சங்க இலக்கியங்கள் தமிழரின் நாட்குறிப்புகளாகவே விளங்குகின்றன. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகையில் படிப்போர் தம் வாழ்வில் ஒப்புநோக்கிக் கொள்ளத்தக்கதாகத் திகழ்வது வியப்பிற்குரியதாகவுள்ளது. சங்ககால மக்களின் வாழ்வியலில் இயற்கை பிரிக்கமுடியாத கூறாக உள்ளது உணர்வுகளுக்கு மேலும் அழகூட்டுவதாக உள்ளது..
இதோ ஒரு அகப்பாடல்..
வேங்கை மரத்தோடும், அருவியோடும் தம் வாழ்வை ஒப்பிட்டு உரைக்கிறாள் தலைவி..
இவளின் வாழ்வை நாம் நம் இன்றைய வாழ்வோடு ஒப்பிட்டு உணரத்தக்கதாகவுள்ளது.
திருமண நாள் குறிக்கப்பட்டு இடைப்பட்ட நாளில் தலைவி
தலைவனைப் பிரிந்து வருந்தியிருக்கிறாள். அதனால் அவளைத் தோழி ஆற்றுவிக்கிறாள்.
அப்போது தோழியிடம் தலைவி பேசுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
தோழி கேட்பாயாக..
சிறிய குன்றினிடையே வளர்ந்துள்ள பருத்த நீண்ட தாளினையுடைய வேங்கை மரத்தின்
மலர்களையுடைய அசைகின்ற கொம்புகள், மலர் உதிர்ந்து தனித்திருக்குமாறு வீசி, கற்களை
மோதி, ஒலித்து, விரைந்து வீழுகின்ற அருவி நிலத்தினை இடமாகக் கொண்டு ஊர்ந்து
திரியும் பாம்பு போல வீழ்கிறது.
இத்தகைய ஒன்றற்கு ஒன்று குறுக்கிடும் மலைகளையுடைய மலைநாடனோட
கொண்ட எனது நட்பானது களவு என்னும் காலத்தில் பிரிவு என்னும் கேடின்றி இருந்தால்
விரும்பத்தக்கதாகும்.
இதுவே எனது விருப்பம் என்கிறாள்.
அம்ம வாழி தோழி நம்மொடு
|
|
பிரிவின் றாயி னன்றுமற்
றில்ல
|
|
குறும்பொறைத் தடைஇய
நெடுந்தாள் வேங்கைப்
|
|
பூவுடை யலங்குசினை
புலம்பத் தாக்கிக்
|
|
கல்பொரு திரங்குங் கதழ்வீ
ழருவி
|
|
நிலங்கொள் பாம்பி
னிழிதரும்
|
|
விலங்குமலை நாடனொடு கலந்த
நட்பே.
|
குறுந்தொகை
-134
பாடல்
வழியே..
·
வேங்கை மரம் இன்புற்று
வளர்வதற்குக் காரணமான அருவியே அதன் கிளைகளில் உள்ள மலர்கள் உதிரவும் காரணமானது. அதுபோல
தலைவனும் தலைவியும் இன்புறுவதற்குக் காரணமான களவானது (ஊரார் அறியாத தனிப்பட்ட
தலைமக்களின் கூட்டம்) தலைமக்களின் பிரிவுக்கும், ஊரார் தூற்றும் அலருக்கும்,
தலைவியின் நலம் கெடுவதற்கும் காரணமானது.
·
அருவி பாம்பு போலப்
பிரிதொன்றாகத் தோன்றுதல் களவொழுக்கம் அயலாரால் தவறாக உணரப்பட்டு அலர் தூற்றக்
காரணமானதோடு ஒப்புநோக்கத்தக்கதாகவுள்ளது.
·
இப்பாடல் பாடிய புலவரின்
பெயர் “கோவேங்கைப் பெருங்கதவன்“ என்பதாகும். இவர் இப்பாடலில் எடுத்தாண்ட வேங்கை
மரத்தின் உவமை நயமே இவர் பெயர் தோன்றக் காரணமாயிருக்கக் கூடும். இவர் பாடியதாக
இந்த ஒரு பாடலே கிடைத்துள்ளது. இச்சூழலில் உவேசா அவர்கள் “கோவேங்கைப்
பெருங்கதழ்வன். என்று உரைப்பதும் வேங்கை மரத்துடன் (கதழ்வீழ்) விரைந்துவீழும் அருவியின்
பெயரையும் கருத்தில் கொண்டே இப்பெயர் இடப்பட்டிருக்கவேண்டும் என்று கருதத்தக்கதாக
உள்ளது.
கோவேங்கைப் பெருங்கதவன் அவர்களின் ஒரு பாடலே இவ்வளவு இனிமையாக உள்ளதே. அவருடைய முழுத்தொகுப்பும் கிடைத்திருந்தால்... ஆஹா எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். பாடலும் அதற்கான தெளிவுரையும் அற்புதம். தமிழர்களாகிய நாம் நிறைய இழந்திருக்கிறோம்.இந்த பேஸ்புக் தலைமுறைக்கு இலக்கிய தாகம் இல்லாதிருப்பத வேதனைதான் முனைவரே!. உவேசா அவர்களுக்கு தமிழர்கள் ஆயுள் உள்ளவரை நன்றிக்கடன் பட்டவர்களாகவே இருக்கிறோம். உங்கள் தளம் அருமை. சங்க இலக்கியத் தேன் பருகும் அமுத சுரபிதான் போங்கள். வாழ்க உமத தமிழ்த்தொண்டு.
பதிலளிநீக்குபாடலுக்கு நல்ல விளக்கம் தந்துள்ளீர்
பதிலளிநீக்குமுனைவரே! அருமை!
புலவர் சா இராமாநுசம்
ஆற்றுப்படுத்தல்....அருமையான பாடல் விளக்கம். மிகவும் ரசிக்கவைத்தது.
பதிலளிநீக்குஅருவி பாம்பு போலப் பிரிதொன்றாகத் தோன்றுதல் களவொழுக்கம் அயலாரால் தவறாக உணரப்பட்டு அலர் தூற்றக் காரணமானதோடு ஒப்புநோக்கத்தக்கதாகவுள்ளது.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்..
என்னை மகிழ்விப்பதும் நீயே
பதிலளிநீக்குஎன்னை துன்புற வைப்பதும் நீயே...
என்னுள் உறைந்திருக்கையில் என்னை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு
கொண்டு சென்ற நீ என்னைவிட்டுப் பிரிந்து ஏன் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக
கொள்கிறாய்...
என்ன ஒரு அற்புதமான கற்பனை இந்த சங்கப் பாடலில்.
நம் இலக்கிய சொத்துக்கு இணை இவ்வுலகில் வேறு எந்த மொழிக்கும்
இல்லை என்றே நினைக்கிறேன்.
அவ்வளவு பொருள் களஞ்சியம்.
பகிர்ந்தளிப்புக்கு நன்றிகள் முனைவரே.
களவும் பிரிவும் கூறும் கடும் இலக்கியம் ருசித்தேன். புலவர் பெயர்க் காரணமும் புரியப்பட்டது. மிக்க நன்றி . அருமை. பாராட்டுகள் முனைவரே!.வாழ்க!
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
தங்கள் வருகைக்கும் இலக்கிய நுகர்வுக்கும் நன்றிகள் டேனியல் ஐயா..
பதிலளிநீக்குவருகைக்கும் மறுமொழிக்கும்..
பதிலளிநீக்குநன்றி கடம்பவனக்குயில்
நன்றி புலவரே
நன்றி இராஜேஷ்வரி
நன்றி மகேந்திரன்
நன்றி இலங்காதிலகம்