பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

புதன், 14 டிசம்பர், 2011

இப்படியொரு இணையம் இருந்தால்..

உலகிலேயே கொடிய ஆயுதம் “கோபம்”

கோபத்தைக் குறைக்க ஆயிரம் வழிமுறைகள் சொல்லப்பட்டாலும்.. அதைப் பின்பற்றுவதில் நிறைய நடைமுறைச் சி்க்கல்கள் உள்ளன.

இப்போதெல்லாம் கொசுவை விரட்டுவதற்குக் கூட மென்பொருள்கள் வந்துவிட்டன!

ஏன் கோபத்தைவிரட்ட ஒரு மென்பொருளோ, இணையதளமோ வரக்கூடாது என்ற சிந்தனையின் விளைவே இவ்விடுகை..

“தவறுகள் திருத்திக்கொள்ளப்படாதபோது அது தப்பாகிறது”

“கோபத்தைக் குறைத்துக்கொள்ளாதபோது மனிதன் விலங்காகிறான்”

“நாம் விலங்காகிவிட்டோம் என்பதை உணரும்போது மீண்டும் மனிதன் மனிதனாகிறான்”

என்பது நான் எனது அனுபவத்தில் கண்ட உண்மை.

இதோ எனது கற்பனை இணையதளம்..

(பல மில்லியன் மக்களின் கோபங்களால் அவர்கள் உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு உளவியல் அடிப்படையில் தானியங்கியாக இவ்விணையதளம் செயல்படுகிறது.)

காட்சி -1

இணையம் : நீங்கள் இன்று எதற்காகக் கோபப்பட்டீர்கள்?
நான் : நான் செய்யாத தவறுக்காக ஒருவன் என்னைத் திட்டியபோது..
இணையம் : உங்கள் கோபத்தை எப்படி வெளிப்படுத்தினீர்கள்?
நான் : நான் அவனை அடித்துவிட்டேன், அவனும் என்னை அடித்துவிட்டான்.
இணையம் : உங்கள் மனப் புற்றில் கொடிய விசப்பாம்பு குடியிருக்கிறது. உடனே பாம்பை அழித்துவிடுங்கள்.


காட்சி -2


இணையம் : இன்று என்ன ஒரே சிரிப்பா இருக்கீங்க?
நான் : ஒருவன் என்னைப் பார்த்து “எருமை“ என்று திட்டினான்.. பதிலுக்கு நான் அவனை போடா “கழுதை” என்று திட்டிவிட்டேன்.
இணையம் : உங்கள் மன வீட்டில் நாய் படுத்திருக்கிறது. அது பதிலுக்குப் பதில் குரைக்கிறது. அதை முதலில் வெளியேற்றுங்கள்.


காட்சி -3



இணையம் : இன்று ஏன் உங்கள் முகம் வாடியிருக்கிறது?
நான் : என்னோடு பணிபுரியும் நண்பன் என்னைப் புரிந்துகொள்ளாமல் தவறாகப் பேசிவிட்டான்.


இணையம் :அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?
நான் : நான் அவன் மீது கோபம் கொண்டு பேசுவதை நிறுத்திக்கொண்டேன்.
இணையம் : உங்கள் மன மரத்தில் குரங்கு அமர்ந்திருக்கிறது. அடிக்கடி அது ஏதாவது மரத்தில் உயரத்தில் ஏறி அமர்ந்துகொள்ளும் உடனே அதை மரத்தைவிட்டு இறக்குங்கள்.

காட்சி -4

இணையம் :இன்று என்ன மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்?
நான் : இன்று என் எதிரியை நான் பலிக்குப் பலி வாங்கிவிட்டேன்.
இணையம் :உங்கள் மனப்பாதையில் மதம்பிடித்த யானை திரிகிறது.முதலில் அதைப் பிடித்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவாருங்கள்.

காட்சி -5


இணையம் :இன்று என்ன மிகவும் அழகாகத் தெரிகிறீர்கள்?
நான் :இன்று ஒருவன் என்னைப் பார்த்து “நீ ஒரு முட்டாள்” என்று சொன்னான்.
இணையம் : அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள்..?
நான் : சிரித்துக்கொண்டே “ஆமாம் நீ்ங்கள் சொல்வது உண்மைதான்” என்று சொன்னேன்..


இணையம் : உங்களுக்குள் குடியிருந்த எல்லா விலங்குகளும் வெளியேறிவிட்டன.
நீங்கள் மீண்டும் முழு மனிதனாக மாறிவிட்டீர்கள்.
(அன்பு நண்பர்களே இறுதியில் உள்ள குரங்குபடத்தை நன்றாகப் பாருங்கள் மனிதன் குரங்குக்கு எதுவும் தரவில்லை. கண் தெரியாத அந்த மனிதருக்குக் குரங்குதான் நீர் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டுகிறது!!)



தொடர்புடைய இடுகைகள்

22 கருத்துகள்:

  1. அருமை அருமை
    படங்களும் பதிவும் மிக மிக அருமை
    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2

    பதிலளிநீக்கு
  2. நல்ல அருமையான தகவல் பிளஸ் ஈலோரும் இதை படியுயங்கள்

    நன்றி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    பதிலளிநீக்கு
  3. கோபம் உள்ளபோது மனிதன் விலங்காக மாறுகிறான் என்பது நிஜமே..
    கற்பனை இணையத்தோடு விளக்கம் அருமை..

    பதிலளிநீக்கு
  4. மனதை விலங்குகளின் சரணாலயமாக வைத்திருப்பதை தவறென உணர்த்தும் பதிவு.
    உங்கள் புகைப்படம் கலக்கலாக இருக்கு .

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் முனைவரே..

    கற்பனை என்றாலும் வருங்காலத்தில் வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என தோன்றுகிறது

    அசத்திவிட்டீர்கள்

    உண்மையில் கடைசி படத்தை உற்றுநோக்கியபின்தான் உறைத்தது

    பதிலளிநீக்கு
  6. தங்களது கற்பனை இணையம் ரசிக்க வைத்தது முனைவரே..தங்களது புகைப்படத்தில் திரைப்பட நாயகனைப்போல தோற்றமளிக்கிறீர்கள்..

    பதிலளிநீக்கு
  7. முனைவரே இரண்டாவது படம் ரொம்ப ...???

    பதிலளிநீக்கு
  8. அருமையான படைப்பு .ஒவ்வொரு மனிதனின் குண
    இயல்பினையும் வெளிக்காட்டி இறுதியில் எவ்வாறு
    இருந்தால் நன்மை என்பதை மிக அளக்கச் சொன்னிர்கள் .
    வாழ்த்துக்கள் சகோதரரே .மிக்க நன்றி அழகிய பகிர்வுக்கும்
    தங்கள் அழைப்பிற்கும் .மென்மேலும் உங்கள் முயற்சி
    சிறப்பாகத் தொடரட்டும் .

    பதிலளிநீக்கு
  9. ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு...

    ஆத்திரம் வந்தாள் நம் கண்ணை மறைத்து நாம் செய்யவந்த
    செயலையோ, சொல்ல வந்த சொல்லையோ அப்படியே புரட்டிப் போட்டுவிடும்.
    அவ்வளவு வலிமை வாய்ந்தது.
    வாழ்வின் நிகழ்வு செயல்கள் அத்தனைக்கும் கோபப்பட்டு நிகழ்காலத்தை இழந்து பின்னர் எதிர்காலத்துக்காய் கோபத்தை கட்டுபடுத்த பழகி என்ன பயன்.
    இன்றே அதைச் செய்யவேண்டும்.

    மனிதனுள் இருக்கும் பலவகை மிருகங்களை
    அடையாளம் காட்டியமை அழகு..

    கருத்துச் செறிவான பதிவுக்கு நன்றிகள் பல முனைவரே.

    பதிலளிநீக்கு
  10. கற்பனையல்ல செயல்நிறை தீர்மானம். ஆனால் கோவப்படுதல் அவசியம். இல்லையெனில் மனிதன் சில அனுபவங்களைப் பெறமுடியாது. ஆனால் அவசியமில்லாமல் எதற்கெடுத்தாலும் கோபவப்படுவதுதான் மற்றவர்களுக்கு பிடிக்காது.பதிவு அசத்தல் நண்பரே..

    பதிலளிநீக்கு
  11. பேராசிரியர் அவர்களே நன்றி. மிகச்சிறந்த கருத்து.உண்மையில் நானே சில குணங்களை இதுநாள் வரை என்னிடம் வைத்திருக்கின்றேன்.இன்றிலிருந்து இந்த கேட்டகுணங்களை விட்டுவிடுகின்றேன்.
    நல்ல இடுகை.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. மனிதனுக்குள் எவ்வளவு மிருக குணங்கள் அடங்கி உள்ளன மீண்டும் மனிதனாக மாறனும்னா கோபத்தை விட்டொழிக்கனும் என்று நல்லா சொல்லி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  13. கற்பனை இணையம் அருமை!
    பகிர்விற்கு நன்றி Sir!

    பதிலளிநீக்கு
  14. எனக்கு வரும் கோபம் எல்லாம்... இந்த சமுதாயத்தின் அழுக்குகளை பார்த்து... ஆகையால் நான் இந்த கோபத்தை விலக்கி கொள்ள மாட்டேன்.. பாரதி கூறியது போல் ரௌத்திரம் பழகி கொண்டு இருக்கிறேன்... மன்னிக்கவும் முனைவரே... உங்கள் ஆலோசனையை புறக்கணிப்பதற்கு

    பதிலளிநீக்கு
  15. தங்களின் சிந்தனை மெய்ப்பட அதிக வாய்ப்புள்ளது... நண்பரே...

    பதிலளிநீக்கு
  16. நன்றி இரமணி ஐயா
    மகிழ்ச்சி விசயராஜ்
    நன்றி கருன்
    மகிழ்ச்சி கோகுல்

    பதிலளிநீக்கு
  17. உண்மைதான் சம்பத்
    மகிழ்ச்சி மதுமதி
    நன்றி அம்பாளடியாள்
    நன்றி மகேந்திரன்

    பதிலளிநீக்கு
  18. நன்றி றமேஷ்
    நன்றி கோவிந்தராசு
    மகிழ்ச்சி மணிவானதி
    நன்றி இலட்சுமி அம்மா

    பதிலளிநீக்கு
  19. நன்றி தனபாலன்

    தங்கள் கோபம் நியாயமானது ஜீவா


    மகிழ்ச்சி இராஜா

    பதிலளிநீக்கு
  20. கோபப்ப்ட்டால் மனிதன் விலங்காகிறான் என்பது உண்மை.. அவன் கோபப்பட்டால் எவ்வகை விலங்காகிறான் என்று கற்பனை இணையம் காட்டுகிறது.

    அதே நேரம், நியாயமான தேவைகளுக்குக் கோபப்படாமல் இருப்பதும் தவறு தான். சில நேரங்களில் நமது மரியாதையைக் காப்பது கோபம் என்கிற உணர்ச்சி தானே?

    பதிலளிநீக்கு
  21. வருகைக்கும் வாசித்தலுக்கும அறிவுறுத்தலுக்கும் நன்றி நண்பா.

    பதிலளிநீக்கு