பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

சனி, 2 ஜூலை, 2011

தெரியாம பார்த்துப்புட்டேன்.



காதலர் மாறலாம்
காதல் மாறுவதில்லை.
காதல் சார் சூழல்களும் மாறுவதில்லை
இன்றும் தன் தங்கை காதலிக்கிறாள் என்றால் எந்த அண்ணன் தான் அதை ஏற்றுக்கொள்கின்றார்.?
எத்தனை காதல்தான் அண்ணன் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு உண்மையானதாக இருக்கிறது.?

“டேய் வேண்டாம் டா அவளை விட்டிடு அவ குடும்பத்தோட பின்புலம் தெரியாம காதலிச்சிட்டுப் பின்னாடி வருத்தப்படாத.
அவ அண்ணனைப் பற்றித் தெரியுமா?
அவ தம்பியைப் பற்றித் தெரியுமா?
அவங்க அப்பாவைப் பற்றித் தெரியுமா..?“

என்று இன்று பேசுவதை பல இடங்களிலும் பார்க்க முடியும் கேட்கமுடியும்..
இதோ சங்ககாலத்திலிருந்தே இந்நிலை மாறாமல்தான் வருகிறது என்பதை அடையாளப்படுத்த..



சங்ககாலக் காட்சி ஒன்று...

தோழி கூற்று

தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளாது காலம் தாழ்த்தி வருகிறான். தோழியிடம் தலைவியை தான் இரவிலும் சந்திக்கத் துணைசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறான்.
அவனிடம் தோழி....

உங்கள் காதல் ஊரறிந்து அவள் பெற்றோராலும் அறியப்பட்டது. அதனால் அவள் இற்செறிக்கப்பட்டாள் (வீட்டுக்காவல்). மேலும் நீ நினைப்பது போல தலைவியை இரவில் இனிமேல் சந்திக்க முடியாது. அவள் உடன்பிறந்த அண்ணன் வலிமையா வில்லைத் திறம்பட எய்யக்கூடியவன் என்பதை நீ அறிவாயா?

என்று கேட்டுத் தலைவனை நீ விரைவில் தலைவியை மணம் செய்துகொள் என்று சொல்வதாக இப்பாடல் அமைகிறது.

பாடல் இதோ...
நிரைவளை முன்கை நேரிழை மகளிர்
இருங்கல் வியலறைச் செந்தினை பரப்பிச்
சுனைபாய் சோர்விடை நோக்கிச் சினையிழிந்து
பைங்கண் மந்தி பார்ப்பொடு கவரும்
வெற்பிடை நண்ணி யதுவே வார்கோல்
வல்விற் கானவர் தங்கைப்
பெருந்தோட் கொடிச்சி யிருந்த வூரே.

குறுந்தொகை - 335
என்பது இரவுக்குறி நயவாமைத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.
இருந்தையூர்க் கொற்றன் புலவன்.


பாடல் வழியே..

தலைவியின் உடன்பிறந்தோர்

நீண்ட அம்பையும், பல இலக்குக்களை ஒரு தொடையில் துளைக்கவிடும் வலியவில்லையும் உடைய, வேட்வர் ஆவர்.

திணைக்காவல்.

பெரிய தோளையுடைய குறிஞ்சிநில மகளாகிய தலைவி, வாழும் ஊர், வரிசையாகிய வளையையுடைய முன்கையையும், நேர்ந்த அணிகலன்களையுமுடைய மகளிர், கரிய மலையிலுள்ள அகன்ற பாறையினிடத்து, சிவந்த தினையைப் பரப்பி உலர்த்துவர்

மகளிர் விளையாட்டு

பின்னர் சுனையில் (நீர் நிலையில்) பாய்ந்து விளையாடச் சென்றனர். (பெண்கள் நீ்ச்சலடித்து விளையாடுதல்)

குரங்குகளின் விளையாட்டு.

மகளிர் சோர்ந்த நேரம் பார்த்து மரக்கிளையிலிருந்து இறங்கி, பசிய கண்ணையுடையபெண் குரங்குகள், குட்டிகளோடுஅத்தினையைக் கைக்கொள்ளும், மலையினிடத்தே பொருந்தியது

தலைவியின் ஊர்.

அதனால் இரவுக்குறியிற்கண்டு தலைவியுடன் நீ அளவளாவுதல் அரிது.
இதனால், வரைந்து கொள்வதே நன்றென்று தலைவனிடம் கூறுகிறாள் தோழி.


தமிழ்ச்சொல் அறிவோம்.


நேர் இழை – பொருந்திய அணிகலன்
இருங்கல் – பெரிய மலை
அறை – பாறை
வியல் – அகன்ற
சினை – கிளை
இழிந்து – இறங்கி
பார்ப்பு – குட்டி (இளமைப் பெயர்)
வெற்பு – நீண்ட கோல்
கொடிச்சி – குறிஞ்சி நிலப்பெண்
நயத்தல் - விரும்புதல்

நகைச்சுவை.

குரங்களின் செயல் பாடல் படித்து முடித்தபின்னரும் சிரிப்பை வரவழைப்பதாக உள்ளது.

13 கருத்துகள்:

  1. வணக்கம் குணசீலன் சார், மிகவும் அழகான பதிவு,விளக்கம் என்னைப்போன்றவர்களுக்கு புரியும்படியாக இருப்பது சிறப்பு..

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு விளக்கம் சார் வாழ்த்துக்கள் .......

    பதிலளிநீக்கு
  3. அழகான பாடல்! நயமான காட்சிப்படுத்தல்... நல்லதோர் பக்திவு

    பதிலளிநீக்கு
  4. உங்கள் பதிவு நல்லாயிருக்கு.
    விளக்கிய விதமும் சுப்பர்.....
    அற்புதம்.
    வாழ்த்துக்கள்..........


    நண்பர்களே நம்ம பக்கம் !!!மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்!!!!! நீங்களும் யோசித்து பாருங்களேன்

    பதிலளிநீக்கு
  5. தமிழ் நுணுக்கமான மொழி...அதை திறம்பட விளக்கப்படுத்தி வரும் நண்பருக்கு நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  6. அழகான இலக்கியப் பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. உண்மையான நடைமுறை முன்னுரை. . . நல்ல படைப்பு. . .

    பதிலளிநீக்கு
  8. கருத்துரை வழங்கிய அன்பு நெஞ்சங்களே உங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

    நன்றி
    நன்றி
    நன்றி.

    பதிலளிநீக்கு