வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 30 மார்ச், 2012

ஏமாந்த குரங்கு


ஊர்ப் பொதுவிடத்தில் இருந்த பலாமரத்தின் பெரிய கிளையில் வாழும் மந்தி(குரங்கு) அம்மரத்தில் இரவலர் கட்டியிருந்த முழவினை (மத்தளம்) பலாப்பழம் என்று எண்ணித் தட்டியது. அவ்வோசைக்கு மாறாக அமமரத்தில் வாழும் அன்னச் சேவல் பறந்து ஒலியெழுப்பியது.

இத்தகைய வளமுடையது ஆய் அண்டிரனின் பொதிய மலை, இம்மலைக்கு ஆடுமகள் (விறலி) செல்லாமேயன்றி, போரை விரும்பும் பகைவர் செல்லமுடியாது என்று மன்னனின் வீரத்தை இயற்கையோடு இயைபுபடுத்திப் பாடுகிறார் முடமோசியார். பாடல் இதோ,

மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
பாடின் தெண்கண், கனி செத்து, அடிப்பின்,
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்,
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்;
ஆடு மகள் குறுகின் அல்லது,
பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே.

புறநானூறு 128.
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.

ஆங்கில மொழிபெயர்ப்பு

The  monkey beat
on the tight drum with clear eyes
hung on a jackfruit tree’s big branch
by the drummers who came for alms,
thinking that it was a jackfruit.
A male swan danced to that beat
in Āy’s land where clouds float on Pothi hills.
Āy with warrior’s bracelets and anklets
is easier to approach by a dancing girl
than by mighty kings.        

தொடர்புடைய இடுகை

புதன், 28 மார்ச், 2012

நமக்கும் இந்த நிலை வரவேண்டுமா?

இன்னும் கொஞ்சம் நாளில் நம் நாட்டிலும்...
இப்படியொரு காட்சியைப் பார்க்கலாம்....

தொடர்புடைய இடுகை

பொன்மொழிகள்



எனக்குப் பிடித்த பொன்மொழிகள் சில....


  • இன்று வரும் துன்பங்களைக் கண்டு நீ ஓடினால்


நாளை உன்னைத் தேடிவரும் இன்பங்களை யார் வரவேற்பது?



  • உன் கண்கள் நேர்மைறையாக இருந்தால் உனக்கு இந்த உலகத்தைப் பிடிக்கும்!
          உன் நாக்கு நேர்மறையாக இருந்தால் இந்த உலகத்துக்கு 
உன்னைப் பிடிக்கும்!


  • எதிர்காலத்தை மாற்றும் ஆற்றல் இயற்கையில் நமக்கு இல்லை. ஆனால் நம் நல்ல பழக்கவழக்கங்கள் எதிர்காலத்தையே மாற்றும் ஆற்றல் வாய்ந்தவை!



  • திட்டமிடத் தவறினால் நாம் தவறு செய்யத் திட்டமிடுகிறோம் என்பது பொருள்.



  • நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது ஆனால் அப்படி ஒரு நண்பன் கிடைப்பது அரிது.


செவ்வாய், 27 மார்ச், 2012

பதிவுலகத் திருடர்கள் வாழ்க


பணத்தைத் திருடலாம்!
தங்கத்தைத் திருடலாம்!
அறிவை..?

காவல் நிலையங்கள் 
நீதி மன்றங்கள்
இத்தனை இருந்தும் 
ஏன் குறையவில்லை குற்றங்கள்?

பதிவுலகத் திருட்டைத் தடுக்க
எத்தனை எத்தனை 
வழிமுறைகள் 

வலதுசுட்டியைச் செயலிழக்கவும்
இடது சுட்டியைச் செயலிழக்கவும்
காப்புரிமை சட்டங்களும்
ஆயிரம் ஆயிரம் 
பாதுகாப்புகள் இருந்தாலும் 
தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன
பதிவுலகத் திருட்டுகள்..

பலர் புலம்புகிறார்கள்..

ஐயோ ஐயோ
குய்யோ முறையோ
கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் 
என்னோட பதிவை தன்னோட பதிவென்று வெளியிடுகின்றானே..
என் பெயர் சொல்லியாவது வெளியிட்டிருக்கலாமே..

என்று..

இத்தனை காலம் நான் வாழ்ந்த வாழ்வில் கற்ற பாடம்..

திருடர்கள் என்றாவது அறிவாளியாவார்கள் 
                           ஆனால்
                        அறிவாளிகள் என்றும் திருடர்களாக மாறிவிடக்கூடாது..


ஒருவர் பதிவை இன்னொருவர் திருடுகிறார் என்றால் 
          எழுதுகிறவர் அறிவுபூர்வமாக எழுதுகிறார்
திருடுபவருக்கு அறிவுப் பசி எடுத்திருக்கிறது 
என்பது பொருள்.


நான் பதிவுலகில் கால்பதித்த காலத்தில் எனது பதிவைப்
 பலரும் என் பெயரோடு வலைமுகவரியோடு வெளியிட்டார்கள்
சிலர் என் பெயரில்லாமல் வெளியிட்டார்கள்
சிலர் என் பதிவைத் தன்பதிவு என்று வெளியிட்டார்கள்..

என் பதிவுகளை யார் எடுத்தாண்டாலும் அதற்காக நான் வருந்தியதில்லை...  
மாறாக நம் கருத்து இவருக்கும் பிடித்திருக்கிறது என்றே எண்ணி  மகிழ்ச்சியடைந்திருக்கிறேன்.

நாலு பேர் நம்ம அறிவைத் திருடிக் கொள்வார்கள் என்ற எண்ணம் எனக்கு என்றுமே இருந்ததில்லை..

நான் ஒவ்வொரு பதிவு எழுதும்போதும்..
இதுவரை எழுதாத ஒன்றை இதில் எழுதவேண்டும் என்ற ஆர்வத்துடனேயே எழுதுவேன்..
நான் எழுதிய பதிவை நானே படிக்கும்போது
புதிதாக நாம் எதையும் எழுதிவிடவில்லை என்றே
எண்ணி வந்திருக்கிறேன்.

நம் கருத்தை எத்தனைபேர் திருடியிருக்கிறார்கள்?
என்று பார்ப்பதைவிட
நம் கருத்து எத்தனை பேருக்குப் பிடித்திருக்கிறது?
என்ற தேடலே நம்மை நாம் வளர்த்துக்கொள்ளத் துணைநிற்கும் என்று கருதுகிறேன்.

தேனீ அயராது உழைத்துத் தேடிவைத்த தேனை யார்வேண்டுமானாலும் 
திருடிக்கொள்ளமுடியும் - ஆனால்
அந்தத் தேனைத் தேடும், அதன் கலைத்திறனையோ, முயற்சியையோ யாரும் திருடமுடியாது

அதனால் நாம் அறிவாளிகள் என்பதை
நமக்கும் உணர்த்தி
நம்மை உலகிற்கு அறிமுகம் செய்யும் இந்த 
பதிவுலகத் திருடர்கள் வாழ்க!



தொடர்புடைய இடுகைகள்

அறிவெனப்படுவது யாது
புத்தியைத் தீட்டுவது எப்படி

திங்கள், 26 மார்ச், 2012

எனக்குப் பிடிக்காத ஒரே மதம்!



எல்லோருக்கும் பிடித்த மதம் தான்
உலகிலேயே பெரிய மதம் தான்
எண்ணற்ற பக்தர்களைக்கொண்ட மதம்தான்
எளிய கொள்கைகளைக் கொண்ட மதம்தான்
பரப்பாமலே பரவும் மதம் தான்
என்றாலும்
எனக்கு ஏனோ பிடிக்கவில்லை!
ஆம் அந்த மதத்தின் பெயர்..

“கால தா மதம்

எனக்குக் காக்கவைப்பதும் பிடிக்காது
காத்திருப்பதும் பிடிக்காது
அதனால் இந்த கால தா மதமும் பிடிக்காது!

தொடர்புடைய இடுகைகள்

ஞாயிறு, 25 மார்ச், 2012

மகவுடை மந்தி!





ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம்!
ஆனால் ஒவ்வொருவரும் அவரவர் எண்ணங்களுக்கே முன்னுரிமை அளிக்கிறோம்..

இன்னொருவரின் ஆசைகளையோ, எண்ணங்களையோ காதுகொடுத்து என்ன? என்று கேட்பதற்குக் கூட நமக்கெல்லாம் நேரம் இருப்பதில்லை.

அப்படிக் கேட்டால் உலகில் தற்கொலைகள் கூட பாதியாகக் குறைந்துவிடும் என்பது என் எண்ணம்!



இதோ ஒரு சங்ககாலத் தலைவன் தன் நெஞ்சோடு பேசிக்கொள்கிறான்..

உங்களுக்குக் கேட்கிறதா?


தோழி - தலைவ! இதுவரை நீ ஊருக்குத் தெரியாமல் இரவுநேரத்தில் வந்து தலைவியைக் கண்டு காதல் மொழி பேசி வந்தாய்..

தலைவன் - ஆமாம். உன் உதவியை மறக்கமுடியுமா?

தோழி - போதும்! போதும்! எல்லாவற்றையும் இதோடு நிறுத்திக்கொள்!

தலைவன் - ஏன்? என்ன ஆனது?

தோழி - நீ இரவு நேரத்தில் வரும் வழியின் துன்பங்கள் எண்ணியும், உங்கள் சந்திப்பை ஊரார் அறிந்து பேசும் அலர் மொழிக்கு அஞ்சியும் நாளும் நாளும் நாங்கள் பட்ட துன்பங்கள் போதும். தலைவியை நீ திருமணம் செய்துகொள். அது தான் உங்கள் இருவருக்கும் நல்லது.

தலைவன் - (தன் நெஞ்சைப் பார்த்து இவ்வாறு பேசுகிறான் தலைவன்)
                     
                        ஏ நெஞ்சே! அதோ பார் பச்சை மண்பானை!
                        இதோ பார் தம் குட்டியைத் தூக்கிச் செல்லும் குரங்கு!

அந்த பச்சை மண்பானையை மழையிலிருந்து காக்க முடியுமா? அந்த மண்பானை அழிவது உறுதி. அதுபோல தலைவியின் நினைவால் தன் மனம் அழிதலும் உறுதி!

சே! அந்த குரங்குக் குட்டியைக் கூட கிளைகளில் ஏறும் போது கீழே விழாமல் பாதுகாத்து அன்போடு அணைத்துச் செல்ல அதன் தாய்க்குரங்கு உண்டு. ஆனால் எனக்கு..?

இன்னும் கொஞ்ச காலம் காதலித்து மகிழலாம் என்று எனக்கு ஆசை இருந்தாலும் என்னைப் புரிந்துகொள்ளவோ, என் தேவையை அன்போடு கேட்டு நிறைவேற்றவோ யாருமே இல்லையே..
குறுந்தொகை -29

என்று தலைவன் தன் மனதோடு இவ்வாறு பேசிக்கொள்கிறான்.

வியாழன், 22 மார்ச், 2012

வயிற்றுக்காக வாழ்கிறோம்..


இன்று காலை 7.30 மணிக்கு பணிக்குச் சென்றுகொண்டிருந்தேன்.
பேருந்தைப் பிடிக்க விரைவாக நடந்து சென்றபோது சாலையின் மறுபுறம் சிலமணித்துளிகள் கண்ட காட்சி சிலமணி நேரங்களை விழுங்கிவிட்டது..

ஒரு உணவுவிடுதி அதன் வாயிலில்...

ஒரு மனநோயாளி குளித்து சில ஆண்டுகளாகியிருக்கும்
அவர் உறங்கி சில வாரங்கள் ஆகியிருக்கும்
அவர் உணவுஉண்டு சில நாட்கள் ஆகியிருக்கும்

அவரை அந்தக் கடையின் உரிமையாளர் விரட்ட முயற்சித்துக்கொண்டிருந்தார்.

இந்த மனநோயாளிக்கு உணவைத்தவிர வேறு எதுவுமே தெரியவில்லை.

சற்று உற்றுப்பார்த்தேன் உரிமையாளரின் கையில் பாத்திரத்தில் சுடுதண்ணீர்உள்ளது..

மரியாதையா போயிடு.. இல்ல.. உன் மேலேயே ஊத்திடுவேன்..
என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்..

இப்போதும்....
இந்த மனநோயாளிக்கு உணவைத்தவிர வேறு எதுவுமே தெரியவில்லை.

எதிர்பாராத நேரத்தில் உரிமையாளர் அந்த மனநோயாளியின் மீது சுடுதண்ணீரை ஊற்றியே விட்டார்...

இந்த மனநோயாளி தட்டுத்தடுமாறி அந்த உரிமையாளரைத் தாக்கமுயற்சிக்கிறார்...

உள்ளே சென்ற உரிமையாளர் நீளமான கம்போடு வந்து அந்த முதியரை இரண்டு அடிஅடித்து விரட்டிவிட்டார்..

அவ்வளவுதான்...

அந்த மனநோயாளி அந்தக் கடையைவிட்டுச் சென்றுவிட்டார்.
அந்த உரிமையாளர் வியாபாரம் பார்க்கச் சென்றுவிட்டார்.
நான் என் வேலைக்கு வந்துவிட்டேன்..

எது சரி? எது தவறு? என்று தெரியாத அந்த மனநோயாளி..


எல்லாம் தெரிந்தும்..
உயிருள்ள இந்த மனித உயிருக்குக்
கொடுக்கவிரும்பாத உணவை
இறைவனுக்குப் படைத்து
வியாபாரம் தொடங்கும் அந்தக் கடை உரிமையாளர்..


இதைப் பார்த்தும் என் வேலைக்காக 
அவ்விடத்தைவிட்டுக் கடந்த நான்..

என நாம் எல்லோருமே வாழ்கிறோம்..
நம் வயிற்றுக்காக.

இருந்தாலும் மனது சொன்னது..
என்ன இருந்தாலும் நீ போய் அந்தக் கடையில் ஒரு சாப்பாடாவது வாங்கி அந்த நோயாளிக்குக் கொடுத்திருக்கலாமே என்று..

அறிவு சொன்னது...
நீ அப்படிச் செய்தால்.. அந்தக் கடைக்காரன் கேட்பான்..
ஏம்பா இன்றைக்கு நீங்க வாங்கித்தருவீங்க.. இவன் நாளைக்கும் இதே நேரத்தில் இங்கு வந்துநின்றால் நான் எப்படி வியாபாரம் பார்ப்பேன் என்று.. நீ உன் வேலையைப் பார்த்துவிட்டுப் போ என்று...

பெரும்பாலும் மனதை அறிவு வென்றுவிடுகிறது..

இருந்தாலும் மனதுக்குள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது...


“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் 
சகத்தினை அழித்திடுவோம் ”
 பாரதி
“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்”

திருக்குறள் 1062


தொடர்புடைய இடுகை

பசிப்பிணி மருத்துவன்






செவ்வாய், 20 மார்ச், 2012

குருவிகளும் வாழட்டுமே..


இன்று (மார்ச் 20 ) உலக குருவிகள் தினத்தை நினைவுபடுத்த..





என்னும் மூன்று இடுகைகளையும் தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

சில சிந்தனைகள்..

இயற்கைக்கு முன் மனிதன் என்றுமே குழந்தைதான்.

இயற்கையின் சமநிலைக்கோட்பாட்டை நாம் அறிவியல் வளர்ச்சி கொண்டு மாற்றினால், இயற்கையின் சீற்றங்களை நாம் எதிர்கொள்ளநேரிடும்.

முன்பெல்லாம் கூட்டம் கூட்டமாக சிறகடித்துச்செல்லும் குருவிகளைப் பரவலாகக் காணமுடியும். ஆனால் இன்று தொலைக்காட்சிகளில் மட்டுமே அரிதாக இவ்வினத்தைக் காணமுடிகிறது. அலைபேசியின் கோபுரங்களே இவற்றின் அழிவுக்குக் காரணம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

எங்கள் வீட்டிலும் எனக்கு விவரம் தெரிந்த நாள்முதலாகவே சிட்டுக்குருவிகள் வளர்கின்றன. கூடுகளில் அல்ல! எங்கள் வீடே அவற்றுக்கு கூடு. எங்கள் வீட்டு முற்றத்தில் கூடுகட்டிய சில குருவிகள் உரிமையோடு வீட்டுக்குள் வந்து அரிசி.. மற்றும் சிறுசிறு உணவுப்பொருள்களை உண்டு தம் துணைக்கும் எடுத்துச்செல்கின்றன…

ஏதோ ஒரு மாநிலத்தில் சிட்டுக்குருவிகள் அழிவைத்தடுக்க நியாயவிலைக் கடைகளிலேயே மக்களுக்கு குருவிக்கூடுகளை இலவசமாகத் தந்தார்கள் என்றொரு நாளிதழ் செய்தி படித்தேன்.

உயிர்களில் என்ன ஏற்றத்தாழ்வு.. 
      குருவிகளும் வாழட்டுமே.. 
னிமேலாவது..
   நம் வீடடுக்கு முன் மரம் வளர்க்கலாம்..
   நம் வீட்டு வாயிலில் கொஞ்சம் அரிசிவைக்கலாம்..
   சிட்டுக்குருவிகளைக் கண்டால் 
இவை அழிந்துவரும் இனம் 
என்பதை உணரலாம் 
இளம் தலைமுறையினருக்கும் 
இதை அறிவுறுத்தலாம்...


தொடர்புடைய இடுகைகள்


(முத்துச்சரம் வழங்கிய இடுகைகளின் தொகுப்பு)
கூடு இங்கே குருவி எங்கே

(திருமதி பக்கங்ள் வழங்கிய இடுகை)
                                                   

திங்கள், 19 மார்ச், 2012

மனசை வாசித்தவள்


மனசை வாசிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.

படித்தாலும், சொன்னாலும்கூட புரியாதவர்கள் பலரிருக்க..

சிலரோ ஒருவரைப் பார்த்தவுடனேயே அவர்களை மதிப்பிட்டுவிடுகிறார்கள்..

இவர்களைப் பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கும்..

சோதிடக்காரர்கள், விளம்பரக்காரர்கள், ஆன்மீகவாதிகள் எல்லாம் மனிதமனங்களை வாசிப்பதில் வல்லவர்கள்தான்..


இங்கு ஒரு சங்ககாலத் தலைவி என்ன அழகாகத் தலைவனின் மனசை வாசிக்கிறாள் என்று பாருங்கள்..

 


பரந்துபடு கூரெரி கானம் நைப்ப
மரந்தீ உற்ற மகிழ்தலை அம்காட்டு
ஒதுக்கரும் வெஞ்சுரம் இறந்தனர் மற்றவர்
குறிப்பிற் கண்டிசின் யானே நெறிப்பட
வேலும் இலங்கிலை துடைப்ப பலகையும்
பீலி சூட்டி மணியணி பவ்வே
பண்டினும் நனிபல அளிப்ப இனியே
வந்தன்று போலுந் தோழி நொந்துநொந்து
எழுதெழில் உண்கண் பாவை
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே.

இது செலவுக்குறிப்பறிந்த தலைமகள் தோழிக்குரைத்தது.
நற்றிணை -177

தலைவன் தன்னைவிட்டு நீங்கிச் செல்ல நினைத்தான் என்பதை அவன் செயல்பாடுகளால் உணர்ந்தாள் தலைவி அதனைத் தோழிக்கு உரைப்பதாக இப்பாடல் அமைகிறது.

ரந்த காடுமுழுவதும் மிகுந்த நெருப்பு எரிந்ததால் அழிந்து மரங்களெல்லாம் தீய்ந்து ஒதுங்கி நிற்கக்கூட நிழல் கிடைக்காத கொடிய நிலம் பாலை. அவ்வழியே என்னை நீங்கிச் செல்ல எண்ணினார் தலைவர். அதை நான் அவர் செயல்பாடுகள் வழியே நன்கு உணர்ந்தேன்.

எப்படி அறிந்தேன் என்று நீ கேட்கிறாயா..?


ஒழுங்குபடுமாறு அவரது வேலின் விளங்கிய இலையைத் துடைப்பார்!

அவரது கேடயத்துக்கு மயில்தோகை அணிந்து வைப்பார்!

இவைமட்டுமன்றி முன் எப்போதையும்விட மிகவும் அன்பாக நடந்துகொள்வார்.

அழகிய என் மையுண்ட கண்களிலே கண்ணீ்ர் வெள்ளமாகப் பரவ அவ்வெள்ளத்தில் நான் விழுந்து நீந்தும் நாள் இதுதான் போலும் என்று புலம்புகிறாள்.

பாடல் வழியே...

தலைவனின் மனசை நன்கு உற்றறிந்து வாசிக்கும் தலைவியின் உளவியல் அறிவு வியக்கத்தக்கதாகவுள்ளது

பாலைநிலத்தின் கொடுமையும், அவ்வழியே செல்வோர் கையில் வேலும், கேடயமும் எடுத்துச் செல்வார்கள் என்ற வழக்கம் எடுத்துரைக்கப்படுகிறது.

ஞாயிறு, 18 மார்ச், 2012

தமிழாய்வின் தற்காலநிலை.

இன்றைய தமிழாய்வு எதை நோக்கிச் செல்கிறது ?
வளர்ச்சியையா?அழிவையா?
பட்டத்தையா? பணத்தையா?

நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெடப் புழுதியில் எறிவது போலவும் குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போலவும் தமிழ் தமிழாய்வாளர்களிடம் சிக்கிக் கொண்டு பாடாய் படுகிறது.
இன்றைய தமிழாய்வு குறித்து கவிஞர் வைரமுத்து
குறிப்பிடும் போது

 பெரும்பாலும் ஆய்வுகள் இங்கே மேற்கோள் நிரப்பிய வைக்கோல்கள்

 கம்பராமாயணத்தில் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்களைத் தேடிக்கொண்டிருக்கும் இலக்கணப் புலிகள்

 அகநானூற்றில் மார்க்ஸியம் தேடிக்கொண்டிருக்கும் அறிவு ஜீவிகள்.

 மதுரை வீதியில் கண்ணகி திருகி எறிந்ததைத் தேடிக்கொண்டிருக்கும் கசாப்புக்கடைக்காரர்கள்.

 சித்தர் பாடல்களில் உள்ளார்ந்த ஒளியை மறந்துவிட்டு அதன் சத்தங்களை ஆராய்ச்சி செய்யும் சப்தப் பித்தர்கள்.

 ஓர் ஆராய்ச்சி என்பது அலசிப்பார்த்து முடிவு சொல்ல வேண்டாமா?

 விடியாத தமிழ்நாட்டில் வெளிச்சம் கொளுத்த வேண்டாமா?

 இதை விட்டு விட்டு ‘மன்னன்;’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் எத்தனைமுறை பயின்று வந்தது?

 மலைநாட்டு மயில் எத்தனை முறை ஆடியது?

 சங்ககாலக் குரங்கு எத்தனை பழம் தின்று கொட்டை போட்டது?
இவையெல்லாம் ஆராய்ச்சிகளே இல்லை என்று மனம் நொந்து குறிப்பிடுகிறார்.இன்றைய தமிழாய்வை எண்ணும் போது நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் …………… என்றுதான் தோன்றுகிறது.

இன்றைய சூழலில் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் செய்யப்படும் ஆய்வேடுகள் வணிகமயமாகிவிட்டன.

ஆம் ஐய்ந்தாயிரம் ரூபாய்க்கு எம்பில் ஆய்வேடுகளும்

பத்தாயிரம் ரூபாய்க்கு முனைவர் பட்ட ஆய்வேடுகளும் செய்து விற்பனை செய்யப்படுகின்றன.

அன்றைய சூழலில் உ.வே.சாமிநாதையர் போன்ற கல்விப்புலம் சாராத ஆய்வாளர்கள் பலரும் எந்தப்பட்டங்களை எதிர்பார்த்தும் தமிழாய்வு செய்யவில்லை ஆனால் இன்று கல்விப்புலம் சார்ந்து செய்யப்படும் ஆய்வுகளின் நிலை மிகவும் தரம் தாழ்ந்ததாக உள்ளது.


!திருப்புமுனை!

சிறுவிதைக்குள் ஒரு பெரிய மரமே மறைந்திருப்பதுபோல ஒவ்வொருவருக்குள்ளும் அவர்களின் தனித்தன்மை மறைந்திருக்கிறது.

சில விதைகள் செடியிலேயே அழிந்துபோகின்றன
சில விதைகள் மரங்களாகி நிழல்தருகின்றன.

இதுபோலவே மனிதர்களும்..

ஒரு செடி வளர்வதற்கு மண், நீர், வெப்பம் என எல்லாச் சூழல்களும் தேவை..

மனிதர்களுக்கும் தம்மைத் தாம் புரிந்துகொள்ள இதுபோன்ற சூழல்கள் பல தேவைப்படுகின்றன.

சிலர் அச்சூழல்களைப் பார்க்கிறார்கள்
சிலர் அச்சூழல்களைப் புரிந்துகொள்கிறார்கள்..

இந்தப் புரிதலுக்குத் திருப்புமுனை என்று நாம் பெயர்வைத்திருக்கிறோம்.

வரலாறு படைத்த சாதனையாளர்களுக்கு திருப்புமுனையாக அமைந்த சூழல்களைத் தொடர்ந்து “திருப்புமுனை என்ற பெயரில் இடுகைகளாக வெளியிடவுள்ளேன்.
தனித்தமிழ் இயக்கத்தின் தானைத்தலைவர், தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் மறைமலையடிகள் சைவ சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
அவர் பல்லவபுரத்தில் தம் மகளாருடன் ஒருநாள் உலவிக்கொண்டிருந்தார். பின்னர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது அவருடைய மகளார் நீலாம்பிகை அம்மையார் இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவிலிருந்து ஒரு பாடலை இனிமையாகப் பாடினார்.

மனமுருகிப் பாடிய அவர் பாட்டின் இடையே “தேகம்“ என்னும் ஒரு வடசொல் வருவதைக் கண்டு அது பற்றித் தந்தையிடம் பேசினார்.

 இப்பாட்டில் எல்லாச் சொற்களும் தமிழாய் இருக்கின்றன. ‘தேகம்’ என்னும் ஒருவடசொல் மட்டும் இருக்கிறது. அதையும் மாற்றினால் நன்றாக இருக்குமே என்று அவர்கள் உரையாடல் அமைந்தது. ‘தேகம்’ என்பதற்கு மாற்றாக "யாக்கை" என்னும் தனித்தமிழ்ச் சொல் இருந்தால் இனிமையாய் இருக்கும் என்று அடிகள் கூறினார்.

அவரின் மகளார், ‘தந்தையே இனிமேல் நாம் ஏன் வடசொற்களை நீக்கி முற்றிலும் தனித்தமிழைப் பயன்படுத்தக்கூடாது?’ என்று கேட்டார். இது 1916 இம் ஆண்டு நிகழ்ந்தது. அது முதல் அப்படியே செய்ய எண்ணிப் பல மாற்றங்களை மறைமலையடிகள் செய்யத் தொடங்கினார்.

இந்த நிகழ்ச்சி இவர்வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது.

தொடர்புடைய இடுகைகள்

மறைமலையடிகள் பற்றிய விக்கிப்பீடியாவின் பக்கம்
பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்
மறைபொருள் தெரிகிறதா?

புதன், 14 மார்ச், 2012

காலம் (காசியானந்தன் நறுக்குகள்)


காலம் எங்கோ தொடங்கி எங்கோ சென்று கொண்டிருக்கிறது.இடையில் வந்த நாம் அதற்கு ஆண்டு, மாதம், வாரம், நாள், மணி, நொடி, கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என ஏதேதோ பெயர் சொல்லி அழைக்கிறோம். 

ஆன்மீகமும், அறிவியலும் விளக்கமுடியாத புள்ளியில் மையம் கொண்டிருக்கிறது காலம். 

காலத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு சுலபமானதல்ல. 

காலத்தைப் புரிந்துகொள்ளாதவர்களுக்கு காலம் முதலாளியாக இருக்கிறது! 
காலத்தைப் புரிந்துகொண்டவர்களுக்குக் காலம் நல்ல பணியாளாக இருக்கிது! 

காலத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் வரலாறு படிக்கிறார்கள்!
காலத்தைப் புரிந்து கொண்டவர்கள் வரலாறு படைக்கிறார்கள்!! 

மேலும் சுவாசிக்க.........


செவ்வாய், 13 மார்ச், 2012

சாலை ஆத்திச்சூடி

இந்தியாவில் மட்டும் ஒரே ஆண்டில் 1.30 இலட்சம் பேர் சாலைவிபத்தில் பலியாகியிருக்கின்றனராம்.

சாலையைக் கடக்கும்போது கண்ணில்பட்ட விழிப்புணர்வளிக்கும் ஆத்திச்சூடி ஒன்றை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

படிப்போம் கொஞ்சம் பின்பற்ற முயற்சிப்போம்...

ஞாயிறு, 11 மார்ச், 2012

வெற்றிதரும் பேச்சுக் கலை (ஆசிரியர்களுக்காக)



·        நான் பலமுறை எண்ணிப்பார்த்திருக்கிறேன்.
வேறு எந்தப் பணிக்காவது நாம் சென்றிருந்தால் இவ்வளவு மன நிறைவு கிடைத்திருக்குமா? என்று...


·        இளைய தலைமுறையினருடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும்போது கிடைக்கும் மனநிறைவைவிட. நான் சொன்ன சின்னச்சின்னக் கதைகளும்,பொன்மொழிகளும், சிந்தனைகளும் அவர்களைச் சிந்திக்கச் செய்திருக்கிறது என்பதை உணரும்போது பெரிதும் நெகிழ்ந்துபோயிருக்கிறேன்.

·        நான் இயல்பாகவே குறைவாகப் பேசக்கூடியவன்.
பேசவேண்டிய சூழலில் மட்டுமே பேசிவந்திருக்கிறேன்.

  • இரண்டுகாதுகளையும் ஒரு வாயையும் இயற்கை நமக்குத் தந்தது. நாம் நிறைய கேட்கவேண்டும் குறைவாகப் பேசவேண்டும் என்பதற்காகவே என்பதை அவ்வப்போது நினைவுபடுத்திக்கொள்வேன்.

  • நெல்லைக் கொட்டினால் அள்ளிவிடலாம் சொல்லைக் கொட்டினால் அள்ளமுடியாது என்பதை எப்போதும் எண்ணிக்கொள்வேன்.


·        மேடை நடுக்கம் ஏற்பட்டபோதெல்லாம், அதை நீக்க..
முதலில் நமக்கு முன் இருப்பவர்கள் எல்லோரும் முட்டாள்கள் நான மட்டுமே அறிவாளி என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் பேசுவதை அவர்கள் உற்றுநோக்க ஆரம்பித்தபிறகு...
இங்கு நம்முன் இருப்பவர்கள் எல்லோருமே பெரிய அறிவாளிகள்   
    நாம் மட்டும் தான் முட்டாள் என்றே எண்ணி வந்திருக்கிறேன்.


ஒருமுறை சொன்ன கருத்தையே அடுத்தமுறை சொல்லும்போது இதுஇங்கு தேவையா? என்று சிந்தித்திருக்கிறேன். தேவையென்றால் அதே செய்தியை வேறுமுறையில் சொல்லிவந்திருக்கிறேன்.
  • அவ்வப்போது மாணவர்களிடம் என் நிறைகுறைகள் பற்றி கருத்துரைகளை வாங்கி என்னைத் தன்மதிப்பீடு செய்துகொள்வேன்..
அதில் ஒரு மாணவர் எழுதியிருந்தார்...
ஐயா.. உங்கள் வகுப்புகளில் நீங்கள் எங்களை வெளியே பார்க்கவிட்டதே இல்லை.. ஒருமணிநேரமும் எங்களை பாடத்தையே உற்றுநோக்கவைத்திருக்கிறீர்கள். எங்கள் சிந்தனை திசைமாறும்போதெல்லாம் எங்களைத் திசைமாற்றி ஏதாவது நகைச்சுவையோ, கதையோ சொல்லி கைதிபோலவே சிறைப்படுத்திவைத்திருக்கிறீர்கள்..

-இப்படிக்கு உங்கள் கைதிகளில் ஒருவன் 
என்று எழுதியிருந்தார்.

நான் வகுப்பெடுக்கும் முறைபிடித்திருக்கிறது என்று பல மாணவர்களும் சொல்லியிருக்கிறார்கள்.

மாணவர்களுக்குப் பிடிப்பது போலப் பாடம் எடுப்பது மிகவும் எளிது. ஆனால் அவர்களைத் தேர்ச்சியும் அடையவைக்கவேண்டும் ஒழுக்கத்தையும் கற்றுத்தரவேண்டும் என்ற சூழலில் தான் ஆசிரியர்களுக்கு சுமை அதிகரிக்கிறது.

ஆசிரியருக்கு அடிப்படையானது பேச்சுக்கலை. அதன் நுட்பங்களை நான் அதிகமாகக் கற்றுக்கொண்டது நம்ம வள்ளுவரிடமிருந்துதான்.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
திருக்குறள் -100

கேட்டார்ப் பிணிக்கும் தகைஅவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்
திருக்குறள் -643

சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து
திருக்குறள் -645

என்னும் குறள்கள் என்னைப் பெரிதும் மாற்றியிருக்கின்றன.



வியாழன், 8 மார்ச், 2012

பெண்கள் இல்லாத உலகத்திலே..


பெண்கள் இல்லாத உலகத்திலே..
அம்மா என்ற கடவுளின்
முகவரி தெரியாமல் போயிருக்கும்!

பெண்கள் இல்லாத உலகத்திலே..
காதல் என்ற வேதத்தின்
உட்பொருள் தெரியாமல் போயிருக்கும்!

பெண்கள் இல்லாத உலகத்திலே..
சிரிப்புக்கும் - அழுகைக்கும்
தேவையில்லாமல் போயிருக்கும்!




தொடர்புடைய இடுகைகள்


திருமண அழைப்பிதழ் மாதிரி

செவ்வாய், 6 மார்ச், 2012

வலி்ச்சாலும் பிடிச்சிருக்கு!

மீன் கொடித் தேரில் மன்மத ராசன் ஊர்வலம் போகின்றான் என்றொரு திரைப்படப் பாடல் கேட்டிருப்பீர்கள்..

மன்மதன் கரும்பை வளைத்து வில்லாக வைத்திருப்பானாம்
அவனுடைய தோள்களில் தொங்கும் அம்பறாத்துணியில் மலர்கள் நிரம்பி வழியுமாம்
அந்த மலர்களை அம்புகளாக (கணைகளாக)  ஆண்களின் மீதும் பெண்களின் மீதும் எய்துகொண்டிருப்பானாம்.
அப்படி எய்யப்படும் மலர்(க்கணைகள்) அம்புகள் எவர் மீது விழுகின்றனவோ, அவர்களுக்குக் காதல் அரும்புமாம். இது பழந்தமிழர் நம்பிக்கை.

இது சரியா? தவறா? என்று ஆய்வு செய்யும் முன்னர்...


ஆண் மீது பெண்ணுக்கும் - பெண் மீது ஆணுக்கும் ஏற்படும் ஈர்ப்புக்கு இன்றைய அறிவியல் கூறும் வேதியியல் (ஆர்மோன்) விளக்கத்தோடு ஒப்புநோக்கத்தக்கதாக இச்சிந்தனை விளங்குகிறது. இச்சிந்தனை அக்கால மக்களின் அறிவுக்கு எட்டிய வேதியியல் சிந்தனையாகவே எனக்குத் தோன்றுகிறது. 




கால காமாகவே பெண்கள் ஆண்களைத்தாக்கப் பயன்படுத்தி வரும்
ஆயுதம் - கண்கள்!

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்டவடு (குறள் 120)

என்பார் வள்ளுவர்...

தீயினால் சுட்டபுண்
நாவினால் சுட்டவடு

இவ்விரண்டோடும் ஒப்பு நோக்கத்தக்கதே இந்த வலியும்..

இதோ அடிபட்ட ஒரு ஆணின் புலம்பல்..



கண்களுக்கு மைபோடும் பெண்ணைப் பார்த்து சொல்லப்பட்ட கவிதை..

என்னைக் கொல்வதற்கு 
உன் விழிகளே போதுமே 
எதற்கு அதில் விசம் தடவுகிறாய்


விஞர் மீரா அவர்கள் எழுதிய மறக்கமுடியாத கவிதை


நீ முதல் முறை என்னை

தலைசாய்த்துக்

கடைக்கண்ணால் பார்த்தபோது

என் உள்ளத்தில்

முள் பாய்ந்தது
அதை இன்னும் எடுக்கவில்லை
முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும்
எங்கே
இன்னொருமுறை பார்.. 


சீனக் கவிதை ஒன்று..



“கியாட்டோ பட்டு வியாபாரிக்கு இருமகள்கள்

முத்தவள் இருபது, இளையவள் பதினெட்டு

வீரன் கத்தியால் கொல்லுவான்

ஆனால் இப்பெண்கள் கண்களால்”


என்ன நண்பர்களே இந்தக் கவிதைகளுக்கெல்லாம் ஒரு ஒற்றுமை தெரிகிறதா?
இது போன்ற கவிதைகளைப் படிக்கும் போதெல்லாம் என் நினைவுக்கு வருவது நம்ம வள்ளுவரின் குறள் தான்.


இருநோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு
நோய் நோக்கு ஒன்று அந்நோய் மருந்து. 
                                                                                 (குறள்110)

வள்ளுவரின் இந்தக் குறளைப் படிக்கும் போதெல்லம் நினைவுக்கு வருவது..
இந்தக் குறுந்தொகைப் பாடல் தான்.

பூ ஒத்து அலமரும் தகைய ஏ ஒத்து
எல்லோரும் அறிய நோய் செய்தனவே
தேமொழித் திரண்ட மென்தோள் மாமலைப் 
பரிஇ வித்திய ஏனல்
குரிஇ ஓப்புவாள் பெருமழைக் கண்ணே!

                                              குறுந்தொகை -72
                                                         மள்ளனார்

தலைவியின் நினைவாலேயே வாடும் தலைவனின் உடலில் நிறைய மாற்றங்கள் அதனைக் கண்டு என்ன ஏது? என்று வினவுகிறான் பாங்கன். அதற்குத் தலைவன் சொல்கிறான்..


இனிய மொழியினையும், பருத்த மெல்லிய தோள்களையும் உடைய பெண்ணொருத்திதான் எனது இந்த நிலைக்குக் காரணம. 

அவள் பெரிய மலைப் பகுதியில் குருவிகளை ஓட்டுபவள்..
குளிர்ச்சியைத் தருகின்ற பெரிய கண்களைக் கொண்டவள்..

அவளை நான் காண்கின்றபோது அவள் கண்கள் அழகான தாமரை மலர் போலக் காட்சியளிக்கும்!

அதே நேரம் அவள் என்னைக் காண்கின்ற போது அவள்கண்கள் கொடிய அம்பைப் போலவே என்னைத் தாக்கி வருத்தும்.

 அதனால் மலர் போன்ற கண்களால் அம்பு தைத்தது போன்ற நோயினை அவள் எனக்குத்தந்தாள் அதுதான் என் உடலில் இவ்வளவு மாற்றம் என்கிறான் தலைவன்.

இதோ இந்தச் சாயல் கொண்ட திரையிசைப்பாடல்..



நேற்று வரை நீ யாரோ நான் யாரோ


இன்று முதல் நீ வேறோ நான் வேறோ



காணும் வரை நீ எங்கே நான் எங்கே



கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே

(நேற்று வரை)

உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே

நேரிலே பார்த்தால் என்ன 

நிலவென்ன தேய்ந்தா போகும்

புன்னகை புரிந்தால் என்ன 

பூமுகம் சிவந்தா போகும்

(நேற்று வரை)

பாவை உன் முகத்தைக் கண்டேன்

தாமரை மலரைக் கண்டேன்

கோவை போல் இதழைக் கண்டேன்

குங்குமச் சிமிழைக் கண்டேன்

வந்ததே கனவோ என்று

வாடினேன் தனியே நின்று

வண்டு போல் வந்தாய் இன்று

மயங்கினேன் உன்னைக் கண்டு

(நேற்று வரை)


படம் : வாழ்க்கைப்படகு
இசை : எம். எஸ்.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர் : பிபி சீனிவாஸ்

தொடர்புடைய இடுகைகள்

வெள்ளி, 2 மார்ச், 2012

சரி சரி சண்டைபோடதீங்கப்பா..



காலையில் கண்விழித்ததிலிருந்து இரவு கண்ணுறங்குவது வரை எத்தனை எத்தனை சண்டைகள்!
சில நேரம் நாம் சண்டையிடுகிறோம்
பிறர் பார்க்கின்றனர்!
பலநேரம் பிறர் சண்டையிடுகிறார்கள்
நாம் பார்க்கிறோம்!
இப்படி நடக்கும் எல்லா சண்டைகளுக்கும் நானறிந்த காரணம் - சுயநலம்!

சுயநலமின்றி வாழ நாம் என்ன மரங்களா? என்று சிலர் கேட்கலாம்.
மரங்கள் கூட தாம் வாழத் தேவையான தண்ணீரை சுயநலத்தோடு உறிஞ்சத்தானே செய்கிறது என்று சிலர் சொல்லாம்..

ந்த மரங்களும் தம் தேவைக்கு அதிகமாக ஒருதுளி நீரைக்கூட உறிஞ்சுவதில்லையே என்பதுதான் என் பார்வையாக உள்ளது.

இப்போதெல்லாம் நடைபெறும் ஊழல்களைப் பாருங்கள் ஆயிரம் கோடி.. இரண்டாயிரம் கோடி என்று..

சுயநலம் பேராசையாக மாறிப்போனதால்..
தான் வாழ யாரை வேண்டுமானலும் மிதித்துவிட்டுச் செல்லலாம் என்பது தான் ஒவ்வொருவரும் பின்பற்றும் கொள்கைகளாக இருக்கின்றன.



ன்று ஒவ்வொருவர் வீட்டுக்கு முன்னாலும் விலையுயர்ந்த வண்டிகள் நிற்கின்றன சாலைகள் தான் பல்லைக் காட்டி சிரித்துக்கொண்டிருக்கின்றன.

கதை ஒன்று..


ஒரு நாள் உடல் உறுப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்த வயிற்றைப் பற்றிக் குறைபேசிக்கொண்டிருந்தன.
என்னடா இது நாமெல்லாம் உழைக்க இந்த வயிறு மட்டும் எந்த வேலையும் செய்யாமல் உண்டு உண்டு வயிறுவளர்க்கிறதே என்று..
இந்த சத்தம் வயிற்றுக்கும் கேட்டது.

வயிறு உடல் உறுப்புகளைப் பார்த்துக் கேட்டது..
'ஏம்பா என்னை எல்லோரும் சேர்ந்து திட்டுறீங்க? நான் என்ன எந்த வேலையுமே செய்யாமலா இருக்கிறேன்..

நானும்தான் வேலை செய்கிறேன்என்றது..
அதற்கு எல்லா உறுப்புகளும் ஒன்று சேர்ந்து சத்தமிட்டன..
ஆமாமா... நீயும் உழைப்பது உன் தொப்பையைப் பார்த்தாலே தெரியுதே என்று..

நாங்களெல்லாம் சேர்ந்து ஒரு முடிவெடுத்திருக்கிறோம் என்றது தொண்டை

என்ன என்று அச்சத்தோடு கேட்டது வயிறு..

உதடுகள் பேசின..

இனிமேல் நாங்களும் உனக்காக உழைக்கப்போவதில்லை! நீ எப்படி வயிறு வளர்க்கிறாய் என்பதைத்தான் பார்க்கப்போகிறோம் என்று..
வயிறு எதுவும் பேசவில்லை... அமைதியாக இருந்தது.

நாட்கள் சில சென்றன..

உணவு உட்கொள்ளாததால் ...


கண்கள் ஒளி மங்கின!
நாக்கும் உதடுகள் உலர்ந்து போயின!
கைகளும் கால்களும் அசைய மறுத்தன!
சீரண உறுப்புகள் உல்லாம் மரண ஓலமிட்டன!
வயிறு மட்டும் உறுப்புகளைப் பார்த்துச் சத்தம் போட்டுச் சிரித்தது!

அப்போது மூளை வந்து கட்டளையிட்டது..

'சரி சரி சண்டை போடாதீங்கப்பா'என்று

இந்தக் கதை சுட்டும் வயிறு தான் நம் நாடு
உடல் உறுப்புகள் தான் நாம் என்று புரிந்துகொண்டால் சண்டைகளுக்கான காரணம் என்ன என்பது விளங்கும்...


தொடர்புடைய இடுகை