தை எடுத்தியம்புவதாகவே இப்பாடலைக் கொள்ளமுடிகிறது.

  3. இந்த சங்கஇலக்கியப்பாடல், நினைவுபடுத்தும் திருக்குறள்கள் இரண்டு.



    1.  மலரினும் மெல்லியது காமம் சிலரதன்
    செவ்வி தலைப்படு வார்

      (திருக்குறள்)                1289


    காமம் மலரை விட மென்மையானதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே

    அந்த சிலருள் குறுந்தொகைத் தலைவியும் ஒருத்தி என்று பாடல் வழியே உணரமுடிகிறது.

    2. பொருட் பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டறையில்
    ஏதில் பிணந்தழீஇ யற்று

      (திருக்குறள்)                913

    பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது என்ற வள்ளுவர் சுட்டும் பொருட்பெண்டிர், சங்ககாலப் பரத்தையரோடு ஒப்பிடத் தக்கவர்களாக உள்ளனர்.


    தொடர்புடைய இடுகைகள்




16 கருத்துகள்:

  1. நல்லதொரு பதிவு.. மலரினும் மெல்லியது காதல் என்பதை பழந்தமிழ் நூல்களின் வாயிலாக எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி முனைவர் அவர்களே..!

    பதிலளிநீக்கு
  2. இரண்டு திருக்குறளும் அருமையான உவமை முனைவர் சார் (TM 2)

    பதிலளிநீக்கு
  3. பரணரின் அற்புதமான குறுந்தொகைப் பாடலும், அழகான ஆங்கில மொழிபெயர்ப்பும் அற்புதம். காலில்லாத முடவனை தனக்கு உதாரணமாகச் சொல்லும் இந்த சங்க காலப் பெண்ணின் காதலும் அற்புதமே. கருத்தொருமித்தால், உண்மை இருக்குமானால் இவ்வித உணர்ச்சிகள் காதலில் சாத்தியமே. அழகான பதிவு. கூதளச் செடிகள் என்றால் தூதுவளைச் செடிகள் என்று அர்த்தம் என்பது கூடுதல் தகவல்.

    பதிலளிநீக்கு
  4. குறுந்தொகை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று; மிகவும் ரசித்து படிப்பேன். உங்களின் பகிர்வுக்கு நன்றி. இது என் முதல் வருகை. உங்களையும் என் வலைக்கு இனிதே வரவேற்கிறேன்.. தொடரும் நட்புடன் ஆயிஷா...

    பதிலளிநீக்கு
  5. உண்மைக் காதலையும் வாழ்வில் கடைபிடிக்கவேண்டிய நல்ல நெறியினையும் நம் தமிழ்க் கருவூலத்திலிருந்து சுட்டிக்காட்டி பதிவு செய்தது மிகவும் அருமை. நம் தமிழ் இலக்கியங்களைப் படித்து அறிந்தாலே வாழ்வைச் செம்மையாக வாழலாம் என்பதற்கு நல்ல எடுத்துகாட்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் மதிப்பீடு உண்மை கிரேஸ்.
      தமிழ் இலக்கியங்கள் வழி தமிழர்தம் வாழ்வியல் அனுபவங்கள் அழகாகப் பதிவுசெய்யப்பபட்டுள்ளன.

      தங்கள் புரிதலுக்கு நன்றி.

      நீக்கு
  6. அருமை சார்.. நம் முன்னோர்கள் எவ்வளவு நயத்தக்க நாகரீகமாய் வாழ்ந்தனர் என்பதனைக் காட்டுவது இலக்கியமே என்பது உண்மை தான் போலும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அன்பரே தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றிகள்.

      நீக்கு
  7. இனிமையான பகிர்வு. குறுந்தொகைப் பாடலும் அதற்கேற்ற திருக்குறளும் ரசிக்கத்தக்கவை.

    தொடர்ந்து பகிர வாழ்த்துகளுடன்....

    பதிலளிநீக்கு
  8. //மலரினும் மெல்லிது காதல் அது உடலைவிட, உள்ளத்தையே அதிகம் விரும்பக்கூடியது//

    என்ற அருமையான கருத்தினை மென்மையாக, மலரைவிட மென்மையாக, தங்களுக்கே உரித்தான மேன்மையுடன் எடுத்துச்சொல்லியுள்ளது, மிக அழகாக உள்ளது. பாராட்டுக்கள். நன்றிகள்.

    பதிலளிநீக்கு