வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 20 ஜூன், 2011

தண்ணீர் தண்ணீர்!!




தண்ணீர்!
தண்ணீர்!
எங்கு பார்த்தாலும் நீர் வேட்கை!

ஆழ்துளைக் கிணறுகளும், பூச்சிக் கொல்லி (கூல்டிரிங்) மருந்து நிறுவனங்களும் உறிஞ்சியது போக மினரல் வாட்டர் என்ற பெயரில் இன்று கிடைக்கும் நீர்தான் மக்களின் ஒரே நம்பிக்கையாக இருக்கிறது. அந்த மினரல் வாட்டரும் தயாரிக்கப்படும் முறையை அறிந்தால் நீர்வேட்கையே அடங்கிப்போய்விடுகிறது.

தாவரங்களை அழித்து வானத்தை ஏமாற்றியதால்..
இப்போது..
வானமும் மக்களை ஏமாற்ற ஆரம்பித்துவிட்டது!
சில நேரங்களில் நாம் வாழும் நிலம் தான் பாலையா?
என்ற சிந்தனை வந்துவந்து போகிறது!!


சங்ககாலத்தில் பெண்யானையின் நீர்வேட்கைக்காக வானத்தைப் பார்த்துக் கதறிய ஆண்யானையின் பேரொலி இன்றும் கேட்கிறதே!!!


இதோ....


வளை உடைத்தனையது ஆகி பலர் தொழ
செவ்வாய் வானத்து ஐயெனத் தோன்றி
இன்னாப் பிறந்தன்று பிறையே அன்னோ
மறந்தனர் கொல்லோ தாமே – களிறு தன்
உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது
நிலை உயர் யாஅம் தொலையக் குத்தி
வெண்நார் கொண்டு கை சுவைத்து அண்ணாந்து
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும்
அத்த நீள் இடை அழப் பிரிந்தோரே?

குறுந்தொகை – 307
பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லிய தோழிக்கு கிழத்தி உரைத்தது.

கடம்பனூர்ச் சாண்டில்யன்.
தலைவன் வருவதாகச் சொல்லிச் சென்ற பருவம் வந்தும் தலைவன் வரவில்லை. அதனால் வருந்தினாள் தலைவி. இச்சூழலில் அவளை ஆற்றுப்படுத்த தோழி கடுஞ்சொல் கூறினாள். அதற்குத் தலைவி பதிலளிப்பதாக இப்பாடல் அமைகிறது.

வண்ணத்தாலும், வடிவத்தாலும் உடைந்த சங்குவளையலைப் போன்ற பிறைத்திங்கள் வானில் தோன்றும். அதனைக் கன்னியர் பலரும் விரும்பித் தொழுவர்.

நீர்வேட்கை காரணமாக வருந்தி நடக்கும் பெண்யானையின் வருத்தம் தாங்க இயலாத ஆண்யானை, உயர்ந்து நிற்கும் யா மரத்தின் நிலை கெடும்படியாகத் தன் தந்தங்களால் குத்தியது. தன்னுடைய பிடியானை அந்த நீரில்லாத நாரினைக் கொள்ளுதலால் வருந்தித் தன் தும்பிக்கையைச் சுவைத்தது.

இத்தனைக்கும் காரணமான மழை பெய்யாத வானத்தை அண்ணாந்து நோக்கி வருத்தமுற்ற மனத்துடன் கதறியது.

அந்தோ! நெடும்பொழுது நாம் அழுமாறு, இத்தகைய பாலை நிலத்தில் கடப்பதற்கு அரிய வழியில் பிரிந்து சென்றோர் தாம் வருவதாகச் சொல்லிச் சென்ற பருத்தை மறந்தனரோ..?
என வருந்துகிறாள் தலைவி.


பாடல் வழியே.
1. பாலை வழியே தலைவன் சென்றமையால் ஏற்பட்ட தலைவியின் வருத்தம் – பிடியின் நீர்வேட்கையைத் தீர்க்க இயலாத களிறின் வருத்தம்.
2. பிறைத்திங்கள், அன்புடைய விலங்குகள் – தலைவனுக்கு தான் சொல்லிச் சென்ற பருத்தை நினைவூட்டுவதாக உள்ளது.
3. பிறையைக் கன்னியர் தொழும் சங்ககால மரபு பாடல்வழி சுட்டப்படுகிறது.

தமிழ்ச்சொல் அறிவோம்.


உயங்குதல் – தளர்தல்.
நீள் இடை – நெடும்பொழுது.
அத்தம் – பாலை வழி.
நோனாது – பொறுக்க இயலாது.

14 கருத்துகள்:

  1. அய் மொதலாவதா தண்ணி குடிக்கபோறது நானா??

    பதிலளிநீக்கு
  2. அர்மையான தமிழ் பதிவு அண்ணா... விரும்பி படித்தேன். புதிதாக மூன்று தமிழ் சொற்களை அறிந்து கொண்டது திருப்தி... இப்படியான தமிழ்சார் பதிவுகளை எதிர்பார்த்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  3. பல புதிய தமிழ் சொற்கள் அறிந்தேன் .. நன்றி

    பதிலளிநீக்கு
  4. ந‌ல்ல‌ ப‌திவு! பூச்சிக் கொல்லி ம‌ருந்து‍ :-)

    பதிலளிநீக்கு
  5. தமிழ்ச்சொற்கள் அறியத்தருவது நல்ல விஷயம் குணா !

    பதிலளிநீக்கு
  6. @Ashwin-WIN வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அசுவின்

    பதிலளிநீக்கு
  7. தண்ணீர் தண்ணீர் என்று ஒரு கதையை என கல்லூரி பருவத்தில் படித்த நியாபகம் வந்து விட்டது . பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு