வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 22 மார்ச், 2012

வயிற்றுக்காக வாழ்கிறோம்..


இன்று காலை 7.30 மணிக்கு பணிக்குச் சென்றுகொண்டிருந்தேன்.
பேருந்தைப் பிடிக்க விரைவாக நடந்து சென்றபோது சாலையின் மறுபுறம் சிலமணித்துளிகள் கண்ட காட்சி சிலமணி நேரங்களை விழுங்கிவிட்டது..

ஒரு உணவுவிடுதி அதன் வாயிலில்...

ஒரு மனநோயாளி குளித்து சில ஆண்டுகளாகியிருக்கும்
அவர் உறங்கி சில வாரங்கள் ஆகியிருக்கும்
அவர் உணவுஉண்டு சில நாட்கள் ஆகியிருக்கும்

அவரை அந்தக் கடையின் உரிமையாளர் விரட்ட முயற்சித்துக்கொண்டிருந்தார்.

இந்த மனநோயாளிக்கு உணவைத்தவிர வேறு எதுவுமே தெரியவில்லை.

சற்று உற்றுப்பார்த்தேன் உரிமையாளரின் கையில் பாத்திரத்தில் சுடுதண்ணீர்உள்ளது..

மரியாதையா போயிடு.. இல்ல.. உன் மேலேயே ஊத்திடுவேன்..
என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்..

இப்போதும்....
இந்த மனநோயாளிக்கு உணவைத்தவிர வேறு எதுவுமே தெரியவில்லை.

எதிர்பாராத நேரத்தில் உரிமையாளர் அந்த மனநோயாளியின் மீது சுடுதண்ணீரை ஊற்றியே விட்டார்...

இந்த மனநோயாளி தட்டுத்தடுமாறி அந்த உரிமையாளரைத் தாக்கமுயற்சிக்கிறார்...

உள்ளே சென்ற உரிமையாளர் நீளமான கம்போடு வந்து அந்த முதியரை இரண்டு அடிஅடித்து விரட்டிவிட்டார்..

அவ்வளவுதான்...

அந்த மனநோயாளி அந்தக் கடையைவிட்டுச் சென்றுவிட்டார்.
அந்த உரிமையாளர் வியாபாரம் பார்க்கச் சென்றுவிட்டார்.
நான் என் வேலைக்கு வந்துவிட்டேன்..

எது சரி? எது தவறு? என்று தெரியாத அந்த மனநோயாளி..


எல்லாம் தெரிந்தும்..
உயிருள்ள இந்த மனித உயிருக்குக்
கொடுக்கவிரும்பாத உணவை
இறைவனுக்குப் படைத்து
வியாபாரம் தொடங்கும் அந்தக் கடை உரிமையாளர்..


இதைப் பார்த்தும் என் வேலைக்காக 
அவ்விடத்தைவிட்டுக் கடந்த நான்..

என நாம் எல்லோருமே வாழ்கிறோம்..
நம் வயிற்றுக்காக.

இருந்தாலும் மனது சொன்னது..
என்ன இருந்தாலும் நீ போய் அந்தக் கடையில் ஒரு சாப்பாடாவது வாங்கி அந்த நோயாளிக்குக் கொடுத்திருக்கலாமே என்று..

அறிவு சொன்னது...
நீ அப்படிச் செய்தால்.. அந்தக் கடைக்காரன் கேட்பான்..
ஏம்பா இன்றைக்கு நீங்க வாங்கித்தருவீங்க.. இவன் நாளைக்கும் இதே நேரத்தில் இங்கு வந்துநின்றால் நான் எப்படி வியாபாரம் பார்ப்பேன் என்று.. நீ உன் வேலையைப் பார்த்துவிட்டுப் போ என்று...

பெரும்பாலும் மனதை அறிவு வென்றுவிடுகிறது..

இருந்தாலும் மனதுக்குள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது...


“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் 
சகத்தினை அழித்திடுவோம் ”
 பாரதி
“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்”

திருக்குறள் 1062


தொடர்புடைய இடுகை

பசிப்பிணி மருத்துவன்






19 கருத்துகள்:

  1. பெரும்பாலும் மனதை அறிவு வென்றுவிடுகிறது..

    பதிலளிநீக்கு
  2. என்ன உலகம் ? என்ன மனிதர்கள்!
    மனம் வருந்தும் பதிவு முனைவரே!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  3. மனம் நெகிழ்த்தும் சம்பவம். மனதை அறிவு வென்றுவிடுகிறது. அறிவை வயிறு வென்றுவிடுகிறது. பகிர்வுக்கு நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
  4. மனதை அறிவு வென்று விடுகிறது... உண்மைதான்...
    என்ன செய்ய... நாம் அப்படியே பழகிவிட்டோம்.

    பதிலளிநீக்கு
  5. அறிவுக்கும், மனசாட்சிக்கும் உள்ள இடைவெளியை நன்றாக உணர்த்திவிட்டுச் செல்கிறது பதிவு..!!

    ஆனால் மனிதமும், மனிதாபிமானமும் உள்ளவர்களால்தான் இன்னும் உலகு உருண்டை வடிவத்துடன் சுற்றிக்கொண்டிருக்கிறது.

    மனிதாபிமானம் இறக்கும்போது உலகும் இருண்டுவிடும். இது உண்மை. பகிர்வுக்கு நன்றி முனைவர் அவர்களே..!!!

    பதிலளிநீக்கு
  6. உண்மைதான் நண்பா.

    வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு