வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 20 ஏப்ரல், 2011

உங்களயெல்லாம் கேட்க ஆளே இல்லையா?


குள்ளநரிக் கூட்டம் என்றொரு படம் பார்த்தேன். அதில் ஒரு நகைச்சுவை...
சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் நீண்டகாலமாகத் தம் தொகுதிப்பக்கமே சென்றிருக்கமாட்டார். அதனால் கோபம் கொண்ட மக்கள் அவரைப் பார்க்க கூட்டமாக வருவார்கள். அந்த அரசியல்வாதியின் உதவியாளர் வந்து இவரிடம் அறிவுறுத்துவார்.
தலைவரே... உங்களைப் பார்க்க மக்கள் கோபமா வந்திருக்காங்க... என்ன செய்யறதுன்னே தெரியல என்பார்...
கொஞ்சம் கூட யோசிக்காத அந்த அரசியல்வாதி உடனடியாக வெளியே செல்வார்...
மக்களைப் பார்த்து என்ன இது இங்கவந்து கூட்டம் போட்டிருக்கீங்க..
உங்க தலைவர் இங்கே இப்ப இல்லை...
கிளம்புங்க கிளம்புங்க என்று கூட்டத்தைக் கலைத்துவிட்டு கம்பீரமா வருவார்...
மக்களும் நம்ம தலைவர் நமக்காகத் தான் சட்டமன்றத்துல பேசிட்டிருப்பார் என நம்ம்ம்ம்பிக் கொண்டே செல்வார்கள்.
வந்த விருந்தினர்கள் வியப்பாகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்..
அவர்களைப் பார்த்து அந்த அரசியல்வாதி சொல்வார்..
நான் தொகுதிப்பக்கமாப் போயி பலவருசமாச்சு..
மக்களுக்கு என் முகமே மறந்துபோயிருக்கும் அதான் தைரியமா போயிட்டு வந்தேன் என்பார்.
இந்த நகைச்சுவைக் காட்சியை நான் மிகவும் விரும்பிப்பார்த்தேன் சமூகத்தை அழகாகப் பிரதிபலிப்பதாக இக்காட்சி உள்ளதே என்று...

இங்கு இந்த தலைவருக்கு வெட்கமே வரல..!!!!
இதெல்லாம் இவரு ஒரு விளையாட்ட்ட்ட்ட்டாவே எடுத்துக்கறார்..

இவரைமாதிரியே வெட்கப்படத் தெரியாத எதையும் விளையாட்டாவே எடுத்துக்கற சங்க காலத் தலைவனைப் பற்றிப் பார்ப்போம்.

அறியாமையின் அன்னை! அஞ்சி
குழையன் கோதையன் குறும்பைந் தொடியன்
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல
நெடு நிமிர் தெருவில் கைபுகு கொடு மிடை
நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின்
கேட்போர் உளர்கொல்,இல்லைகொல்?போற்று என
“நாண் இலை, எலுவ!“ என்று வந்திசினே
செறுநரும் விழையும் செம்மலோன் என
நறுநுதல் அரிவை! போற்றேன்
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே

நற்றிணை 50
குறிஞ்சி (மருதம் பாடிய இளங்கடுங்கோ)
தோழி பாணர்க்கு வாயில் மறுத்தது
தலைவன் பரத்தையிற் பிரிந்தான். பின் சிறைப்புறமாக வந்துநின்று வாயில் வேண்டிப் பாணனைத் தூதாக விடுத்தான். தோழி தலைவன் கேட்க தலைவியை நோக்கிக் கூறுவதாக இப்பாடல் அமைகிறது.
“மணம் கமழும் நெற்றியைக் கொண்ட பெண்ணே!!
தலைவன் காதில் குழையும், கழுத்தில் மாலையும் அணிந்து குறுகிய பல வளைகளையும் அணிந்தவனாக விழாக்களத்தில் பரத்தையுடன் துணங்கையாடினான். அப்போது அவனைக் கையும் களவுமாகப் பிடிக்கலாம் என்று நெருங்கிச் சென்றோம். அவனோ எங்களிடமிருந்து தப்பிக்க கருதியவனாக, வேறொரு வழியில் புகுந்து சென்றான். எதிர்பாராதவிதமாக எம்முன்னே எதிர்பட்டான்...
“உன் செயல்களைத் தட்டிக் கேட்பார் யாரும் இல்லையோ..?” என்று கேட்டேன்.
அந்தச் சூழலிலும் எதுவும் அறியாதவன் போல, என்னிடத்துப் பசலை அழகாக உள்ளதே என வியந்தான்..
அவனுடைய இழிந்த நிலை கண்டு “ நீ நாணமுடையவன் இல்லை“ என்று கூறிவந்தேன். என்கிறாள் தோழி.

பாடல் வழியே...

1. வாயில் மறுத்தல் ( பரத்தையிற் பிரிந்த தலைவன் மீது தலைவி ஊடல் (கோபம்) கொண்டு வீட்டிற்குள் வர அனுமதி மறுத்தல்.) என்ற அகத்துறை விளக்கப்படுகிறது.
2. துணங்கை என்னும் கூத்து பற்றிய குறிப்புவழியே இருபாலரும் சேர்ந்து இக்கூத்தாடுவர் என்ற மரபு புலனாகிறது.
3. நகைச்சுவை –
1. தலைவன் தலைவியின் வருகையைக் கண்டு ஓடி வேறு வழியே சென்று எதிர்பாராதவிதமாக தலைவியிடம் மாட்டிக்கொள்ளும் நிலையில் நகைப்பிற்குரியவனாகிறான்.
2 தவறு செய்தமைக்காக வருந்தாமல், தோழி இழிவாகப் பேசியபோதும் அதனைக் கண்டுகொள்ளாது அவளிடம் நலம் விசாரிக்கும் போது பெருநகைப்பிற்குரியவனாக் காட்சியளிக்கிறான்.

4 கருத்துகள்:

  1. இன்றைய பகிர்வு, வித்தியாசமான களத்தில் வந்து உள்ளது. :-)

    பதிலளிநீக்கு
  2. சமூகத்தை அழகாகப் பிரதிபலிப்பதாக இக்காட்சி உள்ளதே என்று...//
    வித்தியாசமான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  3. //இந்த தலைவருக்கு வெட்கமே வரல..!!!!
    இதெல்லாம் இவரு ஒரு விளையாட்ட்ட்ட்ட்டாவே எடுத்துக்கறார்..//

    இதெல்லாம் ரோஷம்,ஈனம்,மானம்,உள்ளவங்க கிட்ட போய் கேளுங்க சார். அரசியலுக்கு வர முதல் தகுதியே இது எதுவும் இருக்க கூடாது என்பது தான்.

    பதிலளிநீக்கு
  4. கருத்துரைக்கு நன்றி சித்ரா.
    வருகைக்கு நன்றி இராஜராஜேஷ்வரி.
    சமூகத்தை நல்லாப் புரிஞ்சி வைச்சிருக்கீ்ங்க சசி..

    பதிலளிநீக்கு