பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

புதன், 10 ஆகஸ்ட், 2011

உலகிலேயே விரைவான வாகனம்?



உலகத்திலேயே விரைவாகச் செல்லும் வாகனம் எது?
தொடர்வண்டி, கப்பல், வான்ஊர்தி, ஏவுகணை....

இவை எல்லாவற்றையும் விட விரைவாகச் செல்லும் வாகனம் மனம்.


ஆம் மனதை விட விரைவாகச் செல்லும் வாகனத்தை இனியும் கண்டறிய முடியாது.
மனதுக்கும் அதிவிரைவான வாகனத்துக்குமான போட்டியை சங்கப்பாடல் ஒன்று அழகாகப் பதிவு செய்துள்ளது.

தலைவன் பொருள் தேடிமுடித்தபின் தலைவியை உடனே காண நினைக்கிறான். தன்னிடமிருக்கும் அதிவிரைவான குதிரை பூட்டிய தேரை ஓட்டுபவன் திறமையான பாகன் விரைவாகத்தான் ஓட்டுவான். இருந்தாலும் தலைவன் மனத்துக்கு முன் குதிரை இழுக்கும் தேரின் வேகம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அதனால் தன் பாகனிடம் தலைவன் சொல்கிறான் இதுவரை பயன்படுத்தாத முள்ளால் ஆன தாற்றுக் கோலைப் பயன்படுத்தி தேரை விரைந்து செலுத்து என்று..
காதல் கண்ணை மறைக்கும் சூழலிலும் தலைவன் மனிதாபிமானம் கொண்டவனாக, உயிரிரக்கம் கொண்டவனாக இருக்கிறான் என்பதை பாடலை நன்கு உற்று நோக்கும் போது புரிந்துகொள்ளமுடிகிறது.

பாடல் இதோ....

விரைப் பரி வருந்திய வீங்கு செலல் இளையர்
அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ
வேண்டு அமர் நடையர் மென்மெல வருக!
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு
ஏமதி வலவ, தேரே! உதுக்காண்
உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன
அரிக்குரல் மிடற்ற அம்நுண் பல் பொறிக்
காமரு தகைய கான வாரணம்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்
புலரா இரை கவர மாட்டி, தன்
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே


மருதன் இள நாகனார்
நற்றிணை -21
கூற்று – வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
பொருளீட்டிய பின் வீட்டுக்குத் திரும்பும் தலைவன் தன் தேர்ப்பாகனை நோக்கி..
பாக! நம் வீரர் மெதுவாகப் பின்னே வரட்டும். நீ விரைந்து தேரைச் செலுத்து. கானங்கோழி இரையைப் பெற்றுத் தன் பெடையை நோக்குவதைப் பார் இதுபோல நானும் என் தலைவியை பெருமையோடு நோக்கவேண்டும். அதனால் தேரை விரைந்து ஓட்டுவாயாக என்கிறான் தலைவன்.


தலைவனின் அன்பு உள்ளம்.

பொருள் தேடிய பின்னர் தலைவியைக் காண தலைவனின் நெஞ்சம் விரைகிறது. மனதிற்கு இணையாக தேரை விரைந்து ஓட்டக்கூடியவன் தான் பாகன். இருந்தாலும் தலைவன் மனம் ஒரு சில மணித்துளிகளைக் கூட பல மணி நேரங்களாகக் கருதிக்கொள்கிறது. அதனால் பாகனை நோக்கித் தலைவன் சொல்கிறான்..
பாகனே! நம்மோடு வரும் வீரர்களால் நம் வேகத்துக்கு வரமுடியாது மேலும் அவர்கள் நீண்ட தொலைவு உடல்வருந்தி வந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் ஆங்காங்கு தங்கி மெதுவாக வரட்டும் என்கிறான். இச்சூழலில் தலைவி மட்டுமே நிறைந்துள்ள தலைவனின் மனது தன்னையே நம்பி வந்த வீரகளின் நலனையும் காணவிழைவது தலைவனின் அன்புள்ளத்துக்குத் தக்க சான்றாக அமைகிறது.
தலைவனின் சுயநலம்.
தலைவியைக் காணவேண்டுமென்ற தலைவனின் ஆவலுக்கு முன்னே குதிரையின் வேகம் தோற்றுப் போகிறது. தலைவன் பாகனைப் பார்த்து...

“ பாக! இதுவரை நீ தீண்டாத கூரிய தாற்று முள்ளாலே குதிரையைத் தீண்டித் தேரைச் செலுத்துக“ என்று சொல்கிறான்.


இதில் தலைவியைக் காணவேண்டும் என்ற தலைவனின் சுயநலம் மிகுதியாக இருந்தாலும். “ இதுவரை தீண்டாத” என்னும் சொல்லாட்சி அதுவரை அவ்வுயிர் மீது அவன் கொண்டிருந்த அன்பையும். அந்தக் குதிரை வருந்தும் அளவிற்கு இனியும் தீண்டமாட்டான் என்ற உணர்வையும் இயம்புவதாகவுள்ளது.

அழகான காட்சி

கானக்கோழி உருக்கிய நெய்யில் பாலைச் சிதறினாற் போல, அழகிய நுண்ணிய பலவாகிய புள்ளிகளையும் கடைகின்ற குரலையுடைய மிடற்றினையும் கொண்டது. அது பார்ப்பவர்களுக்கு விரும்பம் தரும் தன்மையது. அக்கோழி மழை பெய்து நீர் வடிந்த அகன்ற நெடிய காட்டில் ஈரம் காயாத மணலை நன்றாகப் பறித்து நாட்காலையில் இரையாகிய நாங்கூழ்ப் புழுவைக் கவரும். அப்புழுவைக் கொன்று தன் பெடைக்கு ஊட்டவேண்டிப் பெருமையுடன் அப்பெடையை நோக்கும். இக்காட்சியைக் காணும் தலைவன் அதனைப் பாகனுக்குக் காட்டி இதுபோல பொருளீட்டிய நானும் தலைவியைப் பெருமையுடன் நோக்க விரைந்து தேரைச் செலுத்துவாயக என்கிறான்.

பாடல் வழியே.

1.தலைவன் பொருள் தேடச் செல்லும்போதும், மீளும்போதும் அவனுடன் வீரர்கள் உடன் வருவார்கள் என்ற சங்ககால வழக்கம் அறியப்படுகிறது.
2.தன் வீரர்கள் உடல் வருந்தி இருக்கிறார்கள் அதனால் அவர்கள் ஓய்வெடுத்து மெல்ல வரட்டும் என்பதன் வழி தலைவனின் அன்புள்ளம் புலனாகிறது.
3. “ உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன” என்னும் கானக்கோழி பற்றிய உவமை புலவரின் கற்பனை நயத்துக்குத் தக்க சான்றாக உள்ளது.
4.“பேடை நோக்கிய பெருந்தகு நிலையே“ என்ற அடிகள் முயன்று பொருளீட்டுவதன் சிறப்பை உணர்த்துவதாகவும். பெற்றோர் தேடிய செல்வத்தைவிட தாம் முயன்று ஈட்டிய செல்வமே சிறந்தது என்ற அறத்தை இயம்புதாகவும் விளங்குகிறது.

20 கருத்துகள்:

  1. வேகமான வாகனம் மனம்தான்...
    அதை பாடல் வழி விளக்கிய விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  2. //
    உலகத்திலேயே விரைவாகச் செல்லும் வாகனம் எது?
    தொடர்வண்டி, கப்பல், வான்ஊர்தி, ஏவுகணை....

    இவை எல்லாவற்றையும் விட விரைவாகச் செல்லும் வாகனம் மனம்.

    //

    உண்மை ... அதைவிட வேகம் நம் எண்ணம்

    பதிலளிநீக்கு
  3. புதுமையான முறையில் விளக்கம்..
    பகிர்வுக்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  4. அருமையான பாடல், அழகான விளக்கம். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. செழிப்பான வரிகளும் சிறப்பான விமர்சனமும் ... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. உங்கள் பணிக்கு பாராட்டுக்கள்
    ./காண வாரணம்/ என்ற சொற்கள்தான் இங்கு கானக்கோழியைச் சுட்டுவ்தாக எண்ணுகிறேன். கான, காண..இரண்டும் ஒன்றா? மேலும், வாரணம் என்றால் யானை அல்லவா?
    கானக்கோழியை பாடலில் கவிஞன் பயன்படுத்திய முறை , வியக்கவும், ர்சிக்கவும் வைக்கிறது

    பதிலளிநீக்கு
  8. அருமையான விளக்கத்தை அழகாய்த் தந்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  9. நான் கேட்டிருந்த சந்தேகங்களுக்கு விடை கிடைத்துவிட்டது.
    இணையத்தில் தேடிக் கண்டேன்
    1./காண/ என்று பாடலில் வரும் இடம் எழுத்துப்பிழை. /கான/ என்பதே சரி.

    2.வாரணம் என்பதற்கு கோழி என்றொரு பொருளும் உண்டு.

    பதிலளிநீக்கு
  10. ஆறு வருடங்களுக்கு பிறகு தமிழ் மழையில் நனைந்து கொண்டாடினேன்.
    மகேஷ்

    பதிலளிநீக்கு