பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

புதன், 11 மே, 2011

பெண்கள் கூந்தலில் கயிறு திரித்தவன்.


சங்க கால மன்னர்கள், அவர்களிடம் தோற்ற பகைவர்தம் மனவியரை இழுத்து வந்து அவர்களுடய தலைமுடியைக் கொய்து அதிலிருந்து கயிறு திரித்து அக் கயிற்றால் பகையரசரின் யானையப் பிடித்து இழுத்து வந்தனர். நன்னன் என்ற கொடுங்கோலரசன் இப்படிச் செய்ததை நற்றிணைப் பாடலில் காணமுடிகிறது.

பாடல் இதோ..
தடந்தாட் தாழைக் குடம்பை நோனா
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து
இருள்புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி
உருள்பொறி போல எம்முனை வருதல்
அணித்தகை அல்லது பிணித்தல் தேற்றாப்
பெருந்தோட் செல்வத்து இவளினும் – எல்லா
எற்பெரிது அளித்தனை நீயே பொற்புடை
விரிஉளைப் பொலிந்த பரியுடை நன் மான்
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே
மறப்பல் மாதோ நின் விறற் தகைமையே

பரணர்
நற்றிணை -270
தோழி வாயில் நேர்கின்றாள் தலைமகனை நெருங்கிச் சொல்லி வாயில் எதிர்கொண்டது.

தலைவன் பரத்தையிடம் சென்று பின் தலைவிடம் மீண்டு வருகிறான். தலைவியுடன் தோழி தலைவனை எதிர்கொள்கிறாள் அப்போது தலைவனிடம் தோழி சொல்வதாக இப்பாடல் அமைகிறது.
பெரிய அடிப்பகுதியைக் கொண்ட தாழையின் தூறுகளால் வேயப்பட்ட குடிசை, அங்கு சோலையில் மணம் செய்யும் வண்டுகளால் தாளமுடியாதபடி மொய்த்து நறுமணம் வீசுவதும் இருளைப் போன்று விளங்குவதுமான கூந்தலைக் கொண்ட தலைவி கூந்தலில் மிக்க துகள் படியும்படி வருந்துவாள்.
அவள் நிலத்து உருளும் இயந்திரம் போலச் செயலற்று எம்முன் வருவாள்.
உன்னைப் பிரிந்ததால் அழகினை இழந்தவளாக இருப்பாள். பெரிய தோளாகிய செல்வமுடைய தலைவியை விட்டு நீங்கி அன்பில்லாத பரத்தையை நாடினை...?
ஆயினும் ஒன்றுகேள்..
அழகுடைய விரிந்த பிடரிமயிரினால் பொலிவுற்றதும், விரைகின்ற ஓட்டத்தையும் கொண்ட நல்ல குதிரைகளுடைய படைகளைக் கொண்ட பகைவர்களை வென்ற வேற்படையுடைய மன்னனான நன்னன்,
அவர்களைத் தோற்றோடச் செய்து பின்,
பகைமன்னரின் மகளிர்தம் கூந்தலைக் கொய்து கயிறாகத் திரி்த்தான்.
அவன் அவ்வாறு செய்த கொடுமையை விட நீ தலைவியை நீங்கி அவளைத் தவிக்கவிட்ட கொடுமை பெரிது என்கிறாள் தோழி.

இப்பாடலின் வழி.

1. உருள் பொறி போல - என்ற சொல்லாட்சி வழி, உணர்வற்ற தலைவி இயந்திர படிமம் போல இயங்கினாள் என சுட்டப்படுகிறது. சங்ககாலத்தில் வழக்கிலிருந்த கரும்பு இயந்திரம் போல உருளும் இயந்திரம் ஏதோ அக்கால வழக்கில் இருந்திருக்கும் என்பதை அறியமுடிகிறது.

2. மேலும் வென்ற மன்னன் தோற்ற நாட்டுப் பகை மன்னர் தம் மகளிரின் கூந்தலைக் கொய்து கயிறாகத் திரித்த அக்கால வழக்கத்தையும் தெரிந்துகொள்ளமுடிகிறது.

6 கருத்துகள்:

  1. சங்க கால பாடல்கள் வழியாக, எத்தனை தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. சுவாரசியமாக தொகுப்பு எழுதுறீங்க.

    பதிலளிநீக்கு
  2. அறிய தகவல்களை பகிரும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு