வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 7 ஜூலை, 2011

காவல் மறந்த கானவன்.



சங்ககால மக்கள் இயற்கையுடன் இயைபுற்று வாழ்ந்தனர் என்பதை சங்கஇலக்கியங்கள் எடுத்தியம்புகின்றனர். இதோ அழகியதொரு உவமை.

“தலைவி காதலிக்கிறாள் என்பதை அறிந்த பெற்றோர் அவளை வீட்டுக்காவலில் வைத்தனர். தலைவனோ அதனை உணராதவனாக திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இன்றி தலைவியைச் சந்திப்பதிலேயே ஆர்வம் கொண்டவனாக இருக்கிறான். இச்சூழலில் தோழி தலைவனிடம் நீ தலைவியின் துன்பத்தை உணர்ந்து உடனே திருமணம் செய்துகொள்வாயாக..

ஆண்குரங்கு தன்கையால் தோண்டிய, மணம் கமழ்கின்ற சுளைகளையுடைய பெரிய பலாப்பழத்தை, காவல் காக்க மறந்த வேடன், அதன்பின், பழத்தால் மணமுடைய மரந்தோறும் குரங்குகள் படுதற்குரிய வலையை மாட்டிவைக்கும், மலையையுடைய நாட,
பசிய சுனையினிடத்து மலர்ந்த குவளை மலர்களை இடையிட்டுக் கட்டியதண்ணிய தழையுடையை அணிந்த இத்தலைவி, இங்கே துன்புற, நின்னை விரும்பியவர்களது துன்பத்தைத் தீர்க்கும் நல்வினைப் பயனை, அடையாத, இயல்புடையாயென்னின், அவ்வியல்புநினக்குத் தகுமோ?

என்று தலைவனிடம் நீ உடனே தலைவியைத் திருமணம் செய்துகொள்வாயாக என்று சொல்கிறாள் தோழி. பாடல் இதோ..



கலைகை தொட்ட கமழ்சுளைப் பெரும்பழம்
காவன் மறந்த கானவன் ஞாங்கர்க்
கடியுடை மரந்தொறும் படுவலை மாட்டும்
குன்ற நாட தகுமோ பைஞ்சுனைக்
குவளைத் தண்டழை யிவளீண்டு வருந்த
நயந்தோர் புன்கண் டீர்க்கும்
பயந்தலைப் படாஅப் பண்பினை எனினே.

குறுந்தொகை 342.
காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்.

தோழி கூற்று
(தலைவி இற்செறிக்கப்பட்டதை அறிவித்தபோது தலைவன் பின்னும்களவொழுக்கத்தை விரும்பினானாக, “நீ வரையாது ஒழுகின் இவள்வருந்துவாள்; இனி நீ வரைதலே தக்கது” என்று தோழி கூறியது.)

தலைமக்களின் காதலை அறிந்த பெற்றோர் தலைவியை வீட்டுக்காவலில் வைத்தனர். அதனை அறிந்தும் தலைவன் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லாதவனாக தலைவியைச் சந்திப்பதையே விரும்பினான். நீ தலைவியைத் திருமணம் செய்துகொள்ளாது காலம் தாழ்த்தினாள் தலைவி வருந்துவாள் என்று கூறிய தோழி, தலைவ..
நீ இனி அவளைத் திருமணம் செய்வதே சிறந்தது என்று அறிவுறுத்துவதாக இப்பாடல் அமைகிறது.

பாடல் வழியே.
1. கானவனது சோர்வறிந்து குரங்கு தொட்ட பழம் அவன் படுவலைமாட்டியபின் பெறுதற்கு அரிதாதலைப் போல, காப்போரில்லா நிலையில்நீ கண்டு அளவளாவிய தலைவி இற்செறிக்கப்பட்டபின் நீ சந்திப்பதற்கு அரியவளாவாள் என்பது அழகான ஒப்பீடாகவும், சங்ககால மக்களின் இயற்கை சார் வாழ்வியலுக்குத் தக்க சான்றாகவும் திகழ்கிறது.
2. பெண்கள் தழையாடை (இலை, தழைகளால் வேயப்பட்ட ஆடை) அணியும் சங்ககால வழக்கம் பாடல் வழி அறியமுடிகிறது.
3. பலா மரங்களை குரங்குகளிடமிருந்து காக்க மரங்களில் வலை மாட்டும் சங்ககால வழக்கத்தையும் உணர்ந்துகொள்ள முடிகிறது. (மரங்களில் வலை மாட்டுவது பலாப்பழங்களைப் பாதுகாப்பதற்காகவே! குரங்குகளைப் பிடிப்பதற்காக இல்ல! – அதுபோல தலைவியை இற்செறிப்பது தலைவியைக் காப்பதற்காகவே! தலைவனைப் பிடிப்பதற்காக என்னும் இலக்கிய நயம் எண்ணி இன்புறத்தக்கதாகவுள்ளது.

தமிழ்ச்சொல் அறிவோம்.
1. ஞாங்கர் - அப்பால்
2. கடியுடை மரம் - காலுக்கு உரிய மரம்
3. படுவலை - பெரிய வலை
4. கானவன் - காட்டில் வாழ்பவன்

8 கருத்துகள்:

  1. ச‌ங்க‌ இல‌க்கிய‌ நுக‌ர்வும் ப‌லாச்சுளையொத்த‌ இனித‌ன்றோ... உரித்து ப‌க்குவ‌மாக‌ உண்ண‌த் த‌ரும் த‌ங்க‌ள் த‌கைமை போற்ற‌த் த‌க்க‌து.

    பதிலளிநீக்கு
  2. பல புது சொற்கள் அறிமுகம் நன்றி



    வலைசரத்தில் இன்று ...
    கண்ணை நம்பாதே

    பதிலளிநீக்கு
  3. அழகிய கவிதையை அழகான விளக்கத்துடனும்
    சில பொருள் அறிந்துகொள்ள முடியாத சொற்களுக்கு
    விளக்கமும் கொடுத்ததால் ரசித்துப் படிக்க முடிந்தது
    தரமான பதிவு தங்கள் பதிவைத் தொடர்வதில்
    பெருமிதம் கொள்கிறேன்.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. பலாச்சுளைபோல இனிப்பானது தமிழ்.உங்கள் விளக்கம் இன்னும் இனிக்க வைக்கிறது குணா !

    பதிலளிநீக்கு
  6. பலாவின் சுவையை போலவே இனிப்பாக இருக்கிறது உங்கள் பதிவும்..

    பதிலளிநீக்கு