வெள்ளி, 29 ஜூலை, 2011
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்.
அன்பின் வெளிப்பாடு.
அன்பின் வெளிப்பாடாக ஏதாவது கொண்டுவாருங்கள் என்று நான்கு மாணவர்களை அனுப்பினார் ஆசிரியர்.
ஒரு மாணவர் கையில் மலருடன் வந்தார்.
இரண்டாவது மாணவர் ஒரு வண்ணத்துப் பூச்சியுடன் வந்தார்.
மூன்றாவது மாணவர் சிறு பறவையின் குஞ்சுடன் வந்தார்.
நான்காவது மாணவர் வெறுங்கையுடன் வந்தார்.
ஏன் நீ மட்டும் எதுவும் கொண்டு வரவில்லை என்று கேட்டார் ஆசிரியர்.
அந்த மாணவர் சொன்னார். நானும் மலரைப் பார்த்தேன் பறிக்கவேண்டும் என்றுதான் தோன்றியது ஆனால் மலர் செடியில் இருப்பதுதான் அழகு என்றும் தோன்றியது அதனால் விட்டுவிட்டேன். வண்ணத்து பூச்சியையும் பார்த்தேன். அதன் சுதந்திரமான வாழ்க்கையைப் பறித்துவிடக்கூடாது என்று விட்டுவிட்டேன். பறவையின் சிறுகுஞ்சையும் பார்த்தேன். அந்தக் குஞ்சை எடுத்து அதற்கு என்ன கொடுத்தாலும் அதற்கான தாயன்பை யாராலும் கொடுக்கமுடியாது என்று விட்டுவிட்டேன் என்றார்.
ஆசிரியர் மற்ற மூன்று மாணவர்களிடமும் சொன்னார் இதுதான் அன்பின் வெளிப்பாடு என்று.
பற்று தோற்றுவிக்கும் சுயநலம்.
ஒரு பொருள் மீது பற்று வரும்போதே சுயநலமும் சேர்ந்து வந்துவிடுகிறது.
ஒரு ஞானி ஒரு பெரிய கடைக்கு அடிக்கடி செல்வாராம் எல்லாவற்றையும் சுற்றிப்பார்பாராம் எதையும் வாங்குவதில்லையாம். இதை தொடர்ந்து உற்றுநோக்கிவந்த கடைக்காரர் அந்த ஞானியிடம் ..
நாள்தோறும் வருகிறீர்கள் எல்லா பொருள்களையும் பார்க்கிறீர்கள் எதையும் வாங்குவதே இல்லையே ஏன்? என்று கேட்டாராம்.
அதற்கு அந்த ஞானி..
இல்லை இந்த மக்களுக்கு இவையெல்லாம் அடிப்படைத் தேவையாகிறது.
இந்தப் பொருட்கள் இன்றி அவர்களால் வாழமுடியவில்லை. ஆனால் இவை எதுவுமே எனக்குத் தேவைப்படுவதில்லை. நானும் நிறைவாகத் தான் வாழ்கிறேன்.
எவை எவை இன்றி என்னால் நிறைவாக வாழமுடிகிறது என்று பார்க்கத்தான் நாள்தோறும் வருகிறேன் என்றாராம்.
பற்றுதல் இன்றி இருந்தால் சுயநலமின்றி வாழலாம்!
அன்பிலாதவர்களுக்கு எல்லாமே சொந்தம்!
அன்புடையவர்கள் உலகத்துக்கே சொந்தம்!
என்பதைப் புரிந்து கொள்ள நிறைய அனுபவம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது.
சங்ககாலக் காட்சி ஒன்று.
மூவேந்தர்களும் பறம்பு மலையைச் சூழ்ந்து போர்தொடுத்தபோது கபிலர் அவர்களுக்கு அறிவுறுத்துவதாக இப்பாடல் அமைகிறது.
வஞ்சனையால் அடைய நினையாது போரிட்டு வெல்லும் இயல்புடைய மூவேந்தரும் ஒன்று கூடிப் போர் செய்தாலும் பறம்பு மலையை உங்களால் பெறமுடியாது.
ஏனென்றால் குளிர்ச்சி பொருந்திய நன்னாடாகிய பறம்பு நாடு முந்நூறு ஊர்களைக் கொண்டது. அந்த முந்நூறு ஊர்களையும் பாரியிடம் பரிசிலர்கள் பெற்றுவிட்டனர். ஒருவேளை நீங்கள் பாடிக் கொண்டு பரிசிலராக வந்தால் நீங்கள் பெறுவதற்காக யாமும், பாரியும் உள்ளோம். மேலும் மலையும் உள்ளது என்கிறார் கபிலர்.
பாடல் இதோ..
கடந்து அடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல் நாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே
குன்றும் உண்டு - நீர் பாடிச் செலினே
புறநானூறு -110
திணை – நொச்சி (மதில் காத்தல்)
துறை -மகள் மறுத்தல்
பாடல் வழியே.
1. நொச்சி என்னும் புறத்துறை மதில் வளைத்தல் என்னும் புற வாழ்வியலை விளக்குவதாக அமைகிறது.
2. அன்பிலாருக்குத் தான் ஏதேதோ சொந்தமாகிறது. அன்புடையவர்கள் எதையும் சொந்தம் கொண்டாடுவதில்லை என்ற குறளுக்குத் தக்க சான்றாக பாரியையும் கபிலரையும் இப்பாடல் வழியே காணமுடிகிறது.
3. பறம்பு மலையை ஆட்சி செய்தவன் பாரி. இங்கு 300 ஊர்கள் உண்டு அத்தனையையும் பரிசிலர்களுக்கே கொடுத்துவிட்டான். வேண்டி வந்தால் தன்னையும் தருவான் என்று பாரியைப் புகழும் கபிலர் தன்னையும் ஒரு உடமைப் பொருளாக்கிக் கொண்டு “யாமும் – பாரியும்- மலையும் உள்ளோம் என்கிறார்.
ஆட்சி செய்தோர் இப்படியெல்லாம் சுயநலமின்றி இருந்தார்களா? என்று வியப்படையும் இவ்வேளையில், இன்றைய அரசியல்வாதிகள் ஒரு துளியாவது தன்னலமின்றி செயல்படுகிறார்களா? என்றும் சிந்திக்கவேண்டி உள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அன்பிலாதவர்களுக்கு எல்லாமே சொந்தம்!
பதிலளிநீக்குஅன்புடையவர்கள் உலகத்துக்கே சொந்தம்!//
பற்று தான் சுயநலத்தின் தோற்றுவாய் என்பது சரிதான். அதனால்தான் திருமூலர் 'ஈசனோடாயினும் ஆசை அறுமின்' என்றாரோ...!
பதிவின் முடிவில் நீண்டதொரு சாட்டையின் நுனிப்பிரியின் சொடுக்கல் தெரிகிறதே...!
பல அறிய தமிழ் தகவல்கள்..
பதிலளிநீக்குநன்றி..
நல்ல தலைப்பில் சிறந்த எடுத்துக்
பதிலளிநீக்குகாட்டுகள் பலரும் படிக்க வேண்டியவை
அருமை தம்பீ அருமை!
வலைச்சரத்தல் அறிமுகப்படித்தி
விட்டு, வலைப் வரவில்லையே
வாங்க தம்பீ!
புலவர் சா இராமாநுசம்
''..அன்பிலாதவர்களுக்கு எல்லாமே சொந்தம்!
பதிலளிநீக்குஅன்புடையவர்கள் உலகத்துக்கே சொந்தம்!
என்பதைப் புரிந்து கொள்ள நிறைய அனுபவம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது...''
அத்தனையும் மணிக் கருத்துகள். மிக்க நன்றி.
http://kovaikkavi.wordpress.com
Vetha.Elangathilakam
கதைகளின் துணையோடு சங்கப் பாடல்களைப் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்யும் தங்கள் முயற்சி பாராட்டுதலுக்குரியது. நன்றி.
பதிலளிநீக்கு//ஆட்சி செய்தோர் இப்படியெல்லாம் சுயநலமின்றி இருந்தார்களா? என்று வியப்படையும் இவ்வேளையில், இன்றைய அரசியல்வாதிகள் ஒரு துளியாவது தன்னலமின்றி செயல்படுகிறார்களா? என்றும் சிந்திக்கவேண்டி உள்ளது.//
பதிலளிநீக்குஅந்த இலக்கியங்களை விளக்கி விளக்கி எழுதுன குடும்பம் ஆண்ட லட்சணத்தை தான் இப்ப திஹார்-ல பாத்துக்கிட்டிருக்கோமே குணா.
தங்களின் கட்டுரை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபற்றுதல் இன்றி இருந்தால் சுயநலமின்றி வாழலாம்!
பதிலளிநீக்குஅன்பிலாதவர்களுக்கு எல்லாமே சொந்தம்!
அன்புடையவர்கள் உலகத்துக்கே சொந்தம்!. . .உன்மையான வரிகள் அருமை. . .
அருமையான கருத்துக்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
அனுபவத்தால் அடிபட்டபிறகே எல்லாம் புரிகிறது.அன்புமட்டுமே நிரந்தரமாகிறது !
பதிலளிநீக்குமிக சுவையான சிறுகதைகளும், இலக்கிய காட்சியும் குணசீலன்.. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குNalla idugai...
பதிலளிநீக்குvazhththukkal.
அறிவுப்பூர்வமான அரிய தகவல்கள் .பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குகருத்துரை வழங்கிய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பதிலளிநீக்கு