வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 29 ஜூலை, 2011

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்.



அன்பின் வெளிப்பாடு.

அன்பின் வெளிப்பாடாக ஏதாவது கொண்டுவாருங்கள் என்று நான்கு மாணவர்களை அனுப்பினார் ஆசிரியர்.
ஒரு மாணவர் கையில் மலருடன் வந்தார்.
இரண்டாவது மாணவர் ஒரு வண்ணத்துப் பூச்சியுடன் வந்தார்.
மூன்றாவது மாணவர் சிறு பறவையின் குஞ்சுடன் வந்தார்.
நான்காவது மாணவர் வெறுங்கையுடன் வந்தார்.
ஏன் நீ மட்டும் எதுவும் கொண்டு வரவில்லை என்று கேட்டார் ஆசிரியர்.
அந்த மாணவர் சொன்னார். நானும் மலரைப் பார்த்தேன் பறிக்கவேண்டும் என்றுதான் தோன்றியது ஆனால் மலர் செடியில் இருப்பதுதான் அழகு என்றும் தோன்றியது அதனால் விட்டுவிட்டேன். வண்ணத்து பூச்சியையும் பார்த்தேன். அதன் சுதந்திரமான வாழ்க்கையைப் பறித்துவிடக்கூடாது என்று விட்டுவிட்டேன். பறவையின் சிறுகுஞ்சையும் பார்த்தேன். அந்தக் குஞ்சை எடுத்து அதற்கு என்ன கொடுத்தாலும் அதற்கான தாயன்பை யாராலும் கொடுக்கமுடியாது என்று விட்டுவிட்டேன் என்றார்.
ஆசிரியர் மற்ற மூன்று மாணவர்களிடமும் சொன்னார் இதுதான் அன்பின் வெளிப்பாடு என்று.

பற்று தோற்றுவிக்கும் சுயநலம்.

ஒரு பொருள் மீது பற்று வரும்போதே சுயநலமும் சேர்ந்து வந்துவிடுகிறது.

ஒரு ஞானி ஒரு பெரிய கடைக்கு அடிக்கடி செல்வாராம் எல்லாவற்றையும் சுற்றிப்பார்பாராம் எதையும் வாங்குவதில்லையாம். இதை தொடர்ந்து உற்றுநோக்கிவந்த கடைக்காரர் அந்த ஞானியிடம் ..
நாள்தோறும் வருகிறீர்கள் எல்லா பொருள்களையும் பார்க்கிறீர்கள் எதையும் வாங்குவதே இல்லையே ஏன்? என்று கேட்டாராம்.
அதற்கு அந்த ஞானி..
இல்லை இந்த மக்களுக்கு இவையெல்லாம் அடிப்படைத் தேவையாகிறது.
இந்தப் பொருட்கள் இன்றி அவர்களால் வாழமுடியவில்லை. ஆனால் இவை எதுவுமே எனக்குத் தேவைப்படுவதில்லை. நானும் நிறைவாகத் தான் வாழ்கிறேன்.
எவை எவை இன்றி என்னால் நிறைவாக வாழமுடிகிறது என்று பார்க்கத்தான் நாள்தோறும் வருகிறேன் என்றாராம்.

பற்றுதல் இன்றி இருந்தால் சுயநலமின்றி வாழலாம்!
அன்பிலாதவர்களுக்கு எல்லாமே சொந்தம்!
அன்புடையவர்கள் உலகத்துக்கே சொந்தம்!
என்பதைப் புரிந்து கொள்ள நிறைய அனுபவம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது.

சங்ககாலக் காட்சி ஒன்று.


மூவேந்தர்களும் பறம்பு மலையைச் சூழ்ந்து போர்தொடுத்தபோது கபிலர் அவர்களுக்கு அறிவுறுத்துவதாக இப்பாடல் அமைகிறது.
வஞ்சனையால் அடைய நினையாது போரிட்டு வெல்லும் இயல்புடைய மூவேந்தரும் ஒன்று கூடிப் போர் செய்தாலும் பறம்பு மலையை உங்களால் பெறமுடியாது.
ஏனென்றால் குளிர்ச்சி பொருந்திய நன்னாடாகிய பறம்பு நாடு முந்நூறு ஊர்களைக் கொண்டது. அந்த முந்நூறு ஊர்களையும் பாரியிடம் பரிசிலர்கள் பெற்றுவிட்டனர். ஒருவேளை நீங்கள் பாடிக் கொண்டு பரிசிலராக வந்தால் நீங்கள் பெறுவதற்காக யாமும், பாரியும் உள்ளோம். மேலும் மலையும் உள்ளது என்கிறார் கபிலர்.
பாடல் இதோ..


கடந்து அடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல் நாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே
குன்றும் உண்டு - நீர் பாடிச் செலினே

புறநானூறு -110
திணை – நொச்சி (மதில் காத்தல்)
துறை -மகள் மறுத்தல்


பாடல் வழியே.

1. நொச்சி என்னும் புறத்துறை மதில் வளைத்தல் என்னும் புற வாழ்வியலை விளக்குவதாக அமைகிறது.
2. அன்பிலாருக்குத் தான் ஏதேதோ சொந்தமாகிறது. அன்புடையவர்கள் எதையும் சொந்தம் கொண்டாடுவதில்லை என்ற குறளுக்குத் தக்க சான்றாக பாரியையும் கபிலரையும் இப்பாடல் வழியே காணமுடிகிறது.
3. பறம்பு மலையை ஆட்சி செய்தவன் பாரி. இங்கு 300 ஊர்கள் உண்டு அத்தனையையும் பரிசிலர்களுக்கே கொடுத்துவிட்டான். வேண்டி வந்தால் தன்னையும் தருவான் என்று பாரியைப் புகழும் கபிலர் தன்னையும் ஒரு உடமைப் பொருளாக்கிக் கொண்டு “யாமும் – பாரியும்- மலையும் உள்ளோம் என்கிறார்.
ஆட்சி செய்தோர் இப்படியெல்லாம் சுயநலமின்றி இருந்தார்களா? என்று வியப்படையும் இவ்வேளையில், இன்றைய அரசியல்வாதிகள் ஒரு துளியாவது தன்னலமின்றி செயல்படுகிறார்களா? என்றும் சிந்திக்கவேண்டி உள்ளது.

திங்கள், 18 ஜூலை, 2011

வலைச்சரத்தில் தமிழ்த்தென்றல் வீசுகிறது.



அறிவுக்கு மொழி தடையல்ல!
மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை!

என்ற எண்ணம் கொண்ட நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக வேர்களைத்தேடி என்னும் வலைப்பதிவின் வழியாக “தமிழியற் சிந்தனைகள்,சங்க இலக்கியம், இணையத்தமிழ்நுட்பங்கள், சிந்தனைகள்“ தொடர்பாகத் தங்களுடன் உறவாடி வருகிறேன்.

திரட்டி இணையத்தின் இந்த வார நட்சத்திரம்
தமிழ் மணத்தின் இந்த வார நட்சத்திரம்
தமிழ் மணத்தின் 2009 ஆம் ஆண்டு பெற்ற விருது

என சில நினைவில் நிற்கும் பெருமிதங்கள் உண்டு என்றாலும் இவை எல்லாவற்றுக்கும் நண்பர்களின் மேலான கருத்துரைகளே துணையாக நின்றன. என்னைப் போலவே உலகம் அறியவேண்டிய பதிவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களை அறிமுகம் செய்யும் அரிய வாய்ப்பு கிடைத்ததற்காகவே மீண்டும் ஒருமுறை பெருமிதம் கொள்கிறேன்.
எனது வலையுலக வரலாற்றில் இன்று ஒரு தனித்துவமான நாளாகும்.

ஆம் வலைச்சரம் என்னும் கடலில் முத்துக்குளிக்க எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
முதல் நாளான இன்று 18 இலக்கிய வலைப்பதிவர்களை அறிமுகம் செய்ய எண்ணுகிறேன்.

புதன், 13 ஜூலை, 2011

நம் உயிர் உள்ள இடம்...? - UPSC EXAM TAMIL - புறநானூறு -186

உயிர் எங்கு இருக்கிறது? இதயத்திலா? மூளையிலா?
என எங்கெங்கோ மருத்துவவியலார் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் சங்கஇலக்கியப் புறப்பாடல் ஒன்று மக்களின் உயிர் மக்களிடம் இல்லை!

அவர்களை ஆளும் மன்னனிடம் தான் இருக்கிறது என்று சொல்கிறது.

மனிதன் உயிர்வாழ அடிப்படைத் தேவை என்ன ?

நெல்லா? நீரா?

இரண்டுமில்லை ஆளும் மன்னனின் உயிர் என்கிறார் மோசிக்கீரனார்.

“ஒரு நாட்டில் மக்கள் உடல் என்றால் மன்னன் தான் உயிர் என்று நம்பிய காலம் சங்ககாலம்! 
இன்றும் ஒரு நாட்டை ஆளுவோருக்குச் சொல்லித்தர வேண்டிய அடிப்படைப் பாடமாகவே இந்த அறக்கருத்து விளங்குகிறது.“


ஒரு பேருந்தில் செல்வோரின் உயிர் மொத்தமும் ஓட்டுநரின் காலில் இருக்கிறது!

ஒரு தொடர் வண்டியை ஓட்டுவோரின் மொத்தஉயிரும் அந்த ஓட்டுநரின் கையில் இருக்கிறது!

அதுபோல ஒரு ஆட்சியாளனின் நடத்தையில் அந்த நாட்டின் மொத்த மக்களின் உயிரும் இருக்கிறது என்பதை ஒவ்வொரு ஆட்சியாளர்க்கும் உணர்த்தும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது.

பாடல் இதோ..

“நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்
அதனால் யான் உயிர் என்பது அறிகை
வேல்மிகு தானை வேந்தர்க்குக் கடனே.”


புறநானூறு -186
திணை - பொதுவியல்
துறை - பொருண்மொழிக்காஞ்சி.
மோசிக்கீரனார் பாடியது.

பரந்த இடத்தைக் கொண்ட உலகம், வேந்தனாகிய உயிரைக் கொண்டுள்ளது.
அதனால் இந்த உலகத்தாருக்கு நெல்லும் உயிரன்று! நீரும் உயிரன்று!

வேலால் மிகுந்த படையையுடைய அரசனுக்கு இவ்வுலகிற்கு தானே உயிர் என்பதை அறிந்து அதற்கேற்ப மக்கள் நலனில் ஆர்வமுடையவனாக இருத்தல் கடமையாகும்.



பாடல் வழியே..


1. மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று மன்னனின் கடமையை உணர்த்தியதால் இப்பாடல் பொருண்மொழிக்காஞ்சி என்னும் புறத்துறையை விளக்குவதாக அமைந்தது.

2. நாட்டுமக்களின் உயிர், தான் என்பதை அறிவது அரசனின் அடிப்படைக் கடமையாக அறிவுறுத்தப்படுகிறது


3. உடலுக்கு வந்த நோயைத் தாங்கி உயிர் உடலைப் பேணுவதுபோல, அரசனும் நாட்டுக்கு வந்த துன்பங்களைத் தான் ஏற்று மக்களின் நலனைக் காக்கவேண்டும் என்ற அறக்கருத்தையும் பாடல்வழியே உணரமுடிகிறது.


தமிழ்ச் சொல் அறிவோம்


1. மலர்தலை உலகம் - பரந்த உலகம்
2. தானை - படை
3. கடன் - முறைமை , கடமை.

செவ்வாய், 12 ஜூலை, 2011

இங்கிலீசு தெரிஞ்சவங்க மட்டும் வாங்க!!


உலகில் உள்ள பல்வேறு மொழிகளிலும் ஆங்கிலத்தின் ஆதிக்கம் மேலோங்கியுள்ள இந்நாளில் பல்வேறு மொழி பேசுவோரும் அதில் சரிபாதியாக ஆங்கிலத்தையே பேசுகிறார்கள்.

எனக்கு வந்த குறுந்தகவல் இன்றைய டமிலின் டமிலனின் நிலையை அழகாகப் படம் பிடித்துக்காட்டியது.


பியூர் இங்கிலீஸ் ஸ்டோரி உங்களுக்கு இங்கிலீஸ் தெரியலைன்னா டெலிட் பண்ணீடுங்க.

தேர் வாஸ் ஏ பாட்டி இன் கிராமம்.
1 டே சி வாஸ் சுட்டிங் ஏ வடை
அட் த டைம் 1 காக்கா கம் அன்ட்
அபேஸ் த வடை.
தென் இட் சிட் ஆன் த ஒன் மரம்.
ஏ நரி கம் அன்ட் செட்
“யுவர் குரல் இஸ் ஸோ நைஸ் ஸோ ஸிங் ஏ பாட்டு பார் மீ”
தென் த காக்கா ஓப்பன் இட்ஸ் வாய் டு ஸிங்.
டொபக்கடீன்னு வடை பெல் டவுன்
த நரி கவ்விங் தட் வடை அன்ட் வென்ட் அவே

மாறல்

“ வடை போச்சே“
ஆர் யு சிரிக்கிங்?



(( மொழி போச்சே!! ))



1.இன்றைய சூழலில் ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும், தமிழைத் தமிழாகவும் பேசுவோரை பார்ப்பதே அரிதாகிவிட்டது.

2.பிறமொழி கலவாது தமிழ் பேசுவோர் யாரும் இருந்தால் இவ்வுலகம் அவர்களை அந்நியர்களைப் பார்ப்பதுபோலத்தான் பார்க்கிறது.

3. ஒரு மொழி அழிந்தால் அந்த இனத்தின் பண்பாடு, நாகரீகம்,கலாச்சாரம் என எல்லாமே அழிந்து போகும் என்பது ஏன் இவர்களுக்குப் புரியமாட்டேங்குது??

வெள்ளி, 8 ஜூலை, 2011

வாடிக்கையாளர் தொல்லை மையம்.


சங்ககாலத்தில் பாலை நிலத்தில் கொடிய மனம் கொண்டவர்களாக வழிச்செல்வோரிடம் வழிப்பறி செய்து வாழ்க்கை நடத்தியவர்களை ஆறலைக்கள்வர்கள் என்றழைத்தனர்.

இத்தனை ஆண்டு காலம் சென்றபின்னும் இன்றும் ஆறலைக் கள்வர்களைப் பார்க்க முடிகிறது.
வானொலி, தொலைக்காட்சி, நாளிதழ்கள் என எதைத் திறந்தாலும் இவர்களைப் பற்றிய செய்திகளே முதலில் கண்ணில் படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடரும் வழிப்பறிக்கொள்ளை!!

பட்டப்பகலில் நட்டநடுத் தெருவில் மக்கள் கூட்டம்
கொட்ட கொட்ட விழித்திருக்க பெண்கள் கழுத்தில் இருந்து நகைகளைப் பறித்துச்செல்வோர் எண்ணிக்கை அதிகரி்த்துவருகிறது.

யாரைக் குறை சொல்வது?

வழிப்பறி செய்வோரையா?
தங்கத்தின் மீது பெருமோகம் கொண்டிருக்கும் பெண்களையா?
சட்ட ஒழுங்கைக் காப்பாற்றும் காவல்த் துறையையா?

இது ஒருபக்கம் இருக்கட்டும்.


சங்ககாலத்து ஆறலைக்கள்வர்கள் தம் அம்புகளைப் பாறையில் கூர் தீட்டிக்கொண்டிருப்பார்கள். அப்போது தம் அம்புகள் கூர்மையாக இருக்கிறதா என்பதைப் பார்க்க அவ்வழிச்செல்லும் வம்பலரின் (வழிசெல்வோர்) மேல் எய்வார்களாம் அவர்கள் இறந்துவிட்டால் அம்பு கூர்மையாகிவிட்டது என்றும். அவர்கள் உயிருக்குப் போராடினால் இன்னும் கூர்தீட்டப்பட வேண்டும் என்றும் கருதுவார்களாம். இக்கள்வர்கள் தாம் வேட்டையாடும்போதும், வழிப்பறி செய்யும்போதும் துடி என்னும் தோற்கருவியை முழக்குவது வழக்கமாம்.


இன்றைய சூழலில் மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒவ்வொருவருமே ஆறலைக்கள்வர்களாகத்தான் எனக்குத் தோன்றுகிறார்கள்.

இக்கொள்ளையர்களால் பாதிக்கப்பட்டவன் என்றமுறையில் என் அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

வாடிக்கையாளர் சேவை என வழங்கும் ஒவ்வொரு நிறுவனங்களும் எந்த அளவுக்கு வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றுகின்றன என்பதை ஒரு வாடிக்கையாளர் தானே சொல்லவேண்டும். அந்த அடிப்படையில்..

அலைபேசி பயன்படுத்தும் வாடிக்கையாளன் என்ற முறையில் அலைபேசி சேவைமையத்தாரின் தொல்லைகளை (சேவை)சொல்கிறேன். உங்கள் அனுபவத்துடன் ஒப்பீடு செய்துகொள்ளுங்கள்.

ஏர்செல், ஏர்டெல், வோடாபோன் என தனியார் சேவை நிறுவனங்கள் படுத்தும் பாடு கொஞ்சமல்ல.

டயல் டோன்
காமெடி
ஜோக்ஸ்
அழகுக்குறிப்பு
கதை சொல்றோம்
கிரிக்கெட்
செய்திகள்
பங்குவணிகம்

என்று பல்வேறு ஆயுதங்களைச் சுமந்துகொண்டுவரும் இந்த சேவை மையத்தார் தொடர் அழைப்புகளால் வாடிக்கையாளர்களைப் பெரிதும் துன்புறுத்திவருகின்றனர் என்பதைப் பலரும் அனுபவித்திருப்பீர்கள்.


“நாம் கேட்காமலேயே இவர்களாக நம் கணக்கில் இந்த சேவைகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துவிடுவார்கள். பணத்தையும் உரிமையுடன் பிடித்துக்கொள்கிறார்கள். ஓரளவுக்கு தொழில்நுட்ப அறிவுடையவர்கள் அந்த சேவையைப் போராடி நிறுத்திவிடுகிறார்கள்.

ஏன் பணம் பிடிக்கிறார்கள் என்று தெரியாமலேயே திருதிருவென விழிக்கும் அப்பாவி மக்களைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருக்கிறது.“

இந்த சேவை மையத்தார், பலமுறை என் உடன்பாடு இல்லாமலேயே பல்வேறு சேவைகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து பணத்தையும் பிடித்திருக்கிறார்கள். சேவை மையத்துக்குத் தொடர்புகொள்ளலாம் என்றால் அவர்களிடம் பேசுவதற்கும் இப்போதெல்லாம் பணம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நொந்துபோய் சிலநேரங்களில் சிம்கார்டை மாற்றிவிடுவேன்.

இவ்வாறு கொதிப்படைந்த நாளில் ஒருநாள் ஒரு தனியார் அலைபேசி வாடிக்கையாளர் மையத்திடமிருந்து அழைப்பு வந்தது. அவர்களே வழிய வந்து மாட்டினார்கள்.

உங்களுக்கு மட்டுமான புதிய வாய்பளிக்க இருக்கிறோம் என்று ஆரம்பித்தார்கள். அவர்களைப் பேசவே விடாமல்...

என் மனதில் இருந்த கோபங்களையெல்லாம் கொட்டித்தீர்த்துவிட்டேன்..

இப்போதான் மனசு இலேசாக இருக்கிறது.

(வாடிக்கையாளர்களின் வாயிலாகக் கொள்ளையடிக்கும் சேவைமையத்தார் இதுபோல அவர்களின் மனதின் வலிகளைக் கொட்டித்தீர்க்க அதை வாங்கிக்கட்டிக்கொள்ள ஒரு சேவையையும் அறிமுகம் செய்தால் நன்றாக இருக்கும்)

மனம் உவந்து இரவலருக்கு 100 ரூபாய் போட்டால் நிறைவடையும் மனம்
தெரியாமல் ஏமாந்து 10 ரூபாய் விட்டாலும் விழுந்து விழுந்து அழுகிறதே!!!

இந்த ஆறலைக் கள்வர்களிடம் இருந்து இனிவரும் காலங்களில் எப்படித்தான் தப்பிக்கப் போகிறோமோ..?

வியாழன், 7 ஜூலை, 2011

காவல் மறந்த கானவன்.



சங்ககால மக்கள் இயற்கையுடன் இயைபுற்று வாழ்ந்தனர் என்பதை சங்கஇலக்கியங்கள் எடுத்தியம்புகின்றனர். இதோ அழகியதொரு உவமை.

“தலைவி காதலிக்கிறாள் என்பதை அறிந்த பெற்றோர் அவளை வீட்டுக்காவலில் வைத்தனர். தலைவனோ அதனை உணராதவனாக திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இன்றி தலைவியைச் சந்திப்பதிலேயே ஆர்வம் கொண்டவனாக இருக்கிறான். இச்சூழலில் தோழி தலைவனிடம் நீ தலைவியின் துன்பத்தை உணர்ந்து உடனே திருமணம் செய்துகொள்வாயாக..

ஆண்குரங்கு தன்கையால் தோண்டிய, மணம் கமழ்கின்ற சுளைகளையுடைய பெரிய பலாப்பழத்தை, காவல் காக்க மறந்த வேடன், அதன்பின், பழத்தால் மணமுடைய மரந்தோறும் குரங்குகள் படுதற்குரிய வலையை மாட்டிவைக்கும், மலையையுடைய நாட,
பசிய சுனையினிடத்து மலர்ந்த குவளை மலர்களை இடையிட்டுக் கட்டியதண்ணிய தழையுடையை அணிந்த இத்தலைவி, இங்கே துன்புற, நின்னை விரும்பியவர்களது துன்பத்தைத் தீர்க்கும் நல்வினைப் பயனை, அடையாத, இயல்புடையாயென்னின், அவ்வியல்புநினக்குத் தகுமோ?

என்று தலைவனிடம் நீ உடனே தலைவியைத் திருமணம் செய்துகொள்வாயாக என்று சொல்கிறாள் தோழி. பாடல் இதோ..



கலைகை தொட்ட கமழ்சுளைப் பெரும்பழம்
காவன் மறந்த கானவன் ஞாங்கர்க்
கடியுடை மரந்தொறும் படுவலை மாட்டும்
குன்ற நாட தகுமோ பைஞ்சுனைக்
குவளைத் தண்டழை யிவளீண்டு வருந்த
நயந்தோர் புன்கண் டீர்க்கும்
பயந்தலைப் படாஅப் பண்பினை எனினே.

குறுந்தொகை 342.
காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்.

தோழி கூற்று
(தலைவி இற்செறிக்கப்பட்டதை அறிவித்தபோது தலைவன் பின்னும்களவொழுக்கத்தை விரும்பினானாக, “நீ வரையாது ஒழுகின் இவள்வருந்துவாள்; இனி நீ வரைதலே தக்கது” என்று தோழி கூறியது.)

தலைமக்களின் காதலை அறிந்த பெற்றோர் தலைவியை வீட்டுக்காவலில் வைத்தனர். அதனை அறிந்தும் தலைவன் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லாதவனாக தலைவியைச் சந்திப்பதையே விரும்பினான். நீ தலைவியைத் திருமணம் செய்துகொள்ளாது காலம் தாழ்த்தினாள் தலைவி வருந்துவாள் என்று கூறிய தோழி, தலைவ..
நீ இனி அவளைத் திருமணம் செய்வதே சிறந்தது என்று அறிவுறுத்துவதாக இப்பாடல் அமைகிறது.

பாடல் வழியே.
1. கானவனது சோர்வறிந்து குரங்கு தொட்ட பழம் அவன் படுவலைமாட்டியபின் பெறுதற்கு அரிதாதலைப் போல, காப்போரில்லா நிலையில்நீ கண்டு அளவளாவிய தலைவி இற்செறிக்கப்பட்டபின் நீ சந்திப்பதற்கு அரியவளாவாள் என்பது அழகான ஒப்பீடாகவும், சங்ககால மக்களின் இயற்கை சார் வாழ்வியலுக்குத் தக்க சான்றாகவும் திகழ்கிறது.
2. பெண்கள் தழையாடை (இலை, தழைகளால் வேயப்பட்ட ஆடை) அணியும் சங்ககால வழக்கம் பாடல் வழி அறியமுடிகிறது.
3. பலா மரங்களை குரங்குகளிடமிருந்து காக்க மரங்களில் வலை மாட்டும் சங்ககால வழக்கத்தையும் உணர்ந்துகொள்ள முடிகிறது. (மரங்களில் வலை மாட்டுவது பலாப்பழங்களைப் பாதுகாப்பதற்காகவே! குரங்குகளைப் பிடிப்பதற்காக இல்ல! – அதுபோல தலைவியை இற்செறிப்பது தலைவியைக் காப்பதற்காகவே! தலைவனைப் பிடிப்பதற்காக என்னும் இலக்கிய நயம் எண்ணி இன்புறத்தக்கதாகவுள்ளது.

தமிழ்ச்சொல் அறிவோம்.
1. ஞாங்கர் - அப்பால்
2. கடியுடை மரம் - காலுக்கு உரிய மரம்
3. படுவலை - பெரிய வலை
4. கானவன் - காட்டில் வாழ்பவன்

சனி, 2 ஜூலை, 2011

தெரியாம பார்த்துப்புட்டேன்.



காதலர் மாறலாம்
காதல் மாறுவதில்லை.
காதல் சார் சூழல்களும் மாறுவதில்லை
இன்றும் தன் தங்கை காதலிக்கிறாள் என்றால் எந்த அண்ணன் தான் அதை ஏற்றுக்கொள்கின்றார்.?
எத்தனை காதல்தான் அண்ணன் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு உண்மையானதாக இருக்கிறது.?

“டேய் வேண்டாம் டா அவளை விட்டிடு அவ குடும்பத்தோட பின்புலம் தெரியாம காதலிச்சிட்டுப் பின்னாடி வருத்தப்படாத.
அவ அண்ணனைப் பற்றித் தெரியுமா?
அவ தம்பியைப் பற்றித் தெரியுமா?
அவங்க அப்பாவைப் பற்றித் தெரியுமா..?“

என்று இன்று பேசுவதை பல இடங்களிலும் பார்க்க முடியும் கேட்கமுடியும்..
இதோ சங்ககாலத்திலிருந்தே இந்நிலை மாறாமல்தான் வருகிறது என்பதை அடையாளப்படுத்த..



சங்ககாலக் காட்சி ஒன்று...

தோழி கூற்று

தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளாது காலம் தாழ்த்தி வருகிறான். தோழியிடம் தலைவியை தான் இரவிலும் சந்திக்கத் துணைசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறான்.
அவனிடம் தோழி....

உங்கள் காதல் ஊரறிந்து அவள் பெற்றோராலும் அறியப்பட்டது. அதனால் அவள் இற்செறிக்கப்பட்டாள் (வீட்டுக்காவல்). மேலும் நீ நினைப்பது போல தலைவியை இரவில் இனிமேல் சந்திக்க முடியாது. அவள் உடன்பிறந்த அண்ணன் வலிமையா வில்லைத் திறம்பட எய்யக்கூடியவன் என்பதை நீ அறிவாயா?

என்று கேட்டுத் தலைவனை நீ விரைவில் தலைவியை மணம் செய்துகொள் என்று சொல்வதாக இப்பாடல் அமைகிறது.

பாடல் இதோ...
நிரைவளை முன்கை நேரிழை மகளிர்
இருங்கல் வியலறைச் செந்தினை பரப்பிச்
சுனைபாய் சோர்விடை நோக்கிச் சினையிழிந்து
பைங்கண் மந்தி பார்ப்பொடு கவரும்
வெற்பிடை நண்ணி யதுவே வார்கோல்
வல்விற் கானவர் தங்கைப்
பெருந்தோட் கொடிச்சி யிருந்த வூரே.

குறுந்தொகை - 335
என்பது இரவுக்குறி நயவாமைத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.
இருந்தையூர்க் கொற்றன் புலவன்.


பாடல் வழியே..

தலைவியின் உடன்பிறந்தோர்

நீண்ட அம்பையும், பல இலக்குக்களை ஒரு தொடையில் துளைக்கவிடும் வலியவில்லையும் உடைய, வேட்வர் ஆவர்.

திணைக்காவல்.

பெரிய தோளையுடைய குறிஞ்சிநில மகளாகிய தலைவி, வாழும் ஊர், வரிசையாகிய வளையையுடைய முன்கையையும், நேர்ந்த அணிகலன்களையுமுடைய மகளிர், கரிய மலையிலுள்ள அகன்ற பாறையினிடத்து, சிவந்த தினையைப் பரப்பி உலர்த்துவர்

மகளிர் விளையாட்டு

பின்னர் சுனையில் (நீர் நிலையில்) பாய்ந்து விளையாடச் சென்றனர். (பெண்கள் நீ்ச்சலடித்து விளையாடுதல்)

குரங்குகளின் விளையாட்டு.

மகளிர் சோர்ந்த நேரம் பார்த்து மரக்கிளையிலிருந்து இறங்கி, பசிய கண்ணையுடையபெண் குரங்குகள், குட்டிகளோடுஅத்தினையைக் கைக்கொள்ளும், மலையினிடத்தே பொருந்தியது

தலைவியின் ஊர்.

அதனால் இரவுக்குறியிற்கண்டு தலைவியுடன் நீ அளவளாவுதல் அரிது.
இதனால், வரைந்து கொள்வதே நன்றென்று தலைவனிடம் கூறுகிறாள் தோழி.


தமிழ்ச்சொல் அறிவோம்.


நேர் இழை – பொருந்திய அணிகலன்
இருங்கல் – பெரிய மலை
அறை – பாறை
வியல் – அகன்ற
சினை – கிளை
இழிந்து – இறங்கி
பார்ப்பு – குட்டி (இளமைப் பெயர்)
வெற்பு – நீண்ட கோல்
கொடிச்சி – குறிஞ்சி நிலப்பெண்
நயத்தல் - விரும்புதல்

நகைச்சுவை.

குரங்களின் செயல் பாடல் படித்து முடித்தபின்னரும் சிரிப்பை வரவழைப்பதாக உள்ளது.

மனம் x அறிவு = போர்க்களம்.


நாம் எந்த வேளை செய்தாலும் நம்மிடம் இருவர் வந்து ஆலோசனை சொல்வார்கள்.

ஒருவர் மனம்!
இன்னொருவர் அறிவு!

பலநேரம் மனம் சொல்வதையும்
சிலநேரம் அறிவு சொல்வதையுமே சராசரி மனிதர்கள் கேட்கிறார்கள்.

இவ்விரண்டையும் கருத்தில் கொண்டு எது சரியானதோ அதைச்செய்பவர்களை இவ்வுலகம் புத்திசாலிகள் என்றழைக்கிறது.

மதிப்பீட்டுக்காக..

கொடிய பாலைவனம்,
அதைவிட கொடுமையான நீர்வேட்கை,
நிழல் கூட இல்லாத வெம்மை
அடுத்த அடி கூட எடுத்துவைக்க இயலாத உடல் சோர்வு
அடுத்த நொடி உயிருடன் இருப்போமா என்ற ஐயம்...

இந்நிலையில் தூரத்தில் ஒரு அடிக்கும் நீர்க்குழாய் தெரிகிறது. அதன் பக்கத்தில் சிறிய பாத்திரத்தில் நீர் இருக்கிறது. அருகே ஒரு அட்டையில் ஏதோ எழுதப்பட்டிருக்கிறது. அருகே சென்று பார்த்தால்..

இந்த பாத்திரத்தில் இருக்கும் நீரையெல்லாம் அருகிலுள்ள நீர்க்குழாயில் ஊற்றி அடித்தால் நிறைய நீர் வரும். உங்களுக்குத் தேவையானதைக் குடித்துவிட்டு இந்தப் பாத்திரத்தில் மீ்ண்டும் பிடித்துவைத்துச் செல்லுங்கள் என்று உள்ளது.


இப்போது அறிவு பேசுகிறது.

இந்த நீர்க்குழாயோ பழையதாக உள்ளது இருக்கும் நீரோ மிகவும் குறைவாகவுள்ளது. இந்த நீரையும் இக்குழாயில் ஊற்றிவிட்டால் பின் குழாயில் நீர் வராவிட்டால் என்ன செய்வாய்?
அதனால் இந்த நீரை நீயே குடித்துவிடு என்று சொல்கிறது அறிவு.


இப்போது மனம் பேசுகிறது..

ஒருவேளை இது உண்மையாக இருந்தால் நம் தாகம் தீர்ந்து அடுத்து வருபவரின் தாகவும் தீருமே. என்ன ஆனாலும் பரவாயில்லை இதில் குறிப்பிட்டதுபோல இந்த நீரைக் குழாயில் ஊற்றிவிட்டு அடித்துப்பார் என்கிறது மனம்.


இப்போது அறிவின் சொல்லைக் கேட்பதா?
மனதின் சொல்லைக் கேட்பதா?

• அறிவின் சொல்லைக் கேட்டால் நாம் பயனடையலாம். நாம் மட்டுமே பயனடையலாம்.
• மனதின் சொல்லைக் கேட்டால் நாம் பயனடைவதுடன், அடுத்தவரும் பயன்பெறமுடியும்.ஒருவேளை குழாயில் நீர் வராவிட்டால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் என்பது உண்மை

அறிவுக்கும், மனதுக்கும் நடக்கும் போரில் என் அறிவு மனதின் பேச்சைக் கேள் என்கிறது இறுதியில் அறிவே வெல்கிறது.

உங்களுக்கு..?

(எங்கோ எப்போதோ படித்த கதையை எனது நடையில் உளவியல் கலந்து சொல்லியிருக்கிறேன்)