பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

புதன், 30 நவம்பர், 2011

உயிரற்றுப் போன உயிர்கள்!

சில 
நடத்துநர்களின் பார்வையில்
மனிதர்கள் யாவரும்
பயணச்சீட்டுகளாகவே தெரிகின்றனர்!

சில 
ஓட்டுநர்களின் பார்வையில்
விபத்துக்குள்ளாகும் உயிர்கள்
தம் சாலைவிதி மீறலின்
ஒறுத்தல் கட்டணமாகவே புலப்படுகின்றனர்!

சில 
அரசியல்வாதிகளின் பார்வையில்
வாக்காளர்கள் யாவரும்
சிந்திக்காமல் ஓட்டுப்போடும் 
இயந்திரங்களாகவே காட்சியளிக்கின்றனர்!

சில 
மருத்துவர்களின் பார்வையில் 
நோயாளிகள் யாவரும் 
தம் மருத்துவமனைக்கு நிதியுதவி செய்யவந்த 
வங்கிகளாகவே தெரிகின்றனர்!

சில 
ஆசிரியர்களின் பார்வையில்
மாணவர்கள் யாவரும்
தேர்ச்சி விழுக்காடுகளாகவே 
பதிவுசெய்யப்படுகிறார்கள்!

சில 
மாணவர்களின் பார்வையில்
ஆசிரியர்கள் யாவரும்
பாடம் கற்பிக்கும்
 இயந்திரங்களாகவே உணரப்படுகின்றனர்!

சில 
செய்திவாசிப்பாளரின் பார்வையில்
பலியான உயிர்கள் 
எதுகை மோனையோடு சொல்லப்படும் 
எண்ணிக்கையாகவே உள்ளனர்!

மனிதர்கள் பார்வையில்..
உயிர் உள்ளவையெல்லாம்
உயிரற்றுப் போகின்றன

உயிரற்ற பணம் மட்டும்  
உயிராக மதிக்கப்படுகிறது!


தொடர்புடைய இடுகைகள்

செவ்வாய், 29 நவம்பர், 2011

சிரிப்பும் சிந்தனையும்

மின்னஞ்சலில் வந்த நிழற்படங்கள் சில என்னைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன. என் மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துகொள்ள சில காட்சிகள்...

குழந்தைக்கான உடற்பயிற்சிகளுள் இதுவும் ஒன்று..


யாருமே இல்லைன்னாக் கூட பேசறத நிறுத்தமாட்டாங்களோ!

கோயிலுக்கு வெளியே காலணிகளை விடுவதைவிட...
வேலையைப் பாதுகாத்துக்கொள்ள..
பின்னால் இருப்பவருக்கும் சாலை தெளிவாகத் தெரிய..

இளமை இதோ.. இதோ...


இளமைக்காக நாம் காத்திருந்த நாட்கள் பல உண்டு
நமக்காக இளமை காத்திருந்த நாள் எதுவும் உண்டா?

இளமை என்றும் மனம் சொல்வதையே கேட்கிறது!
முதுமை என்றும் புத்தி சொல்வதையே கேட்கிறது!

கண்களை விற்று ஓவியம் வாங்குபவர்களும்..
பொருளுக்காக இளமையைத் தொலைப்பவர்களும் ஒரே வகை மனிதர்கள் தானே!!

அழிந்துபோகும் பொருளுக்காக அழிந்துகொண்டிருக்கும் இளமையைத் தொலைத்தல் அறிவுடைமையாகுமா?

இதோ அழகான ஆழமான மனதில் அம்பு தைப்பதுபோன்ற சங்கப்பாடல்..

“வில்லில் இருந்து செலுத்தப்பட்ட அம்பின் நிழல் எவ்வளவு விரைவாக மறையுமோ, அதுபோலத்தான் பொருளும் இளமையும்“ என்பதை உணர்த்துகிறது இப்பாடல்.


பொருள் தேடிப் பிரிய எண்ணுகிறான் தலைவன்.
அதனை உணர்ந்த தோழி அவனிடம்,
ஐய! இவள் வருந்தியிருக்கும்போது பொருள்தேடப்பிரியும் உன்னிடம்
இன்ப நிலையாமை, இளமை நிலையாமை கூறித் தடுக்க இயலுமோ? எனவே நீவிர் இவளைப் பாதுகாப்பீர் என்று உரைக்கிறாள்.

உன்னோடு சேர்ந்திருக்கவேண்டியவள் தலைவி.
அவள் தனித்து வாடிக் கொண்டிருக்கிறாள்.
கொன்றையின் இனிய சுவையுடைய கனிகள், பாணர்கள் முழக்கும் குறுந்தடிகளோ என்று எண்ணுமாறு பாறையில் ஒலியோடு வீழ்கின்றன.
மூங்கில் மிகுதியாகயிருக்கும் அந்த அரிய சுரவழியே..
நிலையற்ற பொருளை ஈட்டவேண்டும் என்ற எண்ணத்தோடு “யாம் பிரிதும்“ என்று நீவிர் கூறுவீர். ஆதலால் உம்மிடம்,

 “இவ்வுலகத்தில் நாள்தோறும் வில்லிலிருந்து புறப்படும் அம்பின் செல்லும் நிழல் எப்படி மறையுமோ“ அப்படி இன்பமும் இளமையும் விரைந்து கழியும். அவற்றை நீங்கள் கண்டதில்லையோ என்று நாங்கள் கூறுவது இயலாது.

அவை யாவர்க்கும் தெரிந்திருக்கும். இன்பமும், இளமையும் ஒவ்வொரு நாளும் கழிகின்றன. அதனால் அழியும் பொருளுக்காக, அழிந்துகொண்டிருக்கும் தலைவியை நீங்கி இன்பத்தையும் இளமையையும் தொலைத்துவிடாமல் அவளோடு சேர்ந்திருப்பீராக என்று தலைவனிடம் கேட்டுக்கொள்கிறாள் தோழி.
பாடல் இதோ..
வைகல் தோறும் இன்பமும் இளமையும்
எய் கணை நிழலின் கழியும் இவ்வுலகத்து
காணீர் என்றலோ அரிதே அது நனி
பேணீர் ஆகுவிர் - ஐய! என் தோழி
பூண் அணி ஆகம் புலம்ப பாணர்
அயிர்ப்பு கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி
பறை அறை கடிப்பின் அறை அறையாத் துயல்வர
வெவ் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து
எவ்வம் மிகூம் அருஞ்சுரம் இறந்து
நன் வாய் அல்லா வாழ்க்கை
மன்னாப் பொருட்பிணிப் பிரிதும் யாம் எனவே..

நற்றிணை - 46
பிரிவு உணர்த்திய தலைவனுக்குத் தோழி சொல்லியது.


பாடல் வழியே.



  • எய்யப்பட்ட அம்பின் நிழல் என்ற உவமை மீண்டும் மீண்டும் படித்து இன்புறத்தக்கதாக உள்ளது. அவ்வுவமை இளமையோடு ஒப்பிட்டு உரைத்தமை மேலும் கவிதைக்கு அழகுசேர்ப்பதாக உள்ளது.
  • நிலையாமையை அறிவுறுத்தும் இப்பாடல் மனதில் அம்பு தைத்தது போல வாழ்வியல் உண்மையை உணர்த்திச் செல்கிறது.
  • அழியப்போகும் பொருளுக்காக அழிந்து கொண்டிருக்கும் இளமையைப் பாராதிருத்தல் அறிவுடமையன்று என்னும் கருத்து புரியும்விதமாக புலப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய இடுகை





வெள்ளி, 25 நவம்பர், 2011

எழில் ஓவியம்!

ஒலி மாசுபாடு என்பது இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது.

அதிலும் தனிமனித அத்துமீறல்கள் அளவுக்கு அதிகமாகவே உள்ளது.

அதிக ஒலியோடு அலைபேசியின் அழைப்பின் ஒலியை வைத்துக்கொள்தல்!
பொது இடங்களிலும் ஊருக்கே கேட்பதுபோல சத்தமாக அலைபேசியில் பேசுதல்.
அடுத்தவறுக்கு இடையூறாக அதிக ஒலியோடு பாடல் கேட்டல்.
வாகனங்களில் பேரொலிதரும் காற்று ஒலிப்பான்களைப் பயன்படுத்துதல்..

என வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம்..

சங்ககாலத்தில் இரண்டு சூழல்கள்..

1. வினை முடிந்து மீளும் தலைவன் புறப்படுமுன் தேர் மணியினது நாக்கு ஒலிக்காதபடி அதைக் கட்டுகிறான்.ஏனென்றால், 
வண்டுகள் தம் துணையுடன் கூடி மகிழும் போது, 
தேர் மணி ஓசை அவைகளுக்கு அச்சத்தைக் கொடுத்துப் பிரித்து விடக் கூடாது என்பற்காகவே அவ்வாறு செய்தான்
இதனை..

பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த 
தாதுஉண் பறவை பேதுறல் அஞ்சி 
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன் 
(அகநானூறு - 4 : 10-12)


என்ற பாடல் அடிகள் விளக்கும்.

2.பணி நிமித்தம் தலைவியை நீங்கிச் சென்ற தலைவன் தன் வேலை முடிந்து  குதிரைகள் இழுத்துச் செல்லும் தேரில் வருகிறான்.
 தம் தேரின் ஓசை அந்நிலத்தில் கூடியிருக்கும் மான் இனங்களுக்கு எவ்விதத்திலும் தடையாக இருக்கக்கூடாது என்று எண்ணுகிறான்  அதனால் தன் தேர்ப்பாகனிடம் “தேரை ஒலியின்றிச் செலுத்துக! என்று சொல்கிறான்.

என்ன ஒரு சிந்தனை..!!

யர்திணைகளைக்கூட மதிக்காத இன்றைய உலகில்
ஃறிணை உயிர்களையும் மதித்துப் போற்றிய சங்கத்தமிழனின் மாண்பு பெருமிதம் கொள்ளச் செய்வதாக உள்ளது.

இதோ..
எழில் மிக்க ஓவியமாக முல்லைநிலமும் - அதில்
அதை விட அழகான தலைவனின் அன்புள்ளமும் காட்சிப்படுத்தப்படுகிறது.

தலைவன் பாகனிடம் சொல்கிறான்...

பாகனே..

வாழையின் பெரிய பூவினது மடல்கள் முறையாக மலர்ந்து உதிர..
எஞ்சிய குவிந்த மொட்டும் வீழ்ந்துவிட்ட குலையைப் போன்ற முறுக்குடைய கொம்புகளைக் கொண்ட ஆண்மான்களோடு, பெண்மான்கள் இந்நடுநாளில் விரும்பிக் கூடியிருக்கும்.

விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டிய தேரின் ஓசையால் மான்கள் மகிழ்ச்சி நீடிக்காதல்லவா...?

நிறைந்த சூலையுடைய கரிய மேகங்கள் கார்காலத்தைத் தோற்றுவித்தன. வானம் பொய்க்காது மழையைப் பொழிந்தமையால் கானம் செழிப்புற்று அழகு பெற்றது.

நீலமணிபோன்ற காயா மலரின் அழகிய மலர்களின் இடையிடையே..
சிவந்த முதுகினையுடைய இந்திரகோபப் பூச்சிகள் பரவி ஊர்ந்த திரிந்தன.

முல்லைக் கொடிகளிலிருந்து நிறைய மலர்கள் பரவலாக உதிர்ந்து கிடந்தன.
ஆதலால் சிறந்த நிலமாகிய முல்லை நிலப்பரப்பு ஓவியம் வல்லோனால் தீட்டப்பட்ட எழில் ஓவியம் போலக் காட்சி தந்தது.

அத்தகைய முல்லை நிலத்தே, தாள நடை விளங்குமாறு தாவிச் செல்லும் நடையையுடைய செருக்குடைய குதிரைகளின் தாவும் இணையொத்த கால்கள் மெல்ல நடக்கும்படி தாற்றுக்கோலால் இடித்தலை மறந்து செலுத்துவாயக என்று தேர்ப்பாகனிடம் அன்புடன் சொல்கிறான் தலைவன்.



வானம் வாய்ப்பக் கவினி, கானம்
கமஞ்சூல் மாமழை கார்பயந்து இறுத்தென,
மணிமருள் பூவை அணிமலர் இடைஇடை
செம்புற மூதாய் பரத்தலின், நன்பகல்
முல்லை வீகழல் தாஅய் வல்லோன்
செய்கை அன்ன செந்நிலப் புறவின்
வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத்
தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க
இடிமறந்து ஏமதி -வலவ! குவிமுகை
வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு
கணைக்கால் அம்பிணைக் காமர் புணர்நிலை
கடுமான் தேர்ஒலி கேட்பின் 
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே

சீத்தலைச் சாத்தனார்
அகநானூறு -134

வினைமுற்றி மீண்ட தலைவன் பாகற்கு உரைத்தது.

பாடல் வழியே..

1. ஒலிமாசுபாடு உயிர்களின் இன்பத்துக்குத் தடையாக இருக்கும் என்ற தலைவனின் சிந்தனை அஃறிணை உயிர்கள் மீதும் அன்புகொண்ட பழந்தமிழரின் மாண்பை எடுத்துரைப்பதாக உள்ளது.


2. முல்லை நிலத்தின் காட்சியானது அழகான ஓவியத்தைக் கண்டு மகிழ்ந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

தொடர்புடைய இடுகைகள்

வியாழன், 24 நவம்பர், 2011

அழிந்து வரும் தமிழர் அடையாளங்கள்!



தமிழன் என்றோர் இனமுண்டு தனியே 
அவர்க்கோர் குணமுண்டு". என்பார் நாமக்கல் கவிஞர்.

“தனி“ என்பது நம்மை நாமே தனிமைப் படுத்திக்கொள்வதல்ல..
நம் மரபுகளைத் தனித்துவப்படுத்திக் காட்டுவது!


இன்று நம் மொழி, நம் மரபுகள், நம் பண்பாடுகள் என்று தனித்து எடுத்துக்காட்ட, பெருமிதம் கொள்ள நாம் என்ன சேர்த்து வைத்திருக்கிறோம்..


கொஞ்சநாளுக்கு முன்னர்..


“அவள் பெயர் தமிழரசி“ என்றொரு படம் வந்தது. அதைப் பார்ப்பதற்கு ஆள் இல்லை..!


“கிராமியக் கலைகள்“ என்றொரு நூலைப் பார்த்தேன்..


அதில் நம் மரபுக் கலைகளாக அதன் ஆசிரியர் “சிங்கனூர்.கே.தனசேகரன்“ அவர்கள் நிறைய குறிப்பிட்டிருந்தார்..


படித்துப் பார்த்து பெருமிதம் கொள்ள முடியவில்லை..
நாம் தொலைத்தவை இத்தனை செல்வங்களா!! என்ற அவலம் தான் மனதில் தோன்றியது..


இதோ நாம் தொலைத்த கலைச் செல்வங்கள்..



கரகாட்டம்
காவடியாட்டம்
பொய்க்கால் குதிரை ஆட்டம்
மயிலாட்டம் 
ஒயிலாட்டம்
மாடு ஆட்டம்
உறியடி ஆட்டம்
கொல்லிக் கட்டை ஆட்டம்
புலி ஆட்டம்
சிலம்பாட்டம்
குறவன் குறத்தி ஆட்டம்
கைச்சிலம்பாட்டம்
மயானக் கொள்ளை
கும்மியாட்டம்
பொம்மலபாட்டம்
தேவராட்டம்
வில்லுப்பாட்டு
கோலாட்டம்
தப்பாட்டம்
காளியாட்டம்
கரடிஆட்டம்
தெருக்கூத்து
மேடைக்கூத்து
பாம்பு நடனம்


சேவையாட்டம்
பேயாட்டம்


சாமியாட்டம்
கெங்கையம்மன் ஆட்டம்
குறவஞ்சியாட்டம்
அரிகதை ஆட்டம்
மின்னல் கோலாட்டம்
கணியான் கூத்து
பகல்வேடம்
நாட்டுப்புறப் பாடல்கள்
தாலாட்டுப் பாடல்கள்
விளையாட்டுப் பாடல்கள்
தொழிற்பாடல்கள்
ஏற்றப்பாட்டு
ஏர்ப் பாட்டு
சமுதாயப் பாட்டு
பக்திப் பாட்டு
விநாயகர் பாடல்
மாரியம்மன் பாடல்
வண்டிக்காரன் பாடல்
காதல் பாடல்கள்
ஒப்பாரிப் பாடல்
பிற பாடல்கள்
குறவன் குறத்திப் பாட்டு
குடுகுடுப்பைக் காரன் பாட்டு.

நூலாசிரியர் - சிங்கனூர் கே.தனசுகரன்
திருவரசு புத்தக நிலையம்
23 தீனதயாளு தெரு
தியாகராயர் நகர்
சென்னை.
நூலின் விலை ரூ -60.

புதன், 23 நவம்பர், 2011

மாணவர்களின் உடலசைவு மொழிகள்.

வகுப்பறையில் மாணவர்களைப் புரிந்துகொள்தல் என்பது ஒரு கலை.
ஒவ்வொரு மாணவர்களும் ஒரு புத்தகம் போல..
அந்த ஒவ்வொரு புத்தகங்களும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பக்கங்களைக் கொண்டிருக்கும்..

நாள்தோறும் படித்தால் மட்டுமே அவர்களைப் புரிந்துகொள்ளமுடியும் என்பது என் அனுபவம்.

என் பார்வையில் மாணவர்களின் உடலசைவு மொழிகளுக்கு நான் புரிந்துகொண்ட பொருள்களை என்னைப் போன்ற கல்வித்துறையில் பணிபுரிபவர்களுக்கும் பயன்தருமே என்பதற்காக 
வரிசைப் படுத்தியுள்ளேன்..



1. தலையைச் சொறிதல்.
வியப்பு, புதிர், குழப்பம், மறதி

2. ஆசிரியரையே உற்று நோக்குதல்
நான் உங்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதனால்..
என்னை மட்டும் கேள்விகேட்காதீர்கள்.

3. ஆசிரியரின் கண்களை நேராகப் பார்ப்பதைத் தவிர்த்தல்.
நான் உங்கள் கண்களைப் பார்த்தால் உண்மையை உளறிக்கொட்டிவிடுவேன்.

4.கொட்டாவி விடுதல்.
எதுவும் புரியலை, பிடிக்கல, தூக்கம் வருது, வேற எதாவது பேசுங்களேன்.

5.நன்றாகத் தலையாட்டுதல்.
எல்லாம் புரிகிறது.
எதுவும் புரியலை.
தூக்கத்துக்கும், விழிப்புக்கும் இடையே போராடிக்கொண்டிருக்கிறேன்.

6.பேசும்போது அடிக்கடி கண்சிமிட்டுதல்
நான் சொல்வது முற்றிலும் பொய்.

7.திட்டும்போதெல்லாம் சிரித்தல்.
எனக்கு வலிக்கலையே, இதுக்கெல்லாம் நாங்க வருத்தப்படுவோமா..

8. தேர்வு எழுதும்போது எழுதுகோலைச் சுற்றுதல்
சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

9. கண்ணத்தில் கைவைத்தல்.
எப்படா இந்த வகுப்பு முடியும்!

10. கடிகாரத்தைப் பார்த்தல்.
வகுப்பு முடிஞ்சும் இன்னும் ஏன் மணி அடிக்கல?


தொடர்புடைய இடுகை


கல்வி உளவியல்

செவ்வாய், 22 நவம்பர், 2011

இங்கு சிரிப்பும், அழுகையும் கற்றுத்தரப்படும்!

இப்ப சிரி!! இப்ப அழு..
னிதர்கள் எல்லாம் யந்திரங்களாக மாறிவருகிறார்கள். எதிர்காலத்தில் மனிதர்களுக்குச் சிரிப்பும், அழுகையும் கற்றுக் கொடுக்கும் நிலை வந்தாலும் வியப்பதற்கில்லை...
அவ்வேளையில் உணர்வு என்றால் என்ன? என்று எடுத்தியம்ப சங்கப் பாடல்கள் துணைநிற்கும்..


இதோ ஒரு சங்கப்பாடல்..


போருக்குச் சென்ற தன் கணவன் வீடு திரும்பவில்லை அவன் வீரமரணம் அடைந்துவிட்டான். அதனை அவன் மனைவி அறியவில்லை பாவம் காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போனவள் அவனுக்கு ஏதும் நேர்ந்திருக்கும் என அஞ்சியவளாகப் போர் நடைபெற்ற இடத்தைச் சென்றடைந்தாள். அவன் வீழ்ந்து கிடந்த இடமோ புலி போன்ற கொடிய விலங்குகள் வாழும் காடு. தன் கணவன் இறந்தமை கண்டு உள்ளம் வெதும்பி அழுது புலம்புவதாகவும். தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய எமனுக்கே சாபம் கொடுப்பதாகவும் இப்பாடல் அமைகிறது.


கணவன் இறந்துவிட்டான் என்று புத்தி சொல்கிறது...
இல்லை அவன் எழுந்து தன்னுடன் நடந்து வந்துவிடுவான் என்று உணர்வு சொல்கிறது...



ஐயோ! எனின் யான் புலி அஞ் சுவலே;
அணைத்தனன்’ கொளினே, அகன்மார்புஎடுக்கல்லேன்!
என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே!
நிரைவளை முன்கை பற்றி-
வரைநிழல் சேர்கம்- நடந்திசின் சிறிதே!

புறநானூறு-255

இப்பாடலின் ஆங்கில வடிவம்

I Cannot cry out,
I'm afraid of tigers.
I cannot hold you
your chest is too wide
for my lifting

Death
has  no codes
and has dealt you wrong
may he 
shiver as I do!

Hold my wrist
of bangles,
let's get to the shade
of that hill.
just try and walk a little

எல்லா உணர்வுகளையும் எல்லோராலும் உணர முடியும். ஆனால் 
வெளிப்படுத்த முடியாது. 
சங்கப் பாடல்களை நோக்கும் போது பெரு வியப்புத் தோன்றுகிறது!
எத்தகைய சூழலாக இருந்தாலும் அதனை அழகாக எளிமையாக விளக்கிச் செல்லும் பாங்கு தமிழ் மொழியின் செம்மைப் பண்பிற்குத் தக்க எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.


பாடலின் பொருளை மேலும் சுவைக்க..

 

!கடவுளை வேண்டிய கடவுள்!

கதை தெரியுமா..?
எதிர்த்த வீட்டுப்பொண்ணு அடுத்தவீட்க்காரப் பையனோட ஓடிட்டாளாம்...


சரியாகத் தெரிந்தோ, தெரியாமலோ,
குத்துமதிப்பாகவோ சொல்லப்படும் இதுபோன்ற செய்திகளைச் சாதாரணமாக இன்றும்கூட நம்மால் கேட்கமுடியும்...


இயல்பான இந்தப் பேச்சுக்கு உள்ளே எத்தனைபேரின் மனப்போராட்டங்களும், வலிகளும், துன்பங்களும் அடங்கியிருக்கின்றன என்பதை நாம் பாதிக்கப்பட்டவராக இருந்தால் மட்டுமே உணர்ந்துகொள்ளமுடியும்.



இதோ வலியுடன் கூடிய பதிவு ஒன்று..

இதில் கொடிய பாலைநிலத்தில் தலைவனுடன் செல்லும் தலைவியின் வலி பெரியதா?

தலைவியைப் பிரிந்து அவளை எண்ணிப் புலம்பும் செவிலியின் வலி பெரியதா?
என்று கண்டறிவது அவ்வளவு எளிதானதாக இல்லை..

இதோ செவிலித்தாயின் புலம்பல்..

தலைவி தலைவனுடன் உடன்போக்கில் சென்றுவிட்டாள்.
தலைவனோ நெடிய வேல் வைத்திருப்பவன்.
வீரமும் வலிமையும் கொண்டவன்.
அவன் மீது கொண்ட காதல் மிகுதியால்.
பெற்றோரையும், உற்றாரையும், வளர்த்தாரையும் மறந்து அவனோடு சென்றுவிட்டாள் தலைவி!

தலைவியின் மீது அன்பைக் கொட்டி வளர்த்தவளல்லவா செவிலித்தாய்!
செவிலியின் மனம் கேட்கவில்லை.
தெய்வங்களிடம் மனம் கசிந்து வேண்டிக்கொள்கிறாள்.

தலைவியோ மென்மையுடையவள்.
அவள் சென்ற பாலைநிலமோ கொடிய வன்மைத்தன்மை கெண்டநிலம்!
கடவுளர்களே என் மகளை நீங்கள் தான் காக்கவேண்டும்..

“என் மகள் சென்ற பாலைநிலம் மரங்களால் நிறைந்து சூரியன் உட்புகாதவாறு நிழல் செறிந்து காணப்படட்டும்!

அவள் நடப்பதற்கு இதமாக மணல் நிறைந்து பாதை அமையட்டும்.

அப்பாதையும் நீண்ட பாதையாக இருக்காமல் மிக குறைவான தூரம் கொண்ட பாதையாக அமையட்டும்.

அவள் தாகத்திற்கு ஏற்ப மழைபொழிந்து அவளுக்குத் தண்ணீர் கிடைக்கட்டும்.!

என்றெல்லாம் வேண்டிக்கொள்கிறாள்.

பாடல் இதோ..

ஞாயிறு காணாத மாண்நிழற் படீஇய
மலைமுதல் சிறுநெறி மணல்மிகத் தாஅய்
தண்மழை தலைய வாகுக நம் நீத்துச்
சுடர்வாய் நெடுவேல் காளையோடு
மடமா அரிவை போகிய சுரனே

கயமனார்.
குறுந்தொகை -378

மகட் போக்கிய செவிலி தெய்வத்துக்குப் பராயது!

தமிழ்ச்சொல் அறிவோம்.

தாஅய் பரந்து
காளை தலைவன்
அரிவை தலைவி
சுரம்  - பாலைநிலம்
செவிலி- தலைவியை வளர்த்த தாய்
உடன்போக்கு- பெற்றோர் அறியாது தலைவி தலைவனுடன் வாழச் செல்லுதல்.

பாடல் வழியே...

  1. தலைவியை ஈன்ற நற்றாயைவிட வளர்த்த செவிலித்தாய்க்கே தலைவி மீது அன்பு மிகுதியாக இருந்தமை இதனால் புலனாகிறது.
  2. தலைவன் நெடுவேல் கொண்டவன் என்பதால் ஆறலைக் கள்வர்கள் குறித்த அச்சம் தன் மகளுக்கு இல்லை என்ற பெருமிதம் தோன்ற சொல்கிறார் செவிலி.
  3. பாலை நிலம் தன்னிலை மாறி தண்ணிய நிலமாக மாறுவது என்பது இயலாத ஒன்றுதான். இருந்தாலும் கடவுளிடம் செவிலி வேண்டுவதன் வழி தாயுள்ளத்தின் அன்பின் ஆழம் அறிவுறுத்தப்படுகிறது.
  4. தலைவிபடும் வழித்துன்பத்தைவிட அவள்மீதுகொண்ட அன்பால் செவிலிபடும் மனத்துன்பம் மிகவும் பெரியதாகவுள்ளது.
  5. இன்னொரு உயிருக்காக மனம் வாடும் செவிலியின் இந்த அன்புள்ளமே என் கண்ணுக்குக் கடவுளாகக் காட்சியளிக்கிறது.
  6. நற்றாயே தலைவியைப் பெற்றெடுத்தாலும் அன்பைக் கொட்டி வளர்ப்பது செவித்தாயே என்னும் சங்ககால வழக்கத்தைப் இப்பாடல் வழியே அறிந்கொள்ளமுடிகிறது.
தொடர்புடைய இடுகை

ஞாயிறு, 20 நவம்பர், 2011

தென்கச்சியார் நகைச்சுவை.

நான் மதிக்கும் நகைச்சுவைப் பேச்சாளர்களுள் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுக்கு என்றுமே சிறப்பிடம் உண்டு. எனது சிறு வயது முதலாகவே வானொலிகளில் இவரது சிந்தனைகளை விரும்பிக் கேட்டுவந்திருக்கிறேன். இவரது உருவத்தை பார்க்காமலேயே குரலைமட்டுமே வைத்து இவர் இப்படித்தான் இருப்பார். இவர் நகைச்சுவைசொல்லும்போது இவர் முகம் இப்படித்தான் இருக்கும் என்று கற்பனை செய்து வைத்திருந்தேன்..

முதல் முதலில் இவரை காணொளியில் பார்த்தபோது நம்பவே முடியவில்லை..

இவர்தானா அவர்??
என்ற எண்ணம் தான் வந்தது.

சிரிக்கச் சிரிக்கப் பேசிய இவர்
சிரித்துக்கொண்டு நகைச்சுவை சொல்லி நான் பார்த்தில்லை..

முதலில் பார்க்கும் போது..

என்ன இவர் உணர்ச்சியே இல்லாமல் பேசுகிறார் என்றுதான் தோன்றியது
ஆழ்ந்து நோக்கியபின்னர் தான் புரிந்தது.

ஆரவாரமற்ற அந்தப் பேச்சுக்குள் எல்லா உணர்ச்சிகளும் அடங்கியிருக்கிறது என்று பின்னர் தான் நான் உணர்ந்துகொண்டேன்.

சரி அவருடைய சிந்தனைகளுள் நான் விரும்பிய சிந்தனை ஒன்றை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.


இதோ தென்கச்சியார் பேசுகிறார்..

ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்?
என்பதற்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான விளக்கத்தைக் கொடுத்திருக்காங்க.
ஆனா கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குடுக்கற விளக்கம் என்ன தெரியுமா?

நகைச்சுவை அடுத்தவங்களுக்குத் துன்பம் குடுக்காம இருக்கனும்.அடுத்தவங்க மனசைப் புண்படுத்தப்படாது. அதுதான் சிறந்த நகைச்சுவைங்கிறார். அதுக்கு அவர் ஒரு உதாரணமும் கொடுக்கிறார்.

ஓர் ஏரி ஓரமா ரெண்டு பையன்கள் நடந்து போய்கிட்டிருக்காங்க. அதுல ஒருத்தன் பணக்காரவீட்டுப் பையன். இன்னொருத்தன் ஏழை. இவங்க ரெண்டு பேரும் போய்கிட்டிருக்காங்க....
வழியில ஓர் இடத்துலே ஒரு சோடி செருப்பு இவங்க கண்ணுலே பட்டுது.

ஒரு விவசாயி அந்தச் செருப்பை அங்கே விட்டுட்டு பக்கத்துலே இருந்த ஏரியிலே கை- கால் கழுவிக்கிட்டிருந்தார்.

உடனே அந்தப் பணக்காரப் பையனுக்கு ஒரு யோசனை!

அவன் சொன்னான்.
டேய்! இப்ப ஒரு வேடிக்கை செய்யலாம்... அந்தச் செருப்பு இரண்டையும் தூக்கி எட்டத்துலே வீசி எறிஞ்சிடுவோம். அந்த ஆளு வந்து பார்த்துட்டு செருப்பைத் தேடி அல்லாடுவான்... அங்கேயும் இங்கேயும் ஓடுவான். திருதிருவென முழிப்பான். அதை நாம இரசிக்கலாம். நல்லா தமாசா இருக்கும்! அப்படின்னான்.

இப்படிச் சொல்லிப்புட்டு அந்தச் செருப்புகளைத் தூக்கப் போனான்.

“கொஞ்சம் பொறு“ ன்னான் அந்த ஏழைப் பையன்.
ஏன்? ன்னு கேட்டான் இவன். இப்ப அந்த ஏழைப்பையன் சொன்னான்...

நீ சொல்றது ஒண்ணும் வேடிக்கை இல்லே. உன்னோட செருப்புத் தெலைஞ்சா உன் அப்பா உடனே உனக்கு வேறே செருப்பு வாங்கிக்கொடுத்துடுவார்! ஆனா அந்த ஆளுக்கு இந்தச் செருப்பு தொலைஞ்சா வேறே புதுசா வாங்குறதுக்கு வாயையும், வயத்தையும் கட்டி பணத்தைச் சேர்க்கவேண்டியிருக்கும்!

அதனால நான் ஒரு வேடிக்கை சொல்றேன். அது மாதிரிச் செய்! அது இன்னும் தமாசா இருக்கும்.. அப்படின்னான்.

சரி! சொல்லுன்னான் இவன்.

“செருப்பு இரண்டும் அது இருக்கிற இடத்துலேயே இருக்கட்டும். உன் சட்டைப் பையிலேயிருந்து ஒரே ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அந்தச் செருப்பு மேலே அதோட குதிப் பகுதியிலே வை. வச்சுட்டு நாம ரெண்டு போரும் அந்த மரத்துக்குப் பின்னாடி மறைஞ்சி நின்னுக்குவோம்.“ அப்புறம் பார் வேடிக்கையைன்னான்.

அதே மாதிரி ஒரு ரூபாய் காசை செருப்பு மேலே வச்சிட்டு இவங்க மறைஞ்சு நின்னுக்கிட்டாங்க.

கொஞ்ச நேரத்துல அந்த விவசாயி வந்தார்.

கால்லே உள்ள மண்ணைத் தட்டிப்புட்டு செருப்பை மாட்டறதுக்குப் போனார். அங்கே இருந்த காசு கண்ணுல பட்டுது! அவருக்கு ஆச்சிரியமா போச்சு. அதை கையிலே எடுத்துப் பார்க்கிறார். நாலுபக்கமும் திரும்பி திரும்பிப் பார்க்கிறார். கடைசியிலே ஆகாயத்தைப் பார்க்கிறார்.

ஆண்டவா! இது உன்னோட கருணைதான்..
நீதான் யாரோ புண்ணியவான் மனசுல தருமம் பண்ணற எண்ணத்த உண்டாக்கியிருக்க! அந்தப் புண்ணியவான் நல்லாயிருக்கனும்! ன்னு வாழ்த்தி அந்தக் காசைக் கண்ணுல ஒத்திக்கிட்டார்.

மறைஞ்சிருந்து பார்த்திட்டிருந்த ஏழைப் பையன் இப்பச் சொன்னான்...

பார்த்தியா..? உன்னைப் புண்ணியவான்னு வாழ்த்திட்டுப் போறார் அந்த ஆள்! அவருக்கும் சந்தோசம். உனக்கும் சந்தோசம். உனக்கு ஒரு ரூபாய்ங்கறது பெரிசில்ல. அதனால நமக்குக் கிடைச்சிருக்கிற மகிழ்ச்சி ரொம்ப உயர்வானது! அப்படின்னான்.

வேடிக்கையும் கிண்டலும் இது மாதிரி அடுத்தவங்களுக்கு இடைஞ்சலா இல்லாம இருக்கனும் என்கிறார் கலைவாணர்.

ஆனா பாருங்க.. அவருக்கே இடைஞ்சலா வர்ற விசயங்களைக் கூட அவரு வேடிக்கையாத்தான் எடுத்துக்கறார்.

ஒரு தடவை ஒருத்தர் கலைவாணர்க்கிட்டே வந்து...
ஐயா... என் குழந்தை செத்துப் போச்சு! ன்னு சொல்லி அழுதார். உடனே இவரு அவருக்கு நூறு ரூபாய் பணம் கொடுத்து “இந்தாங்க... அடக்கம் செய்யுங்க!ன்னு சொல்லி அனுப்பிவைச்சார்.

ஒரு வருசம் கழிச்சு மறுபடியும் அதே ஆள் வந்தார். இவறு மறந்திருப்பார்ங்கற நினைப்பிலே “ அண்ணே...
என் குழந்தை இறந்து போச்சண்ணே! ன்னார் இவரு மறுபடியும் நூறு ரூபாய் கொடுத்து ஆறுதல் சொல்லி அனுப்பினார்.

ஏழெட்டு மாசம் கழிச்சு மறுபடியும் அதே ஆள் வந்தார். அவரு வாயைத் திறக்கறதுக்க முன்னாடியே இவரு நூறு ரூபாயை அவரு கையில வெச்சு

“போன ரெண்டு தடவைதான் குழந்தை செத்துப்போச்சு“ 


இந்தத் தடவையாவது சாகாமக் காப்பாத்திடுங்க! ன்னார்.

அதுக்கப்பறம் அந்த ஆள் வர்றதே இல்லையாம்.


தொடர்புடைய இடுகை

சனி, 19 நவம்பர், 2011

விலை ஏற்றம் - சில நன்மைகள்!!

தமிழகத்தில் தற்போது கொண்டுவந்துள்ள விலையேற்றத்தால் மக்கள் பெரும் ஏமாற்றத்துடனும், கோபத்துடனும் இருக்கிறார்கள். அதனால் நன்மை எதுவும் இல்லை என்று எண்ணிவிட வேண்டாம்..

இதோ சில நன்மைகள்.

பால் விலையேற்றம்


  • நடிகர்களின் படங்களுக்கு இரசிகர்கள் பாலாபிசேகம் செய்வதைக் குறைத்துக்கொள்வார்கள்.
  • சோம்பேறிகளின் கூடாரமாகத் திகழும் டீக்கடைகளின் எண்ணிக்கை குறையும், அங்கு செல்வோர் எண்ணிக்கையும் குறையும்.

எரிபொருள் விலையேற்றம்

  • வாகனப் பயன்பாடு குறைவதால் சுற்றுச்சூழல் சீர்கேடு கட்டுப்பாட்டுக்குள் வரும்.
  • வாகன நெரிசல் குறைவதோடு, சாலைவிபத்துக்களும் குறையும்.

மின்சார விலையேற்றம்

இரவு படிக்கும் மாணவர்கள், மின்செலவைக் குறைக்க இரவு படிப்பதை நிறுத்திக் கொள்வார்கள். இல்லாவிட்டால் மின்சாரம் தானே நின்றுவிடும்.

காற்றுக்காகவாவது வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற சிந்தனை மக்கள் மனதில் மலரும்.

மக்கள் தொகை குறையும்

  • வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் வாழமுடியாமல் கொலை, கொள்ளை என ஈடுபடுவார்கள்.. அவ்வாறு வாழ முடியாதவர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள்.

புரிதல்

  • அரசு என்னென்னவோ இலவசமாகத் தந்ததே..

  • இந்த விலையேற்றமும் இலவசங்கனின் வரிசையில் வந்த இலவசம் தான் என்பதையும்...



  • இது வரை தந்த இலவசங்களின் விலைப்பட்டியல் தான் இந்த விலையேற்றம் என்பதையும் மக்கள் புரிந்துகொள்வார்கள்.


சில்லறைத் தட்டுப்பாடு குறையும்

நம்மாளு - தேநீர் எவ்வளவுப்பா?
கடைக்காரர் - 6 ரூபாய்
நம்மாளு - ஏன்பா 6,7 ன்னு வெச்சுக்கிட்டு 10 ரூபாய்ன்னு வெச்சிடலாம்ல “சில்லறைத் தட்டுப்பாடு“ வராது பாருங்க..

கடைக்காரர் - !!! இவன் திட்டுறானா!! யோசனை சொல்றானா!!


எல்லாம் விலையேத்தற அரசு “மதுபானம், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு அதிக விலையேற்றினாலாவது போதையால் மடியும் மக்களின் விழுக்காடு குறையும்.. அவர்களின் குடும்பத்தார் மகிழ்ச்சியடைவார்கள்..

அட!!
ஏம்பா புலம்பறீ்ங்க..
எல்லாத்தையுமே அரசு ஒரு “தொலைநோக்குப் பார்வை“யோட தான் செய்திருக்கிறது!!

தொடர்புடைய இடுகை


வெள்ளி, 18 நவம்பர், 2011

வரம் பெற்று வந்தவர்கள்..

தூக்கமும் ஒருவகையான பசிதானே..

வயிற்றுக்காக வாழும் வாழ்க்கையில் தூக்கத்தை கூட மாத்திரையாக விலைகொடுத்துத்தான் வாங்கும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

பசித்து உண்பவர்களும்..
படுத்தவுடன் உறங்குபவர்களும் “வரம் பெற்று வந்தவர்கள்தான்!  என்ன தவம் செய்து இந்த வரம் வாங்கிவந்தார்களோ என்று தான் எனக்குத் தோன்றும்.

பசியைக் கூட தண்ணீர் குடித்துத் தள்ளிப் போடலாம்..
தூக்கத்தை...
வந்தாலும் தள்ளிப்போட முடியாது!
வராவிட்டாலும் கயிறு கட்டி இழுக்கமுடியாது!

பசி உடல் சோர்வைத் தரும்!
தூக்கமின்மை மனச் சோர்வைத் தரும்!

உடல் சோர்வைப் போக்க இயல்பான உணவுமுறைகள் பலவற்றையும் நாமறிவோம்!

மனச்சோர்வைத் தீர்க்கும் தூக்கத்தைத் தரும் இயல்பான வழிமுறைகளை நாம் எந்த அளவுக்கு அறிவோம்...?


தூக்கத்தோடு ஒரு போராட்டம்..

சில நாட்கள் படுத்தவுடன் உறங்கிப் போகிறேன்..
சில நாட்கள் தூக்கம் கண்களை விட்டு வெகுதூரம் போய்விடுகிறது..

நானும் நிம்மதியாகத் தூங்க பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றிப் பார்த்திருக்கிறேன்..

1. தூங்குவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பாகவே கணினியையும்,  தொலைக்காட்சியையும் காண்பதை நிறுத்திவிடுகிறேன்..
2. அலைபேசியைக் கூட ஒலியவித்துத் தூரத்தில் வைத்துவிடுகிறேன்.
3. குளித்துவிட்டு உறங்கப் போகிறேன்.
4. புத்தகம் படித்துப் பார்க்கிறேன்.
5. மெல்லிசை கேட்டுப் பார்க்கிறேன்.

இப்படி ரும்பாடுபட்டு வரவழைத்த தூக்கத்தை...


எங்கோ செல்லும் தொடர்வண்டியின் ஒலி..
அடுத்த தெருவில் குரைக்கும் நாயின் ஒலி..
வீட்டுக்குள் எங்கோ குழாயிலிருந்து வீழும் நீர்த்துளி..
கடிகாரத்தின் தளர் நடை..
செல்லமாக கொசுக்கள் தரும் முத்தம்..
குளிர்சாதனப் பெட்டியின் மெல்லிய சத்தம்..

என ஏதேதோ வந்து பறித்துச் செல்கின்றன..!!

ன்ன கொடுமை இது...


மன அழுத்தம் காரணமாகவோ, 
பணிச்சுமை காரணமாகவோ, 
இடமாறுபாடு,
மின்சாரம் இல்லாமை என தூக்கத்துடன் போராடும் ஒவ்வொருவருக்கும் காரணங்கள் பலவாக இருக்கலாம்..

இருந்தாலும் போராட்டம் ஒன்றுதானே..

சரி நம் போராட்டம்தான் பெரிதா...
நம்மைவிட தூக்கத்துடன் போராடுவோர் வேறு யாருமே கிடையாதா..?

என்று கூட சில நேரங்களில் தோன்றும்...

தோ ஒரு சங்ககாலப்பெண் சொல்கிறாள்..

“என்னைவிடவா தூக்கத்துடன் நீங்க போராடறீங்க“ என்று...

பாடல் இதோ...

சிறைபனி உடைத்த சேயரி மழைக்கண்
பொறைஅரு நோயொடு புலம்பு அலைக் கலங்கி
பிறரும் கேட்குநர் உளர்கொல்? - உறைசிறந்து
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே

குறுந்தொகை -86
வெண்கொற்றன்
(ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு கிழத்தி சொல்லியது)

காலமோ கூதிர் காலம்
வாடைக் காற்றோ மிகுதியான மழைத்துளிகளுடன் வீசுகிறது.


பொழுதோ நல்ல இரவு..
யாவரும் நன்கு தூங்கிவிட்டனர்..
என் உயிர்த்தோழிகூட நன்றாக உறங்கிப்போனாள்..


நானோ தூக்கம் வராது தவித்துக்கொண்டிருக்கிறேன்..


இவ்வேளையில் வீட்டின் அருகே கட்டப்பட்ட பசுவைச் 
சுற்றிச் சுற்றி வந்து மாட்டு ஈ ஒலி எழுப்பி்கொண்டிருக்கிறது..
அதனால் ஈ ஒலிக்கும்போதெல்லாம் பசு தலையை ஆட்டிக்கொண்டிருக்கிறது..
அவ்வாறு பசு ஒவ்வொரு முறை தலையை அசைக்கும் போதெல்லாம்..
அதன் கழுத்தில் கட்டப்பட்ட மணி ஒலித்துக்கொண்டே இருக்கிறது..


தூக்கம் வராது, தலைவனைப் பிரிந்த துயரோடு இருக்கும் எனக்கு இந்த சின்னச்சின்ன ஒலிகூட மிகப் பெரிய ஒலியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறதே..


இதுவரை என் இமைகளால் தடுத்துவைக்கப்பட கண்ணீர் இமைகளைக் கடந்து துளித்துளியாக வீழ்கிறதே..


என் கண்களெல்லாம் தூக்கமின்மையால் செம்மையான கோடுகள் தோன்றக் காட்சியளிக்கிறதே..


இவ்வளவு துன்பத்திலும் என்னை விட்டுவிட்டு..
கார் பருவத்தில் வருவதாகச் சொல்லிச் சென்ற தலைவனோ இன்னும் வரவில்லையே என்று புலம்கிறாள் இந்தத் தலைவி..


இப்போ சொல்லுங்க நண்பர்களே இந்தத் தலைவியைவிடவா நாம் தூக்கத்துக்காகப் போராடுகிறோம்..

தமிழ்ச்சொல் அறிவோம்..

1. உறை - மழைத்துளி
2. ஊதை - வாடைக் காற்று
3. நுளம்பு - ஈ
4. உலம்புதல் - ஒலித்தல்
5. உளம்பும் - அசையும்
6. சிறைபனி - இமைகளால் தடுக்கப்பட்ட கண்ணீர்
7. நல்கூர் குரல் - பொருள் வறிதான குரல்.


தொடர்புடைய இடுகைகள்



வியாழன், 17 நவம்பர், 2011

எதிர்பாராத பதில்கள்.


விக்கிப்பீடியா : எனக்கு எல்லாம் தெரியும்..


கூகுள் : என்னிடம் எல்லாம் உள்ளது..

முகபுத்தகம் : எனக்கு எல்லோரையும் தெரியும்..

இணையம் : நான் இல்லையென்றால் உங்களுக்கு இதெல்லாம் கிடையாது!!

மின்சாரம் : என்னங்கடா அங்க சத்தம்??????

--oOo----oOo----oOo----oOo----oOo----oOo----oOo----oOo--

நடத்துநர்   : எல்லோரும் சீட்டு வாங்கியாச்சாப்பா...

பயணி  : ஓட்டுநர் தூங்கிக்கிட்டு பேருந்தை ஓட்டுறதப் பார்த்தா எல்லோரும் மொத்தமா சீட்டு வாங்கியாச்சுன்னு தான் நினைக்கிறேன்.. 

--oOo----oOo----oOo----oOo----oOo----oOo----oOo----oOo--

மருத்துவர் :  உங்களை முழுவதும் சோதனை செய்து பார்த்துட்டேன். உங்களுக்கு வந்த நோய் என்ன என்றே தெரியவில்லை!!


ஆமா புகையிலை போடற பழக்கம் உண்டா??


நோயாளி : எதுக்குங்கய்யா அதைக் கேட்கறீங்க..?
அஞ்சாறு ஏக்கரில புகையில தான் போட்டிருக்கேன்..

மருத்துவர் : !!!


--oOo----oOo----oOo----oOo----oOo----oOo----oOo----oOo--

நம்மாளு :  ஐயா உங்க வங்கியில கல்விக் கடன் கொடுக்கறீங்கன்னு கேள்விப்பட்டேன் என் பையனுக்காக அதை வாங்கலாம்னு வந்தேங்க..

வங்கி மேலாளர் : ஆமா.. எவ்வளவு வேணும்..?

நம்மாளு :  ஐயா ஒரு இலட்சம் ரூபாய் போதுங்க..
வங்கி மேலாளர் : உங்க பையன் என்ன படிக்கிறான்..

நம்மாளு : இப்பதாங்க எல்கேசில சேர்க்கபோறேன்...
வங்கி மேலாளர் : !!!!!

--oOo----oOo----oOo----oOo----oOo----oOo----oOo----oOo--

புதன், 16 நவம்பர், 2011

மழலை உலகம்.

வாங்க விளையாடலாம்
அன்பு நண்பர் சென்னைப் பித்தன் ஐயா மழலை உலகம் தொடர்பாக எழுதுமாறு என்னை அன்புடன் அழைத்திருந்தார்..

பொதுவாக இதுபோன்ற தொடர் இடுகை எழுதும் மரபுகளிலிருந்து நான் கடந்த காலங்களில் ஒதுங்கியே இருந்திருக்கிறேன்.
காரணம்...
காலச்சூழல்தான்!
பணி,குடும்பம், சமூகம், பொழுதுபோக்கு என
யாவற்றையும் கடந்து இணையத்தில் என் துறை சார்ந்து எனக்குத் தெரிந்த சில செய்திகளை இலக்கியநயத்துடன் பதிவு செய்யவேண்டும் என்பதையே என் அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வந்திருக்கிறேன்.

ஆனால் என்னால் மறுக்கமுடியாதவாறு நயமாக அழைத்த சென்னைப்பித்தன் ஐயா அவர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு மழலை உலகம் தொடர்பாக எழுத முன்வந்திருக்கிறேன்.

ஒரு கதை..

ஒரு புகழ் பெற்ற ஓவியர் குறித்த காலத்துக்குள் ஒரு ஓவியத்தை வரைந்து முடிக்கவேண்டிய கட்டாயத்தில் தீவிரமாக வரைந்துகொண்டிருந்தார்.. 
அவரின் அருகே, ஓவியரின் உதவியாளர் ஆவலுடன் அந்த ஓவியத்தைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தார்..

கைகளையும், மூளையையும் சேர்த்துக் கட்டிப்போட்டது போல ஓவியருக்கு எந்த ஓவியமும் வரவில்லை..

சற்றுநேரம் சிந்தித்த ஓவியர் தன் உதவியாளரை தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்..

உதவியாளர் திரும்பி வந்தபோது பெருவியப்பில் ஆழ்ந்துபோனார்.
ஆங்கு அழகான ஓவியம் வரையப்பட்டிருந்தது.

நான் பார்த்துக்கொண்டே இருந்தேன்..
இத்தனை நேரம் போராடிக் கொண்டிருந்தீர்கள்..
நான் சென்று வந்த இந்த சிறு இடைவெளியில் எப்படி இப்படியொரு ஓவியத்தை வரைந்து முடித்தீர்கள் என்று ஓவியரிடம் கேட்டார் உதவியாளர்.

அதற்கு ஓவியர் சொன்னார்.

“நீ சென்றபோது என்னை யாரும் உற்று நோக்கவில்லை!
 எந்தக் கட்டுப்பாடும் இல்லை!
 என் நிறைகுறைகளைப் பேச ஆள் இல்லை!
 என் மனமும் நானும் தான் இருந்தோம்!
அதனால் தான் என்னால் வரையமுடிந்தது“ என்றாராம்.

இந்தக் கதை இங்கு எதற்கு என்று சிந்திக்கிறீர்களா..?

இன்று இணையவுலகில் நுழைந்தவுடனே என்கண்ணில் ஐந்துக்கும் மேற்பட்ட மழலை உலகம் தொடர்பான இடுகைகள் கண்ணில் பட்டன..


இந்தச் சூழலில் நானும் சென்று மூவரை அழைத்து அவர்களது நேரத்தை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை..


குழந்தைகள் தினத்தன்று தான் குழந்தைகளைக் கொண்டாட வேண்டுமா?

நாம் குழந்தைகளைக் கொண்டாடும் நேரமெல்லாம் குழந்தைகள் தினம் தானே!!


அதனால்..

நான் தொடர்பதிவுக்கு யாரையும் அழைக்கப்போவதில்லை..
அந்த ஓவியர் போல கட்டுப்பாடுகளின்றி, 
தொடர் இடுகை என்னும் அறிவுறுத்தலின்றி,
முன்பே எழுதப்பட்ட மதிப்பு மிக்க இடுகைகள் சிலவற்றை பகிர்ந்துகொள்ளப்போகிறேன்..

மழலை தொடர்பாக நான் முன்பு எழுதிய இடுகைகள் சில..









மழலை உலகம் தொடர்பான பதிவு என்றவுடனே என் நினைவுக்கு வந்தது அன்பர் சம்பத் குமார் அவர்களின் வலைப்பக்கம் தான்.

பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்குமான உறவுநிலைகளையே அதிகம் சிந்திக்கும் இந்த வலைப்பக்கத்தில் எனக்குப் பிடித்த மழலைக் கவிதை ஒன்று,

மழலை நாட்கள்

என்னும் இடுகையாகும்

அன்பு நண்பர் வசந்த மண்டபம் மகேந்திரன் அவர்களின் பதிவுகளில் எனக்குப் பிடித்த மழலை உலகம் குறித்த கவிதைகள் இரண்டு..

மழலையின் மருட்கை

என்னை நீண்ட நேரம் சிந்தனையில் ஆழ்த்தின.

அன்பிற்கினிய ரியாஷ் அவர்களின் வலைப்பக்கத்தில் அவர் வெளியிட்ட

குழந்தைகள் உலகம் 

என்னும் கவிதை என்னை மீண்டும் மீண்டும் படிக்கச் செய்தது.

நாம் வாழும் உலகிலிருந்து தன்னுடைய உலகத்துக்கு அழைத்துச் செல்லும் குட்டி சொர்க்கமல்லவா குழந்தைகள்!

இயற்கையின் சொற்பொழிவுகளை மொழிபெயர்த்துச் சொல்லும் மழலை மேதகைள் அல்லவா குழந்தைகள்!

ஏழையைக் கூட செல்வந்தனாக்கும் மதிப்புமிக்க செல்வமல்லவா குழந்தைகள்!

மழலை உலகத்துக்குச் சென்றால் நிகழ்காலத்துக்கு அவ்வளவு எளிதில் வந்துவிடமுடியாது..

மேற்கண்ட இடுகைகள் வழியே
மழலை உலகத்துக்கு உள்ளே வாருங்கள்!
என உங்களை அன்புடன் அழைக்கிறேன்..

(மழலை தொடர்பான சிந்தனைக்குள் செலுத்திய சென்னைப் பித்தன் ஐயா அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்)