பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வியாழன், 15 செப்டம்பர், 2011

இதுவல்லவா செல்வம்!!




செல்வம் நிறைந்தவரெல்லாம் செல்வந்தரா?

எது செல்வம்?

1. குழந்தைச் செல்வம்
2. நோயற்ற வாழ்வு
3. கல்வி
4. ஆடு,மாடு
5. நிலம்
6. தங்கம்,வைரம்,பிளாட்டினம் என இன்று நாம் வரையறை செய்துள்ள எதுவுமே செல்வமல்ல.

இதுவல்லவா செல்வம்!

நம்மை நம்பி வந்தவரைக் குறையில்லாமல் காக்கும் பண்பே சிறந்த செல்வம் என்கிறது இந்த அகப்பாடல்.


சரி பாடலுக்குச் செல்வோம்.

பரத்தையிடம் சென்று மீண்டும் தலைவியை நாடி வந்தான் தலைவன். அவன் மீது ஊடல் (கோபம்) கொண்டாள் தலைவி. அவளின் ஊடலை நீக்க எண்ணிய தலைவன் தோழியிடம் சென்றான்.
தோழி தலைவனைப் பார்த்து சொல்கிறாள்..

தலைவ! நீ எதை எதையோ செல்வம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்!
அவையெல்லாம் செல்வங்களல்ல!
உன்னை நம்பி வந்தவர்களைக் காத்தலே உண்மையான செல்வம் என்கிறாள்!
அச்செயல் உன்னிடம் இல்லை என்று கடிந்து உரைப்பதாக இப்பாடல் அமைகிறது.


அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்
மறுகால் உழுத ஈரச் செறுவின்
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர
5 நெடிய மொழிதலுங் கடிய ஊர்தலும்
செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வஞ் செல்வமென் பதுவே
நற்றிணை -210.
மிளைகிழான் நல்வேட்டனார்
திணை : மருதம்.
துறை : இது, தோழி தலைமகனை நெருங்கிச் சொல்லுவாளாய் வாயில் நேர்ந்தது.
.
நெல் அறுத்து நீங்கப்பெற்ற அழகிய இடமகன்ற வயலில் மறுபடி உழுத ஈரமுடைய சேற்றில், விதைக்கும் வண்ணம் விதைகொண்டு சென்ற கடகப்பெட்டியில் மிகப் பலவாகிய மீன்களைப் பிடித்துப் போட்டுக் கொண்டு வருகின்ற, புதுவருவாயினையுடைய ஊரனே!;

அரசராலே மாராயம் பெறப்படுதலும் அவர் முன்பாக விரைந்த செலவினையுடைய குதிரை தேர் யானை முதலாகியவற்றை ஏறிச்செலுத்துதலும் (ஆகிய அருஞ்செயல்) செல்வம் எனப்படுவன அல்ல; அவையனைத்தும் முன்பு தாம் செய்த நல்வினைப்பயனால் கிடைப்பனவாகும்.

சான்றோராலே செல்வம் என்று உயர்த்துக் கூறப்படுவதுதான் எதுவெனத் தெரியுமா?
“நம்மை நம்பி நாடி வந்து (அடைக்கலமாக) சேர்ந்தவருக்கு வரும் துன்பங்களைக் கண்டு அஞ்சுவதாகும். அவர் துன்பத்தை நீக்கி அவரைக் காத்தலே சிறந்த செல்வம்!



பாடல் வழியே..

1.விதைகளுடன் கொண்டு சென்ற கடகப் பெட்டியில் மீனொடு பெயரும் என்பது, தலைவனைப் பரத்தையரிடம் அழைத்துச் சென்ற பாணன் தான் விரும்பிய பொருளைப் பெற்று மீள்வான் என்ற கருத்தை உள்ளுறையாக உரைத்தது.

2. நெடியமொழிதலும் கடியவூர்தலும் களவுக்காலத்தே தலைவன் வந்து கூறி நிகழ்த்தியவை; அவற்றை ஈண்டுக் குறிப்பித்தது நீ அத்தகையை யல்லை என்பாள், நின்னைப் புகலிடமாக அடைந்த தலைவியைக் கைவிட்டனை என்பதனாலே பின்னர்க் குறிப்பித்தாள்.

3. மெய்ப்பாடு - வருத்தம் பற்றிய வெகுளி(கோபம்). பயன் - வாயில் நேர்தல்.(தலைவனை ஏற்றல்)

4.செல்வம் என்பதற்கான அடையாளம் நாம் இன்று என்னும் எதுவுமே அல்ல நம்மை நம்பி வந்தவரைக் குறையில்லாமல் காக்கும் பண்பே என்னும் உயரிய சிந்தனை பழந்தமிழரின் செம்மாந்த வாழ்வுக்குத் தக்க சான்றாக அமைகிறது.

தமிழ்ச்சொல்

1. யாணர் – புதுவருவாய்
2. வட்டி – கடகப் பெட்டி
3. புன்கண் – துன்பம்
4. மென்கண் – இனிய தன்மை
5. மாராயம் – மன்னன் செய்யும் சிறப்பு

இவ்விடுகையோடு தொடர்புடைய இடுகைகள்

1. செல்வந்தர்களே கேளுங்கள்..

2. பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க

3. தங்கத்தைவிட மதிப்புமிக்கது

17 கருத்துகள்:

  1. இன்றைய வகுப்பு அருமை முனைவரே..

    பதிலளிநீக்கு
  2. படித்து பயன்பெற வேண்டிய பயனுள்ள பதிவு

    பதிலளிநீக்கு
  3. எத்தகைய துன்பத்தில் அந்த மனைவி உழன்றுகொண்டிருந்தால், நம்பி வந்தோரின் துன்பம் துடைத்தலே செல்வத்துள் செல்வமென்று சொல்லத்தோன்றியிருந்திருக்கும். கணவனால் கைவிடப்பட்டப் பெண்டிரின் துன்பம் சொல்லி மாளாதது. அதையும் அவள் குற்றமாய்ச் சுமத்தாமல் அழகாய் எடுத்துரைப்பதாய் இருக்கும் பாடல் அருமை. பகிர்வுக்கு நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
  4. // நம்பி வந்தவர்களைக் காத்தலே உண்மையான செல்வம்//

    அருமை.
    அழகான பாடல், அருமையான விளக்கம். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அழகான தலைப்பு
    தமிழ் விளையாடும்
    படைப்பு........
    வாழ்த்துக்கள்
    என் நண்பா.

    பதிலளிநீக்கு
  6. சரியாகச் சொன்னீர்கள் முனைவரே....
    நாடி வந்தோரின் குறையறுக்கும்
    இனிய குணமே மங்காத செல்வம் என
    அருமையாக கூறியிருக்கிறீர்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. பகைவரேனும் தன்னை நாடிவந்தவரை உபசரிக்கும்
    நற் பண்பிற்கு இணையான செல்வம் உலகில் வேறேதும் இல்லை என்று வழிமொழிய நல்ல எடுத்துக்காட்டான படைப்பு இதற்கு என் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்தினையும்
    தெரிவிக்கின்றேன் மிக்க நன்றி வாழ்த்துக்கள் ................................

    பதிலளிநீக்கு
  8. தமிழ் மணம் ஆறு

    தாங்கள் குறிப்பிட்டு இருப்பது அருமையான கருத்து நண்பா

    இருந்தாலும் மேலே சொன்ன செல்வங்களில்
    முதல் மூன்றும் முக்கியம் தான் .

    அதற்கு காரணமும் உள்ளது.

    பதிலளிநீக்கு
  9. நல்ல கவிதை.
    நல்ல விளக்கங்கள்.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  10. நன்றி நிரோஷ்
    மகிழ்ச்சி சூரிய ஜீவா
    நன்றி நண்டு
    நல்ல புரிதல் கீதா

    பதிலளிநீக்கு
  11. தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஞானேந்திரன்

    மகிழ்ச்சி மகேந்திரன்

    நன்றி அம்பாளடியாள்.

    பதிலளிநீக்கு
  12. மகிழ்ச்சி எம்ஆர்
    நன்றி சென்னைப் பித்தன் ஐயா
    நன்றி இரத்திரனவேல் ஐயா.

    பதிலளிநீக்கு
  13. ஓ.கே நாம் எது எது செல்வம் என்று எண்ணினோமோ அவை செல்வமல்ல...இந்த உண்மை உங்கள் இடுகை மூலம் தெளிவானது. உண்மையில் நாம்(நான்) அறியாதது பலப்பல. மிக அருமை. மகிழ்ச்சி புதுப் பாடம் தான். நிறைவு. நன்றி சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு