பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

திங்கள், 27 பிப்ரவரி, 2012

அதே சிரிப்பூ..?



இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி நாம் நம்மைவிட நம்மைச் சுற்றியிருப்பவர்களையே அதிகம் சிந்தித்துப்பார்ப்போம். ஆம். அவர்கள் நம்மைப் பார்ப்பார்களே என்றே நினைத்துப்பார்ப்போம்.

கீழே விழுந்த ஒருவன் தன் வலியைவிட 
தன்னை யாரும் 
பார்த்துவிட்டார்களோ?
சிரித்துவிட்டார்களோ? 
என்பதிலேயே விழிப்புடனிருப்பான். அதுபோல,

நம்மை யாரும் பார்க்காவிட்டாலும்
எல்லோரும் நம்மை மட்டுமே பார்க்கிறார்கள் என்பது போன்ற மனவுணர்வு சில நேரங்களில் நமக்கு வருவதுண்டு.

அந்த நேரத்தில் வெட்கம் வந்து நம்மைக் கவ்விக்கொள்ளும். 
தலை கவிழ்ந்து மண்ணைத் தவிர யாரையும் பார்க்கத் தோன்றாது.


இங்கே ஒரு பெண்ணுக்கு இப்படித்தான் நடந்துவிட்டது.


தலைவன் பிரியும் முன்னர் முல்லையின் அரும்புகளைக் காட்டி இதே போல அடுத்த கார்காலத்தில் முல்லை மலரும்போது நான் வந்துவிடுவேன் என்று கூறிச்சென்றான். கார்காலம் வந்தும் அவன் வரவில்லை. இவ்வேளையில் இயல்பாக மலர்ந்த முல்லையைக் காண்கிறாள் தலைவி. இவளுக்கு முல்லை தன் தலைவனின் உயர்வு அவ்வளவுதானா? என்று எள்ளி நகையாடுவதாகவே தோன்றுகிறது.

பாடல் இதோ.

-ஒக்கூர் மாசாத்தியார்


குறுந்தொகை -126. முல்லை - தலைவி கூற்று
பருவம் கண்டு அழிந்த தலைமகள் (தலைவி) தோழிக்குச் சொல்லியது.

இதே போன்ற இன்னொரு பாடல்..

மேற்கண்ட பாடலில் தலைவியைக் கண்டு சிரித்த முல்லை இங்கு தலைவனைக் கண்டு சிரிக்கிறது..

ஏன் என்று பாருங்கள்..

இயல்பாகவே மாலையில் மலர்ந்த முல்லை மலரைக் கண்ட தலைவனின் மனது முல்லை மலரோடு பேச ஆரம்பித்துவிடுகிறது..

தலைவன் - ஏ முல்லை மலரே தலைவியை நீங்கித் தனித்திருக்கும் என்னைக் கண்டு இரக்கம்  கொள்ளவேண்டிய நீ என்னைப் பார்த்து சிரிக்கிறாயே இது உனக்கே தகுமா?

முல்லை - இப்போது நீ தலைவியுடன்  சேர்ந்தல்லவா இருக்கவேண்டும்.
அவளைத் தனிமையில் தவிக்கவிட்டு இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாய்..

என்று கேட்டுவிட்டு கலகலவென முல்லை சிரிக்கும் ஒலி தலைவனின் காதில் கேட்கிறது.




கார்புறந் தந்த நீருடை வியன்புலத்துப்  
    
பலர்புகு தரூஉம் புல்லென் மாலை  
    
முல்லை வாழியோ முல்லை நீநின்  
    
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை  

நகுவை போலக் காட்டல்  
    
தகுமோ மற்றிது தமியோர் மாட்டே.  
என்பது வினைமுற்றி மீளும் தலைமகன் முல்லைக்குரைப்பானாய் உரைத்தது.

குறுந்தொகை 162

கருவூர்ப் பவுத்திரன்.
(முல்லையே,  நீ வாழ் வாயாக!
மேகத்தாற் பாதுகாக்கப் பெற்ற, நீரையுடைய அகன்ற முல்லை நிலத்தின்கண்,
தாம் சென்ற பணி முடிந்து பலரும் தம் வீட்டிற்குச் செல்லும் ஒளியிழந்த மாலைக் காலத்தில்,
நீ உனது சிறிய வெள்ளிய அரும்புகளைக் காட்டிச் சிரித்தாய்!
தலைவியரைப் பிரிந்து என்போல்  தனித்திருப்போரை  
எள்ளி நகைப்பது போலவே உன் செயல் இருக்கிறது.
இது உனக்குத் தகுமோ?)

இலக்கிய நயம்

 முல்லை மலர்வது இயல்பான ஒன்றுதான் என்றாலும் இங்கு தலைவிக்கும், தலைவனுக்கும் அது தன்னைப் பார்த்துதான் சிரிக்கிறது என்றே தோன்றுகிறது. 
இருவரின் குற்றவுணர்வுமே இதற்கு அடிப்படையாக அமைகின்றன. 
தம் அகவாழ்வை இயற்கையோடு அழகாகப் இயைபுபடுத்திப் பார்க்கும் சங்கத்தமிழரின் வாழ்வு இன்றைய தலைமுறையினர் எண்ணிப்பார்க்க வேண்டிய இனிய நினைவுகளாகும்.

தொடர்புடைய இடுகைகள்

21 கருத்துகள்:

  1. அருமையான இரண்டு பாடலகளை
    அழகான விளக்கத்துடன் பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    இயற்கையோடு தன்னை இணைத்தே வாழ்ந்த
    பண்டை தமிழர்களின் வாழ்வின் நிலையை
    எண்ணிப் பார்க்க மிக்க பெருமிதமாக உள்ளது
    மனம் கவர்ந்த பதிவு
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. குறுந்தொகைப் பாடலில் எல்லா சுவையும் இருக்குது போல.முல்லை சிரிப்பது நல்ல கற்பனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் சங்கத்தமிழ் சுவாசித்தமைக்கும் நன்றி விச்சு

      நீக்கு
  3. இயல்பான நிகழ்வுகள் கூட, குற்றவுணர்வில் தவிப்பவரை மேலும் தவிக்கவிடுவதாகவே அமையும் என்பது எத்தனை அழகாய் நயமாய் முல்லை விரிவதன் மூலம் சொல்லப்பட்டுள்ளது. புலவர்களின் கற்பனையும் அதை அவர்கள் வெளிப்படுத்தும் பாங்கும் அழகும் இனிமையும். பகிர்வுக்கு நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் ஆழமான பார்வை பாடலுக்கு மேலும் சுவையளிப்பதாக அமைகிறது கீதா..

      நன்றி.

      நீக்கு
  4. பூ பூக்கும் சிரிப்பதில் இருக்கும்
    மர்மமத்தை அழகாக சித்தரிக்கும்
    அற்புத பாடலுடன் விளக்கமும்
    அருமை முனைவரே.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்! குறுந்தொகைப் பாடலில் முல்லையின் இலக்கிய வேர்களைத் தேடிய உங்கள் விளக்கம் அருமை!

    பதிலளிநீக்கு
  6. பூவையப் பார்த்துப் பூ எள்ளி நகையாடுகிறது!அருமை முனைவரே.

    பதிலளிநீக்கு
  7. இலக்கிய வாசனையுடன் கூடிய அருமைப்பதிவு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான பாடல்கள், சிறப்பான விளக்கம்.

    பதிலளிநீக்கு
  9. அழகிய பாடல்!எப்போதோ படித்தது!ஒப்பேதும் இல்லாத பாடலை முப்போதும் இரசிக்கும் படியாக, இப்போது தந்தீர் முனைவரே!நன்றி!
    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு