பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

புதன், 7 டிசம்பர், 2011

மனிதக் கணினியும் இடப்பற்றாக்குறையும்!

நான் மடிகணினி வாங்கும்போது தரவுகளுக்கான கொள்ளளவு 300 சிபி. அடுத்த சில மாதங்களில் மடிகணினி வாங்கியவர்கள் பெருமையாக சொல்லிக்கொண்டார்கள்..

எங்கள் கணினியின் கொள்ளளவு 500 சிபி என்று. எனக்குக் கூட சில நேரங்களில் தோன்றியது..

 நாம் அவசரப்பட்டுவிட்டோமோ? என்று..


சில நண்பர்கள் என்னிடம் வந்து புலம்புவார்கள்..
500 சிபி இருந்தும் இடம் போதவில்லையே.. என்று..

ஆனால் நான் அப்படி ஒரு நாளும் புலம்பியதில்லை..

கணினியில் தேவையில்லாத தரவுகளையும், மென்பொருள்களையும் நீக்கிவிட்டு கணினியை அடிக்கடி ஆய்வுசெய்து பயன்படுத்துவதால் என் கணினி எப்போதும் போதுமான கொள்ளளவுடனும், அதிகமான செயல்திறனோடு தான் எப்போதும் இருக்கிறது.

இதற்கும் இடுகைத் தலைப்பிற்கும் என்ன தொடர்பு என்று சிந்திக்கத் தொடங்கிவிட்டீர்களா??

தேடல்..
நிறைவடையாத மனது..

என்னும் இவ்விரண்டும் தான் இன்று நாம் கணினியில் அளவற்ற கொள்ளளவு தேடி “மேகக்கணினி“ நுட்பத்தைக் கண்டறிந்திருக்கிறோம்.

அதுபோல் நம் நிறைவடையாத மனம் நம்மைப் படுத்தும் பாடு குறித்த பழந்தமிழ்ப்பாடல் ஒன்றை இன்று அறிமுகம் செய்ய இருக்கிறேன்..

இபபாடலில் கணினியை மனிதனுடன் ஒப்பிட்டுக் உரைக்கப்போகிறேன்.

மனிதன் - கணினி
மனம் - இயங்குதளம்
போதுமென்ற மனம் - தரவுகளின் கொள்திறன்

இதில் தரவுகளின் கொள்திறனையே பழம்பாடலை விளக்கும் களமாகக் கொள்கிறேன்.

பாடல் இதுதான்.
.

உள் ஆங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர்
எள்ளல் நெஞ்சத்து ஏஎச்சொல் நாணி
வருவர் - வாழி, தோழி!- அரச
யானை கொண்ட துகிற்கொடி போல,
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி 5
ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர
மழைஎன மருண்ட மம்மர் பலஉடன்
ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங்கை
தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும்
அத்தக் கேழல் அட்ட நற்கோள் 10
செந்நாய் ஏற்றைக் கம்மென ஈர்ப்பக்,
குருதி ஆரும் எருவைச் செஞ்செவி,
மண்டுஅமர் அழுவத்து எல்லிக் கொண்ட
புண்தேர் விளக்கின், தோன்றும்
விண்தோய் பிறங்கல் மலைஇறந் தோரோ! 15

அகநானூறு -111
பாலை பாடிய பெருங்கடுங்கோ.

சங்ககாலத் தலைவன் ஒருவனிடம் போதுமான செல்வம் நிறைந்திருக்கிறது.
இருந்தாலும் அக்கம்பக்கதிலிருப்பவர்களின் எள்ளல் நிறைந்த பேச்சுக்காகவும் பொருள் மீது தீராத வேட்கை காரணமாகவும் தலைவியை நீங்கி்ப் பொருள் தேடச் சென்றுவிட்டான்.

ஆற்றாத தலைவியிடம் தோழி சென்று...

தலைவன் விரைந்து திரும்பிவருவான் ஆற்றியிரு என்று சொல்கிறாள். இதுவே பாடலுக்கான சூழல்.

அழகிய உவமை.
  • பட்டத்து யானையின் துகிற்கொடி போன்றது ஓடை என்னும் குன்றம்.
  • அக்குன்றத்தில் “ஞெமை“ என்னும் மரத்தின் மீது பின்னிய சிலந்தியின் வலையானது மேகக்கூட்டம்போலக் காட்சியளித்தது.
நகைச்சுவை.

  • அச்சிலந்திக் கூட்டினைக் கண்ட களிற்று யானைகள் நீர்வேட்கை காரணமாக அவை மேகங்கள் என்று எண்ணி அக்கூட்டினைப் பற்ற முயன்றன.
  • இக்காட்சி மன்னரை வாழ்த்தும் கூத்தர்களின் தூம்பு என்னும் இசைக்கருவி ஒலிப்பதுபோல இருந்தது
கொடிய காட்சி.
  • அத்தகைய காட்டில் தன் இரையை நன்கு பற்றும் ஆண் செந்நாயானது, பன்றியைக் கொன்று விரைந்து அதனை இழுத்துச் செல்லும். அதனால் வழியெல்லாம் ஒழுகிய குருதியைப் பருந்துகள் பருகும்.
  • அப்பருந்துகளின் செவியானது, இரவுநேரத்தில் போர்க்களத்தில் புண்பட்டவர்களைக் காணப் பயன்படும் விளக்குபோல இருக்கும்.
வாழ்க்கை நுட்பம்.

           விண்ணைத் தீண்டுமாறு செறிந்து உயர்ந்த மலைகளைக் கடந்து, தம்மிடம் உள்ள பொருளை வைத்து மனம் மகிழாதவராக, இன்னும் பொருள் வேண்டும் என்ற வேட்கை காரணமாக பொருள் தேடிப் போனார் தலைவர். 


“சிலந்தி வலை யானைகளை மயக்கியதுபோல பொருள் மீது தலைவன் கொண்ட வேட்கை அவனை மயக்கியது. 

இவை போன்ற பாலைக்காட்சிகளைக் காணும் தலைவன் விரைவில் திரும்புவான். அதனால் அதுவரை நீ ஆற்றியிருப்பாயாக என்று தலைவியை ஆற்றுப்படுத்துகிறாள் தோழி.

பாடல் வழியே..

  • சிலந்தியின் வலையை மேகக்கூட்டம் என எண்ணிப் பற்ற எண்ணிய யானைகளின் செயல் சிரிப்பை வரழைப்பதாக உள்ளது.
  • மனித மனம் என்றுமே இருப்பது குறித்து மகிழ்வடைவதில்லை.இல்லாத பொருள் குறித்தே தேடல் கொள்கிறது.
  • போதும் என்ற மனம் கொண்டவனே பெரிய பணக்காரன்.
  • கணினியில் கொள்திறனையும், நினைவுத்திறனையும், செயல்திறனையும் சரியாகக் கையாளத் தெரிந்தவர்களுக்கு இடப்பற்றாக்குறை என்றுமே இருக்காது - அதுபோல இருக்கும் செல்வத்தை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு பொருள் பற்றாக்குறை என்றுமே இருக்காது என்னும் வாழ்வியல் நுட்பத்தை உணர்த்துவதாக அமைகிறது இவ்வகப்பாடல்.
தமிழ்ச் சொல் அறிவோம்

ஞெமை - ஒரு வகை மரம்
துயல்வர - அசைய
சிலம்பி - சிலந்தி
மம்மர் - மயக்கம்
கோடியர் - கூத்தர் (கோடு என்னும் இசைக்கருவியை முழக்குபவர்)
கேழல் - பன்றி.

தொடர்புடைய இடுகைகள்

22 கருத்துகள்:

  1. போதும் என்ற மனம் வேண்டும் என்கிறீர்கள்... இன்றைய உலகில் கடினம் தான்

    பதிலளிநீக்கு
  2. பழந்தமிழ்ப் பாடலுடன் கணினியை இணைத்து காலத்துக்கேற்ற மாதிரி விளக்கிய பாங்கு அருமை!

    பதிலளிநீக்கு
  3. நிறைவடையாத மனது.. ஆமா ஆமா முனைவரே

    பதிலளிநீக்கு
  4. கொஞ்சம் கடினம் தான் நிறைவு பெறுவது...
    எங்களுக்களித்த பயிற்சி ஒன்றினில் ஐந்து எஸ் (5S)பற்றிதான் ஞாபகம் தான் வந்தது.
    ஐந்து எஸ் பின்வரும் ஐந்து ஜப்பானிய சொற்களின் முதல் எழுத்தை ஆங்கிலத்தில் எழுதி இணைத்த ஒரு குறுஞ்சொல்.
    முதல் எஸ்: செய்றி - வகைப்படுத்து (Sort)
    இரண்டாவது எஸ்: செய்டன் - நிலைப்படுத்து (Stabilize)
    மூன்றாவது எஸ்: செய்ச்சோ - ஒளிர் (Shine)
    நான்காவது எஸ்: செய்கெட்சு - தரப்படுத்து (Standardize)
    ஐந்தாவது எஸ்: ஷிட்சுகே - நீடிக்கச்செய் (Sustain)
    இவை ஐந்தும் பணித்தளத்தில் பொருட்களைத் திரட்டும், ஒழுங்குப்படுத்தும் வழிமுறையினைக் குறிப்பதாகும்.
    இதைப்பற்றி தெரிந்தால் எங்களுக்கு இன்னும் தெளிவு படுத்த வேண்டுகிறேன்...இலக்கியம் மூலமாக... நன்றி!!!

    பதிலளிநீக்கு
  5. இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படுதல்..
    அக்கரைக்கு இக்கரை பச்சை...
    இப்படி ஆயிரம் ஆயிரம் சொற்றொடர்கள் இருந்தாலும்..
    நம் மனம் ஏதோ அடுத்தவன் கையில் உள்ள பொருளை நாடி
    சென்றுகொண்டே தான் இருக்கிறது.
    கணினியை வைத்து மனிதனின் அளவிடமுடியா ஆசைகளை
    அற்புதமாய் சொல்லிவிட்டீர்கள் முனைவரே.

    போதுமென்ற மனத்தை பெறுதல் அவ்வளவு எளிதா???
    சிரமம் என்றே தோன்றுகிறது..
    அப்படி அதை பெற்றுவிட்டால் இவ்வுலகில் நம்மை வெல்பவர் யாருமில்லை.

    பாடல் வழிச் செய்தி மிக அருமை முனைவரே.

    பதிலளிநீக்கு
  6. ஆசை கூடக்கூடத்தானே பிரச்சனைகளும் கூடும் !

    பதிலளிநீக்கு
  7. நிறைவடையாத மனத்தை இன்றையக் கணினியின் கொள்ளளவுடன் ஒப்பிட்டும் பழங்காலப் பாடலில் பொதிந்த உவமைகளுடன் விளக்கியும் புரியவைத்துள்ளீர்கள். சங்கப் பாடல்களின் பொருளை மட்டும் விளக்காமல் அவற்றை இன்றைய நடைமுறைகளோடு ஒப்பிட்டுக் கூறுந்திறன் மிகவும் பாராட்டுக்குரியது. இனிதே தொடரட்டும் தங்கள் பணி.

    பதிலளிநீக்கு
  8. மேம்பாடுகள் இருக்கும் வரை நம் மனது அலைபாயுதல் நிற்கவே நிற்காது..... மனுஷன் அப்படினாலே ஆசை கண்டிப்பா இருக்கும்....


    வாசிக்க:
    சின்ன பீப்பா, பெரிய பீப்பா: பெண்களின் அரட்டை வித் டிப்ஸ் கச்சேரி

    பதிலளிநீக்கு
  9. அகப்பாடலுடன் இன்றைய விஞ்ஞானத்தை இணைத்தது மிகப் பிரமாதம் முனைவரையா! பாடலின் நயத்தையும் ரசித்தேன், உங்கள் சிந்தனை வளத்தையும் ரசித்தேன். என் கணினியிலும் தங்களைப் போன்றே தேவையற்றதை சேர்க்காமல் பயன்படுத்தி வருகிறேன். (பழைய மாடலானாலும் ஸ்பீட்) அழகான விஷயத்தை நிறைவாகப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல....

    பதிலளிநீக்கு
  10. @suryajeevaபுரிதலுக்கும் மதிப்பீட்டிற்கும் நன்றி நண்பா.

    பதிலளிநீக்கு
  11. @thendralsaravananதங்கள் தேடலைப் பதிவு செய்தமைக்கு நன்றி தோழி... பதிவு செய்கிறேன்..

    பதிலளிநீக்கு
  12. @ஹேமாஅழகாகச் சொன்னீர்கள்.. ஹேமா..

    யாதனின் யாதனின் நீங்கியான்...

    பதிலளிநீக்கு
  13. @கீதாதங்கள் ஆழ்ந்த வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  14. @கணேஷ்தங்கள் தொடர் வருகைக்கும் இலக்கிய வாசிப்புக்கும் நன்றி அன்பரே.

    பதிலளிநீக்கு
  15. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

    எதனையும் சரியாகக் கையாளத் தெரிந்தவர்களுக்கு இடப்பற்றாக்குறை என்றும் இருக்காது. இது மடிக்கணிணிக்கும் பொருந்தும், மாடிக் காணிக்கும் பொருந்தும்!!

    அறிவு வேட்கைக்கு மட்டும் எப்போதும் பற்றாக்குறை இருக்க வேண்டும்.. அப்போது தான் இன்னும் அதிகமாக படிப்போம்..
    நன்றி ஐயா!!

    பதிலளிநீக்கு