வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 31 ஜனவரி, 2012

உயிரோடு செத்தவர்கள்!



உயிர் இருக்கிறது
உணர்ச்சி இல்லை!
உதடு இருக்கிறது
சிரிப்பு இல்லை!

என்ன இது?
இக்கால இயந்திரமா?
உற்றுப் பார்க்கிறேன்..

அட!
இவர்கள் மனிதர்கள்தான்!

நீங்களெல்லாம்..
உயிரோடு செத்துவிட்டீர்களா?
இல்லை
செத்தபின்னும் உயிர்வாழ்கிறீர்களா?
என்று கேட்கிறேன்..

நாணயங்களின் ஓசையில் என்
நா நயங்களின் ஓசை
இவர்களுக்குக் கேட்கவில்லை!

மீண்டும் கேட்கிறேன்..
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
முகத்தின் அழகு சிரிப்பில்தானே தெரியும்..?

எங்கே உங்கள் சிரிப்பு? என்று..
சிரிப்பை அடக்கம் செய்த
கல்லறைஉதடுகள் திறந்து
இவர்கள் சொல்கிறார்கள்..

ஒன்றை இழந்தால்தானே
இன்னொன்றைப் பெறமுடியும்!

நாங்கள் சிரிப்பை விதைத்து
பணத்தை அறுவடை செய்யும் உழவர்கள் என்று..


வியாழன், 26 ஜனவரி, 2012

இன்னொரு கால் எங்கே??




நண்பர் ஒருவர் என்னிடம்....

ஐயா நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று ஒரு பழமொழி சொல்லி வருகிறோமே அது ஏன்?
அதன் உண்மையான பொருள் என்ன? என்று கேட்டார்.

நான் சொன்னேன்..

நண்பரே.. அது ஒரு பழங்கதை..

ஒரு குருவும் சீடனும் இருந்தார்களாம்.
ஒருநாள் குரு தன் சீடனிடம் ஒரு முயலைக் கொண்டுவந்து தந்து அதை நன்றாக சமைத்து வை என்று சொல்லிவிட்டுக் குளிக்கச் சென்றாராம்.
அவர் திரும்புவதற்கு முன்பே மிகவும் சுவையாக சமைத்த சீடனுக்கு உணவின் சுவையும், மணமும் நாக்கில் எச்சிலை ஊறச் செய்ததாம்.

ஆசையில் முயலின் ஒருகாலை அவன் எடுத்துச் சாப்பிட்டுவிட்டானாம்..
திரும்பி வந்த குரு கேட்டாராம்..
என்னப்பா மூன்று கால்தான் இருக்கிறது இன்னொரு கால் எங்கே என்று..
அதற்கு உண்மையை மறைத்து நீங்கள் கொண்டுவந்த முயலுக்கு மூன்றுகால்கள் தான் இருந்தன குருவே என்றானாம்..

என்னப்பா உலகில் மூன்றுகால்களோடு எந்த முயலுமே கிடையாதே என்று கேட்டாராம்.

எப்படிக் கேட்டும் சீடன் உண்மையை மட்டும் சொல்லாமல் தான் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தானாம்.

கால் போனதைப் பற்றிக்கூடக் கவலைப்படாத குரு.
சீடனிடம் உண்மையை எப்படியாவது வரவழைத்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாராம்.

அவன் தூங்கும் போது நடுஇரவில் எழுப்பிக் கேட்பாராம்..
அவன் ஏதாவது வேலை செய்யும் போது கேட்பாராம்..

தம்பி முயலுக்கு எத்தனை கால் என்று..

அவனும் மறக்காமல் தெளிவாகச்சொல்வானாம்..
குருவே நீங்கள் தந்த முயலுக்கு மூன்றே கால்கள் தான் என்று..

நொந்து போன குரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தவேளையில்..

இந்த சீடன் ஒரு திருட்டுவேலைசெய்து வந்ததை இவர் அறிந்தாராம்..

நெற்றியில் திருநீறு அணிந்து கொண்டு மந்திரத்தைச் சொல்லிய சீடன் யார் கண்களுக்கும் தெரியாமல் அரண்மனைக்குச் சென்று அரச உணவுகளை ஒரு கை பார்த்துவந்தானாம்..

அரண்மனையில் உணவுகள் மாயமாவதை கண்டறியமுடியாமல் தவித்த அரசன்  யாராவது இந்தத் திருடனைக் கண்டுபிடித்தால் தக்க பரிசில் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டானாம்.

குருவுக்குத் தெளிவாக விளங்கியதாம் இது நம் சீடனின் வேலைதான் என்று..

அரசனிடம் சென்று ஒரு வழிமுறை சொன்னாராம்..

இன்று சுடச்சுட உணவுதயாரித்து அதை மூடிவையுங்கள் இன்று அவன் மாட்டுவான். என்று...

சொன்னதுபோலவே மாயமாக வந்த சீடன் ஆவலாக பாத்திரங்களின் மூடியைத் திறந்தானாம். அப்போது நீராவி வந்து அவன் நெற்றியில் இட்ட திருநீரைக் அழித்துவிட்டதாம். அவனும் எல்லோர் கண்ணிலும் தெரிந்தானாம்.

குற்றம் சுமத்தப்பட்டு தூக்குதண்டனைக் கைதியாக சீடன் நின்றவேளையில்..

அவனருகே சென்ற குரு..

“தம்பி இறுதியாகக் கேட்கிறேன்..
உண்மையைச் சொன்னால் உன்னை இந்த மரண தண்டனையிலிருந்து என்னால் காப்பாற்றமுடியும்..
முயலுக்கு எத்தனை கால்?“ என்று கேட்டாராம்..

அப்போது கூட மனம் மாறாத சீடன் சொன்னானாம்..

குருவே சத்தியமாக நீங்கள் தந்த முயலுக்கு மூன்றே கால்கள் தான் என்று...

அப்போது அந்த குரு ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொண்டாராம்.

இவனிடமிருந்து மட்டும் உண்மையை வரவழைக்கவே முடியாது என்று..

அதனால் தான் இந்த சீடனைப் போல..

தான் சொன்னது பொய் என்றாலும் அதை மறைக்க எத்தனை பொய்வேண்டுமானலும் சொல்லத் தயங்காதவர்களை இந்தப் பழமொழியோடு ஒப்பிட்டு உரைத்துவருகிறோம் என்று விளக்கம் சொன்னேன்..

மகிழ்ந்த என் நண்பர் இதே போல வேறு ஒரு கதை உண்டு என்றார்..

என்ன என்று ஆவலாகக் கேட்டேன்..

அதை கதைபோல குரு தன் சீடனிடம் கொக்கு பிடித்துத் தந்து சமைத்துவைக்க சொன்னார்..

அவனும் சமைத்து அந்தச் சீடனைப் போலவே ஒருகாலை சாப்பிட்டுவிட்டு நீங்கள் தந்த கொக்குக்கு ஒரே கால் தான் என்று சாதித்தான்.

அந்த குருவும் அவனை அழைத்துச் சென்று குளத்தில் நின்ற கொக்கைக் காண்பித்தார்.

அந்தக் கொக்கு ஒற்றைக் காலில் நின்றுகொண்டிருந்தது.
சீடனோ..

பார்த்தீர்களா குருவே ஒத்தைக் காலில்தானே நிற்கிறது என்றான்..

நொந்துபோன குரு ஒரு கல்லை எடுத்து அதன் மீது எறிந்தார்.

அது பறந்தது. அப்போது குரு இப்போது பார்த்தாயா?
இரண்டுகால்கள் தெரிகின்றன என்றார்.

அப்போதும் சீடன்.


“குருவே இப்போதுதான் புரிகிறது.. நீங்க பறக்கும் கொக்கை அடித்திருந்தால் அதற்கு இரண்டுகால்கள் இருந்திருக்கும்..

நீங்கள் என்னிடம் தந்த கொக்கு நிலத்தில் நின்றுகொண்டிருந்த கொக்காகத் தான் இருக்கும் அதனால் தான் அதற்கு ஒரே ஒரு கால் இருந்தது“ என்றானாம் என்று கதையை முடித்தார் என் நண்பர்.


முயலின் இன்னொரு காலும், கொக்கின் இன்னொரு காலும் சீடர்களின் வயிற்றுக்குள் போனதை கதைபடித்த உங்களால் உணர்ந்துகொள்ளமுடியும்..

ஆனால்..

அந்த கால்களின் சுவைமட்டும் இன்னும் நம் நாக்கிலும் இருக்கிறதோ என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

அதனால் தானே நாமும் சில நேரங்களில் நாம் சொல்வதுதான் சரி என்று சாதித்துவருகிறோம்...

எனது நூல் உங்கள் மறுமொழிகளுடன்.

உயிருள்ள பெயர்கள்
(இணையத்தில் வெளியான சங்கஇலக்கியக் கட்டுரைகள்
உலகத்தமிழர் மறுமொழிகளுடன்)

அன்பான தமிழ் உறவுகளே வணக்கம்..

கடற்கரையில் நடந்து செல்வது ஒரு இனிய அனுபவமாகும்.
அவ்வாறு நடந்து செல்லும் போது..
பின்னால் திரும்பி நாம் நடந்துவந்த காலடித் தடங்களைக் காண்பதில் நமக்கெல்லாம் ஒரு மகிழ்ச்சி வரும்..

அதுபோல சங்க இலக்கியம் என்னும் கடலில் நானும் சில முத்துக்களை எடுத்த பெருமிதத்தோடு கரைநோக்கி நடந்து வருகிறேன்.

பின்னால் திரும்பிப்பார்க்கிறேன் என்னைப் போல எத்தனையோ பேர்கள் கையில் முத்துக்களுடன் காலடித்தடங்களை விட்டு்ச்சென்றிருக்கிறார்கள்.
எத்தனை எத்தனை காலடித்தடங்கள்..

இதில் என் காலடித் தடத்தைத் தேடும் முயற்சியாக..

இதுவரை நான் எழுதிய சங்க இலக்கியக் கட்டுரைகளைச் சில பாகுபாடுகளுடன், சில மறுதிருத்தல்களுடன் தொகுத்து   உங்கள் மறுமொழிகளுடன் நூலாக்கம் செய்துவருகிறேன் 

என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்தமாதம் வெளிவரவிருக்கும் நூலின் பதிப்பாக்கவடிவத்தை கீழ்க்காணும் இணைப்புகளில் காணலாம்..

ந்த நூலில் புதிதாக, பெரிதாக எதுவும் நான் சொல்லிவிடவில்லை 
என்றாலும்.
பழந்தமிழ் இலக்கியங்களைத் திருப்பிப் பார்த்தேன்,
உலகத் தமிழர்களைத் திரும்பிப்பார்க்கவைத்தேன் 
என்ற பெருமித உணர்வுடன் இந்த நூலை இணையவழியே அடுத்த தலைமுறைக்கும் விட்டுச் செல்கிறேன்.



1. அணிலாடு முன்றிலார் குறுந்-41.
2. 
இம்மென் கீரனார்-அக-398
3. 
இரும்பிடர்த்தலையார்-புற-3
4. 
ஊட்டியார்-அக-68
5. 
ஓரிற் பிச்சையார்-குறுந்-277.
6. 
ஓரேருழவர்-குறுந்-131.
7. 
கங்குல் வெள்ளத்தார்-குறுந்-387.
8. 
கல்பொரு சிறுநுரையார்-குறுந்-290.
9. 
கவைமகன்-குறுந்-324.
10. 
காலெறி கடிகையார்-குறுந்-267.
11. 
குப்பைக் கோழியார்-குறுந்-305.
12. 
குறியிறையார்-குறுந்-394.
13. 
கூகைக் கோழியார்-புற-364
14. 
கூவன் மைந்தன்-குறுந்-224.
15. 
கொட்டம்பாலனார்-நற்-95
16. 
கோவேங்கைப் பெருங்கதவனார்-குறுந்-134.
17. 
செம்புலப்பெயனீரார்-குறுந்-40.
18. 
தனிமகனார்- நற்-153.
19. 
தும்பி சேர் கீரனார்-குறுந்-393.
20. 
தேய்புரி பழங்கயிற்றினார்- குறுந்-284.
21. 
தொடித்தலை விழுத்தண்டினார்- புற-243.
22. 
நெடுவெண்ணிலவினார்-குறுந்-47.
23. 
பதடி வைகலார்-குறுந்-323.
24. 
மீனெறி தூண்டிலார்-குறுந்-54.
25. 
விட்ட குதிரையார்-குறுந்-74.
26. 
வில்லக விரலினார்-குறுந்-370.
27. 
விழிகட் பேதைப் பெருங்கண்ணனார்- நற்-242.



இப்புலவர்கள் பற்றிய விளக்கம்..

தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்

செவ்வாய், 24 ஜனவரி, 2012

வள்ளுவர் இவ்வளவு உயரமானவரா??


பள்ளிக் காலங்களில் தேர்வைநோக்கி ஓடியதால் வள்ளுவரை சரியாகப் பார்க்கவில்லை.

இப்போது எந்தக் குறளைப் படித்தாலும் வள்ளுவரை எண்ணி வியப்பு தான் ஏற்படுகிறது.
இவ்வளவு..
யரமானவரா வள்ளுவர்!!

சிவன் விண்ணுக்கும் மண்ணுக்கும் நின்றார்!
திருமால் விண்ணையும், மண்ணையும் அளந்தார்! என்பதையெல்லாம் இவை ஒரு மக்கள் கூட்டத்தின் நம்பிக்கை என்று மட்டுமே நம்பிய நான்.

திருக்குறளை இப்போது படிக்கும்போது வள்ளுவர் விண்ணுக்கும், மண்ணுக்குமாக எழுந்து நிற்கிறார் என்பதை உங்களுக்கு எப்படிப் புரியவைப்பேன்..!!

வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.(குறள் 595)

என்றவரல்லவா வள்ளுவர்.
உயர்வு வேறு உயரம் வேறு என்றாலும் இங்கு இவரது எண்ணங்களின் உயர்வே எனக்கு இவரது உயராமாகத் தெரிகிறது..

இன்றைய தலைமுறையினரிடைய இந்த உயர்ந்த மனிதர் படும்பாடு கொஞ்சமல்ல..


இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல். (குறள் 314)


நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கவேண்டுமா?
அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மை செய்து விடுங்கள்!

என்கிறாரே வள்ளுவர் இவர் ஏன் இப்படிச் சொல்கிறார்.

இவர் சொல்வதை இன்றைய நடைமுறை வாழ்வில் பின்பற்றவும் முடியவில்லையே.!!

ஒரு தமிழ்த் திரைப்படத்தில்..
நடிகர் தெருவழியே சென்றுகொண்டிருப்பார்.
அங்கு மரத்தில் சிக்கிய பட்டத்தை எடுக்க ஒரு சிறுவன் கல் எறிந்துகொண்டிருப்பான்.
அந்தக் கல் எதிர்பாராமல் இந்த நடிகர் மீது விழுந்துவிடும்.

அப்போது அந்த நடிகருக்கு நம்ம வள்ளுவர் நினைவுக்கு வந்துவிடுவார்.

அவனை வள்ளுவர் சொன்னமாதிரி திருத்தலாம் என்று.
அவனை அருகே இருந்த கடைக்கு அழைத்துச் சென்று இனிப்பு வாங்கித்தந்து..

தம்பி இந்தமாதிரி தெருவில் கல் வீசக்கூடாது. என அறிவுரை சொல்லிச் செல்வார்.
அப்பாடா இன்று ஒருவனைத் திருத்திவிட்டேன் என்ற மனநிறைவோடு.
அடுத்த தெருவுக்குத்தான் சென்றிருப்பார்...

அங்கே பத்து சிறுவர்கள் கூட்டமாகக் கல்லோடு நிற்பார்கள்.

என்னடா இப்படி நிற்கிறீங்க என்று கேட்பார்.
அதற்கு அவர்களுள் கல்எறிந்து இனிப்புவாங்கிய சிறுவன் முதலாவதாக நிற்பான்.
அவன் சொல்வான்..

டேய்.. இந்த மாமா தான்டா கல்லைவிட்டு எறிஞ்சா மிட்டாய் வாங்கித்தந்தார் எறிங்கடா எல்லோரும் என்பான்..

காலம் மாறிப்போச்சு பாருங்க..

சமூகத் தளத்தில் உலவிய போது இப்படியொரு “தெருக்குரல்“ கண்ணில் பட்டது..


இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண அவரை ஓட்டி விடல். தெருவள்ளுவர்

இப்படித்தாங்க இன்றைய தலைமுறையினர் பார்வையில் திருக்குறளின் பொருள் நிறைய மாறிப்போச்சு.

எனக்கு வந்த குறுந்தகவல்..

'ஒருவன் உன் மீது கல்லை எறிந்தால் 
நீ அவன் மீது பூவை எறி
அவன் மீண்டும் உன் மீது கல்லை எறிந்தால் 
நீ பூந்தொட்டியைக் கொண்டு எறி சாகட்டும்...'

இது நகைச்சுவை மட்டுமல்ல 
நிகழ்கால உண்மையும் கூட அதுதான்..
எனக்கு ஒரு கண்போனால் என் எதிரிக்கு இரண்டுகண்களும் போக வேண்டும் என்றே எண்ணுகிறோம்.

கவிஞர் வைரமுத்து..

வேர்களை அறுத்தோடும்
நதியின் மீதும் கலகலவென்று பூச்சொரியும் 
கரையோரத்துக் கிளைகள்...
அறுத்ததற்குக் கோபமில்லையாம்
நனைத்ததற்கு நன்றியாம்
மரம் சொன்னது :
''
இன்னா செய்தார்க்கும்
இனியவை செய்''

என்பார்.

இந்தக் குறளை மீண்டும் மீண்டும் படித்ததில் எனக்குத் தோன்றிய சில கருத்துக்களைப் பதிவு செய்யவே இவ்விடுகை..

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல். (குறள் 314)

என்னும் குறளில் பலரும் ஏற்றுக்கொண்ட உரையில்,
நமக்குத் தீமை செய்தவரைத் தண்டித்தல். அவரே நாணும்படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும், நன்மையையும் மறந்துவிடுதல்.

என்ற உரையை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.
இக்குறளில் இரண்டாவது அடியில் விடல் என்னும் சொல்லுக்கு மட்டும் சில கருத்துக்களைப் பதிவுசெய்கிறேன்.

1.      நீ எனக்கு இன்னா செய்தாய்
நான் உனக்கு இனியவை செய்தேன்
நீ ஏன் என்னைப் புரிந்துகொள்ளவில்லை
என்று வருந்தி நிற்காதே!
அப்படிச் செய்யவேண்டியது உன் கடமை!
செய்தாயா?
அதோடு அதை மறந்துவிடு!


2.      நீ எனக்கு இன்னா செய்தாலும்
நான் உனக்கு இனியவையே செய்திருக்கிறேன்
என்ற எண்ணத்தைக்கூடத் தூக்கிச் சுமக்காதே
அதை அப்போதே துறந்துவிடு!

என்ன நண்பர்களே..

இப்போது வள்ளுவர் உங்களுக்கும் யரமாகத் தெரிகிறாரா?

திங்கள், 23 ஜனவரி, 2012

என் காதல் சொல்ல வார்த்தை உண்டு..


  • தமிழ்த் திரையிசைப் பாடல்களில் பல கவிஞர்களால் பல்வேறு வடிவங்களில் எடுத்தாளப்பட்ட பாடல்..
  • திருமண அழைப்பிதழ்களில் பலரும் அச்சிட்டு மகிழ்ந்த பாடல்..
  • படித்தவர் முதல் பாமரர் வரை பலருக்கும் அறிமுகமான ஒரு பாடல்..
  • தமிழ் செம்மொழி என்பதற்கான சான்று பகரும் பாடல்களில் குறிப்பிடத்தக்க பாடல்..

என பல்வேறு சிறப்புகளையும் கொண்ட ஒரு பாடல்...


யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

செம்புலப்பெயல் நீரார். (குறுந்தொகை-40)


என்ற பாடலாகும்.

எத்தனை முறை படித்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கவே தோன்றுகிறது.
அப்படி என்னதான் இந்தப் பாடலில் இருக்கிறது?

தொன்மையா?

இனிமையா?

எளிமையா?

தனித்தன்மையா?

உவமையா?

இல்லை. இவையாவற்றையும் கடந்து வேறு ஏதோ இந்தப்பாடலில் இருக்கிறது.

ஒருவேளை உயிர்..!!

அது சங்கப்பாடல்களுக்கே உரிய பொது அடையாளமாயிற்றே..
அதையும் தாண்டி... 

வேறு ஏதோ ஒன்று..

மக்கள் கூட்டமாக இருந்தாலும் உயரமான ஆளை எங்கும் கண்டுபிடித்துவிடலாம் அல்லவா? 

சிரித்த முகத்துடன் இருப்பவர் பளிச்சென்று தெரிந்திடுவார் இல்லையா?அதுபோல..

இந்த சங்கபாடலையும் எளிதில் கண்டுகொள்ளமுடிகிறதே..

ன் காதல் சொல்ல வார்த்தையில்லை என்று புலம்பும் காதலர்கள் நடுவே...
காதல் கவிதை எழுதும் கவிஞர்களின் நடுவே..

இதுதான் என்காதல் என்று மிக எளிமையாக சொல்லிச் சென்ற அந்தப் பண்புதான் இந்தப் பாடலை தனிச்சிறப்புடைய பாடலாக வேறுபடுத்திக்காட்டுகிறது என்று நினைக்கிறேன்.

இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவன் தன்னைப் பிரிந்துவிடுவான் எனத் தலைவியின் மனம் அஞ்சுகிறது. அதனைக் குறிப்பால் உணர்ந்த தலைவன் அவளை ஆற்றுவிப்பதாக இப்பாடல் அமைகிறது.

குடிப்பிறப்பு, உறவுநிலை, செல்வநிலை, உயர்வு தாழ்வு, பார்த்து வருவதில்லை காதல்.என்பதைத் தலைவன் தலைவிக்கு அறிவுறுத்துகிறான்.

என் தாயும் உன் தாயும் எவ்விதம் உறவினர்?
என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவுடையவர்?
நானும் நீயும் எக்குடிவழிச் சார்புடையவர்கள்?
செம்மண் நிலத்தில் வீழ்ந்த மழைத்துளி போல அன்புடைய நம் நெஞ்சங்கள் ஒன்றாகக் கலந்தன.

இப்பாடலில் செம்புலத்தில் வீழ்ந்த நீர்போல என்ற உவமையே இப்புலவருக்கும் பெயராயிற்று.


இப்பாடலில் உள்ள எளிமை, பொதுமை, உவமை ஆகிய பொதுக்கூறுகளே இப்பாடலை காலத்தை வென்ற பாடலாக்கியுள்ளன.


தொடர்புடைய இடுகைகள்.

பாராட்டத்தக்க முயற்சி!


தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரத்தில் அன்றில் நற்பணிக்குழுவினர் தினமும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை திருக்குறள் வாசித்து அதற்கான விளக்கமும் ஒளிபரப்பு செய்கிறார்கள். இதன்வாயிலாகப் படித்தவர்களும், படிக்காதவர்களும் கூட திருக்குறளை மனதில் பதியவைத்துக்கொள்ள, சிந்திக்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.


உலகப் புகழ் பெற்ற திருக்குறள் தமிழர்களால் பெருமளவில் பின்பற்றப்படாததற்கு அடிப்படைக் காரணம்...

திருக்குறளை மாணவர்களுக்குப் பாடமாக வைத்ததுதான்! என்பது பரவலான கருத்து..

அது ஒருவிதத்தில் உண்மையும் தான்.
இவர்களின் இப்பணியை முன்மாதிரியாகக் கொண்டு நாமும் நம்மால் முடிந்தவரை திருக்குறளை சமகாலத்தினருக்கும், அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்வது நம் கடமையாகும்

இதுபோன்ற முயற்சிகளால் திருக்குறள் சராசரி மக்களின் மனதிலும் இன்னும் பரவலைப் பெறும் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை.

இம்முயற்சிக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்களைப் பதிவுசெய்கிறேன்.

(செய்தியளித்தமைக்காக காலைமலர் நாளிதழுக்கு நன்றி)

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

இது அது மாதிரிதானே இருக்கு..




தலைகால் புரியலை..
கையும் ஓடல, காலும் ஓடல..
கண்ணு மண்ணு தெரியல..
நடப்பது கனவா! நினைவா!

என பல நேரங்களில் நாம் எதிர்பாராத சூழல்களால் திகைத்துப் போவதுண்டு. இச்சூழல்களில் நாம் என்ன செய்கிறோம்? எதற்குச் செய்கிறோம் என்றே தெரியாமல் ஏதாவது செய்துவிடுவோம்.
அப்படியொரு காட்சி...

புலவர் ஒருவர் அரசனைப் பாடிப் பரிசில் பெற்று வருகிறார்.
அவரது வறுமை நிறைந்த சுற்றம் அதை எப்படி எதிர்கொள்கிறது என்பதைப் புலவர் நகைச்சுவையோடு அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.


தென் பரதவர் மிடல் சாய,
வட வடுகர் வாள் ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்து வேல் தடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்,
நற்றார்க் கள்ளின், சோழன் கோயில்,
புதுப்பிறை யன்ன சுதை செய் மாடத்துப்,
பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று, என்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி,
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே; அது கண்டு.
இலம்பொடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்,
விரல்செறி மரபின செவித் தொடக் குநரும்,
செவித்தொடர் மரபின் விரற்செறிக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப் பொழிந்தாந்தாஅங்கு,
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே
இருங்கிளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.


புறநானூறின் 378ம் பாடல்

ஊன்பொதி பசுங்குடையார்
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியைப் பாடி எழுதிய இந்த அரிய பாடலின் சாரம் வருமாறு:

தென்நாட்டுப் பரதவரின் வலிமை அடங்க,
வடநாட்டு வடுகரின் வாளால் ஏற்பட்ட கேடுகள் நீங்க,
அவர்களை ஒடுக்கி மேம்பட்டவன் இவன்!
இச் சோழனின் நெடு நகரிலே,
வெண்சுதை மாடத்தின் முற்றத்திலே நின்று..
என் கிணையை இயக்கி, எஞ்சா மரபினை உடைய சோழனின் சிறப்பைப் போற்றிப் பாடினேன்.
எமக்கென இயற்றப்படாத அரசர்க்கே உரித்தான நல்ல அணிகலன்கள் பலவற்றையும் அவன் எமக்கு நிறைய சுமக்கமுடியாத அளவுக்குத் தந்தான்.
அதனைக் கொண்டு என் சுற்றத்தாரிடம் சென்று கொடுத்தேன்.
அவர்கள் கண்டு திகைத்தனர்!

விரலில் அணியவேண்டிய மோதிரத்தைக் காதிலும்,
காதில் அணியவேண்டிய குழையை விரலிலும்,
இடையில் அணியவேண்டியவற்றைக்  கழுத்திலும்,
கழுத்திற்கு உரியன இடையிலுமாக மாறி மாறி அவர்கள் அணிந்தனர்!

இது..
அன்று..

இராமன் சீதையுடன் காட்டிற்குச் சென்றபோது வலிமையுடைய இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றான். விண் வழியே கொண்டு செல்லும்போது அவள் அணிந்து இருந்த மதிப்புமிக்க நகைகளை ஒவ்வொன்றாய்க் கீழே போட்டுக்கொண்டே சென்றாள். அவளைத் தேடிச் சென்றபோது, குரங்குகள் இவற்றைக் கண்டு எடுத்தன. எந்த நகையை எந்த உறுப்பில் அணிந்து கொள்வது என்னும் அறிவு அவற்றுக்கு இல்லை. அதனால் மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக்கொண்டன.

இதைப்போல்,
இளஞ்சேட் சென்னி என்ற வள்ளலிடம் இசைக் கலைஞன் பரிசாகப் பெற்ற விலை மதிக்க முடியாத பொன் நகைகளை, அவனது வறுமை மிக்க உறவினரும் சுற்றத்தாரும் அணிந்து கொள்ளும் முறை தெரியாமல் உடம்பில் மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக் கொண்டனர். இது வறுமைத் துன்பத்தையே கண்டு வந்த கலைஞனுக்கு நினைக்க நினைக்கச் சிரிப்பைத் தந்தது என்று அவன் கூறுவதாக ஊன்பொதி பசுங்குடையார் என்ற புலவர் பாடியுள்ளார்.

என்ன நண்பர்களே..

இது (புறநானூறு)
அது (இராமயணம்) மாதிரித் தானே இருக்கு..

பாடல் வழியே..
  • சீதையின் அணிகலன்களை குரங்கினங்கள் அணிந்ததுபோல என்ற உவமை வாயிலாக இராமயணம் குறித்த தொன்மக் கருத்துக்கள் சங்ககாலத்திலேயே இருந்தன என்பதை அறியமுடிகிறது.
  • காணாததைக் கண்ட சுற்றத்தாரின் செயல்களை நினைத்து நினைத்து சிரிக்கும்விதமாகப் புலவர் காட்சிப்படுத்திய பாங்கு விரும்பத்தக்கதாகவுள்ளது.
  • தமிழ்நாட்டுக்குப் பகையாக இருந்த பரதவர், வடுகர்களைச் சோழன் வெற்றிகொண்டான் என்னும் வரலாற்றுக்குறிப்பையும் இப்பாடல் பதிவு செய்துள்ளது.
  • புதுப்பிறை யன்ன சுதை செய் மாடம் என்னும் தொடர் புதிய நிலவுபோன்ற வெண்மையான சாந்தால் கட்டப்பட்ட அக்காலக் கட்டிடக் கலை மரபையும் புலப்படுத்தவதாகவுள்ளது.