வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

சுடர் வீ வேங்கை !

இயற்கையோடு உறவாடிய காலம் சங்ககாலம் ஆதலால் விலங்குகளின் வாழ்வியலை, அறிவியலடிப்படையிலும், கற்பனையாகவும், நகைச்சுவையாகவும் சங்கப் புலவர்கள் அழகுபட மொழிந்துள்ளனர்.

இதோ ஒரு பதிற்றுப்பத்தில் யானையின் பேதமையால் தோன்றும் நகையைப் பரணர் எவ்வளவு சுவைபடச் சொல்கிறார் என்று பாருங்கள்..

“புணர்புரி நரம்பின் தீம்தொடை பழுனிய
வணர்அமை நல்யாழ் இளையர் பொறுப்பப்
பண்அமை முழவும் பதலையும் பிறவும்
கண்அறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கிக்
காவில் தகைத்த துறைகூடு கலப்பையர் 5
கைவல் இளையர் கடவுள் பழிச்ச
மறப்புலிக் குழூஉக்குரல் செத்து வயக்களிறு
வரைசேர் பெஎழுந்த *சுடர்வீ வேங்கைப்*
பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்துதன்
மாஇருஞ் சென்னி அணிபெற மிலைச்சிச் 10
சேஎர் உற்ற செல்படை மறவர்
தண்டுடை வலத்தர் போர்எதிர்ந் தாங்கு
வழைஅமல் வியன்காடு சிலம்பப் பிளிறும்

பதிற்றுப் பத்து -41

தாளத்தோடு கூடியதும் முறுக்கிய நரம்பின் இனிய இசை நிறைவுற்றதும் வளைந்த அமைப்பினையுடையதுமான நல்ல யாழினை இளைய மகளிர் தாங்க,
தன் கண்களிலே இசையமைந்த மத்தளமும்,
ஒருகண் மாக்கிணையும் பிற வாத்தியங்களும்,
மூங்கிலின் கணுக்களை அறுத்து இயற்றப்பட்ட பெருவங்கியமும்,

சேர்த்துக் கட்டிய இளையர்கள் கடவுளை யாழிசைத்து வாழ்த்துகின்றனர்...

அப்பாட்டொலியானது மறமுடைய (வீரம்) புலிக் கூட்டத்தின் குரல் எனக் கருதி வலிமையுடைய ஆண்யானை பக்க மலையைப் பொருந்தி வளர்ந்த ஒளிவிடும் மலர்களையுடைய வேங்கை மரத்தின் அழகிய பெரிய கிளையை வளைத்துப் பிளந்து தம் கரிய பெரிய தலையில் அழகுபெறச் சூடிவருகிறது. அது போர்வீரர்கள் பகைவரை வெற்றிகண்ட பின்னர் ஆரவரித்து மகிழ்வதுபோல இருக்கிறது.


பாடல் வழியே..

1. இசையொலியை புலிக்கூட்டத்தின் ஒலி எனக் கருதிய யானை வேங்கை மரத்தைத் தாக்கும் செயல் படிப்போர் மனதில் நகையை ஏற்படுத்துவதாக உள்ளது.

2.வெற்றிபெற்ற வீரர்களின் செயலோடு ஒப்பிட்டு உரைக்கப்படும் யானையின் செயல் சரியான ஒப்பிடத்தக்க உவமையாக விளங்குகிறது.

தொடர்புடைய இடுகைகள்..

1.சிரிக்காதீங்க (நற்றிணை - புலியெனக் கருதிய யானை வேங்கை மரத்தைத் தாக்கித் தன் தந்தங்கள் சிக்கிக்கொள்ள வருந்தும் காட்சி படிப்போர் மனதில் பேதமை காரணமாக சிரிப்பை வரவழைக்கிறது. )


2.சங்க கால விலங்குகள் (நிழற்படங்களின் தொகுப்பு)

(சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள இதுபோன்ற பல நகைச்சுவை தரும் காட்சிகளை,
“சங்க இலக்கியத்தில் நகைச்சுவை என்ற உட்தலைப்பில் தொகுத்துவருகிறேன்)

24 கருத்துகள்:

  1. அழகிய தொகுப்பு மாப்ள கலக்குங்க!

    பதிலளிநீக்கு
  2. நல்ல பாடல் எளிமையான விளக்கம் அருமை

    பதிலளிநீக்கு
  3. இதுபோல விளக்கத்துடன் பாடல் சொன்னால் நல்லா ரசிக்க முடியுது.

    பதிலளிநீக்கு
  4. பழந்தமிழ் இலக்கியங்களில் பொதிந்திருக்கும் உவமைகள் வியப்பூட்டுவதாகவும், அதேசமயம் அன்றைய இயற்கைச் சூழலுடன் இணைந்த மக்களின் வாழ்வையும் பறைசாற்றுபவைகள்.

    பகிர்விற்கு நன்றிங்க குணா.

    பதிலளிநீக்கு
  5. செங்காந்தள் மலரின் புகைப்படம் அருமை, எங்கிருந்து புடிச்சீங்க

    பதிலளிநீக்கு
  6. 'சுடர் வீ வேங்கை' நல்ல இலக்கியப்பாடலை விளக்கத்துடன் அளித்த முனைவருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. செங்காந்தல்மலர் அருமையான புகைப்படம். அருமையான விளக்கம். உங்கள் விளக்கம் இல்லையெனில் பாட்டு எனக்கு புரிந்துகொள்வது கடினமே எனக்கு. நன்றி..சங்க கால பாடல்களை சுவையுடன் தருகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  8. தங்கள் பகிர்வு அருமை.நகைச்சுவை எக்காலமும் நமது நல் உணர்வு.

    பதிலளிநீக்கு
  9. நல்ல பாடல்... எளிமையான விளக்கம் முனைவரே...

    பதிலளிநீக்கு
  10. அருமையான விளக்கம் நண்பரே... படமும் நன்று.

    பதிலளிநீக்கு
  11. அன்புநிறை முனைவரே,
    இந்தவாரம் வலைச்சரத்தில் இருப்பதால்
    கருத்திட நேரம் கிடைக்கவில்லை.
    மன்னிக்கவும்.

    புலியின் குரலென நினைத்து யானை செய்த கூத்து
    நகைப்பை ஏற்படுத்தியது.
    அதற்கான பாடலும் அதன் விளக்கமும்
    அருமை முனைவரே.

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கு நன்றி இராஜா
    நன்றி விக்கி
    நன்றி இரமேஷ்
    மகிழ்ச்சி இலட்சுமி அம்மா
    உண்மைதான் சத்ரியன் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  13. நன்றி சசி.

    வருகைக்கும் நன்றி சூரியஜீவா.

    நன்றி சென்னைப்பித்தன்
    நன்றி கடம்பவனக்குயில்
    நன்றி காந்தி
    நன்றி சண்முகவேல்
    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  14. நன்றி செந்தில்
    நன்றி மகேந்திரன்
    நன்றி வெங்கட்
    நன்றி கவிப்பிரியன்

    பதிலளிநீக்கு
  15. நல்ல வேடிக்கைதான். வேங்கையென எண்ணி வேங்கை மரத்தை முறித்து, வெற்றி கொண்ட களிப்புடன் வேங்கைப் பூச்சூடிவந்த களிறின் செய்கை மென்முறுவல் வரவழைப்பதாகவே உள்ளது. பகிர்வுக்கு நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு