பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

விருந்துக்கு வாங்க..


தமிழ் உறவுகளே...
வாங்க வாங்க.. சாப்பிடுங்க....
பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இனிவரும் காலங்களில் அவற்றை முடிந்தவரை சமகால வாழ்வியலோடு விளக்க முயற்சிக்கிறேன்.

விருந்தோம்பல் என்னும் பண்பாடு குறித்து இன்றைய பதிவில் காண்போம்.
நான் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் (செட்டிநாடு) பிறந்து வளர்ந்தவன். எங்கள் பகுதியில் உணவு தயாரிப்பதிலும், பரிமாறுவதிலும் நிறைய மரபுகள் உண்டு. அதிலும் இம்மரபு நகரத்தாரிடையேதான் அதிகம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
அன்போடு பரிமாறப்படும் உணவு இருமடங்கு சுவையுடையது என்பதை எங்கள் பகுதிக்கு வந்தால் நன்கு உணரமுடியும்.
ஆளுயர இலைபோட்டு கொஞ்சம் கொஞ்சமாக நிறைய வகைப்பட்ட உணவுகளைப் பரிமாறுவார்கள்.
நாம் எதை விரும்பி உண்கிறோம் என்பதை அறிந்து அதை மீண்டும் மீண்டும் நாம் போதும் என்னும் அளவுக்கு பரிமாறுவார்கள்.

உணவு குறித்த பழமொழி, பொன்மொழி, கொள்கைகள் சில..


கூழானாலும் குளித்துக் குடி!
விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்குத் தான்!
நொறுங்கத் தின்றால் நூறு வாழ்வு!
பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்!
பசித்தபின் புசி!
பசி ருசி அறியாது!
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
அன்னத்தில் வின்னம் (பழுது, தடை) செய்யாதே!
பொய் சொன்ன வாய்க்கு போசனம் கிடைக்காது!
பகுத்துண்டு வாழ்!


அளவுக்கதிகமான உணவு உண்பவன் தன் பற்களாலே தன் சவக்குழியைத் தோண்டிக் கொள்கிறான்!


தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்
செகத்தினை அழித்திடுவோம்!


சாப்பிடும்போது பேசாதே!
ஒரு பானை சோற்றுக்கு                   
ஒருசோறு பதம்!
நெல்மணி ஒவ்வொன்றிலும் உயிர்களின் பெயர் எழுதப்பட்டுள்ளது!
எள்ளாக இருந்தாலும் ஏழாகப் பகுத்து உண்!


இவ்வாறு என்னதான் படித்தாலும், அறிவுரைகள் கேட்டாலும் நாம் உணவு உண்ணும் போது இவற்றையெல்லாம் மனதில் நினைத்துப் பார்க்கிறோமா? என்றால் பெரும்பாலனவர்கள்...

இதெல்லாம் நடக்கிற கதையா என்பார்கள்.


இதுவா உணவு உண்ணும் பண்பாடு..
  பேசிக்கொண்டே சாப்பிடுவது.(அலைபேசியிலோ, அருகிலிருப்பவரிடமோ)
2.       பக்கதில் இருப்பவர் மீது உணவு தெறிக்குமாறு சாப்பிடுவது.
3.       தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ, நாளிதழ் படித்துக்கொண்டோ உண்பது.
4.       இடைவேளையின்றி வாய்க்குள் திணிப்பது.
5.       துரித உணவுகளை உண்பது.
6.       பசிக்கும் முன்பாகவே உண்பது.
7.       உண்டவுடனும், உண்ணும் போதும் தண்ணீர் குடிப்பது.
8.       பக்கத்தில் இருப்பவரைப் பற்றிக் கவலைப்படாமல் துப்பிக்கொண்டே சாப்பிடுவது. (எனக்குத் தெரிந்த ஒருவர் இப்படி சாப்பிடுவார் என்பதால் நண்பர்கள் அவருக்குத் துப்புக்கெட்ட மனுசன் என்று பெயர் வைத்திருந்தார்கள்)
9.       சத்தமாக, எல்லோரும் திரும்பிப்பார்க்கும் விதமாக உண்பது.                  கை முழுக்க, வாய்முழுக்க நிறைய உண்பது..
என எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாதோ அப்படியெல்லாம் தான் இன்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். நம் முன்னோர் ஏன் இப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது என்று சொன்னார்கள் என்று நாம் சிந்திப்பதற்கு நேரமில்லாதவர்களாக ஓடிக்கொண்டிருக்கிறோம்.


இதுவல்லவா பண்பாடு


   1. நன்றாக மென்று உண்ணும்போது உணவு செறிக்கப்படுகிறது.
   2. உண்ணும்போது இடையிடையே தண்ணீர் அருந்தாமலிருக்கும்போது   
      உணவு செறித்தலில் சிக்கல் இன்றி இயல்பாகவே உருவாகும்
      அமிலங்கள் தன் செயலைத் தடையின்றிச் செய்கின்றன.
   3.பகுத்து உண்ணும் போது கிடைக்கும் நிறைவு தனித்து உண்பதில்  
     கிடைப்பதில்லை.
   4. பசித்த பின்னும், செறித்தபின்னும் தான் உண்ணவேண்டும் அதனால் செறிமான இயந்திரங்கள் நன்கு பணிபுரியும்.
   5. நாகரீகமாக உண்பதால் நாம் மதிப்பிற்குரியராக வாழமுடியும்.
 என நம் முன்னோர் சொன்ன ஒவ்வொரு பழமொழிகளிலும் ஓராயிரம் பொருள்கள் உண்டு..
  

பழந்தமிழரின் உணவு முறைகள்

1.    அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
2.    உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.
3.    உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
4.    குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
5.    தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.
6.    துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
7.    நக்கல் - நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.
8.    நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
9.    பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
10.  மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
11.  மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
12.  விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.

பொது இடங்களில், விழாக்களில் பலரோடு உணவு உண்ணச் செல்லும்போது நான் உணவு உண்பதைவிட அதிகமாக மற்றவர்கள் உணவு உண்ணும் அழகைப் பார்த்து மகிழ்வேன்.


சிலரைப் பார்க்கும்போது.....
சே.. இவர் எவ்வளவு பண்பாடு தெரிந்தவராக, நாகரீகமாக உண்கிறார் என்று வியந்திருக்கிறேன்..
சிலரைப் பார்க்கும்போது...
சே.. இவர் எவ்வளவு பண்பாடற்றவராக, நாகரீகமற்றவர் போல உண்கிறார் எனச் சிரித்திருக்கிறேன்..

வியாழன், 29 செப்டம்பர், 2011

கல்வி உளவியல் (கண்கள்)


கல்வியே தவம்!
கற்பித்தலே வழிபாடு!
கவனித்தலே வரம்!

கொடுக்கக் குறையாததும்
பெற்று நிறையாததும் கல்வி!

நம்மை நமக்கு
அடையாளம் காட்டுவது கல்வி!

இத்தகைய கல்வியில் ஆசிரியரிடமிருந்து மாணவர்களும்
மாணவர்களிடமிருந்து ஆசிரியர்களும் கற்கிறார்கள்.

ஆசிரியரின் கல்விசார் உளவியல் கூறுகளுள் கண் என்னும் உடலசைவு மொழியின் ஆளுமைத் தன்மைகளை இன்றைய இடுகையில் காண்போம்...

முதலில் ஒரு கதை..

ஒரு துறவி மரத்தடியில் கண்ணை மூடிக்கொண்டு தவமிருந்தாராம்.
அவ்வழியே வந்த மனிதர் ஒருவர் அந்தத் துறவியைப் பார்த்து என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டாராம்.
அதற்கு அந்தத் துறவி.. நான் கடவுளைக் காணத் தவம் செய்துகொண்டிருக்கிறேன் என்றாராம்.

அதற்கு அந்த மனிதர்...
நீங்கள் அமர்ந்திருக்கும் இந்த மரத்தில்...
எத்தனை பூக்கள் மலர்கின்றன?
எத்தனை சருகுகள் உதிர்கின்றன?
எத்தனை பறவைகள் பாடல் இசைக்கின்றன?

“இப்படிக் கண்ணைத் திறந்துகொண்டு கடவுளின் அசைவுகளைக் காண முடியாத நீங்கள்... கண்ணை மூடிக் கொண்டு என்னதான் தேடுவீர்கள்?“ என்றாராம்..

விழிப்படைந்த துறவி... அன்று முதல் கண் திறந்துகொண்டேதான் தவம் செய்வது என்று முடிவு செய்தாராம்.

இப்படிக் கண் திறந்துகொண்டு செய்யும் வழிபாடு தான் கற்பித்தல்.

கண்ணில் பாயும் மின்சாரம்

v     சில வகுப்புகளில் ஆசிரியர் பெருங்குரலிட்டு முழக்கமிட்டிருப்பார்.. மாணவர்களோ ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பார்கள்..
       இந்த வகுப்பைப் பார்த்தாலே தெரியும் இங்கு ஆசிரியர்   
     கண்ணிலிருந்து பாயும் மின்சாரம் தடைபட்டுவிட்டது என்று..

v     சில வகுப்புகளில் ஆசிரியரின் மெல்லிய குரல் மட்டுமே கேட்கும்... மாணவர்களின் பார்வை முழுமையும் ஆசிரியரின் கண்களையே பார்த்திருக்கும்..
        இந்த வகுப்பைப் பார்த்தாலே தெரியும இங்கு ஆசிரியர் கண்களில்     மின்சாரம் தடையின்றிப் பாய்கிறது என்று..

கண் ஆயுதம்

Ø      சில ஆசிரியர்கள் தவறு செய்த மாணவர்களை அடிப்பார்கள், திட்டுவார்கள்... ஆனால் அந்த மாணவர்களுக்கோ அது ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை... தாலாட்டுப் போலவோ, திரைப்படப் பாடல்போலவோ, அதைப் பொழுதுபோக்காகவோதான் எடுத்துக்கொள்வார்கள்..


Ø      சில ஆசிரியர்கள் மாணவர்களைத் திட்டுவதே கிடையாது. சில மணித்துளிகள் அமைதியாக உற்று நோக்குவார்கள் அவ்வளவுதான்.. மாணவர்கள் கண்களில் கண்ணீர் அரும்பும். தம் தவறை மாணவர்கள் தாமே ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கேட்பார்கள்.

தூங்கும் மாணவனை எழுப்ப.

Ø      ஆசிரியருக்குப் பெரிய சவால் மாணவர்களின் தூக்கமாகும். உணவு மயக்கமோ, உண்ட மயக்கமோ, ஆர்வமின்மையோ, உடல்சோர்வோ, மனச்சோர்வோ, ஆசிரியரின் ஒரே மாதிரியான சொற்பொழிவோ... மாணவனைத் தூங்கச் செய்துவிடுகிறது..
Ø      இச்சூழலில் தூங்கும் மாணவனை எழுப்பி எல்லோர் முன்னிலையிலும் திட்டினால் அவன் தூக்கம் நீங்கிவிடுமா...? அந்தப் பாடவேளை மட்டும் வேண்டுமானல் தூக்கம் நீங்கிவிடும். ஆனால் அடுத்த பாடவேளை தூங்க ஆரம்பித்துவிடுவான்.
Ø      பாடம் எடுக்கும் போது ஆசிரியர் ஒவ்வொரு மாணவர்களையும் தன் கண்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். தூங்கும் மாணவரை கூடுதல் கவனத்தோடு உற்றுநோக்கவேண்டும்.. அவர் தூக்கதி்ன் பிடியில் இருக்கிறார் என்றால் அவரை எழுப்பிக் கேள்விகள் கேட்கலாம். வகுப்பு முடிந்தவுடன் தனியாக அழைத்துப் பேசலாம். எல்லோர் முன்னிலையிலும் அவரைக் கேலிப்பொருளாக்குவதால் எந்த மாற்றமும் மாணவரிடம் நேராது. அப்படி நேர்ந்தாலும் அது தற்காலிகமாகவே இருக்கும் என்பது நான் என் அனுபவத்தில் கண்ட உண்மை.

 கண்களின் ஆற்றல்

ü      எந்தவொரு மாணவரும் ஆசிரியர் பாடம் நடத்துவதால் மட்டுமே மதிப்பெண் பெறுவதில்லை.
ü      ஒரு மாணவருக்கு பாடம் பிடித்தாலேபோதும் தானாகப் புரிய ஆரம்பித்துவிடும்.
ü      மாணவர்களுக்குப் பிடிக்கும்விதமாக முதலில் ஆசிரியருக்குப் பாடம் நடத்தத் தெரிந்திருக்கவேண்டும்.
ü      ஆசிரியர் தம் கண்களில் பாடப்பொருளை உணர்வுகளோடு நடத்தவேண்டும்..
ü      சிரிப்பு, கோபம், அழுகை, அச்சம், பெருமிதம், உவகை எனப் பல்வேறு மெய்பாடுகளும் தோன்ற பாடம் கற்பிக்கும்போது மாணவர்களுக்கு அந்தப் பாடம் பிடித்த பாடமாகவே மாறிப்போகும்.
ü      ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் ஆசிரியர் தன்னிடம் கவனம் செலுத்துகிறாரா என்ற எண்ணம் இருக்கும். அதை உணர்ந்துகொண்ட ஆசிரியர் அவர்களிடம் வாய்விட்டுப்பேச வேண்டுமென்றுகூடத் தேவையில்லை. கண்களாலேயே தம் அன்பையும் தன் ஆளுமையையும் வெளிப்படுத்தலாம்..

இப்படி கல்வி உளவியலில் உடலசைவு மொழிகள் பெரும்பங்கு வகிப்பனவாக உள்ளன. ஒரே இடுகையில் யாவற்றையும் உரைப்பது அரிது. அதனால்.. இனி வரும் காலங்களில் மேலும் கல்விசார் உளவியல் கூறுகளை தொடர்ந்து தரவிரும்புகிறேன்

தொடர்புடைய இடுகைகள்






புதன், 28 செப்டம்பர், 2011

நம்பமுடியாத ப்ளாக்கர் சேவை!!


இன்னும் நான் வியப்பிலிருந்து மீளவில்லை...

இன்று காலை வழக்கம் போல என் வலைப்பதிவின் கணக்குப் பகுதிக்குச் சென்றால் புதிய சேவை..

பயன்படுத்திப்பார்க்கிறீர்களா என்று வந்தது..

சரி முயற்சித்துப் பார்ப்போம் என்று பார்த்தேன்.. பெருவியப்படைந்தேன்..

ஆம்..

உங்கள் வலைப்பதிவையோ
நீங்கள் பார்வையிடும் வலைப்பதிவையோ..

பல்வேறு வடிவங்களில் (டெம்ளேட் மாற்றி) மாற்றிப் பார்க்கும் வசதி தான் இது..

சான்றாக..

http://gunathamizh.blogspot.com/  என்பது என் இயல்பான முகவரி..

இதனை..

http://gunathamizh.blogspot.com/view/classic
http://gunathamizh.blogspot.com/view/sidebar
http://gunathamizh.blogspot.com/view/flipcard
http://gunathamizh.blogspot.com/view/magazine
http://gunathamizh.blogspot.com/view/mosaic
http://gunathamizh.blogspot.com/view/snapshot
http://gunathamizh.blogspot.com/view/timeslide

என்று பல்வேறு வடிவங்களில் பார்க்கமுடிகிறது..
இதில் நிழற்படங்கள், கருத்துரைகள், இடுகைகள் ஆகியன பல்வேறு தோற்றங்களில் மனதை மயக்கும் விதமாக அமைந்துள்ளன..

நம் வலைப்பக்கத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பதுபோல இருக்கிறது.

நாம் பார்வையிடும் வலைப்பக்கங்களையும் இப்படி பல்வேறு தோற்றங்களில் காணலாம் என்பது கூடுதல் வசதியாகும்.

அன்பு நண்பர்களே..

நீங்களும் உங்கள் வலைப்பக்கத்தை, உங்கள் முகவரிக்குப் பின் /view என்று அடித்துப் பாருங்கள்..


இடது பக்க மேல்ப் பகுதியில் வடிவங்களைத் தேர்வு செய்யும் வசதி இருக்கிறது.

இந்த வசதியை ப்ளாக்கர் சோதனை முயற்சியில் வெளியிட்டிருக்கிறார்களா?
நடைமுறைப்படுத்திவிட்டார்களா? என்பதுதான் இன்னும் புரியவில்லை..

எது எப்படியோ இப்படியொரு வசதி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தால் பெரிய வரவேற்பிற்குரியதாக இருக்கும் என்பதைத் தமிழ் வலைப்பதிவர் என்ற முறையில் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.




கூகுள் நிறுவனத்துக்கு நான் அளித்த மறுமொழியாகவோ, கருத்துரையாகவோ, பாரட்டுரையாகவே இவ்விடுகையைக் கருதலாம்.

எரித்தால் என்ன? புதைத்தால் என்ன?



நாம் விரும்பித்தான் இங்கு பிறப்பெடுத்து வந்தோமா?
நாம் நினைத்தாலும் இறந்துபோக முடியுமா?
தற்கொலை செய்துகொள்வோர் எத்தனைபேர் காப்பாற்றப்படுகிறார்கள்..
இது எதைக் காட்டுகிறது...?
நாம் விரும்பினாலும் இறந்துபோக முடியாது என்பதைத்தானே!
அதனால் தான் முதியவர்களும், நோய்வாய்பட்டவர்களும் இறைவனிடம்..
“இறைவா என்னை உன்னோடு எப்போது அழைத்துச் செல்வாய்..?“
என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்..

“பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே
மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல
வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே
விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல         
இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே
நடக்கும் ரகசியத்தை இன்னும் எவரும் அறியல..

       
என்னும் திரைப்படப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
நீண்ட காலம் வாழ்வதே பலருக்கும் ஆசை!
ஒரு சிலர் மட்டுமே பிறவியைப் பிணி! என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்..


சுயநலத்தோடு நீண்ட காலம் வாழ்வது பெரிதா?
பொது நலத்தோடு சிலகாலம் வாழ்வது பெரிதா?
பொருள் தேடி வாழ்க்கையைத் தொலைப்பது நலமா?
அருள் தேடி வாழ்க்கையை உணர்வது நலமா?
கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் வாழ்வதா வாழ்க்கை?
நிகழ்காலத்தில் வாழ்வதல்லவா வாழ்க்கை?
இதோ ஒரு சங்கப்பாடல்..

 நம்பி யென்னும் பாண்டிநாட்டுக் குறுநிலத் தலைவன் 
அரியவினையைச் செய்து முடிவேந்தனாகிய பாண்டியன் நெடுஞ்செழியன் 
பெயரைத் தனக்குப் பட்டமாகப் பெற்றான். இவன் மக்கள் போற்ற வாழ்ந்த அரசன். போர்க்களத்தின் முன்னின்று பகைப் படைகளைப்  புறங்கண்டு
ஓடச் செய்தவன். இரவலர்கட்குப் பெருங்கொடை நல்கியவன். வாழ்க்கையில் துய்க்கத் தகுவனவற்றைத் துய்த்து  அறநெறி பிறழாது    வாழ்ந்தவன். புகழ்பெற வாழ்ந்த  இப்பெருந்தகை இறந்துபட்ட போது பேரெயின் முறுவலார்  அவன் புகழ் போற்றும் வகையில் இப்பாட்டைப் பாடினர்.

நம்பி நெடுஞ்செழியன் இறந்த பிறகு அவனைப்
புதைப்பதா?  எரிப்பதா? என்ற கேள்வி எழுந்தது.
அந்நிலையில் பேரெயின் முறுவலார் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

  • o           இளம் பெண்களின் வளையணிந்த தோள்களை நம்பி
    நெடுஞ்செழியன் தழுவினான்.
  • o    காவல் மிக்க சோலைகளின்  பூக்களைச் சூடினான்.
  • o     குளிர்ந்த மணம் வீசும் சந்தனத்தைப் பூசினான்.
  • o     பகைவரை அவர்தம் சுற்றத்தாரோடு அழித்தான். 
  • o       நண்பர்களை உயர்த்திக்  கூறினான். 
  • o       இவர்கள் வலியவர்கள்  எனவே இவரைப் பணிவோம் என்று  யாரையும்     வணங்கி வழிபாடு சொல்லி இவன் வாழ்ந்ததில்லை.
  • o        இவர்கள் நம்மை விட எளியவர்கள் என்று கருதி அவர்களை       விடத் தன்னை மேம்படுத்திச் பண்பும் இவனிடம் இருந்ததில்லை
  • o       பிறரிடம் சென்று பொருள் வேண்டுமென்று  இவன் என்றும் நின்றதில்லை
  • o       ஆனால் தன்னை வந்து சூழ்ந்து  நின்று இரந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லும் பண்பும் இவனிடம் இருந்ததில்லை
  • o       அரசர்களின் அவைக் களங்களில் தன் சிறந்த புகழை
    வெளிப்படுத்தினான்.
  • o       தன் மேல் வரும் படையைத் தன்  நாட்டு எல்லையுள் புகாமல் எதிர்நின்று தடுத்தான்.
  • o       புறங்காட்டி  ஓடுகின்ற படையை அதன் பின் சென்று தாக்காது நின்றான். 
  • o       வேகமாகச் செல்லும் தன் குதிரையைத் தன் மனத்தைக்
    காட்டிலும் விரைவாகச் செலுத்தினான்.
  • o       நீண்ட தெருக்களில்  தன் தேர் சூழ்ந்து வருமாறு செலுத்தினான். 
  • o       உயர்ந்த  யானைகளில் அவன் ஊர்ந்து வந்தனன்.
  • o       இனிமை செறிந்த மதுவின் குடங்களைப் பலர்க்கும் வழங்கித்          தீர்ந்து போகச் செய்தான்.
  • o       பாணர்கள் மகிழுமாறு அவர்களின் பசியைத்  நீக்கினான்.
  • o       மயக்கம் தரும் சொற்களை மொழியாது நடுவு  நிலை அமைந்த சொற்களை  மொழிந்தான். இவ்வாறு அவ்வரசன்  செய்யத் தகுவனவெல்லாம் செய்தான்.
  • o       ஆகவே புகழ் விரும்பி  வாழ்ந்த அவன் தலையை வாளால் அறுத்துப் புதைத்தாலும்
    புதைக்க; அவ்வாறு செய்யாது சுட்டாலும் சுடுக. நீங்கள்
    விரும்பியவாறு செய்க.
    தலையைப் புதைப்பதாலும், சுடுவதாலும் அவனுக்கு ஒன்றும்
பெருமையில்லை. அவன் புகழ்பட வாழ்ந்து முடிந்தனன். அவன்
புகழ் நிலைபெறும் என்று கூறினார்.

பாடல் இதோ..

தொடியுடைய தோண்மணந்தனன்
கடிகாவிற் பூச்சூடினன்
தண்மகமழுஞ் சாந்துநீவினன்
செற்றோரை வழிதபுத்தனன்
நட்டோரை உயர்புகூறினன்
வலியரென வழிமொழியலன்
மெலியரென மீக்கூறலன்
பிறரைத்தா னிரப்பறியலன்
இரந்தோர்க்கு மறுப்பறியலன்
வேந்துடை யவையத் தோங்குபுகழ் தோற்றினன்
வருபடை  எதிர் தாங்கினன்
பெயர்படை புறங்கண்டனன்
கடும்பரிய மாக்கடவினன்
நெடுங்தெருவிற்  ர்வழங்கினன்
ஓங்கியல களிறூர்ந்தனன்
தீஞ்செறி தசும்புதொலைச்சினன்.
பாணுவப்பப் பசிதீர்த்தனன்
மயக்குடைய மொழிவிடுத்தனன் ஆங்குச்
செய்ய  எல்லாம்  செய்தனன் ஆகலின்
இடுக ஒன்றோ! சுடுக ஒன்றோ!
படு வழிப் படுக இப்புகழ் வெய்யோன் தலையே!

நம்பி நெடுஞ்செழியனைப் பேரெயின்
முறுவலார் பாடியதாகும்

    
பாடல் வழியே..
       1. நம்பி நெடுஞ்செழியன் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று துறைகளிலும் ஒருவன் செய்ய வேண்டிய பணிகளை எல்லாம் செய்து முடித்து விட்டான். எனவே அவன் பெரும் புகழ் பெற்று அவன் புகழுடம்பு நிலைபெற்று விட்டது. இனி அவனது பருவுடலை எது செய்தால் என்ன? என்று கேட்கிறார் புலவர்.
        2. வாழ்க்கை நிலையில்லாதது என்பதை உணர்த்தும் இவ்வழகிய பாடல் வாழும் போதே மண்பயனுற
வாழவேண்டும் என்பதை அறிவுறுத்திச் செல்கிறது.

        3. நிலையாமை குறித்து எழுதப்பட்ட திரைப்படப்பாடல்களுக்கும்  முன்னோடியாகச் சங்கப்பாடல்கள் திகழ்ந்தமையைப் பாடல் வழியே அறிந்துகொள்ளமுடிகிறது,


தொடர்புடைய இடுகை

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

எள் என்றாலும் ஏழாகப் பகுத்து உண்!


பகுத்து உண்டு வாழவேண்டும் என்று சொன்ன நம் முன்னோர்கள்
தனக்கு மீறித்தான் தானமும் தர்மமும் என்றும் சொல்லி்ச் சென்றுள்ளார்கள். அதனால் நாம் இரண்டில் எதைப் பின்பற்றுவது என்ற குழப்பத்திலேயே இன்றுவரை வாழ்ந்து வருகிறோம்..

இந்நிலையில்..


“எள் என்றாலும் ஏழாகப் பகுத்து உண்“ என்றொரு பழமொழியைக் கேள்விப்பட்டேன் உடனே என் நினைவுக்கு வந்த சங்கப்பாடல் இது..

சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே
சிறுசோற் றானு நனிபல கலத்தன்மன்னே
5
பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன்மன்னே
என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே
அம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே
நரந்த நாறுந் தன்கையாற்
புலவு நாறு மென்றலை தைவரு மன்னே
10
அருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற்
சென்றுவீழ்ந் தன்றவன்
15
அருநிறத் தியங்கிய வேலே
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
இனி பாடுநருமில்லைப் பாடுநர்க்கொன் றீகுநருமில்லைப்
பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர்
சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன்
20
றீயாது வீயு முயிர்தவப் பலவே.
புறநானூறு 235
அதியமான் நெடுமானஞ்சியை ஒளவையார் பாடியது.


         சிறிய அளவிளான மது (கள்) கிடைத்தால் அதை எங்களுக்கே தந்து மகிழ்வான்!
பெரிய அளவினையுடைய மது கிடைத்தால் அதனை யாமுண்டு பாட எஞ்சிய மதுவைத் 
தான் விரும்பி நுகர்வான்! 
       சோறு எல்லார்க்கும் பொதுவாதலாற் சிற்றளவினையுடைய சோற்றின்கண்ணும் 
மிகப்பல கலத்தோடுங்கூட உண்பான்
 மிக்க அளவினையுடைய சோற்றின்கண்ணும் மிகப்பல கலத்தோடுங்கூட உண்பான்!
 என்போடுகூடிய ஊன்றடியுளதாகிய இடமுழுதும் எங்களுக்கு அளிப்பன்
 அம்போடு வேல்தைத்து உருவும் இடமாகிய போர்க்களமுழுதும் தான் சென்றுநிற்பான்
   தான் காதலிக்கும் கலைஞர்களுக்கு மாலை சூட்டுதலான் நரந்தப்பூ நாறும் 
தன்னுடைய கையால் தான் அருளுடைமையிற் புலால்நாறும் எம்முடைய தலையைத் 
தடவுவான்
   அரிய தலைமையையுடைய பெரிய பாணரது அகலிய மண்டையின்கண் துளையையுருவி 
இரப்பவர் கையுளும் தைத்துருவித் தன்னாற் புரக்கப்படும் சுற்றத்தாரது புல்லிய 
கண்ணிற்பாவை ஒளிமழுங்க அழகிய சொல்லை ஆராயும் நுண்ணிய ஆராய்ச்சியையுடைய 
அறிவினையுடையோர் நாவின் கண்ணே போய் வீழ்ந்தது,   
  அவனது அரிய மார்பத்தின்கண் தைத்த வேல்;  எமக்குப் பற்றாகிய எம்மிறைவன் 
எவ்விடத்துள்ளான் கொல்லோ? இனிப் பாடுவாரும் இல்லை
பாடுவார்க்கு ஒன்றீவாரும் இல்லை; குளிர்ச்சியையுடைய நீரையுடைய துறையின்கட் 
பகன்றையினது தேனைப் பொருந்திய 
பெரிய மலர் பிறராற் சூடப்படாது கழிந்தாற்போலப் 
பிறருக்கு ஒரு பொருளையும் கொடுக்காது மண்ணில் மறைந்துபோவோர் 
மிகவும் பலர்!!

பாடல் வழியே..

1.  பகுத்துண்டு வாழவேண்டும் என்ற கருத்தையும், எள் என்றாலும் ஏழாகப் பகுத்து உண் என்னும் பொன்மொழிகளுக்கும் தக்க சான்றாக வாழ்ந்தவன் அதியன் என்னும் உண்மை புலப்படுத்தப்படுகிறது.


2. பசித்தவர் உண்ண அதுகண்டு பசியாறிய அதியனின் மனிதாபிமானம் இன்று படித்தாலும் கண்முன் நிற்பதாகவுள்ளது.


3. கள்ளானது உணவின் ஒரு அடிப்படைக் கூறாகவே சங்ககாலத்தில் இருந்தது என்பதும். ஆடவரும் பெண்டிரும் மகிழ்ந்து அருந்தினர் என்பதும் அறியமுடிகிறது.


4. அதியன் பெற்ற துன்பம் தான் கொண்டதாகக் கலைஞர்கள் உணரும் அளவுக்கு கலைஞர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவனாக அதியன் விளங்கியமை ஔவையார் அடிகளால் அறிந்துகொள்ளமுடிகிறது.



5. அதியனே சென்றுவிட்டான் இனி இவன் போல கொடை கொடுப்பார் யார் உள்ளார்கள் என்று புலம்பும் புலவரின் குரல் “கையறு நிலையின்“ புலப்பாடாகவே உள்ளது.

தொடர்புடைய இடுகை

ஏழு வள்ளல்களின் சிறப்பு