பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

திங்கள், 28 மே, 2012

இதைத்தான் களவு என்பதோ!

கெட்டிக் காரன் குட்டு எட்டு நாளில் வெளிப்படும் என்று வழக்கில் சொல்வதுண்டு.

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கமுடியுமா?

அதுபோல எல்லா உண்மைகளையும் எல்லோராலும் மறைத்துவிடமுடியாது.

ஒவ்வொரு குற்றவாளிகளும் தாம் தவறுசெய்யும்போது அதற்கான தடையங்களையும் விட்டுச்செல்கிறார்கள் என்று காவற்துறையினர் அழுத்தமாகச் சொல்கிறார்கள்.

களவு என்றால் திருடுவது என்றே இன்றும் பலர் நம்பிவருகின்றனர்.

பழந்தமிழர் வாழ்வில் களவு - கற்பு என்பன இருபெரும் கூறுகள் என்பதை தமிழ் இலக்கியங்களை சற்று ஆழமாகப் படித்தவர்கள் நன்கு உணர்வார்கள்.

ஒரு ஆணும், (தலைவன்), பெண்ணும் (தலைவி) பெற்றோர், ஊரார் அறியாது காதலிப்பதைக் களவு என்று சங்ககாலத்தில் அழைத்தனர்.

அவர்கள் திருமணம் செய்துகொள்வதே கற்பு என்று அழைக்கப்பட்டது.


காதலிக்கவும் கற்றுக்கொள்ளவேண்டும். காதலித்துக்கொண்டே இருந்துவிடக்கூடாது. விரைவில் அதனை மறந்து திருமணம் 
செய்துகொள்ளவேண்டும் என்பதையே..


களவும் கற்றுமற என்று நம்முன்னோர் உரைத்துச்சென்றனர்.



இன்றைய சூழலில் பிள்ளைகள் தம் காதலைப் பெற்றோரிடமிருந்து எப்படியெல்லாம் மறைக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

சங்ககாலக் காட்சி ஒன்று..

தலைவன் காதலித்துக்கொண்டே இருக்கிறான். தலைவனைத் தினமும் தலைவி சந்தித்துக் கூடிமகிழ்வதால் தலைவியின் உடலில் எற்படும் மாற்றங்களைக் கண்டு அவளின் தாய் ஐயம் கொள்கிறாள். தலைவி உண்மையை உளறிக் கொட்டிவிடுவாளோ என அஞ்சிய தோழி இடையில் புகுந்து வேறு பல பொய்களைச் சொல்லித் தலைவியைக் காப்பாற்றுகிறாள். இந்த உண்மையைத் தலைவனிடம் சொல்லி, விரைவில் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று சொல்கிறாள் தோழி..

இப்போது பாடலுக்குச் செல்வோம்.



ஓங்கிய மலைநாடனே
நீ கூறும்வாய்மைகள் எல்லாம் இப்படியே பொய்த்து ஒழிவனவாகுக !
மூங்கில்கள் நெருங்கிய கற்பாறை நெறியாகிய சிறிய வழியில் இரைதேடி உழலுகின்ற வேங்கை முதலாய மிக்க பகையைப் பொருட்படுத்தாது இரவில் கூட வந்து இவளோடு கூடிமகிழ்கிறாய்
அதனால் உண்டாகிய புதுமணத்தைக் கருதி இவளுடைய தோளைச்சார்ந்து வண்டுகள் அளவில்லாதன மொய்த்தலினாலே
எம் அன்னை தன் கண்களாலே கொல்லுபவள் போல் நோக்கி 
"நீ இதன் முன்னும் இப்படி வண்டுகளால் மொய்க்கப்பெற்ற தோளினையுடையையோ?" என்று வினவினள்;
அங்ஙனம் வினவலும், இவள் அதற்கு எதிர்மொழி சொல்ல அறியாளாய் வருத்தமுற்று என் முகத்தை நோக்கி நின்றாள்
அதனை அறிந்த யான் இவள் எப்படி ஆராய்ந்து மறைத்துக் கூறுவாள் என்றெண்ணி அன்னையை நோக்கி;
அடுப்பிலிட்ட சந்தன விறகின் கொள்ளியை எடுத்துக் காட்டி
அன்னாய் ! இவ்விறகினை அடுப்பிலிடுதலும் இதிலுள்ள சுரும்புகள் இவளுடைய தோளில் மொய்க்கின்றன காண்
என மறைத்துக் கூறினேன்
இங்ஙனம் எத்துணை நாள் நீ வரைந்து கொள்ளுதல் காரணமாகப் பொய்கூறி அவளைக் காப்பாற்றுவது?
                                                                
                 ஓங்கு மலை நாடஒழிகநின் வாய்மை
காம்பு தலைமணந்த கல் அதர்ச் சிறு நெறி,
உறு பகை பேணாதுஇரவின் வந்துஇவள்
பொறி கிளர் ஆகம் புல்லதோள் சேர்பு
அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின்,
கண் கோள் ஆக நோக்கி, 'பண்டும்
இனையையோ?' என வினவினள்யாயே;
அதன் எதிர் சொல்லாளாகிஅல்லாந்து,
என் முகம் நோக்கியோளே: 'அன்னாய்!- 
யாங்கு உணர்ந்து உய்குவள்கொல்எனமடுத்த
சாந்த ஞெகிழி காட்டி
ஈங்கு ஆயினவால்என்றிசின் யானே.
நற்றிணை -55  பெருவழுதி 


வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழி தலைவற்குச் சொல்லியது. -


பாடல் வழியே..


  • களவு என்ற சொல்லின் சங்ககாலப் பொருளை உணர்ந்துகொள்ளமுடிகிறது.
  • களவை (காதலை) மறைக்கத் தெரியாமல் திருதிருவென விழிக்கும் தலைவியைப் பார்த்தால் நமக்கே சிரிப்பு வருகிறது.
  • இடையில் புகுந்து ஏதோ காரணம் காட்டித் தலைவியைக் காப்பாற்றும் தோழியின் செயல் நட்பின் தன்மைக்குத் தக்க சான்றாக அமைகிறது.
  • தலைவியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை உற்று நோக்கியறியும் தாயின் உளவியல் அறிவு இன்றைய பெற்றோர்கள் அறிந்துகொள்ளவேண்டிய அடிப்படைப் பாடமாகவே அமைகிறது.
தொடர்புடைய இடுகைகள்

24 கருத்துகள்:

  1. காதலை இலக்கியம் போல அழகாக சொல்ல வேறு எதால் முடியும்?
    களவும் கற்று மாற அர்த்தம் புரிந்தேன்..

    பதிலளிநீக்கு
  2. இதுல இவ்வளாவு இருக்கா ?

    பதிலளிநீக்கு
  3. களவை கற்க மற என்றுதான் சொல்லியிருக்க கூடும் என்று இத்தனை நாள் நான் நினைத்திருந்தேன்.

    அருமையான புதிய விளக்கம் தந்த முனைவருக்கு நன்றிகள் ..!

    பதிலளிநீக்கு
  4. புதிய விளக்கம் அறிந்து கொண்டேன்

    பதிலளிநீக்கு
  5. களவு -சங்ககால அர்த்தம்
    தொடுத்து கோர்த்த கவிதையும் பொருளும்
    முனிவருக்கு நிகர் முனைவரே

    தற்பொழுத் அதிகம் காம முடியவில்லை தங்களை
    சங்கத் தமிழை அள்ளித் தாருங்கள் முனைவரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேர்வுப் பணி காரணமாக வலைப்பக்கம் வரஇயலவில்லை நண்பரே.

      இனி தொடர்ந்து இற்றைப்படுத்துவேன்.
      நன்றி.

      நீக்கு
  6. களவும் கற்று மற- நல்லவிளக்கம்! பாடலும் ஏற்றதே!


    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  7. களவும் கற்றுமற// உண்மையாக எனக்கும் அர்த்தம் புரியவில்லை தெளிவு படுத்திய பகிர்வுக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  8. அன்புநிறை முனைவரே..
    தமிழின் சுவைக்கு எல்லையே இல்லை..
    தன்னுள் ஒரு சொல்லுக்காய் எத்தனை பொருட்களை
    மறைத்து வைத்திருக்கிறது...

    களவியல் அறிந்திருந்தும்
    களவுக்கு இன்றுதான் இனிய
    பொருளறிந்தேன்...

    தமிழமுதம் அருந்த வந்தேன்
    புசித்து பசியடங்கிச் செல்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வரவால் என் மனமும் நிறைந்துபோனது நண்பரே..

      நன்றி.

      நீக்கு
  9. இலக்கியங்கள் சொல்லும் காதல்கள் எல்லாம் அருமை.
    அழகான பாடல் விளக்கம் அருமை முனைவரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாசித்தலுக்கும் இலக்கியநயம் பாராட்டியமைக்கும் நன்றி நண்பரே

      நீக்கு
  10. இலக்கியம் சொல்லும் களவும் காதலும் அருமை.

    பதிலளிநீக்கு