பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

செவ்வாய், 29 நவம்பர், 2011

இளமை இதோ.. இதோ...


இளமைக்காக நாம் காத்திருந்த நாட்கள் பல உண்டு
நமக்காக இளமை காத்திருந்த நாள் எதுவும் உண்டா?

இளமை என்றும் மனம் சொல்வதையே கேட்கிறது!
முதுமை என்றும் புத்தி சொல்வதையே கேட்கிறது!

கண்களை விற்று ஓவியம் வாங்குபவர்களும்..
பொருளுக்காக இளமையைத் தொலைப்பவர்களும் ஒரே வகை மனிதர்கள் தானே!!

அழிந்துபோகும் பொருளுக்காக அழிந்துகொண்டிருக்கும் இளமையைத் தொலைத்தல் அறிவுடைமையாகுமா?

இதோ அழகான ஆழமான மனதில் அம்பு தைப்பதுபோன்ற சங்கப்பாடல்..

“வில்லில் இருந்து செலுத்தப்பட்ட அம்பின் நிழல் எவ்வளவு விரைவாக மறையுமோ, அதுபோலத்தான் பொருளும் இளமையும்“ என்பதை உணர்த்துகிறது இப்பாடல்.


பொருள் தேடிப் பிரிய எண்ணுகிறான் தலைவன்.
அதனை உணர்ந்த தோழி அவனிடம்,
ஐய! இவள் வருந்தியிருக்கும்போது பொருள்தேடப்பிரியும் உன்னிடம்
இன்ப நிலையாமை, இளமை நிலையாமை கூறித் தடுக்க இயலுமோ? எனவே நீவிர் இவளைப் பாதுகாப்பீர் என்று உரைக்கிறாள்.

உன்னோடு சேர்ந்திருக்கவேண்டியவள் தலைவி.
அவள் தனித்து வாடிக் கொண்டிருக்கிறாள்.
கொன்றையின் இனிய சுவையுடைய கனிகள், பாணர்கள் முழக்கும் குறுந்தடிகளோ என்று எண்ணுமாறு பாறையில் ஒலியோடு வீழ்கின்றன.
மூங்கில் மிகுதியாகயிருக்கும் அந்த அரிய சுரவழியே..
நிலையற்ற பொருளை ஈட்டவேண்டும் என்ற எண்ணத்தோடு “யாம் பிரிதும்“ என்று நீவிர் கூறுவீர். ஆதலால் உம்மிடம்,

 “இவ்வுலகத்தில் நாள்தோறும் வில்லிலிருந்து புறப்படும் அம்பின் செல்லும் நிழல் எப்படி மறையுமோ“ அப்படி இன்பமும் இளமையும் விரைந்து கழியும். அவற்றை நீங்கள் கண்டதில்லையோ என்று நாங்கள் கூறுவது இயலாது.

அவை யாவர்க்கும் தெரிந்திருக்கும். இன்பமும், இளமையும் ஒவ்வொரு நாளும் கழிகின்றன. அதனால் அழியும் பொருளுக்காக, அழிந்துகொண்டிருக்கும் தலைவியை நீங்கி இன்பத்தையும் இளமையையும் தொலைத்துவிடாமல் அவளோடு சேர்ந்திருப்பீராக என்று தலைவனிடம் கேட்டுக்கொள்கிறாள் தோழி.
பாடல் இதோ..
வைகல் தோறும் இன்பமும் இளமையும்
எய் கணை நிழலின் கழியும் இவ்வுலகத்து
காணீர் என்றலோ அரிதே அது நனி
பேணீர் ஆகுவிர் - ஐய! என் தோழி
பூண் அணி ஆகம் புலம்ப பாணர்
அயிர்ப்பு கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி
பறை அறை கடிப்பின் அறை அறையாத் துயல்வர
வெவ் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து
எவ்வம் மிகூம் அருஞ்சுரம் இறந்து
நன் வாய் அல்லா வாழ்க்கை
மன்னாப் பொருட்பிணிப் பிரிதும் யாம் எனவே..

நற்றிணை - 46
பிரிவு உணர்த்திய தலைவனுக்குத் தோழி சொல்லியது.


பாடல் வழியே.



  • எய்யப்பட்ட அம்பின் நிழல் என்ற உவமை மீண்டும் மீண்டும் படித்து இன்புறத்தக்கதாக உள்ளது. அவ்வுவமை இளமையோடு ஒப்பிட்டு உரைத்தமை மேலும் கவிதைக்கு அழகுசேர்ப்பதாக உள்ளது.
  • நிலையாமையை அறிவுறுத்தும் இப்பாடல் மனதில் அம்பு தைத்தது போல வாழ்வியல் உண்மையை உணர்த்திச் செல்கிறது.
  • அழியப்போகும் பொருளுக்காக அழிந்து கொண்டிருக்கும் இளமையைப் பாராதிருத்தல் அறிவுடமையன்று என்னும் கருத்து புரியும்விதமாக புலப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய இடுகை





16 கருத்துகள்:

  1. சரியான மேற்கோள்.பதிவுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. மகாபாரத கதையில் எதோ ஒரு ராஜா தன மகனிடம் இருந்து இளமையை பெற்றுக் கொள்வார் என்று படித்தது நினைவில் வந்து போனது..

    பதிலளிநீக்கு
  3. //வைகல் தோறும் இன்பமும் இளமையும்
    எய் கணை நிழலின் கழியும் இவ்வுலகத்து//
    அருமை!பகிர்வுக்கு நன்றி.
    த.ம.2

    பதிலளிநீக்கு
  4. அருமையான கருத்து கொண்ட அழகிய பதிவு

    வாசித்தறிந்தேன் நண்பரே ,பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

    த.ம 3

    பதிலளிநீக்கு
  5. அழியப்போகும் பொருளுக்காக அழிந்து கொண்டிருக்கும் இளமையைப் பாராதிருத்தல் அறிவுடமையன்று என்னும் கருத்து // என்ன ஒரு எளிமையான விளக்கம். அசத்தல்..

    பதிலளிநீக்கு
  6. அம்பின் நிழலை உவமையாக எடுத்துக் கொண்டவிதம் அருமை, இப்பாடல் சொல்லும் கருத்தோ நிழல்போல் மறையாமல் நிலைக்கும் வண்ணம் மனதில் பதிகிறது...
    இந்த முரண் ரசிக்கும் படியாகவும், புதுமையாகவும் எனக்கு அமைந்தது...
    பகிர்வுக்கு நன்றி... நண்பரே...

    பதிலளிநீக்கு
  7. எப்பவும்போல படிக்கப் படிக்க இனிமை இளமை !

    பதிலளிநீக்கு
  8. உங்களின் கருத்து அருமையாக உள்ளது முனைவர் ஐயா.

    பதிலளிநீக்கு