சொர்க்கம்
இருக்கா? இல்லையா?
என்ற
கேள்விக்கு இருக்கு என்று சிலரும், இல்லை என்று சிலரும் சொல்வார்கள். இன்னும்
சிலர் அது வேறெங்குமில்லை, நாம் வாழும் வாழ்க்கையில்தான் இருக்கிறது என்று
சொல்வார்கள். என்னைக் கேட்டால்..
கோபம் நரகம் என்றால்
அமைதி சொர்க்கம்!
சுயநலம் நரகம் என்றால்
பொதுநலம் சொர்க்கம்!
ஆசை நரகம் என்றால்
துறவு சொர்க்கம்!
பறித்தல் நரகம் என்றால்
கொடுத்தல் சொர்க்கம்!
என்பேன். எனக்கு வந்த குறுந்தகவல் ஒன்று...
மனைவி - என்னங்க.. சொர்க்கம்
சொர்க்கம் என்று சொல்றாங்களே அங்கெல்லாம கணவனும், மனைவியும் தனித்தனியாத்தான்
இருப்பாங்களாமே.. அப்படியா?
கணவன்- ஆமா! அதனாலதான் அது
சொர்க்கம்!
மனைவி-!!!
இன்னும் ஆழமாக
சிந்தித்தால் சொர்க்கமும், நரகம் என்பதெல்லாம் மக்களை நல்வழிப்படுத்த, நம்
முன்னோர் எடுத்துக்கொண்ட முயற்சி என்பது விளங்கும்.
வெயிலின் அருமை
நிழலில் தெரிவது போல
நிழலின் அருமை
வெயிலில் தானே தெரியும்!
மழைக்காலத்தில்
எப்படா வெயிலடிக்கும் என்றும்
வெயில்காலத்தில்
எப்படா மழை வரும் என்று நாம் எதிர்ப்பார்ப்பது இயல்புதானே..
இராவணன் என்ற
கதாபாத்திரம் இல்லையென்றால் இராமன் என்ற கதாபாத்திரத்தை நமக்கு தெய்வமாகத்
தெரிந்திருக்காதல்லவா?
அதுபோல
தீமைதான் நன்மையின் மதிப்பை முழுவதும் உணர்த்துவது. அதனால்தான் நம் முன்னோர்
தீமையை நரகம் என்றும், நன்மையை சொர்க்கம் என்றும் பலவடிவங்களில் நமக்குச்
சொல்லிச்சென்றுள்ளனர்.
சரி...
சொர்க்கம்
பற்றி நாம் இவ்வாறெல்லாம் சிந்திக்கும்போது குறுந்தொகையில் ஒருபாடல்
சிந்திக்கத்தக்கதாகவுள்ளது.
தலைவனின்
பிரிவால் வாடியிருக்கிறார் தலைவி. அவன் உன்மீது அன்பில்லாதவன் என்கிறாள் தோழி.
அதற்குத் தலைவி, இல்லை அவன் என்மீது பேரன்புடையவன் என்கிறாள்.
தலைவனோடு
சேர்ந்திருக்கும்போது கிடைக்கும் இன்பத்தைவிட, அவனைப் பிரிந்திருக்கும்போது
கிடைக்கும் துன்பமும் ஒருவகை இன்பம் தான். அவன் நினைவால் வாடும் ஒவ்வொரு
மணித்துளிகளும் இன்பத்தில் கரைவன என்கிறாள் தலைவி.
பாடல் இதோ...
கறிவளர் அடுக்கத்து ஆங்கண், முறி அருந்து
குரங்கு ஒருங்கு இருக்கும் பெருங்கல் நாடன்
இனியன், ஆகலின், இனத்தின் இயன்ற
இன்னாமையினும், இனிதோ
இனிது எனப் படூஉம் புத்தேள் நாடே?
குறுந்தொகை -288
(தலைவன் அன்பிலன் என்று தோழி கூறிக் கொண்டிருப்ப, அவனது வரவு உணர்ந்த தலைவி அவன் செய்வன யாவும் இனியன என்று கூறியது.)
- குரங்குகள் இனிய கனியை உண்ணும்போது தம் கூட்டத்தோடு சேர்ந்து இருப்பதுபோல இன்னாத சுவையுடைய மிளகின் தளிர்களை உண்ணும்போதும் தம்கூட்டத்தோடு சேர்ந்தே இருக்கும். அதுபோலத் தலைவி இன்பமோ துன்பமோ தம் தலைவனோடு சேர்ந்திருப்பதே இன்பம். அந்த இன்பத்தோடு சொர்க்கத்தைக்கூட ஒப்பிட்டுக்கூறமுடியாது என்கிறாள்.
- தேவருலகம் துன்பமில்லாதது. இன்பமே உடையதாகக் கூறப்படுவது. தலைவனோடு, தலைவி கூடிவாழும் வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் கலந்து வரும். அவனோடு தலைவி சேர்ந்திருந்தால் கிடைக்கும் இன்பமும், அவன் பிரிவின் போது அவன் நினைவால் வாடியிருத்தலால் கிடைக்கும் துன்பமும் இன்பமாகவே உள்ளது. பிரிவின் துயரம் இருவருக்கும் இருத்தலால் அவன் என்மீது அன்பில்லாதவன் என்று கூறுவது எவ்விதத்தில் சரியானதாக இருக்கும்?
என்று தோழியைப் பார்த்துக் கேட்கிறாள் தலைவி.
பாடல்வழியே..
- இல்வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்ததுதான்.
- இன்பம் மட்டுமே இருந்தால் இன்பத்துக்கு மதிப்பில்லாமல்போய்விடும்.
- துன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கையின் பொருளே புரியாமல்போய்விடும்.
- இன்பமோ, துன்பமோ நிலையில்லாதது.
இன்பத்துக்குள் துன்பமும் உள்ளது.
துன்பத்துக்குள் இன்பமும் உள்ளது.
என்ற புரிதலே நரகத்தைக்கூட சொர்க்கமாக்கும் வாழ்வியல் நுட்பம்.
அதனை இந்தப்பாடல் அழகாக வெளிப்படுத்துகிறது. இப்பாடலில் தலைவிக்கு இந்த
வாழ்வியல் நுட்பம் புரிந்திருக்கிறது. அதனால் சொர்க்கம் கூட இல்வாழ்க்கையில்
கிடைக்கும் இன்பதுன்பங்களுக்கு இணையானதல்ல என்கிறாள் தலைவி.
- சொர்க்கம் இருக்கா? இல்லையா? என்று சிந்திப்பதைவிட இதுபோல துன்பங்களைக்கூட இன்பங்களாக எண்ணிக்கொள்ளும் மனநிலையை நாமும் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பது இவ்வகப்பாடல்தரும் வாழ்வியல் தத்துவமாக உள்ளது.
//கோபம் நரகம் என்றால்
பதிலளிநீக்குஅமைதி சொர்க்கம்!
சுயநலம் நரகம் என்றால்
பொதுநலம் சொர்க்கம்!
ஆசை நரகம் என்றால்
துறவு சொர்க்கம்!
பறித்தல் நரகம் என்றால்
கொடுத்தல் சொர்க்கம்!//
நல்ல கருத்து... வாழ்த்துகள் குணா.
சோர்க்கப் பாதைகளை இலக்கியத்தின் ஊடே சிறப்பாகவும் விளக்கமாகவும் தந்திருக்கிறீர்கள்...
பதிலளிநீக்குஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்
தங்கள் வருகைக்கும் மதிப்புரைக்கும் நன்றி மதி.சுதா
நீக்கும்ம்ம்....
பதிலளிநீக்குஅருமை நல்ல விளக்கங்கள்
அருமையான பதிவு முனைவரே
விரிவான விளக்கம் சார்... நல்ல கருத்துக்கள்... பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...! (த.ம. 2)
பதிலளிநீக்குஅருமையான பதிவு !!! சங்கப் பாடல்கள் ஊடான விளக்கமும் அருமை .. சொர்க்கம் நரகம் என்பது உண்மையாக இல்லாமல், ஒரு எடுத்துக் காட்டுக்காக படைக்கப்பட்டதாகவே கருதுகின்றேன் .. நன்றிகள் !!!
பதிலளிநீக்குIt is really very very nice article.thank you
பதிலளிநீக்குநன்றி சந்திரமோகன் தங்கசாமி.
நீக்கு