வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 31 ஜூலை, 2012

விகடன் குழுமத்தாருக்கு நன்றி

மகிழ்ச்சியில் மனம் நிறைந்திருக்கிறது. 
இந்த வாரம் கோவைப் பதிப்பில் வெளியான ஆனந்தவிகடனுடன் இணைப்பாக வழங்கப்பட்ட என்விகடனில் வலையோசை பகுதியில் எனது வேர்களைத்தேடி என்ற வலைப்பதிவை அறிமுகம் செய்த விகடன் குழுமத்தாருக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது பல்வேறு கட்டுரைகளையும் விகடன் குழுமத்தார் இளமைவிகடனில் பலமுறை வெளியிட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும்  எனது கட்டுரை இளமைவிகடனில் வெளியிடப்பட்ட போதும்,
 இதுதான் பெரிய மகிழ்ச்சி.. இதுதான் பெரிய மகிழ்ச்சி என்று எண்ணிவந்திருக்கிறேன்.

இப்போது என்விகடனில் வலையோசையில் வேர்களைத்தேடி அறிமுகம் செய்யப்பட்டபோது அதையெல்லாம் விடப் பெரிய மகிழ்ச்சி 
இதுதான்! இதுதான்! என்று சொல்கிறது மனம்!

இந்த மகிழ்ச்சி நிறைந்த நேரத்தில் நான் தொடர்ந்து எழுதக் காரணமாக இருந்த வலையுலக சொந்தங்களையும், திரட்டிகளையும் நன்றியோடு எண்ணிப்பார்க்கிறேன்.

நன்றி! நன்றி! நன்றி!


ஞாயிறு, 29 ஜூலை, 2012

திருமண அழைப்பிதழ் மாதிரி


தங்கத் தடாகத்திற் கெழிலூட்டும்
தாமரைப்பூ போல - என்
அங்கத்தினுள் பூத்திருக்கும்
ஆருயிர் நட்பே! வணக்கம்.

வியத்தகு விக்ருதி வருடம்
உயர்மிகு ஆவணித் திங்கள் 13ஆம் நாள்(29.08.2010)
நலம் மல்கு ஞாயிற்றுக் கிழமை
கதிரெழு நற்காலை 6.00 -7.30 மணிக்குள்
திருமுதுகுன்றத்திலுள்ள (விருத்தாச்சலம்,ஆலடி ரோடு)
ராஜலெட்சுமி திருமண மண்டபத்தில்....

பண்ருட்டி சரஸ்வதி நகர்வாழ்
.கண்ணன்-கலைச்செல்வி இவர்களின்
பைங்கொடிப் பாவை, முகநகைப் பூவை
.செங்கமலத்தாயார் எம்.எஸ்சி.,பிஎட்., என்ற
மங்கலச் செல்விக்கும் எனக்கும்- நடைபெறும்
குங்குமத் திருவிழாவிற்கு - தாங்கள்
தங்கள் சுற்றத்துடன்
வருகை தந்து வாழ்த்திட வேண்டுகிறேன்

என்றும் நட்புடன்

கே.வெங்கடேசன்.எம்..,எம்பில்.,பிஎட்.,
ஆசிரியர் பயிற்றுநர்(வட்டார வள மையம் , புவனகிரி
கே.பூவனூர்


திருமண அழைப்பிதழை அழகிய தமிழில் உருவாக்கவேண்டும் என்ற வேட்கை இன்று பலருக்கும் ஏற்பட்டிருப்பது பாராட்டுதலுக்குரியதாகும். 

இனிய தமிழில் திருமண அழைப்பிதழை வடிவமைத்த அன்பு நண்பர் கே.வெங்கடேசன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுதலையும், வாழ்த்துதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


தொடர்புடைய இடுகை

வெள்ளி, 20 ஜூலை, 2012

நீச்சல் பழகலாம் வாங்க..



    நீச்சல் சிறந்த தற்காப்புக்கலை ஆகும். நீச்சல் தெரிந்த ஒருவர் தம் உயிரைத் தற்காத்துக்கொள்வதோடு, தக்கநேரத்தில் நீச்சல் தெரியாதவர்களுடைய உயிரையும் காப்பாற்றமுடியும்.

    இன்றெல்லாம் நீச்சல்  என்பது கல்வியாகப் போய்விட்டது. நீச்சல் பள்ளிகளெல்லாம் பணம் பெற்றுக்கொண்டு நீச்சலடிப்பது எப்படி என்று சொல்லித்தருகின்றன.

    அன்றெல்லாம் ஆற்றிலும், குளங்களிலும் தண்ணீரைக் குடித்துக் கற்றுக்கொண்டவர்களின் பிள்ளைகள் இன்று நீச்சல்ப்பள்ளிகளில் நீச்சல் கற்றுக்கொண்டிருக்கின்றனர்.

    நீச்சல் சிறந்த உடற்பயிற்சியாகும். நீச்சலடித்தவர்கள் உடலும், உள்ளமும் சுறுசுறுப்பாக இருப்பதை உணரலாம்.

                  பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
                  இறைவன் அடிசேரா தவர்

    திருக்குறள் 10

    இறைவனுடைய திருவடிகளை நாடியவர்கள் மட்டுமே பிறவிப் பெருங்கடலை நீந்தமுடியும். மற்றவர்கள் கடக்கமுடியாது என்பர் வள்ளுவர்.

    நாமெல்லாம் பிறவி என்னும் பெரிய கடலில் தான் நாள்தோறும் நீந்திக்கொண்டிருக்கிறோம். ம்மில் சிலருக்கு மட்டுமே நீச்சல் தெரிகிறது. பலர் உயிருக்காகப் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்.


    நீச்சல் என்ன அவ்வளவு கடினமா?


    இறந்த மீன்கள் மட்டுமே ஓடும் நீரில் அடித்துச் செல்லப்படுகின்றன என்றொரு பொன்மொழி உண்டு.

    எவ்வளவு ஆழமான வாழ்வியல்நுட்பத்தை இப்பொன்மொழி உணர்த்துகிறது..?
    உயிருள்ள எந்த மீனாக இருந்தாலும் நீரை எதிர்த்து நீந்தும். முடியாத சூழலில் தான் நீரோடு அடித்துச் செல்லப்படும்.

    காலவெள்ளத்தில் நாம் இறந்த மீன்போல அடித்துவரப்பட்டிருக்கிறோமா?
    உயிருள்ள மீன்போல எதிர்நீச்சல் போட்டிருக்கிறோமா?

    என்ற மீள்பார்வை நாம் யார்? என்பதை நமக்கு உணர்த்தும்.

    நீச்சல் கலையின் நுட்பங்கள்.


  1. கருவறையிலேயே நாமெல்லாம் தண்ணீர்க்குடத்தில் நீச்சல் கற்றவர்கள் தானே! அதைப் பலர் மறந்துவிட்டோம் என்பதுதான் நாம் மறந்துபோன உண்மை.
  2. நம் உடல் காற்றடைத்த பை என்பது நம் நினைவில் இல்லை அவ்வளவுதான்.
  3. நிலத்தில் சுவாசிப்பதுபோலவே நம்மால் நீரிலும் சுவாசிக்கமுடியும் என்பதுதான் நாம் உணரவேண்டிய நுட்பம்.
  4. கைகளையும், கால்களையும் உதைத்துத் தண்ணீரோடு சண்டையிடுவதல்ல நீச்சல். மனதோடு பேசி, சுவாசக் காற்றைக் கட்டுப்படுத்தும் கலையே நீச்சல் என்பதை நாம் உணரவேண்டும்.
  5. தண்ணீரின் ஒரு கூறுதானே நாம். தண்ணீருக்கும் நமக்கும் இடையே நடக்கும் விளையாட்டுதானே நீச்சல். தண்ணீரை நாம் வென்றாலும் மிதப்போம், தோற்றாலு்ம் மிதப்போம்.. இதிலென்ன வேறுபாடு என்றால்,

  6. தண்ணீரை நாம் வென்றால் உயிரோடு மிதப்போம்
    தண்ணீர் நம்மை வென்றால் உயிறின்றி மிதப்போம் அவ்வளவுதான்.

    நம் உடல் இப்படித் தண்ணீரில் மிதப்பதற்கு எந்தச் சூழலிலும் தயாராகவே இருந்தாலும் நம் மனம் தான் உடலோடு சிலநேரங்களில் எதிர்வாதம் செய்துகொண்டிருக்கிறது. நம் மனதிடம் நாம் பக்குவாகப் பேசி அதற்குப் புரியவைத்துவிட்டால் போதும் நீச்சல் எளிதில் வந்துவிடும்.

    நீச்சல் தெரிந்தவனுக்குக் கடலின் ஆழமும் காலளவுதான்
    நீச்சல் தெரியாதவனுக்கோ காலளவு நீர்கூடக் கடலின் ஆழம்தான்.

    கடலின் ஆழத்தைவிடவா? நமக்கு வாழ்வில் துன்பங்கள் வந்துவிடப்போகிறது..?

    நீரில் மட்டுமல்ல நிலத்தில் வரும் துன்பங்கள் கூடப் பெரிதல்ல என்னும் நுட்பத்தையும் நீச்சல் நமக்கு உணர்த்துகிறது.  முடிந்தவரை நாமும் நீச்சல் கற்றுக்கொண்டு, இளம் தலைமுறையினருக்கு நீச்சல் கற்றுக்கொடுப்போம்.

     தொடர்புடைய இடுகைகள்

செவ்வாய், 17 ஜூலை, 2012

இந்தப் பிறவியல் மட்டுமல்ல...



தமிழ் உணர்வாளர்கள் சிலர் தம் திருமண அழைப்பிதழ்களில் திருக்குறளையோ, சங்கப்பாடல்களையோ முன்பக்கத்தில் இடுவதைக் காணமுடிகிறது.

“இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியர் எம் கணவனை
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே“ 
என்ற பாடலையும் திருமண அழைப்பிதழ்களில் காணமுடிகிறது. இப்பாடலின் பொருளை இவர்கள் நன்கு அறிந்து தான் அழைப்பிதழில் அச்சடிக்கிறார்களா? இல்லை மேலோட்டமாகத் தான் புரிந்து கொள்கிறார்களா? என்பது சிந்திக்கத் தக்கதாகவுள்ளது.


பாடலைக் காணலாம் வாங்க,


அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து 

மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப 

இம்மை மாறி மறுமை ஆயினும் 
நீ ஆகியர் எம் கணவனை 
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே. 


குறுந்தொகை -49

அம்மூவனார்
தலைவன் பரத்தை மாட்டுப் பிரிந்த வழி ஆற்றாளாகிய தலைவி,அவனைக் கண்டதும் ஆற்றாமையை வெளிப்படுத்துவது.


இப்பாடலின் இம்மூன்று அடிகளை மட்டும் பார்க்கும் போது தலைவி தலைவனைப் பார்த்து இந்தப் பிறவி மாறி அடுத்த பிறவியிலும் நீதான் என் கணவனாக வேண்டும் நானே உனக்குப் பிடித்த மனைவியாக வேண்டும் எனக் கூறுவது போலத்தான் உள்ளது. இந்த அளவில் புரிந்து கொண்டு இப்பாடலை அழைப்பிதழில் போட்டு விடுகிறார்கள்.

இப்பாடலின் முன்னிரண்டு அடிகளையும் அறிந்தால் இப்பாடலைப் அழைப்பிதழ்களில் பயன்படுத்துவார்களா என்பது ஐயம் தான்.

இப்பாடலின் முழுமையான பொருள்.

நீயாகியர் என் கணவனை- என்றமையால் யானாகியர் நின் மனைவி என்பது விளங்கும்.மனைவியாக இருப்பினும் நெஞ்சு நேர்பளாம் பேறு பரத்தைக்கே வாய்க்கப் பெற்றுள்ளது என்ற தலைவியின் வருத்தம் இப்பாடலின் உள்ளீடாகவுள்ளது.

தலைவன் பரத்தையரிடம் சென்று வருகிறான். மனம் நொந்த தலைவி, தலைவனின் தவறைச் சுட்டிக்காட்டுவது போல, இப்பிறப்பில் தான் நான் உனக்குப் பிடித்தவளாக வாழஇயலவில்லை, அடுத்த பிறவியிலாவது பரத்தையரிடம் செல்லாதவனாக நீயும், உன் மனதுக்குப் பிடித்தவளாக நானும் என நாம் ஒற்றுமையாக வாழ்வோம் என உரைக்கிறாள் தலைவி.

திருமணம் என்பது அடுத்தபிறவிக்குக்கூட தொடர்ந்துவரவேண்டியது என்ற சிந்தனை..


காலையில் திருமணம் செய்துவிட்டு மாலையில் விவாகரத்து செய்யும் இன்றைய தலைமுறையினர் கூடப் புரிந்துகொள்ளவேண்டியதாகவுள்ளது.

திருமண அழைப்பிதழ்களில் இப்பாடலை பதிப்பிக்கவிரும்புவோர் இதன் முழுப் பொருளையும் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இப்பாடலின் பொருளை இங்கு பதிவுசெய்கிறேன்.

தொடர்புடைய இடுகைகள்


திருமண அழைப்பிதழ்கள் மாதிரி

திங்கள், 16 ஜூலை, 2012

காவல்துறை நம் நண்பன் (ஈரோடு)


ஈரோடு போக்குவரத்துக் காவல்துறையினால், ஈரோடு பேருந்துநிலையம் அருகே வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வுப் பலகையைத் தான் மேலே காண்கிறீர்கள்.

இந்தப் புள்ளிவிவரங்களைக் காணும்போது அதிர்ச்சியாக இருந்தாலும், வாகனங்களை மிகவும் கவனமாக ஓட்டவேண்டும் என்ற சிந்தனை காண்போர் ஒவ்வொருவருக்கும் தோன்றுகிறது.

ஈரோடு போக்குவரத்துக் காவல்துறையினருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 15 ஜூலை, 2012

இந்த மாணவர்களைப் பார்த்து அழுவதா? சிரிப்பதா?


    தேர்வறையில் சில மாணவர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கும். படித்தவர்கள் நிமிர்ந்துகூடப் பார்க்காமல் எழுதிக்கொண்டிருப்பார்கள். படிக்காதவர்களும் எழுதிக்கொண்டிருப்பார்கள். அருகே சென்று பார்த்தால் தான் படித்தவர் யார்?படிக்காதவர் யார்?என்று தெரியும்.

    படிக்காத சில மாணவர்கள்.....
  1. கதை கதையாக எழுதிக்கொண்டிருப்பார்கள்.
  2. எழுதியதையே மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டிருப்பார்கள்.
  3. வினாக்களையே பதிலாக எழுதிக்கொண்டிருப்பார்கள்
  4. நுழைவுச்சீட்டில் உள்ள அறிவுரைகளைப் எழுதிக்கொண்டிருப்பார்கள்.
  5. வினாக்களைப் பற்றிக் கவலைப்படாமல் தனக்கு என்னென்ன நினைவிருக்கிறதோ அதையெல்லாம் எழுதிக்கொண்டிருப்பார்கள்.
  6. அருகே இருக்கும் மாணவன் வேறு தேர்வு எழுதிக்கொண்டிருப்பான். அதைக்கூடப் பார்த்து எழுதுவார்கள்.

  7. இவர்களின் நிலையைப் பார்த்தால் ஒரு கிராமிக்கதை தான் நினைவுக்கு வரும்
    இக்கதையில் வரும் மருகனுக்கு எழுதப்படிக்கவே தெரியாது. அந்தக் கிராமத்தில் யாரும் பள்ளிக்கூடப்பக்கமே சென்றதில்லை. இந்த மருமகன் மட்டும் ஒருநாள் பள்ளி சென்றிருந்தார் அதனால் இவரை “நாலெழுத்துப் படித்தவர்“ என்று ஊர்மக்கள் போற்றிவந்தனர். இவருக்கு வந்த சோதனையைப் பார்க்கலாம் வாங்க..


          படிப்பறிவில்லாத கிராமம். அங்கு ஒருவர் திருமணமாகி மருமகனாகச் சென்றார். ஊருக்குள் படித்தவர் இவர் ஒருவர்தான் என்பதால் மக்கள் இவருக்கு  அளவுக்கு அதிகமாகவே மதிப்பளி்ததார்கள்.

    ஒருநாள் ஊரிலிருந்து கடிதம் ஒன்று வந்தது. நம்ம மருமகன்தான் படித்தவராச்சே! என்று வரிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள்.

    இவரும் கடிதத்தை வாங்கி நீண்டநேரம் பார்த்துக்கொண்டே இருந்தார். திடீரென என்ன நினைத்தாரோ அவர் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.

    வீட்டோடு பதறித்தான் போனார்கள் ஏதோ துக்கமான செய்திதான் கடிதத்தில் வந்திருக்கிறது என்று.

    “சும்மா சொல்லுங்க மருமகனே.. கடிதத்தில் என்னதான் வந்திருக்கிறது?“
    என்று கண்ணீர் மல்கக் கேட்டார்கள்.

    அவர்களின் தேற்றுதலும்,கண்ணீரும் மருகனுக்கு மேலும் கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது.

    இவர்களின் ஆரவாரத்தைக் கேட்டு அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களெல்லாம் இவர்களின் வீட்டில் கூடிவிட்டார்கள். மருமகன் குடும்பத்தோடு அழுவதையும், கையில் கடிதம் இருப்பதையும் பார்த்து வந்தவர்களும் பெருங்கூப்பாடு போட்டு அழ ஆரம்பித்துவிட்டார்கள்.

    மருகனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

    இவரும் என்னதான் செய்வார் பாவம்!

    இவரும் ஒருகாலத்தில் பள்ளி சென்றவர் தான் அதுவும் ஒரே ஒருநாள்தான் சென்றார். அவருக்குப் படிப்புவரவில்லை என்று அதற்குமேல் பள்ளிக்கே செல்லவில்லை. இருந்தாலும் நாலெழுத்துப் படித்தவர் என்பதால் இவருக்கு இவ்வளவு மரியாதை கொடுத்தார்கள் ஊர்மக்கள்.

    இப்படியொரு சூழல் வரும் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை.
    சரி சமாளிப்போம் என்று...

    கடிதத்தை பார்த்தார்.. ஒரு எழுத்துக்கூடவா நமக்குத் தெரியாமல் போய்விடும். அவர் பள்ளி சென்றபோது ஆசிரியர் எழுத்துக்களைக் கரும்பலகையில் எழுதி நடத்திக் கொண்டிருந்தார். அதில் “மா“ என்ற எழுத்து மட்டும் தான் இவருக்கு இந்தச்சூழலில் நினைவுக்கு வந்தது. சரி அந்த மா வாவது எங்காவது கடிதத்தில் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தார். கண்டேபிடித்துவிட்டார்..

    ஆம் அன்று ஆசிரியர் சொல்லித்தந்த அதே மா தான். இருந்தாலும் அவர் கரும்பலகையில் எழுதிக்காட்டியபோது மா பெரிய எழுத்தாக இருந்ததே. கடிதத்தில் இப்போது நாம் பார்க்கும் மா சிறிய எழுத்தாக உள்ளதே என்று இவருக்குக் குழப்பம் வந்துவிட்டது.

    இருந்தாலும் என்ன! தான் படித்ததைச் சொல்லியாகவேண்டுமே.
    மருமகன் இப்படிச் சொன்னார்...

    சின்ன மா இருக்கு,பெரியமா இல்லை. என்று..

    இது போதாதா கிராமத்துவாசிகளுக்கு. ஒப்பாரிவைத்து அழ ஆரம்பித்துவிட்டார்கள்.

    என்ன?சின்னாம்மா இருக்காங்க..
    பெரியம்மா இல்லையா..?
    பெரியம்மா போயிட்டாங்களா..
    ஆத்தா போயிட்டியா...
    என்று எல்லோரும் சேர்ந்து அழ ஆரம்பித்துவிட்டார்கள்.

    (இந்தக் கதை நகைச்சுவைக்காக மட்டுமல்ல நம் நாட்டுக் கல்விநிலைகுறித்து மதிப்பீடு செய்துகொள்வதற்காகவும் தான்)

    தொடர்புடைய இடுகைகள்

வெள்ளி, 13 ஜூலை, 2012

அந்த மகராசன் மிக நல்லவன்


ஒரு நாட்டில் ஒரு அரசன் இருந்தான். மிகவும் 

கொடுமைக்காரன்மக்களை வரிகளால் வாட்டி 
வதைத்துக்கொண்டிருந்தான்.
மக்களுக்கு வீட்டுக்கு ஒரு மூட்டை நெல்கொடுத்தான்அதற்குப் பதிலாக ஒரு மூட்டை அரிசி வாங்கிக்கொண்டான். அதனால் மக்களுக்கு அந்த அரசன் மீது கடுமையான கோபம்.
இவன் எப்படா இறப்பான் என்று மனம் நொந்துபோயிருந்தார்கள்.

அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஒரு நாள் அந்த அரசன் நோய்வாய்ப்பட்டான்.அப்போது அந்த அரசனுக்கு ஒரு எண்ணம் வந்தது.இத்தனை ஆண்டுகாலம் மிகவும் சுயநலமாகவே வாழ்ந்துவிட்டோம். நாட்டில் ஒருவருக்குக் கூட தன் மீது மதிப்பும் இல்லை, மரியாதையும் இல்லை. தன்னை நல்லவன் என்று ஒருவர் கூட சொல்லவில்லையே என்ற வருத்தம் வந்தது. தன் மகனை அழைத்து.“இதே மக்கள் தங்கள் வாயால் என்னை அந்த மகராசன் மிக நல்லவன் என்று சொல்லவேண்டும்“ என்று தன் கடைசி ஆசையைச் சொல்லிவிட்டு உயிர்துறந்தான்.  தன் தந்தையின்  இறுதி ஆசையல்லவா இதை நிறைவேற்றியே தீரவேண்டும் என்று முடிவு செய்த இளவரசன் மக்களிடம் கீழ்க்கண்டவாறு அறிவிப்பு செய்தான்.

“ஒவ்வொரு வீட்டுக்கும் நான் ஒரு மூட்டை உமி தருவேன். அதற்குப் பதிலாக நீங்கள் ஒரு மூட்டை அரிசி தரவேண்டும்“  என்பது தான் அந்த அறிவிப்பு.

மக்களுக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. அதனை வெளிப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை எண்ணிப்பார்த்து தம் தலைவிதி என்று எண்ணிக்கொண்டு இந்த இளவரசனுக்கு அந்த மகராசனே பரவாயில்லை. அவன் இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்திருக்கலாம் 'அந்த மகராசன் மிக நல்லவன்' அவன் நெல்லை கொடுத்துவிட்டாவது அரிசிகேட்டான். இவன் உமியைக் கொடுத்துவிட்டல்லவா அரிசிகேட்கிறான் என்று சொன்னார்கள்..

இறந்துபோன அரசனின் ஆன்மா நிறைவடைந்திருக்கும் என்று எண்ணிக்கொண்டான் இளவரசன்.

இப்படியொரு கதை உண்டு.

இந்தக் கதை ஏன் இதோடு முடியவேண்டும்..

இதை இன்றைய சூழலோடு கொஞ்சம் வளர்க்கலாமே..

             அந்த இளவரசனுக்கு முதுமைக்காலத்தில் தன் தந்தையைப் போலவே எண்ணம் வந்தது. நம்ம ஊரு அரசியல்வாதிகளை அழைத்து..

என்னைப் போல மகராசன் உலகத்திலே இல்லை என்று இதே மக்கள் தம் வாயால் சொல்லவேண்டும்“ என்று கேட்டுக்கொண்டான்.


நம்மாளுங்க எப்படிப்பட்டவங்க.

கோடிக்கணக்குல ஊழல் செய்பவர்களுக்கு இது பெரிய செயலா என்ன..?

ஒரு சாக்கை மட்டும் கொடுத்து ஒரு மூட்டை  அரிசி கொடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்..

வழக்கம் போல புலம்பிக்கொண்டு மக்கள் ஒரு மூட்டை அரிசி கொடுத்தார்கள்.

இப்போது  சொன்னார்கள் அந்த மக்கள் “அந்த மகராசன் மிக நல்லவன்“ என்று இளவரசனை.

இன்றைய அரசியல்வாதிகள் கொடுத்த சாக்கு என்பதை இலவசம் என்றும்
மக்கள் கொடுத்த ஒரு மூட்டை அரிசி என்பதை, மக்கள் தேர்தலில் அளிக்கும் ஓட்டு என்று எண்ணிக்கொண்டாலும் தவறில்லை.




 தொடர்புடைய இடுகைகள்

புதன், 11 ஜூலை, 2012

சொர்க்கமே வேண்டாம் போ!


சொர்க்கம் இருக்கா? இல்லையா?

என்ற கேள்விக்கு இருக்கு என்று சிலரும், இல்லை என்று சிலரும் சொல்வார்கள். இன்னும் சிலர் அது வேறெங்குமில்லை, நாம் வாழும் வாழ்க்கையில்தான் இருக்கிறது என்று சொல்வார்கள். என்னைக் கேட்டால்..

கோபம் நரகம் என்றால்
அமைதி சொர்க்கம்!
சுயநலம் நரகம் என்றால்
பொதுநலம் சொர்க்கம்!
ஆசை நரகம் என்றால்
துறவு சொர்க்கம்!
பறித்தல் நரகம் என்றால்
கொடுத்தல் சொர்க்கம்!

என்பேன். எனக்கு வந்த குறுந்தகவல் ஒன்று...

மனைவி - என்னங்க.. சொர்க்கம் சொர்க்கம் என்று சொல்றாங்களே அங்கெல்லாம கணவனும், மனைவியும் தனித்தனியாத்தான் இருப்பாங்களாமே.. அப்படியா?

கணவன்- ஆமா! அதனாலதான் அது சொர்க்கம்!

மனைவி-!!!

இன்னும் ஆழமாக சிந்தித்தால் சொர்க்கமும், நரகம் என்பதெல்லாம் மக்களை நல்வழிப்படுத்த, நம் முன்னோர் எடுத்துக்கொண்ட முயற்சி என்பது விளங்கும்.

வெயிலின் அருமை நிழலில் தெரிவது போல
நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்!

மழைக்காலத்தில் எப்படா வெயிலடிக்கும் என்றும்
வெயில்காலத்தில் எப்படா மழை வரும் என்று நாம் எதிர்ப்பார்ப்பது இயல்புதானே..

இராவணன் என்ற கதாபாத்திரம் இல்லையென்றால் இராமன் என்ற கதாபாத்திரத்தை நமக்கு தெய்வமாகத் தெரிந்திருக்காதல்லவா?

அதுபோல தீமைதான் நன்மையின் மதிப்பை முழுவதும் உணர்த்துவது. அதனால்தான் நம் முன்னோர் தீமையை நரகம் என்றும், நன்மையை சொர்க்கம் என்றும் பலவடிவங்களில் நமக்குச் சொல்லிச்சென்றுள்ளனர்.

சரி...

சொர்க்கம் பற்றி நாம் இவ்வாறெல்லாம் சிந்திக்கும்போது குறுந்தொகையில் ஒருபாடல் சிந்திக்கத்தக்கதாகவுள்ளது.

தலைவனின் பிரிவால் வாடியிருக்கிறார் தலைவி. அவன் உன்மீது அன்பில்லாதவன் என்கிறாள் தோழி. அதற்குத் தலைவி, இல்லை அவன் என்மீது பேரன்புடையவன் என்கிறாள்.

தலைவனோடு சேர்ந்திருக்கும்போது கிடைக்கும் இன்பத்தைவிட, அவனைப் பிரிந்திருக்கும்போது கிடைக்கும் துன்பமும் ஒருவகை இன்பம் தான். அவன் நினைவால் வாடும் ஒவ்வொரு மணித்துளிகளும் இன்பத்தில் கரைவன என்கிறாள் தலைவி.

பாடல் இதோ...
கறிவளர் அடுக்கத்து ஆங்கண், முறி அருந்து
குரங்கு ஒருங்கு இருக்கும் பெருங்கல் நாடன்
இனியன், ஆகலின், இனத்தின் இயன்ற
இன்னாமையினும், இனிதோ
இனிது எனப் படூஉம் புத்தேள் நாடே?


குறுந்தொகை -288

(தலைவன் அன்பிலன் என்று தோழி கூறிக் கொண்டிருப்ப, அவனது வரவு உணர்ந்த தலைவி அவன் செய்வன யாவும் இனியன என்று கூறியது.)

  • குரங்குகள் இனிய கனியை உண்ணும்போது தம் கூட்டத்தோடு சேர்ந்து இருப்பதுபோல இன்னாத சுவையுடைய மிளகின் தளிர்களை உண்ணும்போதும் தம்கூட்டத்தோடு சேர்ந்தே இருக்கும். அதுபோலத் தலைவி இன்பமோ துன்பமோ தம் தலைவனோடு சேர்ந்திருப்பதே இன்பம். அந்த இன்பத்தோடு சொர்க்கத்தைக்கூட ஒப்பிட்டுக்கூறமுடியாது என்கிறாள்.


  • தேவருலகம் துன்பமில்லாதது. இன்பமே உடையதாகக் கூறப்படுவது. தலைவனோடு, தலைவி கூடிவாழும் வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் கலந்து வரும். அவனோடு தலைவி சேர்ந்திருந்தால் கிடைக்கும் இன்பமும், அவன் பிரிவின் போது அவன் நினைவால் வாடியிருத்தலால் கிடைக்கும் துன்பமும் இன்பமாகவே உள்ளது. பிரிவின் துயரம் இருவருக்கும் இருத்தலால் அவன் என்மீது அன்பில்லாதவன் என்று கூறுவது எவ்விதத்தில் சரியானதாக இருக்கும்?
என்று தோழியைப் பார்த்துக் கேட்கிறாள் தலைவி.

பாடல்வழியே..

  • இல்வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்ததுதான்.
  • இன்பம் மட்டுமே இருந்தால் இன்பத்துக்கு மதிப்பில்லாமல்போய்விடும்.
  • துன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கையின் பொருளே புரியாமல்போய்விடும்.

  • இன்பமோ, துன்பமோ நிலையில்லாதது.
இன்பத்துக்குள் துன்பமும் உள்ளது.
துன்பத்துக்குள் இன்பமும் உள்ளது.

என்ற புரிதலே நரகத்தைக்கூட சொர்க்கமாக்கும் வாழ்வியல் நுட்பம்.

அதனை இந்தப்பாடல் அழகாக வெளிப்படுத்துகிறது. இப்பாடலில் தலைவிக்கு இந்த வாழ்வியல் நுட்பம் புரிந்திருக்கிறது. அதனால் சொர்க்கம் கூட இல்வாழ்க்கையில் கிடைக்கும் இன்பதுன்பங்களுக்கு இணையானதல்ல என்கிறாள் தலைவி.

  • சொர்க்கம் இருக்கா? இல்லையா? என்று சிந்திப்பதைவிட இதுபோல துன்பங்களைக்கூட இன்பங்களாக எண்ணிக்கொள்ளும் மனநிலையை நாமும் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பது இவ்வகப்பாடல்தரும் வாழ்வியல் தத்துவமாக உள்ளது.

தொடர்புடைய இடுகைகள்


இதன்பெயர்தான் ஆன்மீகமோ

ஞாயிறு, 8 ஜூலை, 2012

ஓடஓடஓட தூரம் குறையல...


    ஒரு ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவர் தம் வண்டிக்காரனை அழைத்து,

    நாளை காலை நாம் பக்கத்து ஊருக்கு ஒரு திருமணத்துக்குச் செல்லவேண்டும்திருமணம் காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனால் இரவு 3 மணிக்குக் கிளம்பினால் தான் போகமுடியும். நீ இரவு தூங்கிவிடாமல் எழுந்து வண்டியில் மாட்டைக் கட்டிவிட்டு என்னை எழுப்பிவிடு என்று சொன்னார்.

    வண்டிக்காரனும் சரி என்றான்.

    பின் அந்த செல்வந்தர் அந்த வண்டிக்காரனிடம். ஆமாம் எந்த மாடுகளை வண்டியில் பூட்ட இருக்கிறாய்? என்றார்.

    நேற்று அந்த செக்குக்காரரிடம் வாங்கினோமே இருமாடுகள். அவற்றைத்தான் ஐயா என்றான் அந்த வேலைக்காரன்.

    இவரும் சரிப்பா மறந்துடாதே.. தூங்கிவிடாதே என்று எச்சரித்துவிட்டுத் தூங்கச் சென்றுவிட்டார்.

    இவனும் சரியான நேரத்துக்கு எழுந்து மாடுகளைப் பூட்டிவிட்டு மெத்தைகளெல்லாம் போட்டுவிட்டு செல்வந்தரை சரியாக 2.45 மணிக்கு எழுப்பினான்.

    நல்ல தூக்கத்திலிருந்த அவரும் பாதிக்கண்களைத் திறந்துகொண்டு வந்து மீதித் தூக்கத்தை மாட்டுவண்டியிலேயே தொடர்ந்தார்.

    வண்டிக்காரனுக்கும் தூக்கம் கண்களைத் தழுவியது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டே வந்தான். மாட்டுவண்டி இவர்கள் செல்லவுள்ள முதன்மைச் சாலைக்கு வந்ததும் இவனும் இந்தச்சாலை நேராக அந்த ஊருக்குத் தானே செல்கிறது. நாம் ஏன் விழித்துக்கொண்டே வரவேண்டும். மாடுகள் ஓடும் மணியோசை காதுகளில் கேட்டுக்கொண்டே தானே வருகிறது. மாடுகளின் மணியோசை நின்றால் மட்டும் நாம் விழித்துப்பார்த்தால் போதாதா? என்று தோன்றியது. அதனால் மாட்டுக்காரனும் வண்டியில் அமர்ந்த நிலையிலேயே நன்றாகத் தூங்கிவிட்டான்.

    சிறிதுதூரம் சரியான வழியில் சென்ற மாடுகள், முன்பு தாம் இருந்த செக்குக்காரர்  வீட்டுக்குச் செல்லும் வழிகளைக் கண்டதும் வளைந்து அங்கே சென்றுவிட்டன. சென்ற மாடுகள் இத்தனை ஆண்டுகாலமாகத் தாம் சுற்றிக்கொண்டிருந்த செக்குகளைப் பார்த்ததும். பழைய நினைவுவந்து அந்த செக்கையே விடியவிடிய சுற்றிக்கொண்டிருந்தன.

  1. மாடுகளுக்கு நினைவு நாம் செக்கைத்தான் சுற்றிக்கொண்டிருக்கிறோம் என்று,

  2. வண்டிக்காரனுக்கு நினைவு நம் மாடுகள் விரைவாகவும், சரியான பாதையிலும்தான் சென்றுகொண்டிருக்கின்றன என்று,

  3. செல்வந்தருக்கு நினைவு நாம் திருமணத்துக்கு உரிய நேரத்தில் சென்றுவிடுவோம் என்று..

  4. பொழுதும் விடிந்தது...

    வண்டிக்காரனும், செல்வந்தரும் இன்னும் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்..

    வண்டிமாடுகளும் செக்கைச் சுற்றிக்கொண்டேதான் இருக்கின்றன.
    மணியோசையும் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது.

    அந்தச் செக்குக்காரர் வந்து இந்தக் காட்சியைப் பார்த்து சிரியோ சிரியென்று சிரித்தார். பின் அருகே சென்று அந்த வண்டிமாடுகளை நிறுத்திவிட்டு அந்த செல்வந்தரை எழுப்பி என்னங்க நேற்று ஏதோ திருமணத்துக்குப் பக்கத்து ஊருக்குப் போறேன் என்று சொன்னீங்க. இங்கு வந்து சுற்றிக்கொண்டிருக்கிறீங்க? என்று கேட்டார்.

    நொந்துபோன செல்வந்தார் அந்தவண்டிக்காரனை வேலையைவிட்டு நீக்கிவிட்டார்.

    என்றொரு கிராமியக் கதை உண்டு

    இந்தக் கதையை அப்படியே இன்றைய கல்விநிலையோடு ஒப்பிட்டுப் பாருங்களேன்..


    செல்வந்தர் - பெற்றோர்
    வண்டிக்காரன்- கல்விநிறுவனங்கள், ஆசிரியர்கள்
    மாடு - மாணவர்கள்


    இன்றைய பெற்றோர்கள், தம் பிள்ளைகளை நல்ல கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதோடு தம்கடமை முடிந்துவிட்டது என நினைக்கிறார்கள்..

    கல்விநிறுவனங்கள் இம்மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்களோடு பட்டச்சான்றிதழ் கொடுத்தால் போதும் என நினைக்கிறார்கள்

    மாணவர்கள், எல்லோரையும் போல நாமும் தேர்ச்சியடைந்து வேலைகிடைத்தால் போதும் என நினைக்கிறார்கள்...

    அந்த செல்வந்தரோ, வண்டிக்காரனோ, மாடுகளோ தாம் செல்லும் வழி சரிதானா என இடையில் ஒருமுறையாவது விழித்துப்பார்த்திருந்தால் அவர்கள் சரியான நேரத்துக்குத் சரியான இடத்துக்குச் சென்றிருப்பார்கள்.

    அதுபோல..

    இன்றைய மாணவர்கள்....
    கல்விச்சாலை செல்கிறார்கள்..
    படிக்கிறார்கள்..
    பட்டம் பெறுகிறார்கள்..
    வேலைக்குச் செல்கிறார்கள்...

    இவையெல்லாம இவர்கள் விரும்பித்தான் செய்கிறார்களா?
    என எத்தனை பெற்றோர்கள் தம் பிள்ளைகளிடம் கேட்கிறார்கள்?


    மதிப்பெண்ணுக்கு மேல் ஒரு மாணவனை எப்படி மதிப்புக்குரிய மனிதனாக உருவாக்கவேண்டும் என எத்தனை கல்விநிறுவனங்கள் சிந்திக்கின்றன?

    பெற்றோர் படிக்கவைக்கிறார்கள், கல்வி நிறுவனங்கள் சொல்லித்தருகிறார்கள் நம் கடமை படிப்பது என்று மட்டுமே சிந்திக்கும் மாணவர்களில் எத்தனை பேரின் உழைப்பு அவர்களின் குடும்பத்தைக் கடந்து சமூகத்துக்குப் பயன்படுகிறது?

    என இந்தக் கதையோடு இன்றைய கல்வியின் பல்வேறு முகங்களையும் ஒப்பிட்டு நோக்கமுடிகிறது.


    செக்குமாடும் உழைக்கிறது.. ஆனால் அதன் உழைப்பு பயன்படுகிறதா?

    மாணவர்களும் நன்றாகத்தான் படிக்கிறார்கள்! ஆனால்.. அவர்களின் உழைப்பு அவர்களின் குடும்பத்தைக் கடந்து சமூகத்துக்குப் பயன்படுகிறதா?

                                  
    என்பதுதான் இந்த இடுகை வாயிலாக நான் தங்கள் முன்வைக்கும் வினா.


தொடர்புடைய வினா.


மறைபொருள் தெரிகிறதா

வெள்ளி, 6 ஜூலை, 2012

வருமுன் காப்போம்.



வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
                                                                              திருக்குறள்-435

சாலையைக் கடக்கும்பொழுதுகளில் எவ்வளவோ காட்சிகளைக் காண்கிறோம். அவையெல்லாம் நம் மனதில் பதிவதில்லை.

மனதில் பதிந்த சாலைப்பாதுகாப்பு குறித்த சில விழிப்புணர்வளிக்கும் சிந்தனைகள்...


ஓட்டுநரின் தூக்கம்
ஒட்டுமொத்த மக்களின் துக்கம்


பார்த்துசென்றுவா ரோட்டில்
உன் மனைவி காத்திருப்பாள் வீட்டில்

சாலையில் தடுமாற்றம்
வாழ்க்கையில் ஏமாற்றம்


போதையில் சென்று வாழ்க்கைப்
பாதையில் மாறிவிடாதே

குறைவான வேகம்
நிறைவான பயணம்

உலகிலேயே விலைமதிப்புமிக்கது உயிர்

சாலையைப் பார்த்தால் பயணம்
சேலையைப் பார்த்தால் மரணம்

சிவப்பு விளக்கை மதித்தால்
இரத்தம் சிந்துதலைத் தவிர்க்கலாம்