பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

புதன், 11 ஏப்ரல், 2012

தொழில்நுட்ப அடிமைகள்



 இன்று ஓர் ஆடவன் தன் மனைவியைவிட்டு நீங்கிப் பொருள் தேடுவதற்காக வெளிநாட்டுக்குச் சென்றால், தன் மனைவியோடு பேசுவதற்குத்தான் எத்தனை எத்தனை வாய்ப்புகள்.. வசதிகள்...

இருவரும் உடனுக்குடன் அலைபேசியில் பேசிக்கொள்ளலாம்!
மின்னஞ்சலில் நிழற்படங்களையும், செய்திகளையும் பகிர்ந்துகொள்ளலாம்!
ஸ்கைபில் நேரடியாக ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசிக்கொள்ளலாம்!
உடனே பார்க்கவேண்டுமென்றால் விமானத்திலேறி சில மணிநேரங்களில் வந்துவிடலாம்..

அப்படியே கொஞ்ச காலம் பின்னோக்கிப் போவோமா..?
தொலைபேசியில் பேசலாம் ஆனால் கட்டணம் கொஞ்சம் அதிகம்வரும்...
கடிதத்தில் செய்திகளைப் பங்கிட்டுக்கொள்ளலாம் காலம் அதிகம் செலவாகும்..
புறாக்களில் தூது அனுப்பலாம் ஆனால் நீண்ட நாள் காத்திருக்கவேண்டும்..

அப்படியே சங்ககாலத்துக்கு போகலாம் வாங்க..

                 லைவன் வருவதாகச் சொல்லிச் சென்ற பருவம் வந்துவிட்டது ஆவலோடு காத்திருக்கிறாள் தலைவி. அந்தக் காலத்து விரைவுவாகனமே குதிரைதான். செல்வத்தின் அடையாளம் குதிரை இழுத்துச்செல்லும் தேர்தான்!

தலைவனின் தேர்மணியோசையையே எதிர்நோக்கி வழிமேல் (விழி) காதுவைத்துக் காத்திருக்கும் தலைவிக்கு இந்த ஓசை போதாதா..!

அவன் தான் வந்துவிட்டான் என மனம் துள்ளிக்குதிக்கிறது..
அறிவு சொல்கிறது..
ஒருவேளை இது இயல்பாக ஆயர்கள் ஓட்டிவரும் ஆநிரைகளின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகளின் ஓசையோ என்று..!
சரி எதுவாக இருந்தாலும் என்னுயிர்த்தோழி நீயும் என்னோடு வா முல்லை படர்ந்த கல்லின் மீது சென்று அந்த மணியோசை எங்கிருந்து வருகிறது என்று பார்த்துவரலாம் என்று தோழியை உடன் அழைக்கிறாள் தலைவி..
பாடல் இதோ.

                   முல்லை யூர்ந்த கல்லுய ரேறிக்
                  கண்டனம் வருகஞ் சென்மோ தோழி
                    எல்லூர்ச் சேர்தரு மேறுடை யினத்துப்
                    புல்லார் நல்லான் பூண்மணி கொல்லேர்
                    செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு
                       வல்வி லிளையர் பக்கம் போற்ற
                    ஈர்மணற் காட்டாறு வரூஉம்
                  தேர்மணி கொல்லாண் டியம்பிய வுளவே.







குறுந்தொகை -275
ஒக்கூர் மாசாத்தி.
(தலைவன் கூறிச் சென்ற பருவம் வந்த காலத்துத் தலைவியை நோக்கி, "மணி ஒலி செவிப்படுகின்றது; அது தலைவனது தேர்மணி ஓசையோ என்று சென்று பார்ப்போம்" என்று தோழி கூறியது.)
   
(தோழி , அங்கே ஒலிப்பனவாக உள்ளவை, மாலைக் காலத்தில் ஊரை வந்து அடையும், காளையை உடைய பசுவினத்தில் உள்ள, புல்லை உண்ட நல்ல பசுக்கள், கழுத்தில் பூண்ட மணி ஓசையோ?
தாம் செய்த வினையை முற்ற முடித்ததனால் ஆகிய, நிறைவுடைய உள்ளத்தோடு, வலிய வில்லை உடைய இளைய வீரர் தன் அருகில் பாதுகாப்ப, ஈரமாகிய மணலை உடைய காட்டு வழியிலே வரும், தேரின் மணி ஓசையோ?
முல்லைக்கொடி படர்ந்த கல்லின் மேல் ஏறி, கண்டு வருவேம்: வருவாயாக.)
பாடல் வழியே..

நேற்று...

இந்தப் பாடலில் கண்டதுபோல பொருள் தேடச் சென்ற தலைவனின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருந்த தலைவி கண்முன் நிழலாடுகிறாள்.

இன்று....

இதேபோலப் பொருள் தேடச் சென்ற தலைவன் மீண்டு வரும் போது..
(பல வீடுகளில்..)
மனைவி நெடுந்தொடர் பார்த்துக்கொண்டிருப்பாள்!
பிள்ளைகள் தொலைக்காட்சியாக இருந்தால் கிரிக்கெட் பார்ப்பார்கள்..இணையதளமென்றால் சமூகத்தளங்களில் மேய்ந்துகொண்டிருப்பார்கள்..

நாளை..

கணவனும்.. மனைவியும்.. பிள்ளைகளும் பணிக்குச் செல்லும் சூழலில் பாசத்துக்கேது இடம்.. காத்திருத்தலுக்கு ஏது நேரம்???

தொலைக்காட்சி
அலைபேசி
இணையதளம் (சமூகத் தளங்கள்)..

என பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளும் உறவுகளின் பிரிவுகளின் வலியையும் தூரத்தையும் குறைக்கவே தோன்றின என்றாலும்..

இன்று இந்தத் தொழில்நுட்ப வசதிகளுக்கு அளவுக்குஅதிகமாகவே நாம் அடிமையாகிப் போய்விட்டோமோ என்று தோன்றுகிறது..

தொழில்நுட்பம் நமக்கு அடிமையாக இருக்கலாம்
நாம் இந்தத் தொழில்நுட்பங்களுக்கு அடிமையாக இருக்கலாமா?

தொடர்புடைய இடுகைகள்

22 கருத்துகள்:

  1. எந்த வசதியும் இல்லாத அந்நாட்களில் தலைவனின் வருகையை எதிர்பார்க்கும் தலைவிக்கு எப்படியெல்லாம் மன உளைச்சல் உண்டாகியிருக்கும் என்பதை இந்த ஒரு பாடலே அருமையாக எடுத்துரைக்கிறது. அந்நாளையும் இந்நாளையும் அழகாக ஒப்பிட்டிருக்கிறீர்கள். மனம் மீள மனமில்லாமல் இன்னும் சங்க காலத்திலேயே லயித்திருக்கிறது. பகிர்வுக்கு மிகவும் நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
  2. தொலைக்காட்சி
    அலைபேசி
    இணையதளம் (சமூகத் தளங்கள்)..

    அப்போது

    பறவை விடு தூது

    மேகம் விடு தூது.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரிசைப்படுத்தலுக்கும் வருகைக்கும் நன்றி இராஜேஸ்வரி

      நீக்கு
  3. "தொழில்நுட்பங்களுக்கு அடிமையாக இருக்கலாமா?"

    அனைவரும் யோசிக்க வைக்கும் விஷயம் !

    பதிலளிநீக்கு
  4. முனைவரே
    ஒவ்வொரு பதிவிலும் தனித்து நிற்கிறீர்கள்
    ஒவ்வொன்றுக்கும் உதாரணாமாக
    சங்க இலக்கிய பாடல்களை பதிகையில்
    இன்னும் மிரள்கிறது

    அக்காலத்திற்கு இக்காலத்திர்க்குமான
    ஒப்பிடல் அருமை முனைவரே

    சில நேரங்களில் நம்மை சுற்றிய உறவுகளோடோ நண்பர்கலோடோ
    நல்லதை சொன்னால்
    நீங்கள் ஒரு பழமைவாதி என்று முத்திரை
    குத்திவிடுகிறார்கள் இன்றைய புதுமைவாதிகள்

    அர்த்தமுள்ள சங்க இலக்கிய பாடல்கள் ஓடிக்க நேரம் இல்லாதபோதிலும்
    உங்களைப்போன்ற நண்பர்களின் வலைகளில்
    நல்லதை வாசிக்கையில் ஒரு சுகம்

    பதிலளிநீக்கு
  5. அருமை ..!

    இந்த வகையில் நாம் எல்லோரும் துரதிஷ்டசாலிகள் ..,

    ஒன்று 200 வருடங்களுக்கு முன்பு பிறந்திருக்க வேண்டும்

    அல்லது இன்னும் 100 வருடங்கள் கழித்து பிறந்திருக்க வேண்டும் ..,

    அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் ..,

    இரண்டு நூற்றாண்டுகளிலும் உள்ள வசதிகளை முழுமையாக அனுபவிக்க முடியாமல் இரண்டும் கெட்டான் நிலைமையில் நாம் எல்லோரும் ...!

    பதிலளிநீக்கு
  6. // தொழில்நுட்பம் நமக்கு அடிமையாக இருக்கலாம்
    நாம் இந்தத் தொழில்நுட்பங்களுக்கு அடிமையாக இருக்கலாமா?//

    இனி கவலைப்பட்டு பயனில்லை முனைவரே!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் புலவரே..
      இந்தக்காலத்தில் நாம் ஓடும் வேகத்துக்கு இதெல்லாம் சிந்திக்க ஏது நேரம்.?

      நீக்கு
  7. உண்மை உண்மையே முனைவரே..
    ஆனாலும் அன்பு கொண்ட நெஞ்சங்கள்..
    பலமணிநேரம் பேசினாலும்
    பிரிவு நெஞ்சை வாட்டத்தான் செய்கிறது.

    அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்து
    பிரிவு வந்தாலும் அதன் இடைவெளியை
    குறைத்திருக்கிறது என்பது சாலச் சிறந்த சொல்.

    ஒரு காலத்தில் கடிதப் போக்குவரத்து இருக்கையில்..
    தினமும் கடிதம் வந்து சேரும் இடத்தை பார்த்து
    பார்த்து கண்கள் பூத்தே போய்விடும்...
    அந்த எதிர்பார்ப்புகள் இன்று அறவே இல்லை என்று தான்
    சொல்ல வேண்டும்..

    அழகான சங்கப் பாடல் சொல்லி அதன்
    பொருள் விளங்க வைத்தமைக்கு நன்றிகள் முனைவரே.

    பதிலளிநீக்கு
  8. நல்ல ஒப்பீடு. விஞ்ஞானமே நண்பன் விஞ்ஞானமே எதிரி. அப்போது அன்புக்கு அடிமை இப்போது அறிவியலுக்கு அடிமை.நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  9. நேற்று
    இன்று
    நாளை

    நேற்றைய சங்கத்தையும் சொல்லி,இன்றைய சம்பவத்தையும் சொல்லி, நாளைய நம் சந்ததிகளின் நிலையையும் சொல்லி அசத்தியிருக்கின்றீர் முனைவரே.

    தொழில் நுட்பத்திற்கு அடிமையாவதை தடுக்கவே முடியாது போல் தெரிகிறது, நண்பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழும் முறையும் மாறி
      வாழ்க்கைமுறையும் மாறியசூழலில்..
      இது கேள்விக்குறிதான் நண்பா..

      நீக்கு
  10. உண்மைதான் முனைவரே. நாம் தொழில்நுட்பங்களுக்கு அடிமைகளாக மாறிவிடுகிறோம். நான் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக விடுபட முயற்சி செய்கிறேன். குறுந்தொகைப் பாடல் அருமை. விளக்கமோ இனிமை. படம் அழகோ அழகு. எங்கிருந்து எடுக்கிறீர்கள். கண்ணைப் பறிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி அன்பரே..
      தங்களின் தமிழ்பற்றும், ஆழ்ந்த வாசிப்பும் பெருமகிழ்வளிப்பதாக உள்ளது அன்பரே

      நீக்கு