பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

கயம் மூழ்கும் மகளிர் கண்கள் - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 09

Kurunthogai - 09


தலைமக்களிடையே ஏற்படும் கருத்துவேறுபாடுகளை ஊடல் என்று சொல்வதுண்டு. பரத்தையரிடம் கொண்ட ஈடுபாடு காரணமாகத் தலைவியை நீங்கிய தலைவன் மீண்டும் தலைவியைச் சந்திக்க வருகிறான். தோழியை வாயிலாக அழைத்து வருகிறான். தோழி முன் தன் கோபத்தை வெளிப்படுத்துவது நாகரிகமல்ல என்பதை உணர்ந்த தலைவி தலைவனின் தவறை மறந்து அவனை ஏற்கிறாள். நெய்தல் திணை என்பதால் இரங்கலும் இரங்கல் நிமித்தமும் உரிப்பொருளாகிறது. தலைவனின் செயலால் வாடும் தலைவியின் நிலையும். தலைவனின் தவறை மறந்து அவனை ஏற்கும் பண்பும் இப்பாடலில் சுட்டப்படுகிறது.

மாந்தளிர் போன்ற மேனிநிறம் கொண்ட இவள் தாய் ஆகிவிட்டாள்.
பெய்யாப் பூ என்பது பொங்கல்-சோறு.
சமைத்த பானையில் பொங்கற்சோறு இருப்பது போல இவள் உடலம் தோற்றம் தருகிறது. இதற்காக இவள் தனக்குள்ளே நாணம் கொள்கிறாள். 
அந்த நாணத்தை மறைக்க முயல்கிறாள். 

துறைவன் செய்த கொடுமை வெளிப்பட்டுவிடுமே என்று எண்ணி மறைக்க முயல்கிறாள். துறைவன் பசுமையான இலைகளோடு நெய்தல் பூத்திருக்கும் துறை. மீன்கள் இனத்துடன் வாழும் துறை. கழித்துறை. 
அலை வரும்போதெல்லாம் நெய்தல் பூ நீரில் மூழ்கி எழும் துறை. 
நெய்தல் பூ நீரில் மூழ்கி எழுவது மகளிர் நீரில் மூழ்கி எழும்போது அவர்களது கண்கள் மூழ்கி எழுவது போலத் தோன்றும் துறை.

(நெய்தல் மகளிர் கண்களுக்கு உவமை)


தலைவன் தன்னைவிட பரத்தையரையே பெரிதும் விரும்புகிறான். இதைத் தோழிக்குத் தெரியக்கூடாது என்று மனதுக்குள்ளே மறைக்கிறாள் தலைவி.
தலைவனோடு ஊடல்கொள்ள தலைவிக்கு இது போலப் பல காரணங்கள் இருந்தாலும், அவற்றைத் தன் மனதில் கொள்ளாமல் தோழி வாயிலாக வந்தமை ஏற்றுத் தலைவனின் தவறை மறந்தாள் மறைத்தாள்.

  • உப்பங்கழியில் நெய்தல் மலர்கள் மலர்ந்துள்ளன. அம்மலர்களின் காம்பு இலைகளுக்கு மேல் உயரமாக வளர்ந்துள்ளது. அலைபெருக்கெடுத்து வரும்போதெல்லாம், நெய்தல் மலர்கள் நீருள் மறைந்து மறைந்து தோன்றுகின்றன. இக்காட்சி, குளத்திலே குளிக்கும் போது நீருள் மூழ்கி மூழ்கி எழும் பெண்களின் கண்களைப் போலவே காட்சியளிக்கின்றன.

  • கண்களல்லாத நெய்தல் மலரானது, மகளிர் கண்கள் போலக் காட்சி தருகிறது. கண்கள் போலத் தெரியவேண்டிய தலைவிக்குப் பதிலாக இங்கு தலைவனுக்கு பரத்தையரே கண்கள் போலக் காட்சியளிக்கின்றனர்.

  •  கொடியிலும் இல்லாமல், பறித்துச் சூடுவார்தலையிலும் இல்லாமல், காற்றுப்புகாத செப்பில் அடைத்துவைக்கப்பட்டுக் கிடக்கும் மலர் போலத் தலைவியின் தோற்றம் இருந்தது.கொடிய காட்டில் உயர்ந்த மரத்தில் மலர்ந்த மலர் ஒருவரும் சூடாது வாடும்.                                                              ஆனால் இங்கு கூறப்பட்ட மலர், ஒருவர் சூடுவதற்காகவே பறிக்கப்பட்டு, காற்றுப் புகாமலும், மணம் எங்கும் செல்லாமலும், செப்பில் அடைக்கப்பட்ட மலரே குறிப்பிடப்படுகிறது.

யாயா கியளே மாஅ யோளே
மடைமாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய்சா யினளே
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீ னிருங்கழி யோத மல்குதொறும்

கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணந் துறைவன் கொடுமை
நம்மு னாணிக் கரப்பா டும்மே.


குறுந்தொகை - 9.   

பாடியவர் -  கயமனார்.
மருதம் - தோழி கூற்று
தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது

  • நீருள் மூழ்கி எழும் மகளிரின் கண்கள் போலவே நெய்தல் மலர் நீருள் தோன்றியது என்ற உவமை எண்ணி இன்புறத்தக்கதாக உள்ளது.
  • கயம் (நீர் நிலை) என்ற உவமையே இப்புலவர்பெயர் பெறக் காரணமாக இருந்திருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது.
  • என்னதான் தமக்குள் மனக்குறை இருந்தாலும் தன் உயிர்த்தோழிக்குக் கூடத் தெரியக்கூடாது எனத் தலைவி மறைப்பது இன்றைய மகளிரும் கற்றுக் கொள்ளவேண்டிய வாழக்கைப் பாடமாக இருக்கிறது.
  • தலைமக்களுக்குள் இருக்கும ஊடலை (கோபம்)த் தீர்க்கும் வாயிலாகத் தோழி திகழ்ந்தாள் என்ற சங்ககால வழக்கம் இப்பாடல்வழியே புலனாகிறது.
சொற்பொருள் விளக்கம்

யாய் - தாய்
பொய்யா பூ - ஒருவர் சூடாத பூ
சாயினள் - மெலிந்தனள்
ஓதம் - கடல் அலை
கயம் - ஆழமான குளம்
துறைவன் - நெய்தல் நிலத் தலைவன்

தொடர்புடைய இடுகை

27 கருத்துகள்:

  1. //ஆனால் இங்கு கூறப்பட்ட மலர், ஒருவர் சூடுவதற்காகவே பறிக்கப்பட்டு, காற்றுப் புகாமலும், மணம் எங்கும் செல்லாமலும், செப்பில் அடைக்கப்பட்ட மலரே //

    அருமையான வரிகள். பாராட்டுக்கள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. சங்க
    இலக்கியங்களில் இருந்து
    நிறைய அறிந்துகொள்ள முடிகிறது

    நல்ல பதிவு மிக்க நன்றி முனைவரே

    பதிலளிநீக்கு
  3. முனைவர் அவர்களுக்கு வணக்கம்! நான் பி.ஏ – தமிழ் இலக்கியம் படிக்கும் போது, எங்களுக்கு முதல் 50 குறுந்தொகைப் பாடல்களை பாடமாக வைத்து இருந்தனர். அப்போது அடிக்கடி படித்த குறுந்தொகைப் பாடல்களில் இதுவும் ஒன்று. தங்கள் விளக்கம் அந்தநாளில் எங்கள் பேராசிரியர் பாடம் நடத்திய அன்றைய நாளை நினைக்கச் செய்து விட்டது.நன்றி!

    பதிலளிநீக்கு
  4. சங்க இலக்கியங்களின் சுவையை மறுபடியும் உங்கள் மூலம் பருகுவது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  5. //கொடியிலும் இல்லாமல், பறித்துச் சூடுவார்தலையிலும் இல்லாமல், காற்றுப்புகாத செப்பில் அடைத்துவைக்கப்பட்டுக் கிடக்கும் மலர் போலத் தலைவியின் தோற்றம் இருந்தது.//
    ஆஹா என்ன கற்பனை! எளிதில் விளங்கும் வண்ணம் விளக்கம் தந்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் தொடர் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி அன்பரே

      நீக்கு
  6. பள்ளிகூட தமிழ் வகுப்பை நினைக்க வைத்து விட்டீர்கள் அருமை

    பதிலளிநீக்கு
  7. தமிழமுதத்தைப் பருகி மகிழ்ந்தேன். அருமை. இன்று வலைச்சரத்தில் தங்கள் பதிவைக் குறிப்பிட்டுள்ளேன். சமயம் இருக்கும் போது பார்த்து கருத்து தெரிவித்தால் மகிழ்வேன் முனைவரையா.

    http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_30.html

    பதிலளிநீக்கு
  8. \\என்னதான் தமக்குள் மனக்குறை இருந்தாலும் தன் உயிர்த்தோழிக்குக் கூடத் தெரியக்கூடாது எனத் தலைவி மறைப்பது இன்றைய மகளிரும் கற்றுக் கொள்ளவேண்டிய வாழக்கைப் பாடமாக இருக்கிறது.\\

    சலம்பலும் புலம்பலுமாய் தன் மனக்குறைகளைப் பிறரிடத்தில் பகிர்ந்து தன் பெருமையை தானே குலைக்கும் பெண்களுக்குப் பாடம் சொல்லும் அழகான பாடல். மலர்களின் நிலையோடு தலைவியின் நிலை ஒப்புமை வியக்கவைக்கிறது. பகிர்வுக்கு நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
  9. சங்க கால மாகளிர் நிலையை நினைக்கையில் பெறுமையாக உள்ளது.அதே சமயம் ஆண்களின் தவறுகளை சகித்துப்போகும் நிலை கொஞ்சம் வேதனை தருகிறது.

    பதிலளிநீக்கு
  10. அறியாத அருமையான பாடலை
    அழகாக விளக்கிப் பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    அருஞ்சொற்பொருள் விளக்கமும் இருந்தால்
    சில சங்ககாலச் சொற்கள் எங்களுக்கும்
    பரிசியமாக வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன்
    மனம் கவர்ந்த பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்ச்சொல் அறிவோம் என்ற உட்தலைப்பில் தொடர்ந்து அருஞ்சொற்களைத் தொகுத்துவருகிறேன்..

      இடையில் சில பாடல்களை இதுபோல எழுதிவிட்டேன்.
      இனி தொடர்ந்து அருஞ்சொற்களையும் தருகிறேன் அன்பரே.

      அறிவுறுத்தலுக்கு நன்றிகள்.

      நீக்கு
  11. உள்ளதை மறைத்து மறைத்து மனைக்காத்து மன்னவன் நிலையையும் காக்கிறாள் தலைவி .....

    பதிலளிநீக்கு
  12. அருமையான விளக்கம். நன்றி முனைவர் குணா.

    பதிலளிநீக்கு