வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

இதென்ன வியப்பு !!


நிலவும், நிழலும் எப்போதும் நம்முடன் வருவது போல..
நம் அன்புக்குரியவர்களின் நினைவும் நம்முடன் தான் எப்போதும் இருக்கும்.
அவர்கள் நம்மோடு இல்லாவிட்டாலும்,
நாள்தோறும் நம்மைச் சந்திக்காவிட்டாலும் அவர்களின் நினைவுகள் நம்மைச்சுற்றியே சுவாசம் கொள்ளும்.

“நினைத்துப் பார்த்தல் சந்திப்பதற்கு இணையானது“ என்றொரு பொன்மொழியை எங்கோ படித்திருக்கிறேன்.
நினைத்துப் பார்த்தல் எப்படி சந்திப்பதற்கு இணையானது? என்ற ஐயத்தைப் போக்கியது ஒரு சங்கப்பாடல்...
ஆம் இங்கு தலைவனின் பின்னால் தலைவியின் கண்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
கொடிய பாலை வழியிலும் தொடரும் துன்பம் தோய்ந்த தலைவியின் கண்கள், தலைவன் எங்கெங்கு நோக்கினும் அவனையே சுற்றிச் சுற்றி வருகின்றன..
பாடல் இதுதான்.


உழையணந்து உண்ட இறைவாங்கு உயர்சினைப்
புல்லரை இரத்திப் பொதிப்புறப் பசுங்காய்
கல்சேர் சிறுநெறி மல்கத் தாஅம்
பெருங்காடு இறந்தும் எய்தவந் தனவால்
5 அருஞ்செயல் பொருட்பிணி முன்னி யாமே
சேறும் மடந்தை என்றலின் தான்தன்
நெய்தல் உண்கண் பைதல் கூரப்
பின்னிருங் கூந்தல் மறையினள் பெரிதழிந்து
உதியன் மண்டிய ஒலிதலை ஞாட்பின்
10 இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும்
ஆம்பலங் குழலின் ஏங்கிக்
கலங்கஞர் உறுவோள் புலம்புகொள் நோக்கே.


நற்றிணை-113
இளங்கீரனார்.
திணை – பாலை
கூற்று – இடைச்சுரத்து ஆற்றானாய தலைவன் சொல்லியது.
(தலைவியைப் பிரிந்து பாலை வழியே செல்லும் தலைவன், தலைவியின் நினைவால் தன் நெஞ்சுக்குச் சொல்லுவது)


தலைவன் பொருள் மீது கொண்ட பற்றால், தலைவியை நீங்கிப் பாலை வழியே பொருள் தேட எண்ணினான். தம் எண்ணத்தைத் தலைவியிடம் கூறினான்.

தலைவியோ, தன் நெய்தல் மலர் போன்ற மையுண்ட கண்கள் வருந்தவும்,
பின்னிய கரிய கூந்தல் விரிந்து அதனுள்ளே முகம் மறைத்து பெரிதும் கலக்கம் அடைந்தவளாக வாய்விட்டு அழுதாள்.

தலைவி அழுதது உதியன் போர்க்களத்தில் இசைஞர்கள் எழுப்பிய ஆம்பல் என்னும் பண்ணை உடைய குழல் இசைத்த்து போல இருந்தது.

இவ்வாறு கலங்கி அழுது, துன்பம் கொண்டவளாக நோக்கினாள்...
அவளது பார்வை...
பரற் கற்கள் நிறைந்த கொடிய பாலை வழியிலும் இங்கு எம்முன்னே காணக் கிடைத்தது.
இது என்ன வியப்பு!!!

என வியக்கிறான் தலைவன்.

பாடல் வழியே..
1. பாலை வழியே ஆற்றாமை மிக்கவனாகத் தலைவியைப் பிரிந்தான் தலைவன். அதனால் இறுதியாகத் தான் தலைவியைக் கண்ட காட்சி மனதில் ஆழமாகப் பதிந்தது. எனவே தான் எங்கெங்கு பார்த்தாலும் தலைவியின் துன்பமிக்க கண்களே காட்சியளித்தன. அதனை உணர்ந்து இது எப்படி நான் செல்லும் இடமெல்லாம் என் தலைவியின் துன்பமிக்க கண்களே காட்சியளிக்கின்றன எனத் தலைவன் வியந்தான்.

2. மருட்கை - வியப்பு என்னும் மெய்பாடு விளக்கம் பெறுகிறது. மருட்கை என்னும் சுவை புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்னும் காரணங்களால் தோன்றும் இங்கு தலைவனுக்கு மருட்கையாகிய வியப்பு தலைவியின் கண்கள் எங்கும் தோன்றும் புதுமை காரணமாகத் தோன்றியது.
3. தலைவியின் கண்கள் - நெய்தல் மலருக்கும்
தலைவியின் அழுகை - குழல் இசைக்கும் ஒப்பிடாக உரைக்கப்பட்டமை அக்கால மக்களின் கற்பனை நயத்துக்குத் தக்க சான்றாக அமைகிறது.

40 கருத்துகள்:

  1. அறிய தமிழ் பாடலின் விளக்கம்..
    பகிர்வுக்கு நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  2. //நினைத்துப் பார்த்தல் சந்திப்பதற்கு இணையானது“ என்றொரு பொன்மொழியை எங்கோ படித்திருக்கிறேன்.//

    உண்மைதான். சங்க காலம் மட்டுமல்ல, தற்காலத்தில் அயல்நாட்டில் பொருளீட்டவேண்டி வாழ வேண்டிய சூழ்நிலையில் பிரிந்திருக்கும் கணவன் மனைவியைக் கேட்டுப்பாருங்கள், நினைத்துப் பார்த்தல் சந்திப்பதற்கு இணையானது என்பது புரியவரும்.

    பதிலளிநீக்கு
  3. நினைத்துபார்த்து சுகமானதுதான் அது சந்திப்பை காட்டிலும் தூய்மையானது...

    பதிலளிநீக்கு
  4. நற்றிணைப்பால் சுவை மாறாமல் அதற்க்கான விளக்கம் கெர்டுத்து ரசிக்க வைத்தீர்கள்...

    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  5. தமிழ்மணத்தில் இணைத்துவிட்டு முதல் ஓட்டையும் பதிவு செய்தாயிற்று....

    பதிலளிநீக்கு
  6. //“நினைத்துப் பார்த்தல் சந்திப்பதற்கு இணையானது“ //

    உண்மைதான். உண்மையான அன்புள்ளம் கொண்ட எவரும், எவ்வளவு தொலைவில் இருந்தாலும் மனதால் நினைத்துப்பார்த்தாலே,நேரில் சந்தித்தது போன்ற உணர்வை எட்டக்கூடும்,சங்கப்பாடலின் மூலம் அதை விளக்கியமைக்கு நன்றி!

    தலைவியின் கண்களையும்,அழுகையையும் முறையே நெய்தல் மலருக்கும்,குழல் இசைக்கும் ஒப்பிட்ட அந்த கவி நயத்தை அறிய உதவிய உங்களுக்கு நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  7. “நினைத்துப் பார்த்தல் சந்திப்பதற்கு இணையானது"

    உண்மைதான்.
    அவர்கள் தொலைவில் இருந்தாலும்
    காற்றோடு கலந்திருந்தாலும்..,

    இனி எப்போதும் சந்திக்க முடியாது
    என்பவரை நினைத்து பார்த்தலால்
    மட்டுமே சந்திக்க முடியும் .

    பதிலளிநீக்கு
  8. “நினைத்துப் பார்த்தல் சந்திப்பதற்கு இணையானது"

    உண்மைதான்.
    அவர்கள் தொலைவில் இருந்தாலும்
    காற்றோடு கலந்திருந்தாலும்..,

    இனி எப்போதும் சந்திக்க முடியாது
    என்பவரை நினைத்து பார்த்தலால்
    மட்டுமே சந்திக்க முடியும் .

    பதிலளிநீக்கு
  9. அருமையான தமிழ் பாடம் கற்க உதவிசெய்கிறீர்கள் நண்பரே!4வது ஒட்டு தமிழ்மணம்
    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  10. பாடல்க வழியே சொல்லப்படும் செய்திகள், பிரமிக்க வைக்கின்றன . நம் முன்னோர்களின் வரலாற்றையும் பிரதிபலிக்கிறதே.

    பதிலளிநீக்கு
  11. உண்மை முனைவரே...சுகமும் கூட...

    பதிலளிநீக்கு
  12. நிலவும், நிழலும் எப்போதும் நம்முடன் வருவது போல..
    நம் அன்புக்குரியவர்களின் நினைவும் நம்முடன் தான் எப்போதும் இருக்கும்.
    நிச்சயம் அவர்கள் நினைத்தவுடன் நம் கண்முன்னே வந்துவிடுவார்கள். . . அருமையான படைப்பு. . .

    பதிலளிநீக்கு
  13. தமிழ் மணம் மணக்க பதிவு மெருகேருகிறது....வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  14. நினைவுகள்.....
    பதிவைப் படித்ததும் நினைவு எங்கோ செல்கிறது
    பிரிவில் பூக்கும் புன்னை மலர்களாம்
    நினைவுகள் தான் எத்தனை கொடுமையும் இனிமையும் நிறைந்தது .

    பதிவு அருமை முனைவரே.


    தமிழ்மணம் 9

    பதிலளிநீக்கு
  15. பாடலும் அதன் விளக்கமும் மிக அருமை..,
    பகிர்வுக்கு நன்றி.. நண்பரே..

    பதிலளிநீக்கு
  16. தமிழ் பாடம் கற்க உதவிசெய்கிறீர்கள்.
    உண்மை மிக ஆவலுடன் வாசிக்கிறேன் ஒவ்வொரு பாடமாகவே உள்ளது. இடுகைகள். நன்றி.
    வேதா. இலங்காதிலகம்

    பதிலளிநீக்கு
  17. அருமையான விளக்கம்!நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  18. எதிரில் இருந்தும் வேறொரு நினைவில் இருப்பது
    பிரிந்திருப்பதற்கு சமமானதாகவும்
    எங்கோ பிரிந்து இருப்பினும் நினைவிலேயே
    திலைத்திருப்பது என்பது இணைந்திருப்பதற்கு
    சமமானதாகவும் நிச்சயம் சொல்லலாம்
    அருமையான கருத்தைச் சொல்லிப்போகும்
    அழகான பாடலை பதிவிட்டு தந்தமைக்கு
    நன்றி தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  19. உண்மைதான் கடம்பவன குயில்.

    கருத்துரைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. அன்பின் சௌந்தர் இவ்விடுகையை தமிழ்மணத்தில் சமர்பிக்க நேரமில்லாத சூழலில் வெளியிட்டுச் சென்றேன்.

    உரிமையோடு தாங்களே சமர்பித்து கருததுரையும் வழங்கியமைக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சென்னைப் பித்தன் ஐயா.

    பதிலளிநீக்கு
  22. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சின்னத்தூரல்.

    பதிலளிநீக்கு
  23. தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி இராஜா

    பதிலளிநீக்கு
  24. தாங்கள் சொல்வது என் எழுத்துக்கான கடமையை கூட்டுவதாக உள்ளது இலங்கா திலகம்..

    நன்றி.

    பதிலளிநீக்கு
  25. தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ரமணி.

    பதிலளிநீக்கு
  26. காதற்பிரிவு சொல்லி மனம் நெகிழ்த்தும் பாடலை விளக்கத்தோடு பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு