தமிழ் உறவுகளே...
வாங்க வாங்க.. சாப்பிடுங்க....
பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இனிவரும் காலங்களில் அவற்றை முடிந்தவரை சமகால வாழ்வியலோடு விளக்க முயற்சிக்கிறேன்.
வாங்க வாங்க.. சாப்பிடுங்க....
பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இனிவரும் காலங்களில் அவற்றை முடிந்தவரை சமகால வாழ்வியலோடு விளக்க முயற்சிக்கிறேன்.
விருந்தோம்பல் என்னும் பண்பாடு குறித்து இன்றைய பதிவில் காண்போம்.
நான் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் (செட்டிநாடு) பிறந்து வளர்ந்தவன். எங்கள் பகுதியில் உணவு தயாரிப்பதிலும், பரிமாறுவதிலும் நிறைய மரபுகள் உண்டு. அதிலும் இம்மரபு நகரத்தாரிடையேதான் அதிகம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
அன்போடு பரிமாறப்படும் உணவு இருமடங்கு சுவையுடையது என்பதை எங்கள் பகுதிக்கு வந்தால் நன்கு உணரமுடியும்.
ஆளுயர இலைபோட்டு கொஞ்சம் கொஞ்சமாக நிறைய வகைப்பட்ட உணவுகளைப் பரிமாறுவார்கள்.
நாம் எதை விரும்பி உண்கிறோம் என்பதை அறிந்து அதை மீண்டும் மீண்டும் நாம் போதும் என்னும் அளவுக்கு பரிமாறுவார்கள்.
உணவு குறித்த பழமொழி, பொன்மொழி, கொள்கைகள் சில..
கூழானாலும் குளித்துக் குடி!
விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்குத் தான்!
நொறுங்கத் தின்றால் நூறு வாழ்வு!
பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்!
பசித்தபின் புசி!
பசி ருசி அறியாது!
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
அன்னத்தில் வின்னம் (பழுது, தடை) செய்யாதே!
பொய் சொன்ன வாய்க்கு போசனம் கிடைக்காது!
பகுத்துண்டு வாழ்!
அளவுக்கதிகமான உணவு உண்பவன் தன் பற்களாலே தன் சவக்குழியைத் தோண்டிக் கொள்கிறான்!
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்
செகத்தினை அழித்திடுவோம்!
சாப்பிடும்போது பேசாதே!
ஒரு பானை சோற்றுக்கு
ஒருசோறு பதம்!
நெல்மணி ஒவ்வொன்றிலும் உயிர்களின் பெயர் எழுதப்பட்டுள்ளது!
எள்ளாக இருந்தாலும் ஏழாகப் பகுத்து உண்!
இவ்வாறு என்னதான் படித்தாலும், அறிவுரைகள் கேட்டாலும் நாம் உணவு உண்ணும் போது இவற்றையெல்லாம் மனதில் நினைத்துப் பார்க்கிறோமா? என்றால் பெரும்பாலனவர்கள்...
இதெல்லாம் நடக்கிற கதையா என்பார்கள்.
இதுவா உணவு உண்ணும் பண்பாடு..
பேசிக்கொண்டே சாப்பிடுவது.(அலைபேசியிலோ, அருகிலிருப்பவரிடமோ)
2. பக்கதில் இருப்பவர் மீது உணவு தெறிக்குமாறு சாப்பிடுவது.
3. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ, நாளிதழ் படித்துக்கொண்டோ உண்பது.
4. இடைவேளையின்றி வாய்க்குள் திணிப்பது.
5. துரித உணவுகளை உண்பது.
6. பசிக்கும் முன்பாகவே உண்பது.
7. உண்டவுடனும், உண்ணும் போதும் தண்ணீர் குடிப்பது.
8. பக்கத்தில் இருப்பவரைப் பற்றிக் கவலைப்படாமல் துப்பிக்கொண்டே சாப்பிடுவது. (எனக்குத் தெரிந்த ஒருவர் இப்படி சாப்பிடுவார் என்பதால் நண்பர்கள் அவருக்குத் துப்புக்கெட்ட மனுசன் என்று பெயர் வைத்திருந்தார்கள்)
9. சத்தமாக, எல்லோரும் திரும்பிப்பார்க்கும் விதமாக உண்பது. கை முழுக்க, வாய்முழுக்க நிறைய உண்பது..
என எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாதோ அப்படியெல்லாம் தான் இன்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். நம் முன்னோர் ஏன் இப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது என்று சொன்னார்கள் என்று நாம் சிந்திப்பதற்கு நேரமில்லாதவர்களாக ஓடிக்கொண்டிருக்கிறோம்.
இதுவல்லவா பண்பாடு
இதுவல்லவா பண்பாடு
1. நன்றாக மென்று உண்ணும்போது உணவு செறிக்கப்படுகிறது.
2. உண்ணும்போது இடையிடையே தண்ணீர் அருந்தாமலிருக்கும்போது
உணவு செறித்தலில் சிக்கல் இன்றி இயல்பாகவே உருவாகும்
அமிலங்கள் தன் செயலைத் தடையின்றிச் செய்கின்றன.
3.பகுத்து உண்ணும் போது கிடைக்கும் நிறைவு தனித்து உண்பதில்
கிடைப்பதில்லை.
4. பசித்த பின்னும், செறித்தபின்னும் தான் உண்ணவேண்டும் அதனால் செறிமான இயந்திரங்கள் நன்கு பணிபுரியும்.
5. நாகரீகமாக உண்பதால் நாம் மதிப்பிற்குரியராக வாழமுடியும்.
என நம் முன்னோர் சொன்ன ஒவ்வொரு பழமொழிகளிலும் ஓராயிரம் பொருள்கள் உண்டு..
பழந்தமிழரின் உணவு முறைகள்
1. அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
2. உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.
3. உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
4. குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
5. தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.
6. துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
7. நக்கல் - நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.
8. நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
9. பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
10. மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
11. மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
12. விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.
பொது இடங்களில், விழாக்களில் பலரோடு உணவு உண்ணச் செல்லும்போது நான் உணவு உண்பதைவிட அதிகமாக மற்றவர்கள் உணவு உண்ணும் அழகைப் பார்த்து மகிழ்வேன்.
சிலரைப் பார்க்கும்போது.....
சே.. இவர் எவ்வளவு பண்பாடு தெரிந்தவராக, நாகரீகமாக உண்கிறார் என்று வியந்திருக்கிறேன்..
சிலரைப் பார்க்கும்போது...
சே.. இவர் எவ்வளவு பண்பாடற்றவராக, நாகரீகமற்றவர் போல உண்கிறார் எனச் சிரித்திருக்கிறேன்..